March 30, 2013

இரண்டு சிட்டுக் குருவிகள் -பாகம் 1

இரண்டு சிட்டுக் குருவிகள்   --- எழுதியது ???

    குளுகுளுவென்று முழுதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அமெரிக்கன் லைப்ரரிக்குள் செல்லும் போது சிவாவுக்கு எப்போதும் கிளுகிளுவென்று இருக்கும். காரணம், அந்த லைப்ரரியில் பணியாற்றும் பல அழகிய பெண்களில் ஒருத்தி அவனது மனத்தைக் கவர்ந்தவள். அதாவது, அவனுக்கு அவள் மேல் ஒரு "இது!'  இத்தனைக்கும் அவளுடன் பேசியது கூடக் கிடையாது. அந்தப் புத்தகசாலைக்கு வரும் பல புத்தகப் புழுக்களில் அவனும் ஒரு புழு - அவனைப் பொறுத்தவரை.

    அவளது கவனத்தைக் கவருவதற்கு அவன் பல முயற்சிகள் செய்திருக்கிறான். அவள் ரெஃபரன்ஸ் டெஸ்க்கில் இருக்கும் போது வேண்டுமென்றே 'எஸ்கொயர் ஏப்ரல் 74 இஷ்யூ வேண்டுமே' என்பான். அல்லது ' வில்லியம் ஹாஸ்லிட் அப்ச்ன்' என்ற அமெரிக்க எழுத்தாளரின் விலாசத்தைக் கண்டுபிடித்துத் தரமுடியுமா?'' என்று கேட்பான்! இதுமாதிரி எத்தனையோ விசாரணைக்கள் வருவது சகஜமாதலால், அவள் பதில் சொல்லி விட்டுப் போவாளே தவிர, அவனை இரண்டாம் தடவையாகத் திரும்பிப் பார்த்ததில்லை.
    சிவாவுக்கு அன்றைய தினம் லைப்ரரி மாடிப்படி ஏறும்போது வழக்கமான கிளுகிளுப்புடன் சிறிது குறுகுறுப்பும் சேர்ந்து கொண்டது. ஏனெனில், அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பத்து நாட்களுக்கு முன்பே திருப்பி இருக்க வேண்டும்! கவுண்டரில் "அவள்' இருந்தாள். (ஆமாம், "அவள்' பெயர் என்ன?)

இரண்டடி இடைவெளியில் அவளை நெருக்கமாகப் பார்க்க -அதாவது அவள் புத்தகத்தின் டிக்கட்டுகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது - அவளைக் கண்களால் ரசிக்க வாய்ப்பு கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி வேறு உள்ளத்தில் ஊறியது.

    "ஐ யம் சாரி... டூர் போய்விட்டேன். அதனால்தான் லேட்டாகிவிட்டது...'' என்று குழைந்து கொண்டே சொன்னான், புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது.
    "தட் ஈஸ் ஆல்ரைட்... டூர் போகும் முன்பு புத்தகம் திருப்பிதர வேண்டிய தேதியைப் பார்த்துக் கொடுத்து விட்டுப் போவது நல்லது.''
    அவனது லைப்ரரி டிக்கட்டைக் கொடுத்துவிட்டு, புத்தகங்களை அடுக்கும் வேலையில் அவள் ஈடுபட்டாள்.
    "எந்த ஊருக்கு டூர்? என்ன வேலை உங்களுக்கு?' என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராக இருந்தான் சிவா. ஆனால் அவள் கேட்டால் தானே!
    லைப்ரரியில் அரைமணி நேரம் இருந்துவிட்டு ஒரு பிரம்மாண்டமான புத்தகத்தை எடுத்தான். அதன் தலைப்பு கூட அவனுக்குப் புரியவில்லை. சும்மா அவளை "இம்ப்ரெஸ்' செய்வதற்காகத்தான்! கவுண்ட்டரில் அவன் போன போது, அவள் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

