March 23, 2013

விளம்பர மாடல் அப்புசாமி

(ஒரு சமயம்,  நகைச்சுவை மலரைத் தயாரித்துத் தரும்படி ‘கல்கி’என்னைக் கேட்டுக் கொண்ட போது,  பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம். ராமசாமியிடம் ஒரு ’அப்புசாமி கதை' கேட்டேன். "ஆகட்டும் பார்க்கலாம்' என்று பாக்கியம் ராமசாமி சொன்னார். இதழ் அச்சுக்குப் போகும் தினம் வரை கதை வராததால் நானே, பாக்கியம் ராமசாமியின் பாணியில் ஒரு அப்புசாமி கதையை எழுதிவிட்டேன்.) 
விளம்பர மாடல் அப்புசாமி  
       மரவட்டை மாதிரி நன்றாகச் சுருட்டி படுத்துக் கொண்டு விடிகாலைத் தூக்கத்தை ரசித்துக் கொண்டிருந்தார் அப்புசாமி. அபாரமான கனவு.
 
      ராத்திரி வெகுநேரம் வரை தெருவோர விளக்கின் கீழ் அவருடைய நண்பர்கள் ரசகுண்டுவும் பீமாராவும் தாங்கள் பார்த்த விட்டலாசார்யா படத்தை அப்புசாமிக்குக் காட்சி காட்சியாக விவரித்திருந்தார்கள்.
      “தாத்தா, நீ ஜெயமாலினியின் அட்டகாசமான டான்ஸைப் பார்த்திருந்தால் ஸும்மா கிர்ரிங் ஆயிருப்பே'' என்றான் ரசம்.
      “டேய் அவரேனு ஹாகே ஆகுவதில்லை. அவரு தும்ப வயசானவரு'' என்றான் பீமா.
      “யாருடா கெயம்...? நீ கெயம், ஒன் தாத்தா கெயம்... அந்தத் தாத்தாவுக்குத் தாத்தா கெயம்... வாயை வாஷிங் சோடா போட்டுக் கழுவு. அய்யாவா கெயம்?... வூடு கட்டிடுவேன்'' என்று பீமாராவின் மேல் பாய்ந்தார்.
      “தாத்தா... பீமாவை வுடு. கதையைக் கேளு. ஒரு சீன்லே ஜெயமாலினி பயங்கர மழையிலே மாட்டிக்கிறா... அடாடா...''
      “ஏய், ரசம்... நீனு ஏனாதரு ஹேளி அவரிகே வயித்தெரிச்சலைக் கிளப்பாதே. அவரெல்லி சினிமா, சினிமாகே ஹோகுத்தாரே? பாட்டி தான் ஃபுல் கண்ட்ரோல் நல்லி இட்டித்தாரே...''
     “போடா குண்ரோல்! கண்ட்ரோலாம் ஒண்ணாம்... மேலே கதையைச் சொல்லுடா...''
      “தாத்தா மீதிக் கதை நாளைக்கி ராத்திரி தான். ருக்மணி திட்டும்...'' என்று ரசகுண்டு சொல்ல, கூட்டம் கலைந்தது.

