September 17, 2012

விளம்பர உலகம்-1

”ஒரு தமிழ் எழுத்தாளரான நீங்கள் எங்கள் அலுவலகத்துக்கு வெளியே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று இந்தியாவின் மிகப்பெரிய விளம்பர ஏஜென்ஸி 1983’ல் ஒரு விளம்பரத்தை டில்லி பத்திரிகைகளில் வெளியிட்டது.

மத்திய அரசில் பணியாற்றிக் கொண்டும், தமிழ் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் இருந்த நான் ஒரு பயோடேட்டா அனுப்பினேன். அதில் எனக்கு விளம்பரத் துறையில் முன் அனுபவம் பூஜ்யம் என்று குறிப்பிட்டிருந்தேன். கூடவே பிரபல நகைச்சுவை இதழான MAD MAGAZINE  பத்திரிகையின் ரசிகன் என்றும், 16 வருட தொகுப்பு என்னிடம் உள்ளது என்றும் எழுதியிருந்தேன்.

பேட்டிக்கு அழைப்பு வந்தது. போனேன். 

"தமிழில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வருகிறீர்களா?"  என்று கேட்டார்கள். 'பார்க்கிறேன், பல சமயம் வருத்தப்படுகிறேன்' என்றேன். 'ஏன்?' என்று கேட்டார் மானேஜர். 'பலசமயம் மொழி பெயர்ப்பில் பிழை அல்லது முழு அபத்தம். புரூப் தவறுகள். வார்த்தைகளைத் தவறான இடத்தில் பிரிக்கப்படுதல், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் தெரியாத ஆர்ட்டிஸ்ட்கள் எழுதும் ஹெட்லைன்களில் எழுத்துக்கள் மிகச்சிறப்பாக எழுதப்பட்டாலும், படுபரிதாபமாக எழுத்துக்குரிய 'ஷேப்'களில் இல்லாமல் உள்ளன"  என்று சரமாரியாகக் குற்றச் சாட்டுகளைச் சொன்னேன் - பல உதாரணங்களுடன்.

நீங்கள் எனக்கு  அண்ணன்
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கேட்டார்- பேச்சை மாற்றுவதற்காக: ''உங்கள் வயது என்ன?'' நான் பயோடேட்டாவில் என் வயது 50க்கு மறுபுறம்' என்று குறிப்பிட்டிருந்தேன். இருந்தும் அவர் என் வயதைக் கேட்டதும், குறும்புடன் ” என் வயது 25” என்றேன்.  உடனே அவர் எழுந்து கை நீட்டி, கை குலுக்கி, ”நீங்கள் எனக்கு ஒரு வயது மூத்த அண்ணன். என் வயது 24” என்றார். (அவருக்கு 50 ப்ளஸ் வயதுதான்.)
இப்படி நான் சொன்னதே எனக்கு சிபாரிசாக அமைந்து விட்டது. காரணம், விளம்பர ஏஜென்ஸிகளில் பெரும்பாலும் இளைஞர்களும், இளைஞிகளும்தான். அவர்களுடன் நான் அனுசரித்துப் போவேன், சரிசமமாகப் பழகுவேன் என்று அவர்களால் கணிக்க முடிந்தது.

”ஓ.கே. எப்போது வேலையில் ஜாயின் செய்கிறீர்கள்/ உங்களுக்கு இவ்வளவு சம்பளம்”  என்று ஒரு சம்பளம் சொன்னார். நான் அரசில் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் இரண்டு மடங்கு! இருந்தாலும் சற்று பிகுவுடன் ஒத்துக் கொண்டேன். மூன்று மாதம் டைம் கேட்டேன். ஒத்துக் கொண்டார்கள். சென்னையில் அலுவலகத்தில் சேர வேண்டும் என்றதற்கும் ஒத்துக் கொண்டேன்.

திருநெல்வேலிக்கே அல்வாவா?
”என்னது,சென்னை ஆபீசில் தமிழ் காப்பி ரைட்டராகப் பணிபுரிய ஒரு ஆசாமியை டில்லியில் ரெக்ரூட் செய்திருக்கிறார்களா?. சென்னையில் தமிழ் எழுதுபவர்களே இல்லையா..? திருநெல்வேலிக்கே அல்வாவா?”என்று சென்னை அலுவலகத்தில் சிலர் உதட்டைப் பிதுக்கினார்கள் என்பது பின்னால் தெரிந்தது. ஆனால் வந்த சில நாட்களிலேயே எல்லாரும் நண்பர்களாகி விட்டார்கள். நானும் கோஷ்டியில் கலந்து விட்டேன்.
* * *
நான்கு வருடம் சென்னையிலும் பிறகு டில்லியில் 5 வருஷங்களும் பணியாற்றி விட்டு,  (ஒரு வருஷம் எக்ஸ்டென்ஷன் தந்தார்கள்) ஓய்வு பெற்றேன். விளம்பர ஏஜென்ஸியில் ஏற்பட்ட சில உண்மையான அனுபவங்களை -வெளியே சொல்லக் கூடியதை மட்டும் -இங்கு தருகிறேன். இவற்றிலும் பல பிராண்ட்கள், பெயர்களை மாற்றியுள்ளேன்.