March 23, 2013

விளம்பர மாடல் அப்புசாமி

(ஒரு சமயம்,  நகைச்சுவை மலரைத் தயாரித்துத் தரும்படி ‘கல்கி’என்னைக் கேட்டுக் கொண்ட போது,  பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம். ராமசாமியிடம் ஒரு ’அப்புசாமி கதை' கேட்டேன். "ஆகட்டும் பார்க்கலாம்' என்று பாக்கியம் ராமசாமி சொன்னார். இதழ் அச்சுக்குப் போகும் தினம் வரை கதை வராததால் நானே, பாக்கியம் ராமசாமியின் பாணியில் ஒரு அப்புசாமி கதையை எழுதிவிட்டேன்.) 
விளம்பர மாடல் அப்புசாமி  
       மரவட்டை மாதிரி நன்றாகச் சுருட்டி படுத்துக் கொண்டு விடிகாலைத் தூக்கத்தை ரசித்துக் கொண்டிருந்தார் அப்புசாமி. அபாரமான கனவு.
 
      ராத்திரி வெகுநேரம் வரை தெருவோர விளக்கின் கீழ் அவருடைய நண்பர்கள் ரசகுண்டுவும் பீமாராவும் தாங்கள் பார்த்த விட்டலாசார்யா படத்தை அப்புசாமிக்குக் காட்சி காட்சியாக விவரித்திருந்தார்கள்.
      “தாத்தா, நீ ஜெயமாலினியின் அட்டகாசமான டான்ஸைப் பார்த்திருந்தால் ஸும்மா கிர்ரிங் ஆயிருப்பே'' என்றான் ரசம்.
      “டேய் அவரேனு ஹாகே ஆகுவதில்லை. அவரு தும்ப வயசானவரு'' என்றான் பீமா.
      “யாருடா கெயம்...? நீ கெயம், ஒன் தாத்தா கெயம்... அந்தத் தாத்தாவுக்குத் தாத்தா கெயம்... வாயை வாஷிங் சோடா போட்டுக் கழுவு. அய்யாவா கெயம்?... வூடு கட்டிடுவேன்'' என்று பீமாராவின் மேல் பாய்ந்தார்.
      “தாத்தா... பீமாவை வுடு. கதையைக் கேளு. ஒரு சீன்லே ஜெயமாலினி பயங்கர மழையிலே மாட்டிக்கிறா... அடாடா...''
      “ஏய், ரசம்... நீனு ஏனாதரு ஹேளி அவரிகே வயித்தெரிச்சலைக் கிளப்பாதே. அவரெல்லி சினிமா, சினிமாகே ஹோகுத்தாரே? பாட்டி தான் ஃபுல் கண்ட்ரோல் நல்லி இட்டித்தாரே...''
     “போடா குண்ரோல்! கண்ட்ரோலாம் ஒண்ணாம்... மேலே கதையைச் சொல்லுடா...''
      “தாத்தா மீதிக் கதை நாளைக்கி ராத்திரி தான். ருக்மணி திட்டும்...'' என்று ரசகுண்டு சொல்ல, கூட்டம் கலைந்தது.

March 15, 2013

அப்புசாமி விருது - என் ஏற்புரை

முன் குறிப்பு: சென்ற ஆண்டு எனக்கு அப்புசாமி நகைச்சுவை பதக்கம் அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையால் தரப்பட்டது,  விழாவில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், டில்லி கணேஷ், சித்ராலயா கோபு, பாக்கியம் ராமசாமி அவர்கள், எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள், எழுத்தாளர்  ராணிமைந்தன் அவர்கள் பேசினார்கள்.
அப்போது நான் பேசிய உரையை இங்கு தருகிறேன். =================================================== 
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள், இன்று என் வாழ்நாளில் ஒரு முக்கிய தினம்.  அற்புத தினம், உன்னத தினம், பெருமைக்கும் பெருமிதத்திற்கும் உரிய தினம்.
நான் கனவிலும் எதிர்பாராத ஒரு கௌரவம் எனக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது.
நகைச்சுவைக்காகவே அமைக்கப்பட்டடுள்ள ஒரு அறக்கட்டளை என்னைக் கௌரவித்து இருப்பதாலும், அந்த அறக்கட்டளையை அமைத்துள்ளவர் திரு பாக்கியம் ராமசாமி என்பதாலும் அது தரும் விருது, கூடுதல் மதிப்பையும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
=                   =            =
கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன், ஆர்.கே.நாராயணன், எஸ்.வி.வி போன்ற நகைச்சுவை விற்பன்னர்களால் ஈர்க்கப்பட்ட நான்
நகைச்சுவை எழுத முற்பட்டபோது, எனக்குத் திறமையைவிட ஆர்வம்தான் அதிகம் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஆர்வமே திறமை என்று  எண்ணிக் கொண்டிருந்த சிறுவன் நான்.
1962-ல்  டில்லி சென்றதும்,, குமுதத்திற்குச் சில பேட்டிக் கட்டுரைகள் நான் அனுப்பினேன். அவைகளைச்  செதுக்கிச் சரிப்படுத்தி, குமுதத்தில் பிரசுரித்தார்கள். தொடர்ந்து எழுதி வந்தேன்.

இந்த சமயத்தில் 1967-ல் தினமணி கதிரில் சாவி பொறுப்பேற்றதும் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சாவியே கைப்பட எழுதியிருந்தார். அறிமுகம் கூட இல்லாத எனக்கு சாவியிடமிருந்து கடிதம்!.


“தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். கதிருக்கு ஒரு நகைச்சுவை கதையை எழுதியனுப்புங்கள்” என்று எழுதியிருந்தார்.

’எனக்கு எழுதத் தெரியும், அதுவும் கதை எழுதத்தெரியும், அதுவும் நகைச் சுவையாக!’ என்ற தவறான தகவலை அவருக்கு யார் சொல்லியிருப்பார்கள்?

அந்த கடிதத்தை என் தலையில் வைத்த கிரீடமாக கருதிக்கொண்டேன். ’மிஸ்டர் பஞ்சு’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அனுப்பினேன். மறு வாரமே அது பிரசுரமாயிற்று. இது விசேஷமல்ல. கதிரின் அட்டையில் ’மிஸ்டர் பஞ்சு நகைச்சுவை கதை --- அகஸ்தியன்’ என்று வேறு போட்டுவிட்டார்.

நகைச்சுவை என்னும் கரைகாணமுடியாத கடலில் என்னை இறக்கி, நீந்தச் செய்துவிட்டார் சாவி. அன்றிலிருந்து நகைச்சுவை புத்தகங்களாகவே படித்து வருகிறேன் MAD MAGAZINE துவங்கி SPIKE MILLIGAN, GEORGE BURNS, EVAN ESAR, JOEY ADAMS, WILLIAM HAZLETT UPSON, RICHARD ARMOUR, BOB HOPE, ART BUCHWALD, OGDEN NASH, PIERRE DANINOS என்று பல நூறு எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்து, அவர்களின் செய்முறைகளை உள்வாங்கி ஓரளவு திறமையை வளர்த்துக் கொண்டுள்ளேன்,
சாவியின் கேரக்டர் கட்டுரைகளைப் பார்த்து நானும் கேரக்டர் கட்டுரைகளை கதிரில் எழுதினேன். அவரைப் பின்பற்றி நானும் ’இங்கே போயிருக்கிறீர்களா?’ கட்டுரைகளை எழுதினேன்.

இது மாதிரியே மதிப்பிற்குரிய குருநாதர் பாக்கியம் ராமசாமி அவர்களின் எழுத்திற்குத் தீவிர ரசிகனானேன். ஒரு சில சமயம் அவர் எழுதிய பதப்பிரயோகங்களை அப்படியே நானும் உபயோகித்துள்ளேன்.

 
ஒரு நகைச்சுவை கதையில் சீரியஸான விஷயம் வந்தால் அதையும் அவர்  நகைச்சுவையாக எழுதியிருப்பார். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சொல்லுகிறேன். அவர் எழுதினார்: ”அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அவன் முகத்தில் எள் பிளஸ் கொள் வெடித்தது என்று எழுதியிருந்தார். வெறுமனே எள்ளும் கொள்ளும் என்று எழுதியிருந்தால் அதில் நகைச்சுவை இருந்திருக்காது.

March 08, 2013

எழுத்துக் கொலை --அகஸ்தியன்

(இது ஒரு பயங்கர கதை. கதவைத்  தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, விளக்கை அணைத்து விட்டு, கண்களை மூடிக் கொண்டுப் படியுங்கள்!!)
 - - - - - - - - - - - - - - - - - - 
மும்முரமாக மாத நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு கொலை செய்தாகிவிட்டது.  கதையில்தான். இருந் தாலும் குறைந்தபட்சம் மூன்று கொலை இருந்தால்தான் வாசகர்களுக்கு திருப்தி ஏற்படும் என்று மாத நாவல் ஆசிரியர் சொல்லியிருந்தார்.
மாதம், இரண்டு மூன்று நாவல்களை எழுதுபவன். ஒவ்வொரு நாவலிலும் மூன்று பேரையாவது கொலை செய்ய வேண்டு மென்றால் சுலபமான காரியமில்லை. நிஜமாகவே கொலைகள் செய்வது சுலபம் என்று தோன்றுகிறது.
"இரவு ஒன்பது மணிக்கு கதையை முடித்துக் கொடுத்துவிடுகிறேன். பையனை அனுப்புங்கள்'' என்று ஆசிரியரிடம் சொல்லி இருந்தேன். ஆகவே மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தேன்.
என் மனைவி --தீர்க்காயுசாக அவள் இருக்கட்டும் -இரண்டு நாளாக ஊரில் இல்லை. பிறந்தகம் போயிருந்தாள். அட நீங்க ஒண்ணு... சண்டை, கிண்டை எதுவுமில்லை, சும்மாத்தான் போயிருந்தாள். அவள் ஊரில் இல்லாததால் தொந்தரவு இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.
அவள் வீட்டில் இருந்தால், நான் எழுதுகிறேனே என்பதையும்.......
 சரி....சார், அந்த கதையெல்லாம் இப்போது எதற்கு?
மூன்றாவது கொலையைச் செய்தாக வேண்டும்.

March 02, 2013

ஒரு கார்ட்டூனிஸ்ட்
செங்கல்பட்டுக்கு, பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை உண்டு. 40' களில் விகடன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை பெற்ற திரு. ஏ. கே. பட்டுசாமி, டைரக்டர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, டைரக்டர் சி.வி. ராஜேந்திரன், எழுத்தாளர் ஞாநி, ஓவியர் மாயா, பேசும்படம் சம்பத்குமார், அப்புறம் நான்!. ஆங்கிலத்தில் எழுதிய, இந்தியன் எக்ஸ்பிரஸ் வேம்புசாமி, சுயராஜ்யாவில் எழுதிய பி.என்.. சம்பத் இரண்டுபேரையும் குறிப்பிடவேண்டும்.
இதில் நான் பெருமைப் \படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்தப் பட்டியலில் உள்ள ஸ்ரீதர், கோபு, சம்பத் குமார், ஞாநி ஆகியவர்கள் என் நண்பர்கள்.  
திரு. பி. என். சம்பத் அவர்கள் என் நண்பர் மட்டுமல்ல. என் வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரர். . அவர் சென்னை ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து வந்தார். தினமும் ரயிலில் பீச் ஸ்டேஷன் பயணம். அவர் கையில் எப்போதும் ஒரு பெரிய பையை வைத்திருப்பார்.. ரயிலில் அவருக்கென்று ஒரு ஜன்னல் சீட் யாராவது நண்பர்கள் துணி போட்டு ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள். ரயிலில் ஏறி உட்கார்ந்ததும் பையிலிருந்து ஏதாவது ஆங்கில தினசரியை எடுத்துப் படிக்க ஆரம்பிப்பார், அவர் பையில் ஆங்கிலப் பத்திரிகைகள் தான் நிரம்பியிருக்கும்.
சுயராஜ்யா இதழில் அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். இருந்தாலும் ஒரு அலட்டல் இல்லாமல் இருப்பார்’ அந்த காலத்தில் :சுயராஜ்யா இதழின் ஆசிரியராக காஸா சுப்பாராவ்  இருந்தார், அதில் வாராவாரம் ராஜாஜி  ’மை டியர் ரீடர்’  என்ற தொடர் பத்தியை எழுதி வந்தார். (அதை இன்று நினைத்தாலும், அந்த மாதிரி எழுத்தும் கருத்தும் மீண்டும் எப்போது படிக்கப் போகிறோம் என்று மனதில் ஏக்கம் தோன்றுகிறது)
ஒரு சமயம் திரு சம்பத் அவர்களுக்குக் கடிதம் வந்தது. கைப்பட எழுதியவர் ராஜாஜி!. ”அன்புள்ள சம்பத்,  நாங்கள் – காஸா, நான், வி. பி. ராமன் மூன்று பேரும் வி. பி. ராமன் வீட்டில் அவ்வப்போது சந்தித்துப் பேசிக் கொண்டிருப்போம். அதில் நீங்களும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும், வருகிற ஞாயிறு மாலை வர முடியுமா?
அன்புடன்
 ராஜாஜி
அந்த கடிதத்தை  மிகவும் பூரிப்புடன் சம்பத் காண்பித்தார். ”ராஜாஜியே உங்களைக் கூப்பிட்டிருக்கிறார். சாவகாசமாக உட்கார்ந்து பேசும் பிரைவேட் மீட்டிங்கிற்கு உங்களுக்கு அழைப்பு!. எவ்வளவு பெரிய கௌரவம்!” என்று நாங்கள் எல்லோரும் பாராட்டினோம். அவரோ ”ஏம்பா இதைப் பார்த்து நீங்கள் எல்லோரும் குதிக்கிறீர்கள்? எனக்கு வயிற்றைக் கலக்குகிறது, அந்த மகாமகா ஜாம்பவான்கள் கூட்டத்தில் நான் என்ன பேசுவேன். அவர்கள் GIANTS; நான் DWARF! நான் போகப்போவதில்லை" என்றார், அதன்படியே ஏதோ ஒரு சப்பைக் காரணத்தை எழுதிவிட்டு போகாமலிருந்தார்.

திரு. சம்பத்தின் பிள்ளைப் பற்றி எழுதுவதற்கு இந்த PROLOGUE போதும்  என்று நினக்கிறேன். 
சரி, யார் அந்தப் பிள்ளை?    
அவர் ஒரு நகைச் சுவை ஆசாமி, கார்ட்டூனிஸ்ட். அட்டகாசமான கலகல பேர்வழி. பெயர் ஸ்ரீகாந்த், துக்ளக் இதழில் தொடர்ந்து நகைச்சுவையையும் சடையரும் கலந்த கார்ட்டூன் ஐடியாக்களைக் கொடுத்து வருகிறார். வேறு சில பத்திரிகைகளிலும் இவர் படமும் ஜோக்கும் கொடிகட்டிப் பறக்கின்றன.
ஸ்ரீகாந்திடம் ”எப்படி துக்ளக்கில் உனக்கு வாய்ப்பு வந்தது?” என்று கேட்டேன். ( ஸ்ரீகாந்தை ஒருமையில் அழைக்க எனக்கு உரிமை இருக்கிறது. காரணம் ஸ்ரீகாந்த் பக்கத்து வீட்டு 72 வயது ‘பையன்’!) அதற்கு ஸ்ரீகாந்த உற்சாகத்துடன் கூறியது:. ”பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு கல்யாணத்தில் சோ அவர்களைச் சந்திக்கச் சான்ஸ் கிடைத்தது. அவரிடம் நான் வரைந்த ஒரு கார்ட்டூனைக் கொடுத்தேன், அன்றிரவு எனக்கு அவரிடமிருந்து ஃபோன் வந்தது.  "உன் கார்ட்டூன் இந்த வாரமே அட்டைப் படமாக வெளியாகிறது தொடர்ந்து அனுப்பிக்கொண்டு வா” என்றார், அன்றிலிருந்து இன்று வரை துக்ளக்கில் சான்ஸ் கொடுத்து வருகிறார்.”

தொடர்ந்து, “இப்போது என்னுடைய இரண்டாவது  கார்ட்டூன் புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. சோ அவர்கள் அன்புடன் முன்னுரை எழுதித் தந்துள்ளார்” என்றார்.
.
ஸ்ரீகாந்தின் இரண்டு ஜோக்ஸ் அத்துடன் LIFE OF PI என்ற கட்டுரையையும் இங்கு தருகிறேன்.

 
                                                                                  

March 01, 2013

அன்புடையீர்,
வணக்கம்.
சமீபத்தில் வந்த ஒரு பின்னூட்டத்தைப் படியுங்கள்.
” சார்.. உங்களுக்கு ஒரு சின்ன யோசனை கூற விரும்புகிறேன்.  பின்னூட்டம் போடுவதற்குச் சில நிபந்தனைகளை பல பதிவர்கள்  வைத்திருக்கிறார்கள். பெயர், ஈ-மெயில் விவரங்கள் முதலியவற்றைப் பூர்த்தி செய்வது அவசியம் என்று. இதன் மூலமாமாக சர்வ வல்லமை  பொருந்திய ‘அனானிமஸ்’ பின்னூட்டம் போடுவது  தடுக்கப்படுகிறது.

ஒரு பதிவர், பதிவை எழுதி, அச்சடித்து, தேவையான படங்களைச் சேர்த்துப் பிரசுரிக்கிறார்.  பதிவைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது வாசகர் ஏன் பெயரில்லாமல் எழுதவேண்டும்?  இது பதிவர்க்குச் செய்யும் அவமரியாதை என்று கருதுகிறேன். ஒருக்கால் பதிவைப் பற்றி காரமான கருத்தை  தெரிவிக்கும் வேண்டுமானால். அப்போது பெயரை வெளியிடத் தயக்கம் இருக்கக்கூடும். அந்த சமயத்தில் ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ளலாம்.  இது பற்றி பதிவர்கள் சேர்ந்து, அனானிமஸ் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும் என்றுஒரு முடிவு எடுக்க வேண்டும்: !”

இந்த அன்பருக்கும் தாளிப்பு வாசகர்களுக்கும் அன்புடன் ஒரு அறிவிப்பு:   வாசகரின் யோசனையை ஏற்கிறேன். இனி  with immediate effect 'கடுகு தாளிப்பு' வில் ‘அனானிமஸ்’ பின்னூட்டங்கள் பிரசுரமாகாது
-கடுகு
அன்புடையீர்,
வணக்கம்.
சமீபத்தில் வந்த ஒரு பின்னூட்டத்தைப் படியுங்கள்.
” சார்.. உங்களுக்கு ஒரு சின்ன யோசனை கூற விரும்புகிறேன்.  பின்னூட்டம் போடுவதற்குச் சில நிபந்தனைகளை பல பதிவர்கள்  வைத்திருக்கிறார்கள். பெயர், ஈ-மெயில் விவரங்கள் முதலியவற்றைப் பூர்த்தி செய்வது அவசியம் என்று.
இதன் மூலமாமாக சர்வ வல்லமை  பொருந்திய ‘அனானிமஸ்’ பின்னூட்டம் போடுவது  தடுக்கப்படுகிறது.

ஒரு பதிவர், பதிவை எழுதி, அச்சடித்து, தேவையான படங்களைச் சேர்த்துப் பிரசுரிக்கிறார்.  பதிவைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது வாசகர் ஏன் பெயரில்லாமல் எழுதவேண்டும்?  இது பதிவர்க்குச் செய்யும் அவமரியாதை என்று கருதுகிறேன். ஒருக்கால் பதிவைப் பற்றி காரமான கருத்தை  தெரிவிக்கும் வேண்டுமானால். அப்போது பெயரை வெளியிடத் தயக்கம் இருக்கக்கூடும். அந்த சமயத்தில் ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ளலாம்.  இது பற்றி பதிவர்கள் சேர்ந்து, அனானிமஸ் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும் என்றுஒரு முடிவு எடுக்க வேண்டும்: !”

இந்த அன்பருக்கும் தாளிப்பு வாசகர்களுக்கும் அன்புடன் ஒரு அறிவிப்பு:   வாசகரின் யோசனையை ஏற்கிறேன். இனி  with immediate effect 'கடுகு தாளிப்பு' வில் ‘அனானிமஸ்’ பின்னூட்டங்கள் பிரசுரமாகாது
-கடுகு