      அப்புசாமி, மரவட்டை அவதாரத்தில் இருந்தாலும், சுகமான கனவில் மிதந்து கொண்டிருந்தார். கம்பீரமான கவர்ச்சி நாயகனாக.  அவரைச் சுற்Ri ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் பல ஜெயமாலினிக்கள்  அவரைச் சுற்றி மழையில் நனைந்து கொண்டிருக்க, எல்லாரும் சடாரென்று தண்ணீரைத் தெளிக்க,
      சட்டென்று கண் விழித்துப் பார்த்தார்.
      “வாட் ஈஸ் தி டைம்?... எய்ட் ஆச்சு. நீங்க எழுந்துக்கலை. ஐ டோண்ட் அண்டர் ஸ்டாண்ட், வாட் எ ஜென்மம் யூ ஆர்? தூங்கறதுக்கு லிமிட் வேண்டாம்.''
      “சீதே... உனக்குத் தான் இன்ஸோம்னியா, நிமோனியா, அம்மோனியா எல்லாம்... உனக்கு வயசாயிடுத்து. கிழக்கோட்டான் மாதிரி நைட்டெல்லாம் முழிச்சுண்டு இருக்கே...''
      “ஆகாகா... பெரிய இளைஞர் திலகம். உங்க மூஞ்சியை மிர்ரர்லே பாருங்க. அதுகூட வேறே பக்கம் திரும்பிக்கும். கெட் அப்...''
      “டூ மினிட்ஸ், சீதை...''
      “நீங்க என்ன மேக்கி நூடுல்ஸா? டூ மினிட் என்று டி.வி.யிலே சொல்ற மாதிரி சொல்றீங்களே... சீக்கிரம் எழுந்திருங்க. மிஸஸ் அலமேலு சந்தானத்தின் கிராண்ட் சன் பர்த்டே செலிபரேஷனுக்குப் போகணும்னு தௌசண்ட் டைம்ஸ் நேற்று சொன்னேன். சீக்கிரம் எழுந்து கிளம்புங்க.''
      “சீதே... என்ன பிரமாத பர்த் டே? அப்பர் பர்த் டேயாக இருந்தாலும் சரி, லோயர் பர்த் டேயாக இருந்தாலும் சரி, நம்பளை, இந்த ஸ்லீப்பர்லேருந்து கிளப்ப முடியாது'' என்று சொல்லிவிட்டு அப்புசாமி 'மீண்டும் மரவட்டை' யானார்.
      ஆனால் தூக்கம் வரவில்லை. "சீதே... என் தூக்கத்தைக் கலைத்தாயே, நீ நன்னா இருப்பியா? என் மூஞ்சியைப் பத்தி என்ன சொன்னே? என் மூஞ்சியிலே விழுந்திருக்கிற ஒவ்வொரு வரியும் ரவி வர்மா பிரஷ்ஷால் போட்ட வரி மாதிரி' என்று மனத்திற்குள் பேசிக் கொண்டார்.
  *                                   *
      வேஷ்டியின் நுனியை நன்றாகத் திருகிக் காதில் விட்டு, சுகமாகக் காது குடைந்து கொண்டிருந்தார் அப்புசாமி.
      பீமாராவும் ரசகுண்டுவும் வந்தார்கள்.
      “தாத்தா... நீவு தும்ப அதிர்ஷ்டசாலி. நிம்மகே ஆயிரம் ரூபாய் பருத்தே'' என்றான் பீமாராவ்.
      “என்னடா ரசம், பீமா என்ன ரீல் வுடறான், பருத்தே, இளைச்சேன்னு?''
      “ரீல் இல்லே தாத்தா... நெஜம்மாதான் சொல்றான். பீமாவின் மாமா ஒரு விளம்பரக் கம்பெனியிலே இருக்கார். புதுசா ஒரு 'டெய்லி' பத்திரிகை வரப் போறது. அதைப் பத்தி விளம்பரம் போடறாங்க. நீங்க பேப்பர் படிக்கிற மாதிரி படம் எடுக்கணும்.''
      “அப்புறம் டீ.வி.யிலே கூட வருமா?''
      “ஹேனு தாத்தா ஹூகே கேள்தீரீ? மவுண்ட்ரோடில் ஸ்ரீதேவியின்   சினிமா பேனர் பக்கத்தல்லி நிம்ம பேனரை இடுத்தாரே...''
      “ஏண்டா ரசம்... டீ.வி. விளம்பரங்களில் அழகழகா குட்டிப் பொண்ணுங்க வர்றாங்களே. அது மாதிரி நம்பளோட ஏதாவது கிட்டி கித்வானி, சுப்ரியா பதக், ரீனா குப்தான்னு இளசா ஒண்ணைப் போட்டா சர்க்குலேஷன் ’கும்’னு தூக்கிடும். பீமா ஒன் மாமா கிட்டே சொல்லும்மா'' என்றார் அப்புசாமி.
      “மாமா முதல்லே இந்த மாடலிங் லைன்லே பூருங்க. அப்புறம் பாருங்க நான், நீயின்னு மேலே வுழுவாங்க...''
      “யாருடா வுழுவாங்க... இளசுங்களா?''
      “சொல்ல முடியாது தாத்தா. கவர்ச்சித் தாத்தான்னு உங்களுக்கு ஒரு இமேஜ் வந்துடுத்தானால் பணம் மழையா கொட்டும்.''
      “பீமா... நீ சொல்றதாலே ஒத்துக்கிறேன். ஆயிரம் ரூபாய் எப்படிடா போறும்?''
      “தாத்தா வர்ற லட்சுமியை வேணாம்னு சொல்லாத்தீங்கோ, பிகு பண்ணாதீங்க...''
      “ரசம்... நீ சொல்றதாலே ஒத்துக்கறேன். போட்டோ எடுக்கறதுக்கு முன்னே பத்து கமர்கட் தரணும். அப்ப தான் ஜாலி மூடு வரும்...'' என்றார் அப்புசாமி.
 *                              *
      ஒரு பொறை பிஸ்கெட்டை, பாதாம் அல்வா சாப்பிடுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துச் சுவைத்துக் கொண்டே மேலே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் அப்புசாமி. இடம்: மவுண்ட்ரோடு. அண்ணா சாலை சமீபம்.
      ரசகுண்டு, “தாத்தா... தூள் கிளப்பிட்டீங்க. அதென்ன ஸ்டைல் தாத்தா. படா ஷோக்காக இருக்கீங்க...'' என்றான்.
      “தாத்தா... நீவு ஒந்து ஸ்டார் ஆகிபிட்றி, நோடு தீரா... பக்கத்தல்லி ஸ்ரீதேவி, வெச்ச கண்ணை தொகையுவதில்லா, நிம்ம பேனர் நோடுதவரு'' என்றான் பீமாராவ்.
      “பீமா... எல்லாம் சரிதான். இதைச் சீதாக் கிழம் பார்க்கணும். சும்மா வயிறு எரியணும். ’மங்கையர் மலர்’லே அவளோட போட்டோ வந்ததாம். என்னம்மா குதிச்சா? அது மட்டுமாடா ரசம்... "உங்க போட்டோ வரணும்னா நீங்களே பத்திரிகை ஆரம்பிச்சாத்தான் உண்டு"ன்னு இன்ஸல்டிங்கா சொன்னாளேடா... இந்தப் பேனரைப் பார்த்தா நம்ப காலில் வுழுந்து மன்னிப்பு கேட்பாடா... ஏண்டா பீமா... என் தலை இவ்வளவு வழுக்கையாவா இருக்கு? கொஞ்சம் டச் அப் பண்ணியிருக்கலாம். வாங்கடா... சோன்பப்டி சாப்பிடலாம். ஆயிரம் ரூபாய்லே அந்தக் கிழவிக்கு அரிசி மிட்டாய் கூட வாங்கித் தரப் போறதில்லை. ரசம்... சாயங்காலம் திருவல்லிக்கேணி பீச்சுக்குப்போய் மிளகாய் பஜ்ஜி அடிக்கலாம்...'' அப்புசாமி, விசு எழுதிய டயலாக் மாதிரி விடாமல் பேசிக் கொண்டிருந்தார்!
 *                                   *
      “ஐ நெவர் தாட் நீங்க இந்த லெவலுக்கு ஸ்டூப் பண்ணுவீங்கன்னு. பொன்னம்மா டேவிட், பா.மு. கழக மீட்டிங்க்லே உங்களைப் பத்தி, அதாவது நீங்க போஸ் கொடுத்திருக்கிறதைப் பத்தி கமென்ட் அடிச்சா. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போட்டுது...''
      “சீதே... அதுலே நல்லபடியாகத்தானே போட்டோ பிடிச்சுப் போட்டிருந்தாங்க.''
      “அக்ரீட்... பட், நீங்க பேப்பரில் என்ன நியூஸ் படிக்கிறதாக் காட்டியிருந்தாங்க. முதல்லே அதைப் போய் அப்ஸர்வ் பண்ணிக்கிட்டு வாங்க, ஹாஃப் நேக்கட் கேர்ள் படத்தை வாயைத் திறந்து பார்த்துக்கிட்டிருக்கீங்க. இந்த மாதிரி மாடலிங் செய்றதுக்கு முன்னே என்கிட்ட ஒரு வார்த்தை கர்ட்டிஸிக்காகவாவது கேட்டீங்களா?''
      “சீதே... அது மாடலிங். ஒரு ஆக்டிங் மாதிரி தான். இப்போ நான் ஒரு சோப் விளம்பரத்துக்கு மாடலிங் பண்ணா, அந்தச் சோப்பை நான், அதாவது இந்த அப்புசாமி யூஸ் பண்றேன்னு அர்த்தமா...''
      “இந்த விஷயத்துலே யாரும் அப்படி நினைக்கமாட்டாங்க. நீங்க குளிச்சாத்தானே ரெகுலரா...'' இந்த சமயத்தில் டெலிபோன் மணி அடிக்கவே சீதாப்பாட்டி அதைக் கவனிக்கச் சென்று விட்டாள்.
 *                                   *
      “என்னடா ரசம்... நீ என்ன சொல்றே? இந்தப் படத்தைப் பார். இந்த மாதிரி படம் எடுத்துக்கணுமாம்.''
      “ஹேனு தாத்தா... யோசனை? மாடலிங் சும்மனேனா மாடுதிரீ? எங்க மாமா, ஆகாக காசு கொடுத்தாரே. பாக்கெட் மணிகே பாட்டி ஹத்திர கை நீடு போகாகில்லா.''
      “அதில்லை பீமா... அவர் என்னவோ நாலைஞ்சு பொம்மனாட்டிப் பசங்களுக்கு நடுவுலே நிக்கணும்னு சொல்றாரு. எனக்கு வெக்கமா இருக்குமே...''
      “அந்தப் பொண்ணுங்களுக்கே வெக்கம் வருவதில்லா. நிம்மகேக ஏன் வரப் போவுது, தாத்தா? அஞ்சாயிரம் ரூபாய் கசக்குதா?''
      “சோன்பப்டி வாங்கிச் சாப்பிட்டா கசக்காது. பாவக்காய்ச் சாப்பிட்டா கசக்கும். டேய் பீமா, நான் ரெடிடா... ஸ்விம்மிங் டிரஸ்லே கூட ரெடி. எவண்டா போட்டோ எடுத்துப் பணமும் கொடுக்கிறான், இந்தக் காலத்திலே...?''
      “தாத்தா... சின்ன வயசிலேயே இந்த லைன்லே நீங்க பூந்திருந்தா எக்கச்சக்கமா சம்பாதிச்சுப் பெரிய வூடு கட்டியிருப்பீங்க...''
      “ஏண்டா ரசம், இப்ப மட்டும் என்னவாம்? இப்போ ஒரு சின்ன வீடாவது கட்டறேன். பீமா, உன் மாமாகிட்ட சொல்லு, நான் ரெடி'' என்றார் அப்புசாமி.
      *                              *
      “டேய் பீமா... சுளை சுளையா நோட்டு....''
      “நோட்டு இருக்கட்டும் தாத்தா, நிம்ம போட்டோ காட்டு.''
      உறையிலிருந்த போட்டோவை நாசூக்காக எடுத்துக் கொடுத்தார் அப்புசாமி.
      “தாத்தா... ஹேனு தாத்தா இது...''
      “பீமா... அவருக்கு அதிர்ஷ்டம்மா. எத்தனை பொம்மனாட்டிங்க! அப்படியே கடிச்சுச் சாப்பிடற மாதிரியில்லே சூழ்ந்துகிட்டு இருக்காங்க. லட்டு கணக்கா இருக்காங்க. தாத்தா கொடுத்து வச்சவரு.''
      “ஹேனு தாத்தா, இது என்னா அட்வர்டைஸ்மெண்ட்டு?''
      “ஏதோ லேகியமாம். எதுவாயிருந்தால் என்னா? நாய் வித்த காசு குரைக்குமா? வாங்கடா, பீச்சிலே போய் பஜ்ஜி சாப்பிடலாம். ராத்திரி செகண்ட் ஷோ போய்ட்டு மசாலா பால் அடிக்கலாம். அடி சீதே பாட்டி!... உனக்கு பாக்கெட் மணி வேணுமா? என்னைக் கேளு'' என்று நாடக பாணியில் கூறித் தன் மார்பைத் தட்டிக் கொண்டார்.
 **                                  *
      துரதிர்ஷ்டம்! அடுத்த அறையில் உறங்குவது போலிருந்த சீதாப்பாட்டி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள்!
      அப்புசாமி, போட்டோவைத் தன் ட்ரங்கில் வைத்து விட்டு பீச்சுக்குப் புறப்பட்டதும், ட்ரங்க்கைத் திறந்து பார்த்த சீதாப் பாட்டிக்கு ஏற்பட்டது ஷாக்!
      “திஸ் ஈஸ் அட்ரோஷியஸ்... இந்த லேடீஸ் எல்லாம் டிரஸ் பண்ணிண்டா இருக்காங்க. பார்க்கக் கண் கூசறது. ஐ திங் திஸ் ஓல்ட் மேன் ஹேஸ் கான் மேட்! என்னமோ லேகியமாமே... ஓ, காட்... இது ஏதோ டர்ட்டி விளம்பரமாக இருக்கும். ஐ ஷுட் ஸ்டாப் திஸ்.''
      சீதாப் பாட்டியின் கம்ப்யூட்டர் மூளை மளமளவென்று வேலை செய்தது. போட்டோவைத் திருப்பிப் பார்த்ததில் போட்டோக்காரரின் பெயர், விலாசம் இருந்தது. அவருக்குப் போன் பண்ணி, பீமாவின் மாமாவைக் கண்டுபிடித்தாள்.
      “ஐ எம் மிஸஸ் அப்புசாமி. அமாம்..எஸ்.எஸ். உங்க லேகிய விளம்பர மாடல்... அவர் மாடலிங்குக்காக இப்ப வெளியே போயிருக்கார். ஒரு சின்ன விஷயம். வேறே ஒரு லேகியக் கம்பெனிக்காரங்க அவரை மாடல் பண்ணச் சொல்லிக் கூப்பிடறாங்க. இப்ப உங்களுக்காக ஒரு லேகிய விளம்பரத்திற்குப் போஸ் கொடுத்திருக்காரு இல்லையா? அதனால் ஒத்துக்க மாட்டோம்னு சொல்ல நினைக்கிறேன். பை திவே என்ன லேகியக் கம்பெனி உங்களுடையது... திஸ் ஈஸ் ஜஸ்ட் ஃபார் அவர் இன்ஃபர்மேஷன். இன்சிடென்டலி ஐ எம் சீதாப்பாட்டி... பிரசிடெண்ட் ஆஃப் பா.மு. கழகம்...''
      “இஸ் இட் மேடம். உங்க ஹஸ்பெண்ட் தான் தி கிரேட் அப்புசாமியா... ஹி ஈஸ் எ ஒண்டர்ஃபுல் மாடல்... யெஸ் அந்த லேகியம்... அது வந்து...''
      “ஏன் ஹெஸிடேட் பண்றீங்க... மாடலிங்னு வந்துட்டால் யு ஷுட் பி ரெடி ஃபார் எவ்வரிதிங்க்...''
      “தட் ஈஸ் தி ஸ்பிரிட் மேடம். அது வந்து ரதி-மன்மத லேகியம்... யூ நோ த ஸ்டஃப்... ரிஜுவெனேஷனுக்கு...''
      “ஓ அப்படியா, இட் ஈஸ் பர்ஃபக்ட்லி ஆல்ரைட்... தேங்க்யூ...''
      “யூ ஆர் வெல்கம் மேடம்.'' போனை வைத்ததும், சீதாப்பாட்டி தன் மூளையைக் கசக்கிக் கொண்டாள்!
      *                                          *
      டை கட்டி, ட்ரிம்மாகக் காரில் வந்து இறங்கிய ஆசாமியைப் பார்த்து அப்புசாமி அசந்து விட்டார். கார் என்றால் படகுக் கார்!
      “மிஸ்டர் அப்புசாமி? ஐ எம் மோகன்ராஜ். மோகன் மாடலிங் ஏஜென்ஸி நடத்தறேன். இண்டியாவிலேயே இது பெரிய ஏஜென்சி.''
      அப்புசாமி மனத்திற்குள் ’ரேட்டை’ப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.
      “ஏதாவது மாடலிங் பண்ணணுமா?''
      “கரெக்ட் எங்க கிளையண்ட், உங்க போட்டோவைப் பார்த்து அசந்துட்டாரு. அவரு பிராடக்ட் விளம்பரங்களுக்கு உங்களை எக்ஸ்க்ளூஸிவ்வா யூஸ் பண்ண ஆசைப்படறார்.''
      “அப்படீன்னா?''
      “அந்த பிராடக்ட் சம்பந்தப்பட்ட பத்திரிகை, டீ.வி. விளம்பரங்கள், பேனர் எல்லாவற்றிலும் நீங்கதான் இருக்கணும். அதுக்காக ஒரு பத்து வருஷ காண்ட்ராக்ட் போட்டுக்கலாம் என்கிறார்.''
      “அதாவது....''
      “காண்ட்ராக்ட் முடியற வரைக்கும் வேற யாருக்கும் மாடலிங் பண்ணக் கூடாது. ஆனால் மாசா மாசம் உங்களுக்கு நாங்க 1000 ரூபாய் ரீடைய்னர் கொடுப்போம். மாடலிங் பண்ணும் போது 5000 ரூபாய், ஒவ்வொரு ஸிட்டிங்கிற்கும்... ரேட் குறைவுதான். ஆனால் இப்போ நீங்க ஒத்துக்கணும். பிஸினஸ் இம்ப்ரூவ் ஆனால், ரேட்டை ஏத்தறோம்'' என்று வார்த்தைகளைச் சாக்ரீனில் தோய்த்துத் தோய்த்துச் சொன்னார்.
      அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. "நமக்கா இத்தனை அதிர்ஷ்டம்' என்று சந்தோஷத்தால் திக்கு முக்காடினார்.
      அந்தச் சமயம் சீதாப் பாட்டி அங்கு வந்தாள் காப்பியுடன், “சீதே....இவர் வந்து...''
      “ரீஸனபிள் ஆஃபர், கண்ணை மூடிண்டு கையெழுத்துப் போடுங்க''
      அப்புசாமிக்குத் தலைகால் புரியவில்லை. சீதா ஒரு வார்த்தைகூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. செவன்த் ஹெவனுக்குப் போய்விட்டார்!
      அப்புசாமி கையெழுத்துப் போட்டார் காண்ட்ராக்டில். மோகன்ராஜ் ஆயிரம் ரூபாய் எண்ணிக் கொடுத்தார்.
      *                                    *
      அப்புசாமியைப் பார்க்க பீமாவின் மாமா வந்தார்.
      “சார்... அந்த லேகிய விளம்பரம் பிரமாதமான லே-அவுட் போட்டுத் தயார் பண்ணியிருக்கோம். க்ளையன்ட் அசந்து போய்ட்டான். நாலு லட்சம் போஸ்டார் அடிக்கச் சொல்லி, வேலை நடந்துண்டு இருக்குது...''
      “ஹி... ஹி... அப்படியா, இனிமேல் தமிழ்நாட்டில் எல்லாச் சுவர்களிலும் நான்தானா?''
      “நீங்கள் மட்டுமில்லை, ஜிலுஜிலு குமரிகள், குளுகுளு கன்னிகள்...''
      “சார்... ஒரு போஸ்டரை நான் பார்க்கலாமா?''
      பீமாராவின் மாமா அந்த மூவண்ண போஸ்டரை எடுத்துக் காட்டினார்.
      “சார்... எனக்கு ஒரு காபி தர்றீங்களா?''
      “இது ரஃப் புரூப். வார்னிஷ் போட்டதைத் தர்றேன்''
      “அதுவரைக்கும் இதை வெச்சுக்கறேன்'' என்று கெஞ்சி வாங்கிக் கொண்டார் அப்புசாமி.
  *                                       *
      “போஸ்ட்மேன், ரிஜிஸ்தர் லெட்டரா யாருக்கு...? என் ஹஸ்பெண்டுக்கா? இதோ கூப்பிடறேன்...'' அப்புசாமியைச் சீதாப்பாட்டி கூப்பிட்டாள்.
      “யார் எனக்கு ரிஜிஸ்தர் அனுப்பப் போறான். ஓ, செக்காக இருக்கும். சீதே, கெட் மீ எ பென்'' என்று அலட்டலாகச் சொன்னார் அப்புசாமி.
      கவரை வாங்கிப் பிரித்துப் பார்த்ததும் தேள் கொட்டியது போல் குதித்தார்.
      “ஒய் ஆர் யூ ஜம்பிங் லைக் எ வால் அறுந்த பல்லி? எந்தப் பட்டணத்தை யார் ராப் பண்ணிட்டாங்க?''
      “கொள்ளைடி சீதே.. கொள்ளை... இந்த மோகன்ராஜ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கான். அவன் அனுமதி இல்லாமல் லேகிய விளம்பர போஸ்டர் என் படத்தோட அச்சடிச்சது தப்பாம். 25,000 ரூபாய் நஷ்டஈடு தரணுமாம். காண்ட்ராக்டிலே அப்படி கண்டிஷன் இருக்குதாம்.''
      “இருக்கட்டுமே.. காண்ட்ராக்டில் கையெழுத்துப் போடறதுக்கு முன்னேயே மாடலிங் பண்ணதுதானே இது... டேக் தி காண்ட்ராக்ட் காப்பி. லெட் மீ ஸீ.''
      அப்புசாமி ஓர் அழுக்குத் துணியில் சுற்றிக் கட்டி வைத்திருந்த மோகன்ராஜ் காண்ட்ராக்ட்டை எடுத்து வந்தார்.
      சீதாப்பாட்டி பிரித்துப் பார்த்தாள்.
      “மோகன்ராஜ் ஈஸ் கரெக்ட். நீங்க காண்ட்ராக்ட்டைச் சரியாப் படிக்கலை. இது என்ன டேட் தெரியுமா? ஜூன் 18, 1985, தட் ஈஸ் லாஸ்ட் இயர்.''
      “இந்த வருஷம்தானே நான் கையெழுத்துப் போட்டேன்.''
      “அதை கோர்ட்டு ஏத்துக்காதே. இதிலே கிளியரா இருக்கே. அதனால் இந்த தேதிக்குப் பிறகு நீங்க லேகிய கம்பெனிக்கு மாடலிங் பண்ணியது தப்பு. இல்லீகல்.''
      “இது தில்லுமுல்லு. என்னை ஏமாத்தி கையெழுத்து வாங்கிட்டாங்க.''
      “கோர்ட்டு, கேஸுன்னு போய் ஊரெல்லாம் சந்தி சிரிக்கணுமா?.. யூ டூ ஒன் திங்க், அந்த லேகிய கம்பெனியிலே போய், அவங்க கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க.''
      “அவங்க போஸ்டரெல்லாம் அச்சடிச்சிருப்பாங்களே.''
      “அந்தச் செலவையும் கொடுத்திடலாம். டேக் மை செக் புக். போய் செட்டில் பண்ணிட்டு வந்து வர்ற வழியிலே ரோடு குழாயிலே முழுக்குப் போட்டுட்டு வாங்க, இந்த மாடலிங் வேலைக்கு... அண்டர் ஸ்டாண்ட்...''
      பதவி இழந்த மந்திரியைப் போல, அப்புசாமி செக் புத்தகத்துடன் லேகியக் கம்பெனிக்குச் சென்றார்!
      *                                      *
      “தேங்க்யூ, மிஸ்டர் மோகன்ராஜ்... அவருக்கு ஒரு லெஸ்ஸன் டீச் பண்ணறதுக்கு ஹெல்ப் பண்ணீங்களே... ஆமாம், போஸ்டர் பிரின்ட் பண்ண என்ன செலவாச்சு?''
      “அது ஃபர்ஸ்ட் புரூப்தான். பிளாக் சார்ஜ் 500 ஆச்சு. அது போக மீதிப் பணத்தை அனுப்பிடறேன், மேடம்.''
      சீதாப்பாட்டி தன் முடியில் மற்றொரு ஃபெதரைச் சூட்டிக் கொண்டாள்!

8 comments:

  1. அப்புசாமித் தாத்தா உங்கள் மூலம் தரிசனம் தந்தாலும் தன் இயல்பை இழந்துவிடாமல் ரசித்துச் சிரிக்க வெச்சுட்டார்!

    ReplyDelete
  2. ஒரிஜினல் மாதிரியே இருக்கிறது! ஒரே குறை, சீதாப்பாட்டி பாதி தமிழ், பாதி ஆங்கிலம் என்று (ஒய் ஆர் யூ ஜம்பிங் லைக் எ வால் அறுந்த பல்லி?) ஒரே வாக்கியத்தில் மிக்ஸ் பண்ண மாட்டார்!

    பாக்கியம் ராமசாமி அப்ரூவ் பண்ணினாரா?

    சரவணன்

    ReplyDelete
  3. ஹா ஹா ஒரிஜினலுக்கும், டூப்ளிகேட்டுக்கும் வித்தியாசம் தெரியலை. சீதாப்பாட்டி போனில் பேசும்பொழுது தன்னைத் தானே பாட்டி என்று சொல்லிக் கொள்ளமாட்டார் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  4. (1) கதை ஜோர் ;

    (2) நாமளும் அப்புசாமி சீதாபாட்டி கதை எழுதலாமா? ஜராசு கோபித்துக் கொள்ள மாட்டாரா ?

    (3) இந்த கதைக்கு ஒரு பெரிய குறை 'ஜெ ' படம் மிஸ்ஸிங்க் !

    ReplyDelete
  5. ஹா... ஹா... நல்ல நகைச்சுவை....

    ReplyDelete
  6. 95% அவரே எழுதின மாதிரிதான் இருக்கிறது! அந்த இதழ் கல்கி படிக்கும் வாய்ப்பு இல்லாததால் இதை மிஸ் பண்ணியிருக்கிறேன். அந்த கதை எழுதினது நீங்கள் என்று அப்போதே வாசகர்களுக்கு தெரியுமா, இல்லை இப்போதுதான் சஸ்பென்ஸ் கலைகிறதா?

    பாக்கியம் ராமசாமிக்கு கல்கியில் எழுத செட்டியார் அனுமதித்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன்!

    -ஜெ.

    ReplyDelete
  7. அருமை. நீங்கள் முதலில் சொல்லியிருக்காவிட்டால் பாக்கியம் ராமசாமி எழுதியதே என எல்லோரும் நினைத்திருக்கக் கூடும்.....

    நல்ல பகிர்வு.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!