கலரைக் கொட்டினால் காசு
ஒரு பிரபல  கம்பெனிக்காக. ஒரு சமயம் ஒரு அரைப்பக்க விளம்பரத்தை தயாரித்தோம். கலர் விளம்பரம். அதில் நடுவில் சிறியதாக   ஒரு பெண்ணின் கலர் படம்.  மற்றபடி விளம்பரம் முழுவதும் பிளாக் அண்ட் ஒயிட். பிரமாதமான டிசைன். விளம்பரம் வெளியான அதே பத்திரிகையில் இந்த . கம்பெனியின் போட்டி கம்பெனியின் விளம்பரமும் வெளி வந்திருந்தது. அதில் எல்லா கலர்களையும், மிக்கி மௌஸ் காமிக்ஸில் வருவது போல் வாரி இறைத்து ஒரு கலை நயமில்லாமல் விளம்பரம் டிசைன் செய்யப்பட்டிருந்தது.

எங்கள் கிளையண்ட், மானேஜருக்கு போன் செய்தார். ”50000 ரூபாய் கொடுத்திருக்கிறோம் கலர் விளம்பரத்துக்கு. இவ்வளவு குறைவாகவா கலரை உபயோகப்படுத்துவது? அந்த கம்பெனியின் விளம்பரத்தைப் பாருங்கள். கலரான கலர்! அடாடா, எவ்வளவு கலர்!  எனக்குத் தெரியாது. அதை மிஞ்சும்படியான கலர் விளம்பரம் வர வேண்டும்”  என்றார். வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக புது டிசைன் தயாரித்தோம். புட்டி புட்டியாக கலரைக் கொட்டி. இந்த விளம்பரத்தைப் பார்த்து அந்த நிறுவனத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

மொழிபெயர்ப்பில் தவறு
பேடண்ட் பெண்டிங்  ( PATENT PENDING) என்ற வாசகத்தின் மொழிபெயர்ப்பில்  ஏற்பட்ட தவறு.  இதை தெலுங்கில் மொழிபெயர்த்தவர் 'டிசைன் பதிவு செய்யப்படவில்லை' என்கிற ரீதியில் மொழிபெயர்த்து விட்டார். விளம்பரமும் வெளியாகியது. துரதிர்ஷ்வடசமாக அந்த கம்பெனியின் உரிமையாளருக்கு தெலுங்கு தெரியும் என்பது மட்டுமல்ல, ஹைதராபாத் போயிருந்த  அவர் ஓட்டலில் பொழுது போகாமல் பத்திரிகையைப் புரட்டிய போது இந்த விளம்பரம் கண்ணில் பட்டது. ஒரு வரி விடாமல் படித்தார். பேடண்ட் பெண்டிங் தவறாக மொழிபெயர்க்கப் பட்டிருந்ததைப்  பார்த்தார். சென்னை வந்ததும் மானேஜருக்குப் போன் செய்தார். தவறைச் சுட்டிக் காட்டியதுடன் விளம்பர செலவைத் தர முடியாது என்று கண்டிப்புடனும் கூறி விட்டார் என்று கேள்வி
(அடுத்த பகுதிகள் பின்னால்)

4 comments:

 1. விளம்பர உலகில் உங்கள் அனுபவங்களைத் தொடருங்கள்.....

  சிறப்பான பகிர்வு...

  ReplyDelete
 2. விளம்பர உலகம் வித்தியாசமானது. பத்திரிகைத் துறை போல அங்கு நிகழும் எழுத்துப் பிழைகளும் தவறுகளும் வெகு சுவாரஸ்யமானவைதான், தொடரும் உங்கள் அனுபவங்களுக்காய் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. பயோடேட்டாவில் என் வயது 50க்கு மறுபுறம்'

  நகைச்சுவையில் உங்கள் வயது அளவிடவே முடியாதது !

  ReplyDelete
 4. விளம்பரம்...வியாபாரம்...மார்க்கேட்டிங் ....என்பதெல்லாம் தனி உலகம் தான் ! பேனுக்கு அடியில் அமர்ந்து பேனாவைத் தேய்க்கும் வேலை அல்ல அது !

  நம் திறமை (அப்படி ஒன்று இருந்தால் ) அதை அப்படியே காசாக்கும் கலை அது ! மார்க்கெட்டிங் என்றால் வெகு கஷ்டம் என்றான் நண்பன். அதை ஒரு சேலஞ்ச் ஆக எடுத்துக் கொண்டு, பொறுப்புள்ள உத்தியோகத்தில் இருந்த நான், 2000 வாக்கில் விபுல் சாரீஸ் விற்க ஆரம்பித்தேன் !

  பிய்த்துக் கொண்டு போயிற்று ......

  என் ப்ரேஸ்டிஜ் !

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :