March 31, 2010

எஸ்.ஏ.பி. அவர்களும் ஷவர் குளியலும்

சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு ரவி பிரகாஷ் தன் பிளாக்குகளில் பல நல்ல விஷயங்களைப் போடுகிறார்.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.  எனும் உன்னத மனிதரைப் பற்றிய ஒரு தகவல். அதன் லிங்க்:
http://vikatandiary.blogspot.com/

 எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி சொன்னது.
     அந்நாளில் குமுதம் ஊழியர்களுக்கென்று ஒரு குவார்ட்டர்ஸ் உண்டு. (இப்போதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது.) அங்கேதான் ரா.கி.ரா., ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி, புனிதன் எனப் பலரும் குடியிருந்தார்கள்.
         வசதியான குவார்ட்டர்ஸ்தான். ஆனால், அப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். எனவே, குவார்ட்டர்ஸ்களில் தண்ணீர் வரவில்லை. அங்கே குடியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், யாரும் எஸ்.ஏ.பி-யின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகவில்லை.
       வெள்ளிக்கிழமைகளில் சாயந்திர வேளையில் குமுதம் ஊழியர்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குமுதம் நிறுவனரும், எடிட்டருமான எஸ்.ஏ.பி-யின் உத்தரவு. அவரும்கூடக் கலந்து கொள்வார் - ஃப்ரெஷ்ஷாக ஷவர் அடியில் நின்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து!

        ஒருநாள், அவர் யதேச்சையாக, “ஆன்மிகச் சொற்பொழிவுகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு. அதற்காக யாரும் உடம்பைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் இதில் வந்து கலந்து கொள்ளக் கூடாது. எல்லோரும் குளிச்சுட்டீங்கதானே?” என்று பொதுவாகக் கேட்டிருக்கிறார்.

“குளியலா..? அப்படின்னா..?” என்று கேட்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி.   
       எஸ்.ஏ.பி-க்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்றீங்க ஜ.ரா.சு.?” என்று கேட்டார்.
  “இல்லே... குளிக்கணும்னா தண்ணி வேணுமோல்லியோ? நாங்க தண்ணியைப் பார்த்தே பல மாசமாச்சு! நாங்க எல்லாரும் தலையில தண்ணியைப் புரோக்ஷணம்தான் (விரல்களால் தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்வது) பண்ணிக்கிட்டு வரோம் கொஞ்ச நாளா!” என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் பாக்கியம் ராமசாமி.
      அமைதியில்  ஆழ்ந்துவிட்டார் எஸ்.ஏ.பி.

March 28, 2010

கமலாவும் கின்னஸ் புத்தகமும்

கின்னஸ் புத்தகம் எத்தனையோ வருடங்களாகப் பல உலக சாதனைகளைப் போட்டு வந்தாலும், சமீப காலமாகத் தான் தமிழ் நாட்டில் கின்னஸ் வெறி பிடித்திருக்கிறது. அதில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டுமென்று யார் யாரோ என்னவென்னமோ செய்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இப்படி ஒரு குறிப்பு வந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவர்களில் அதிகம் பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்று ஒரு புதிய சாதனையும் அதில் இடம் பெறக் கூடும்!
போகட்டும். ஆனால் அதில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒரு முக்கிய பெயர் இருக்காது. அது என் அருமை மனைவி கமலாவின் பெயர்தான்.
கமலா எத்தனையோ சாதனைகளைப் புரிந்திருக்கிறாள் புரிந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கிருக்கும் திறமையில், பிற்காலத்திலும் புரிவாள் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. "ஆமாம் நிறையச்
சாதனைகளைச் செய்திருக்கிறார் என்கிறீர்களே ஏன் இதுவரை கமலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில், இடம் பெறவில்லை' என்று தானே கேட்கிறீர்கள்.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று: கமலாவின் தன்னடக்கம், இரண்டு: எனக்கு என் மானத்தைக் கப்பலேற்ற விருப்பமில்லை.
இருந்தாலும் இத்தனை சாதனைகளைச் செய்திருக்கும் கமலாவைப் பற்றியும் அவளது சாதனைகளைப் பற்றியும் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைத்து வைப்பது அவளுக்கு நான் இழைக்கும் கொடுமை, அநீதி, என்ற காரணத்தால் இப்போது தெரிவிக்க முன் வந்துள்ளேன்.

"உங்களைப் போல அசமஞ்சம் கிடையாது. எத்தனை தடவை படிச்சுச் சொன்னாலும் உங்களுக்குத் தெரியாது. எவ்வளவுதான் நான் கழுதையாகக் கத்தினாலும் உங்கள் மண்டையில் ஏறாது. என் தலையெழுத்து அனுபவிக்கிறேன். உங்களைச் சொல்லிக் குத்தமில்லை, உங்களை என் தலையிலே கட்டினாளே உங்கம்மா, அவளைத்தான் சொல்லணும். ஹும்' என்று இதுவரை ஒரு லட்சம் தடவை கமலா சொல்லியிருக்கிறாள். (இதை நீங்கள் அச்சில் படிப்பதற்குள் இன்னும் நூறு ஏறிவிடும்!)

டி சில்வா - கடுகு

மீட் மிஸ்டர் டி சில்வா, பளிச்சென்று வெள்ளைச் சட்டை, வெள்ளை பாண்ட், பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்ட பூட்ஸ், பாந்தமான பெல்ட், கச்சிதமான டை, தீர்க்கமான மூக்கு, சுத்தமாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை, வ்கிடில்லாத்  கிராப். ஐம்பதைத் தொட்டுக் கொண்டிட்ருந்தாலும் முறுக்கான தோற்றம். டி சில்வா! பம்பாய் மின்சார ரயில் ட்ரைவர். தமிழ்நாட்டிலிருந்து பம்பாய்க்குச் சென்ற ஆங்கிலோ இந்தியர். தமிழ், இந்தி, மராட்டி, இங்கிலீஷ் எல்லாவற்றையும் ஒரே பாணியில் கிட்டத்தட்ட அதே அளவு கொச்சையில் பேசுவார்! ரயிலில் ட்யூட்டியில் செல்லும் போது தன்னந்தனியே செல்ல வேண்டியிருப்பதால், ஓய்வுகிடைத்தால் ஓயாமல் பேசுவார். ஜாலியான ஆசாமி. தன்னுடைய சொந்த கஷ்டங்களைப் பற்றிப் பேசும்போது கூட தமாஷாகத்தான் பேசுவார். டி. சில்வா இல்லாமல் பம்பாயில் பல ஆங்கிலோ இந்திய நிகழ்ச்சிகள் நடக்காது. பியானோ வாசிப்பார். பக்தி கீதங்கள் பாடுவார். சர்ச் நிதிக்காக சிறுவர் நடன நிகழ்ச்சிகள் தயாரிப்பார். டான்ஸ் கொஞ்சம் வரும்.

March 26, 2010

அன்புள்ள டில்லி- 16

ஆவி உலகத் தொடர்பு பற்றிய விஷயங்களில் எனக்குப் பல
வருஷங்களாக ஆர்வம் உண்டு. பல புத்தகங்களைப் படித்தவுடன் சில பரிசோதனைகளையும் செய்துள்ளேன்.  (”ஆவிகளும் நானும்” கட்டுரை பின்னால் எழுதுகிறேன்.)டில்லிக்குச் சென்ற பிறகு இதற்கெல்லாம் அவகாசம் இல்லை. அங்கு வேறு பல விஷயங்களில் என் கவனம் சென்றது.
இந்தச் சமயத்தில் டில்லிப் பெண்மணி (தமிழர்தான்) ஒருவர் இந்த  ஈ.எஸ்.பி (EXTRA SENSORY PERCEPTION). சக்தி வாய்ந்தவராக இருப்பது தெரிந்தது     இதற்கிடையே பீட்டர் ஹர்க்கஸ் என்பவரது வாழ்க்கை வரலாற்றை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. இவர் அபார ஈ.எஸ்.பி. சக்தி கொண்டவர். இந்த புத்தகத்தின் சுருக்கத்தை தினமணி கதிரில் எழுதினேன். அதனால் பழைய ஆர்வம் மறுபடியும் தொத்திக் கொண்டது.
 டில்லிப் பெண்மணி உண்மையிலேயே தாம் ஒரு அசாதாரண சக்தி கொண்டவர் என்பதைப் புலப்படுத்தினார்.இவருடைய ஈ.எஸ்.பி. சக்தி மூலமாகப் பலரது பிரச்னைகளுக்குப் பதில் கிடைத்தது. பரிகாரங்கள் சொல்லப்பட்டன. பலர் பலன் கண்டனர், பத்திரிகை வாசகர்களுக்கு ஏன் உதவி செய்யக் கூடாது என்ற எண்ணத்தில், தினமணி கதிரில் "மீடியம் பதில்கள்' என்ற பகுதியை எழுத ஆரம்பித்தேன். வாசகர்களின் பிரச்னைகளுக்கு மீடியத்திடமிருந்து பதில் பெற்றுப் பிரசுரிக்கப்பட்டது

March 24, 2010

எல்லாம் அவன் அருள்!

ராம நவமி அன்று நடந்த ஒரு சிறிய அற்புதத்தை சூட்டோடு சூடாக எழுதாவிட்டால் அதைவிட பெரிய அபசாரம் எதுவும் இருக்காது.
      
  ராம நவமி அன்று காலை, செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள யோக ராமர் கோவிலுக்குப் போகலாம் என்று என்னை என் சகோதரன் கூப்பிட்டார். பெரிய கார் வைத்திருக்கிறார். ஒரகடம் என்ற கிராமத்தில் அந்த கோவில் இருக்கிறது என்பதும் செங்கற்பட்டுக்கருகில் 15 கி.மீ. துரத்தில் ஒரகடம் இருக்கிறது என்பதுதான் தெரியும். விசாரித்துகொண்டு போகலாம் என்று கிளம்பி விட்டோம்.
          சிங்கபெருமாள் கோவில் போனதும் ஒரு கடைக்காரரிடம் ’ஒரகடம் எங்கிருக்கிறது?’ என்று கேட்டோம். அவர் ஸ்ரீபெரும்புதூர் போகும் பாதையில் சுமார் பத்து கி.மீ.போகச் சொன்னார். அதன்படியே போனோம். ஒரகடம் வந்தது. கோவில் எதுவும் கண்ணில் படவில்லை. அங்கு  ஒரு கடைக்காரரைக் கேட்டோம். “கோவில் எதுவும் இங்கு கிடையாது. இது இண்டஸ்ட்ரியல் ஏரியா” என்றார். நல்ல காலம். அங்கு போலீஸ் ஸ்டேஷன் இருந்தது

தமிழ் முத்து -6 ஓங்கலிடை...

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருள் அகற்றும் ஆங்கு          அவற்றுள்
மின்னேர் தனியாழி வெம் கதிரோன்; ஏனையது
 தன்னேர்  இல்லாத தமிழ்"!                   -                      தண்டியலங்காரம்

உலகின் இருளை அகற்றுபவை  இரண்டு. அவை:
1. கதிரோன் அதாவது     சூரியன்.
2. நிகரற்ற தமிழ் ( மொழி)

மங்களகுமாரி - கடுகு

"ஏய்...அம்மா.. உன்னைத்தானே, மூணு  மணிக்கு போட்டோகிராபர் பிரபு வர்றார். புடவையைப் பொட்டி போட்டு வை. லாலா கடையிலிருந்து நாலு ஜிலேபி வாங்கி வை. பிலிம் செலவுக்கென்று கவர்லே நூறு ரூபாய் நோட்டு போட்டு வை. பிரபுவுக்குக் கொடுக்கணும் அம்மா... பிரபு அண்ணன் பெரிய ஆள் அம்மா... அன்னிக்கு நடிகர் சங்க விழாவிலே பாத்தேன். ரஜினியின் தோள்மேல கைபோட்டுப் பேசிட்டிருந்தாரு.''
"அடி மங்களகுமாரி... தோள் மேல கையைப் போட அவங்களுக்குச் சொல்லியா கொடுக்கணும். பாரேன், போட்டோ எடுக்கற சாக்கிலே உன்மேலே கூடத்தான் கையைப் போடுவாரு... எப்படியோ நீ பெரிய ஸ்டாராக வந்தால் சரிதான்...'' - இது அம்மா.
சினிமா என்ற வெல்லக்கட்டியால் ஈர்க்கப்படும் பல்லாயிரக் கணக்கான எறும்புகளில் மங்களகுமாரியும் ஒருத்தி.
இவள் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்போதே இரண்டு வீட்டையும்,  கணிசமான தொகையையும் விட்டு அப்பா காலமாகிவிடவே, தன் தாயாருடன் சென்னைக்கு வந்து விட்டவள் மங்களகுமாரி. தமிழ்த் திரை உலகின் ராணியாகத் திகழ வேண்டும் என்பதே இவளது ஆசை. ஆகவே சொத்து பத்துகளை விற்று விட்டு,சென்னைக்கு வந்து சுமாரான வீட்டில் குடியேறினார்கள்.
நாட்களும், அதைவிட வேகமாகப் பணமும் ஓடினவே தவிர சினிமா சான்ஸ் கிட்டவில்லை. ஆனால் அவள் நம்பிக்கை இழக்கவில்லை. சினிமா பித்து அவள் ரத்தத்தில் ஊறியிருந்தது.
எட்டுப்பக்க கவர்ச்சிப் படங்கள், பின் - அப், "மனம் திறந்து' சொல்லும் கட்டுரைகளுக்கான படங்கள் ஆகியவற்றில் மங்களகுமாரி காட்சி அளித்திருக்கிறாள். இந்த மாதிரிப் படங்களில் நடிக்கத்தான் சான்ஸ் வந்ததே தவிர திரைப்படத்தில் வரவில்லை. பத்திரிகை நிருபர்களிடம் நிறைய பேசுவாள்.

March 22, 2010

எஸ். ஏ. பி. யும் (நன்றியுடன்) நானும் - கடுகு

 நினைவு தெரிந்த நாள் முதலாக குமுதம் பத்திரிகையை ஆர்வத்துடன் படித்து வந்த நான், அதன் ஆசிரியர் எஸ். ஏ. பி. அவர்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. 1954’ம் ஆண்டு சென்னை ஹந்தி பிரசார சபா மைதானத்தில் ’பாரதியார் விழா’ மூன்று தினம் நடந்தது. கல்கி, ஆக்கூர் அனந்தாச்சாரி, பித்துக்குளி முருகதாஸ். நீதிபதி. எஸ். ஏ. பி. ஐயர், திரிலோக (திருலோக என்பது தான் சரி)   சீதாராம். பேராசிரியர் ஆ.சீனிவாசராகவன். எஸ். ஏ. பி. போன்றவர்கள் (இன்னும் பலரின் பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை. பாரதியாரைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.) அடடா, என்ன அற்புதமான இலக்கிய விருந்து. அந்த விழாவில்தான் குமுதம் ஆசிரியரை முதல் முதலாகப் பார்த்தேன். மெலிதான குரலில் ஒரு கல்லூரி பேராசிரியரைப் போல பேச ஆரம்பித்தார்.
"உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு கவிஞன்தான். இதை யாரோ பெயர் தெரியாத குப்பனோ சுப்பனோ சொல்லவில்லை. இது எமர்ஸன் என்ற மேதை கூறியது." என்று ஆரம்பித்து, கோர்வையாக தங்கு தடையில்லாமல் பேசினார். அவர் பேசியதில் மேலும் சில வரிகள் நினைவில் இருந்தாலும் பெரும்பாலான கருத்துகள் மறந்து போய் விட்டது. அவர் பேசி முடிக்கும் வரை மகுடியில் மயங்கிய பாம்பைப் போல் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பேசி முடித்ததும் மேடைக்குப் போய் அவரிடம் கையெழுத்து வாங்கினேன்.
1954 ல் கல்கி அவர்கள் காலமான பிறகு எஸ். ஏ. பி. யின் எழுத்தைதான் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்
1962’ல் டில்லி சென்றேன். டில்லியில் எல்லாம் புதிதாக, புதிய அனுபவமாக இருந்தது. மொழி, உணவு முறை, டிசம்பர் குளிர். புது டில்லியின் அகன்ற தெருக்கள், ராஷ்டிரபதி பவன், அமைச்சகங்களின் பிரும்மாண்டமான கட்டிடங்கள், ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி நள்ளிரவு நேரு உரை நிகழ்த்திய செங்கோட்டை எல்லாம் திக்குமுக்காடச் செய்தன. இந்த சமயத்தில் குமுதத்தில் வாசகர்களுக்கு ஒரு போட்டியை வைத்தார்கள். அதைப் பார்த்த நான் டில்லியில் எனக்குப்  புதுமைகளாகத் தோன்றியவகளைப் பற்றி எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். ஓரிருவாரங்கள் கழித்து கட்டுரைக்குச் சன்மானமாக ரூ35.க்கு செக் வந்தது. குமுதம் இதழ் கரோல்பாக்கில் தான் கிடைக்கும் என்றார்கள். கஷ்டப்பட்டு கரோல்பாக் போய் குமுதத்தை வாங்கி வந்தேன். "அரே டில்லிவாலா" என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியாகியிருந்தது.

March 20, 2010

அன்புள்ள டில்லி- 15

ஒரு சமயம் சோ டில்லிக்குத் தன் நாடகக் குழுவினருடன் வந்திருந்தார். அவரைப் போய்ப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.  துக்ளக் பத்திகையை ஆரம்பிக்கு முன்பு அவர் வந்திருந்தார்.
பத்திரிகை நிருபர் கூட்டம் ஒன்றை நடத்தினார். போயிருந்தேன். அங்கு  அவரிடம் "எந்தக் கேள்விக்கும் தயாரா?' என்று கேட்டு அதற்கு, அவரும் "சரி' என்று சொன்ன பிறகு பல சங்கடமான கேள்விகளைக் கேட்டேன்: அவரைக் காரசாரமான கேள்விகளையும் கேட்டேன்.. சோவும் சளைக்காமல் பதில் சொன்னார். கூட இருந்த நிருபர்கள் எனக்கும் அவருக்கும் எதோ சச்சரவு தான் வந்துவிட்டது என்று எண்ணி, பைத்தியக்காரத்தனமாக சமாதானம் (!) செய்ய முயன்றார்கள். "யு ஹேவ் வன் தி பேட்டல்; பட் லாஸ்ட் தி வார்'' என்று இங்கிலீஷில் கூறினார்கள். சோவோ, "ஸார், அவர் கேட்பதைக் கேட்கட்டும்'' என்று அமைதியாகச் சொன்னார். அதன் பிறகு பேட்டிக் கட்டுரையை எழுதினேன். தினமணி கதிரில் "சோவுடன் ஒரு மோதல்' என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியாயிற்று
. (அதே வாரம் குமுதம் இதழ், சோ எழுதிய "மோதாமல் ஒரு நாளும் இருக்க மாட்டேன்'  என்ற தலைப்பில், இலவச இணைப்பு ஒன்றைத் தந்தது. என் "மோதல்' கட்டுரையைப்  பார்த்து விட்டு ஒரு பிரபல பத்திரிகாசிரியர், "இந்தப் பேட்டி, தி இண்டர்வியூ ஆஃப் தி இயர்' என்று மனதாரப் பாராட்டினார்.
(இந்த கட்டுரையைத் தேடிப் பிடிக்கப் பார்க்கிறேன். அகப்பட்டால் பின்னால் வெளியிடுகிறேன்.)
(சோ அப்போது மொட்டை இல்லை: நான் அவ்வளவு வழுக்கை இல்லை. நேருக்கு வெயிஸ்ட் கோட் போல, சோவுக்கு மொட்டையையும், எனக்கு வழுக்கையையும் கோபுலு டிரேட் மார்க ஆக்கி விட்டார்!)
அண்ணாவின் மீசை
அண்ணா ராஜ்ய சபை உறுப்பினராக இருந்த சமயம் (என்று நினைப்பு). அப்போது  அண்ணா,  ஜப்பான் முதலிய வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று திரும்பினார். வெளிநாட்டு அனுபவங்களைக் கேட்டு எழுத அவரைப் பார்க்கப் போனேன். திரு. செழியனின் புதுடில்லி இல்லத்தில் அண்ணா இருந்தார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் போய் வந்த விவரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த போது, '' இந்தப் பயணத்தில் போது எனக்கு ஒரே ஒரு சங்கடம்தான் எற்பட்டது. அது செல்ஃப் ஷேவிங். பழக்கமே இல்லாத காரணத்தால் அவதிப்பட்டேன். முக்கியமாக என் மீசை விஷயம்தான் ரொம்பத் தொல்லையாகப் போய்விட்டது. வலது பக்கம் அதிகமாக இருப்பதாகத் தோன்ற, இடது பக்க மீசையைச் சிறிது வெட்டினால் அது பெரிதாகவும் வலது சின்னதாகவும்ஆகிவிடும். கடைசியில் எனன் செய்தேன் தெரியுமா? மீசையையே எடுத்து விட்டேன்'' என்றார். மீசை இல்லாத அண்ணாவைப் படம் பிடித்துப் பத்திரிகைக்கு அனுப்பினேன்.

தமிழ் முத்து - 5 -- நல்லாளை இட மருவும் தியாகய்யா

நல்லாளை இட மருவும்  தியாகய்யா
           உம்மிடத்தில் நியாயம் காணோம்.
கல்லாலே எறிந்தோர்க்கும், செருப்படியால்
           உதைத்தோர்க்கும், கடிந்து போரில்
வில்லாலே அடித்தோர்க்கும்  கொடுத்தீரே
            அல்லாமல்,  விழி நீர் சோர
எல்லாம்  உன்  செயலேன்றே  இருப்போர்க்கு
           யாதொன்றும் ஈகிலீரே!

( இயற்றியவர்: தெரியவில்லை)

March 19, 2010

உதிரிப் பூ -- கை குலுக்கினேன்

மார்ச் 11’ம் தேதி. சென்னையில் ஒரு பூணூல் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். பழைய டில்லி நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள்  ஒரே அரட்டை தான்!
        முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிடப் போனேன். ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஹாலில் சிறிது சலசலப்பு ஏற்பட்ட மாதிரி இருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் (உண்ணும்) கருமமே கண்ணாய் இருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு தலையைத் தூக்கிப் பார்த்தால் அடுத்த பந்திக்காக காத்திருப்பவர்களும். சர்வர்களும் என் பின் பக்க வரிசையையே பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி மாதிரி பட்டது. யாராவது ‘எந்திரன்’ வந்திருக்கிறாரோ என்று எண்ணியபடியே திரும்பிப் பார்த்தேன்.
    பின் வரிசையில் எல்லாருக்கும் நடுவே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்... யார்?

ஹி..ஹி...

March 18, 2010

இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடினேன்!

கிட்டதட்ட ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். அப்போது சென்னை ஐ.பி.ஓ.வில் நான் வேலையில் இருந்தேன். போஸ்டல் ஆர்டர்கள் விற்பனை,பணம் கொடுத்தல் ஆகியவைகளைக் கவனித்துக் கொள்ளும் செக்‌ஷனில் பணி.
அன்றாடம் சுமார் 200, 300 போஸ்டல் ஆர்டர்கள் பரிவர்த்தனை இருக்கும். முக்கியமாகப் பிரிட்டிஷ் போஸ்டல் ஆர்டர்களைப் பலர் `காஷ்' செய்வார்கள்.
என் நண்பர் கண்ணன் கவுன்டரைப் பார்த்துக் கொண்டு இருந்தார், ஒருநாள் வழக்கம் போல் கவுன்ட்டர் மூடப்பட்டதும் அவர் கணக்குகளை செக் செய்தேன்.. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுமார் முந்நூற்று அறுபது ரூபாய் குறைவாக இருந்தது. யாருக்கோ தவறுதலாக அதிகப் பணம் கொடுத்து விட்டார்.! ” கண்ணா, பணம் அதிகமாகக் கொடுத்துவிட்டாய் என்று நினைக்கிறேன்” என்றேன் அதை கேட்டதும் அவருக்குத் தலையைச் சுற்றியது. வயிற்றில் கலவரம். ( 360 ரூபாய் என்பது அவருடைய மூன்று மாதச் சம்பளம்!)
சூபர்வைசரிடம் விஷயத்தைச் சொன்னோம் .போஸ்டல் ஆர்டர்களையெல்லாம் பரிசீலனை செய்து புள்ளிகள் போட்டுக் கண்டுபிடித்தோம். உண்ணி என்ற நபருக்கு முந்நூறுக்குப் பதிலாக அறுநூற்று அறுபது ரூபாய் கொடுத்திருந்தார் கண்ணன்.. ஒரு இடத்தில் நாற்பது என்பதை நானூறு என்று எழுதிக் கூட்டியிருந்தார்.
    போஸ்டல் ஆர்டர்களில் பணம் பெற்றுக் கொள்பவர்களின் விலாசத்தை எழுதி வைப்பது  வழக்கம்.  பார்க் டவுனில் ஒரு லாட்ஜின் விலாசத்தை உண்ணி கொடுத்திருந்தார். உண்ணியைத் தேடிக் கிளம்பினோம்.
   லாட்ஜில் உதட்டைப் பிதுக்கினார்கள். அது ரிஜிஸ்டர்ட் லாட்ஜ்  அங்கு உண்ணி என்பவர் சமீபத்தில் தங்கவே இல்லையாம்.
``உங்கள் லாட்ஜ் விசிடிங் கார்டைக் காண்பித்தாரே?'' என்று கேட்டேன்.
``சிங்கப்பூரிலிருந்து கப்பலில் வருகிறவர்களிடம் எல்லாம் இந்தக் கார்டுகளை விநியோகிக்கிறோம். இது விளம்பர நோட்டீஸ் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்கள் லாட்ஜில்

March 17, 2010

அன்புள்ள நண்பர்களுக்கு

        இந்த பிளாக்கைத் துவங்கி 100 நாள் ஆகிறது.  ஓரளவு உங்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். உடல் சிரமம் பாராது டைப் செய்து, படத்தைச் சேர்த்து  போஸ்டிங்க் போட்டு வருகிறேன்.

இதில் பிரசுரிக்கப்படும் எல்லாம் உங்களுக்கு ஓ.கே.வா என்று எனக்குத் தெரியவில்லை. நல்ல போஸ்டிங்கோ அறுவை போஸ்டிங்கோ என்னைப் பொருத்தவரை வேலையின் அளவு ஒன்றேதான்.  உங்கள் பின்னூட்டங்களில் அன்பு கூர்ந்து உங்கள்  கருத்துகளைத் தெரிவியுங்கள். இது தான் நீங்கள் எனக்கு செய்யக்கூடிய உதவி.

எழுத ஏராளமாக விஷயங்கள் உள்ளன. நிறைய நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகள் எழுதி வைத்துள்ளேன்.. எனக்குத் தெரிந்தவைகளைப் பலருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆசையினால் இதைச் செய்து வருகிறேன்.

-- கடுகு

பாலா துரைசாமி - கடுகு


டில்லி துக்ளக் ரோட்டில் உள்ள பிரம்மாண்டமான பழையகால பங்களாவின் முன்புறம் உள்ள பரந்த புல் தரையில்  பளிச்சென்று போடப்பட்டிருக்கும் வெள்ளை பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு குரோட்டன் செடிகளை சீர் செய்யும் தோட்டக்காரருக்கு உத்தரவுகள் கொடுத்துக்கொண்டு, கார் ட்ரைவருக்கு `ஐயாவை ட்ராப் பண்ணிவிட்டு வந்த பிறகு தன்னை எங்கெங்கே அழைத்துப் போகவேண்டும், என்பன போன்ற விவரங்களைச் சொல்லிக்கொண்டு, சமையல்கார கெடுவாலிப் பையனிடம் அன்றைய மெனுவைச் சொல்லிக்கொண்டே `வுமன் அண்ட் ஹோம்' இதழை தன்னுடைய கோல்ட் ரிம் கண்ணாட் வழியாக சர்வ அலட்சியத்துடன் படித்துக்கொண்டடிருப்பவர்தான் திருமதி பாலா துரைசாமி. (அப்பாடா, மூச்சு வாங்கினீர்களா?) பாலா துரைசாமிக்கு, அவரைப் பார்த்து இப்படி பெருமூச்சு விட்டால், வியப்பு அடைந்தால், ஏன் பொறாமைப்பட்டால் கூட ரொம்ப சந்தோஷம்!)
  டில்லி சர்க்காரின் பல குடுமிகளில் ஒன்றைத் தன் கையில் வைத்திருக்கும் துரைசாமியின் (ஐ.ஏ.எஸ். முப்பது வருஷமாக டில்லி வாசம்.) மனைவி பாலா. காலேஜ் பட்டம் பெற்றவர். ஆசைக்கு ஒன்று (ஜெர்மனியில் டாக்டர் கணவனுடன் இருக்கிறாள்.) ஆஸ்திக்கு ஒன்று (அமெரிக்காவில் மெட்டல்லர்ஜி படிக்கிறான்.) கவலையில்லாத வாழ்க்கையாதலால் பணக்காரக் குண்டுத்தனத்தை உடல் பிடித்துக்கொண்டது. டில்லியில் உள்ள பெரிய அதிகாரிகளின் மனைவிமார்களின் சங்கத்தில் முக்கிய உறுப்பினர்.
     `அம்மா டெலிபோன்' என்று பையன், நீண்ட ஒயரைக் கொண்டே டெலிபோனை புல் தரைக்கே கொண்டு வந்து கொடுக்கிறான் பாலா துரைசாமியிடம்.

கமலாவும் (கார) கமெண்ட்ஸும்

என் அம்மாவிடமிருந்து கடிதம் வந்தாலே எனக்கு அலர்ஜி. அம்மாவின் கடிதத்தை கமலாவிற்கு உரக்கப் படிக்க வேண்டும். இது என் மனைவி கமலாவின் கட்டளை.  ஒரு நாள் நடந்ததைக் கேளுங்கள்.
(கையில் கைகுட்டைத் தயாராக  வைத்திருக்கிறீர்களா? )
               "கமலா, அம்மாவிடமிருந்து லெட்டர்'' என்றேன். "இப்படிக் கொடுங்கோ... பாவம் இந்த அம்மா எதுக்கு சாளேசுரக் கண்ணோடு கஷ்டப்பட்டு லெட்டர் எழுதறாளோ...? ஹும். பெத்த மனசு!'' என்று அவள் கூறும்போதே  இடைமறித்து, "உங்கம்மாகிட்டே இருந்து வரவில்லை... எங்கம்மாவின் லெட்டர்'' என்றேன்.
"அதை முதல்லேயே சொல்லக் கூடாதா? ஹூம், படியுங்கோ. ஆயிரம் கை நடுக்கல் இருந்தாலும் கரெக்டா வாரா வாரம் லெட்டர் எழுதிடுவாளே உங்கம்மா... எவ்வளவு பணம் வேணுமாம்?  இங்கே பிள்ளை இல்லா வீடு... படியுங்கோ...'' என்றாள்.
    "..... ஆசீர்வாதம். நீ சௌக்கியமா?''
    கமலாவின் கமெண்ட்: "பிள்ளை சௌக்கியமான்னு தான் கேட்கிறாள். நான் ஒருத்தி இருக்கேன்னு நினைவு இருக்கணுமே! தான், தன் பிள்ளை, தன் பேரன், தன் பேத்தி எல்லாரும் சௌக்கியமா இருந்தால் போதும். ஆயிரம் இருந்தாலும் நான் அசல்தானே... ஹும் (இனி கமலாவின் கமெண்டுகளை அடைப்புக் குறியில் கொடுக்கிறேன்.)

March 15, 2010

அன்புள்ள டில்லி -14

திரைப்படத் தயாரிப்பாளர் கலாகேந்திரா' கோவிந்தராஜன் என் நண்பர். அவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டு "எதிர் நீச்சல்' படம் போடுவதற்கு ஏற்பாடு செய்தேன். விளம்பரப்படுத்தி டிக்கெட்டுகள் மளமளவென்று விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். "படம் பிரிண்ட் உங்களிடம் சேர்ப்பது என் பொறுப்பு'' என்று அவர் என்னிடம் கூறி இருந்ததால், கவலை இல்லாமல் இருந்தேன்.
ஆனால் ஒரு ஆசாமி ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். அவர், அந்தப் படத்தின் டில்லி டிஸ்ட்ரிப்யூடர். தன் தொழிலில் மண்ணைப் போடுபவர்களைச் சும்மா விடக் கூடாது என்று தீர்மானித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் யார் யார் என்று கண்டுபிடித்து, வக்கீலை வைத்து, கோர்ட்டில் அவரது உரிமைகள் மீறப்படுவதாக மனு கொடுத்து சம்மன் "சர்வ்' செய்ய எற்பாடு செய்து விட்டார்.
சங்க நிர்வாகிகள் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள். எப்படியாவது பணம்  செலவு செய்தாவது, சம்மனை இவர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று  கங்கணம் கட்டிகொண்டார்,
இதன் காரணமாக டிஸ்ட்ரிப்யூடர் அமீனாவிற்கு "காப்பி செலவு', டாக்ஸி வசதி எல்லாம் கொடுத்து சம்மன் "சர்வ்' செய்து விட்டார் .
நல்ல காலம், சங்கத்தில் எனக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் இருக்கவே எனக்குச் ச்ம்மன் வரவில்லை. (பொறுப்பில்லாத ஆசாமியாக இருப்பதிலும் நன்மை இருக்கிறதைக் கவனியுங்கள்!)
ஆனால் சம்மன் பெற்றவர்கள் யாவரும் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுக்குத் தைரியம் கொடுப்பதற்காக (?)  நானும் டில்லி கோர்ட்டுக்குச் சென்றேன்.
தலைநகரில் உள்ள கோர்ட்! உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சிதான் எற்பட்டது. ஒரு மேஜையில் நீதிபதி. சுற்றிலும் ஒரே சள சள கூட்டம். பீடிப் புகை, வாக்குவாதங்கள். அழுக்குச் சுவர்கள். தள்ளாடும் நாற்காலிகள். மேஜைகள். பெயிண்டையே பார்த்தறியாத கதவுகள். ஜன்னல்கள். எதிர்க் கட்சி வக்கீல் எதோ உருதுவில் ஜட்ஜ் (மாஜிஸ்டிரேட்டோ?) அவர்களிடம் சொன்னார். அவர் எங்களைப் பார்த்து இந்தியில் கேட்டார்.  எங்களில் ஒருவர், "யுவர் ஹானர்...'' என்று ஆரம்பித்து இங்கிலீஷில் பதில் சொன்னார். மாஜிஸ்டிரேட்டோ, "ஹான்ஜி, போலியே'' என்று இந்தியில் சொன்னார்.

March 10, 2010

ஸ்ரீதரும் நானும் (UPDATED VERSION)

"ஏண்டாப்பா ஸ்ரீதர்!  நான் போட்ட மெந்தியக்குழம்பு சாதத்தைச் சாப்பிட்டவன் தானே நீ. இப்போ நீ பெரிய சினிமா டைரக்டர் ஆயிட்டே! ரொம்ப சந்தோஷம்”, என்று என் அம்மா எத்தனை தடவை சொல்லியிருப்பாள் என்பது எனக்குத் தெரியாது. அப்படி சொல்வதில் அம்மாவுக்கு சந்தோஷம். யாரைப் பார்த்து சொல்வாள்? கல்யாணப் பரிசு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்களை உருவாக்கிய ஸ்ரீதரைப் பார்த்துதான். அப்படி என்ன உங்கள் வீட்டு மெந்தியக் குழம்பிற்கு  விசேஷம் என்று கேட்கிறீர்களா?  பொறுங்கள் ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன்.
    ’டைரக்டர் ஸ்ரீதரும் நானும்’ என்ற தலைப்பிட்டு எழுதப்படும் இந்த கட்டுரையைப் பார்த்து யாரும் என்னை கேலி செய்ய முடியாது . காரணம் ஸ்ரீதரும் நானும் சுமார் 65 வருட நண்பர்கள். . ஆம், அறுபத்தைந்து வருஷங்கள்! அதுவும் சாதாரண நட்பு அல்ல. ஆழமான நட்பு
    செங்கல்பட்டுதான் எங்கள் ஊர்.  நாங்கள் இருவரும் கிளாஸ்மேட். பள்ளிக்கூட நாட்களிலேயே அவருக்கு நாடக, சினிமா ஆர்வம் உண்டு. பள்ளிக்கூட விழாக்களில் ஸ்ரீதர் எழுதிய நாடகங்களை நாங்கள் நிறைய மேடை ஏற்றியுள்ளோம். ’ஏழாவது எட்டாவது பாரம் படிக்கும் பையன் இவன் என்ன பெரிய நாடகம் எழுதியிருக்கப் போகிறான்?’என்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியப்படுத்தவில்லை. மாறாக ஊக்கமளித்தார்கள். நாடகஙகள் போட வசதியாக இருக்கும் என்று நாற்பதுகளில் எங்கள் பள்ளியில் திறந்த வெளி அரங்கம் கட்டியது நிர்வாகம் ஸ்ரீதர் குரூப்பில் சித்ராலயா கோபு, நான் எப்போதும் இருப்போம். நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.
  


செங்கல்பட்டில் ஸ்ரீதர் இருந்த வீடு நத்தம் என்ற பகுதியில் இருந்தது. எங்கள் வீடு மேலமையூர் என்ற பகுதியில் இருந்தது.  சுமார் ஒன்றரை மைல் இடைவெளி. லீவு நாட்களில் ஸ்ரீதர் என் வீட்டிற்கு வந்தால் இரண்டு மூன்று மணி நேரம் அரட்டைதான். அதன் பின் ஸ்ரீதரை வழி அனுப்பும் சாக்கில் அவருடன் போய் போய் போய் அவர் வீட்டிற்கே போனதும் உண்டு. எங்கள் வீடுகளுக்கு இடைப்பட்ட தூரத்தில்தான் கோபுவின் வீடு. அங்கே சிறிது நேரம் மண்டகப்படி போடுவோம்.

ஸ்ரீதருக்கு ஸ்போர்ட்ஸில் ஈடுபாடு உண்டு. (நான் அந்த பக்கமே போகமாட்டேன்.படிப்பிலும் ஸ்ரீதர் முன்னணியில் இருந்தார்  உதாரணத்திற்கு:
         ஒரு சமயம் நாங்கள் ஒன்பதாவது வகுப்பிலிருந்தபோது ஹெட்மாஸ்டர் ஸ்ரீதரைக் கூப்பிட்டு அனுப்பினார். பத்தாவது வகுப்பில் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஸ்ரீதர் அந்த வகுப்பிற்குள் போனதும் "ஸ்ரீதர் வா, இந்த கணக்கை போர்டில் போட்டுக் காண்பி. இந்தப் பசங்களுக்கு ஒண்ணும் தெரியவில்லை" என்றார். ஸ்ரீதர் மட மட வென்று போட்டுக்கண்பித்தார்.   அதே மாதிரி பள்ளிக்கூடத்தில் மாஸ் டிரில் பயிற்சியின் போது மைதானத்தில் ஒரு மேஜையின் மேல் இன்னொரு மேஜையைப் போட்டு அதன் மேல் ஸ்ரீதரை நிற்க வைப்பார் டிரில் மாஸ்டர், ஸ்ரீதர் செய்வதைப் பார்த்து எல்லா மாணவர்களும் செய்வோம்.

கமலாவும் டயட்டும் - கடுகு

        ஒரு பெண்ணின் குலம் நாடி, குணம் நாடி அவளைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்குச் சிலர் அறிவுரை கூறியதன் காரணமாக, அதன்படியே கமலாவைத் தேர்ந்தெடுத்து மணந்தேன். நான் இரண்டு தரம் (குலம் நாடி, குணம் நாடி) நாடியதாலோ என்னவோ கமலா இரட்டை நாடியாக ஆகிவிட்டாள்! பருமனைக் குறைக்கப் பல வழிகளைக் கையாள ஆரம்பித்தாள்.
*    "தினமும் அரை மணி நேரம் யோகாசனம் பண்ணினால் உடம்பு ட்ரிம்மாகி விடும்'' என்று ஒரு புத்தகத்தில் படித்த பிறகு யோகாசனத்தில் இறங்கினாள். சரியாக ஐந்து நிமிஷம் பண்ணுவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு          வாங்கிவிடும். "ஏன்னா, அரை மணி ஆகிவிட்டதா?'' என்று கேட்பாள். "இல்லையே நாலரை நிமிஷம்தான் ஆச்சு'' என்பேன். "உங்க கடிகாரத்தைத் தூக்கி உடைப்பிலே போடுங்கோ. ரொம்ப ஸ்லோ... உஸ்... உஸ்...'' என்று கூறிவிட்டு யோகாசனத்தைத் தொடர்வாள்.
    "கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இப்போ தெம்பாக இருக்கு. ஒரு சுறுசுறுப்பு கூட வருது... நல்ல பசியும் வருது'' என்று சொல்லி லைட்டாக நாலு இட்லி சாப்பிட்டாள்.
    அடுத்த நாள் 20 நிமிஷம் பண்ணுவதற்குள் "தம்' தீர்ந்துவிட்டது. நாலு இட்லி சாப்பிட்டாள்.
    இப்படி தினமும் யோகாசனம் செய்யும் நேரம் தான் குறைந்தது, இட்டிலிகளின் எண்ணிக்கை அல்ல. கடைசியில் "சீ... இதெல்லாம் நம்மால் முடியாது'' என்று யோகாசனத்துக்கு மட்டும் முடிவு கட்டி விட்டாள்.

சாமண்ணா -கடுகு

ஒரு முன்குறிப்பு:
இந்த கட்டுரையை என் சொந்த அத்தையின் கணவர், அதாவது என் அத்திம்பேரை மனதில் வைத்து எழுதினேன். கிட்டதட்ட அவர் எப்படி இருப்பாரோ அப்படியே விவரித்து இருந்தேன். நான் எழுதிய போது அவர் காலமாகிப் பல வருஷங்கள் ஆகிவிட்டிருந்தன.
இதற்கு வழக்கம் போல கோபுலு படம் போட்டார். இந்த கட்டுரை வெளியான கதிர் இதழில் கோபுலு வரைந்த படத்தைப் பார்த்தபோது, எனக்கு பயங்கர வியப்பு. அப்படியே அத்திம்பேரை நேரில் பார்த்து வரைந்தது போல் இருந்தது! நூறு சத விகிதம்! ஆமாம். நூறு சத விகிதம்.
கோபுலு எத்தனை பெரிய ஜீனியஸ்! அவருக்கு ஒரு பத்மஸ்ரீ... ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

------------------------------
மணி என்ன? எட்டரையா? ஒரு நிமிஷம் இருங்கள். சாமண்ணா வந்து விடுவார். கடிகாரம் முன்னே பின்னே போனாலும் போகும். சாமண்ணா நேரம் தவறமாட்டார்! நீங்கள் சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா தெருவில் வசிப்பவராக இருந்தால், சரியாக எட்டு முப்பதுக்கு சாமண்ணா அந்தத் தெருவழியாகச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள் கடந்த இருபத்தைந்து
வருஷத்திற்கும் மேலாக சாமண்ணா, ஒரு லேவாதேவி சௌகாரின் காஷியர், நகை மதிப்பீட்டாளர், மானேஜர் எல்லாம்! அதோ வருகிறார் சாமண்ணா
      பளிச்சென்று, கச்சம் வைத்துக் கட்டப்  பட்ட வெள்ளை மில் வேஷ்டி. முழுக்கை வெள்ளை சட்டை (கையில் ஒரு `டக்' போட்டது) உத்தரீயம். ஜேபியில் இரண்டு மூன்று பேனாக்கள். அறுபதைத் தாண்டியவரானாலும் நடையில் மிடுக்கு. குடுமியா ஜில்பாவா என்று அறிய முடியாத ஒரு நடுத்தர நீளமுடி. ஈரத்தலையை ஆற்றியபடியே, நுனி மூக்கில் உட்கார்ந்திருக்கும் கண்ணாடி வழியே உலகை சர்வ திருப்தியுடன் பார்த்துக்கொண்டு செல்லும் பாங்கு. இவை எல்லாம் சாமண்ணாவின் ட்ரேட் மார்க்குகள். கவலை இல்லாத மனிதன் என்று சாமண்ணாவைச் சுலபமாக வர்ணிக்கலாம். இத்தனைக்கும் அவருக்கு எத்தனையோ தொல்லைகள், கவலைகள்.
”அட போய்யா. கவலைப்பட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்தால் தீர்ந்துபூடுமா? மரம் வெச்சவன் கவலைப் படட்டும்!” என்று வேதாந்தம் பேசுவார்.

அன்புள்ள டில்லி - 13

அகில இந்திய வானொலி நிலையம், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், அரசு விளம்பர இலாகா, நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்றவைகள் (காசு அதிகம் தராவிட்டாலும்) மொழி பெயர்ப்பு வேலை தருவதை அறிந்தேன். அங்கெல்லாம் ’வேண்டியவர்’களுக்குத்தான் சான்ஸ்! உங்களுக்குத் தமிழ் மொழியை விட அங்குள்ள சிலரை அதிகம் தெரிந்திருக்க வேண்டும். அல்லது  நீங்கள் பிரதி உபகாரம் செய்யும் நிலையில் இருக்க வேண்டும்.  என்னிடம் இந்த இரண்டும் இல்லை.
இங்கேயே எழுத வேண்டும்
நான் வானொலி நிலையத்தில் மொழிபெயர்ப்பாளனாக நுழைந்ததும் ஒரு சுவையான அனுபவம்.
வெளிநாட்டு தமிழ் ஒலிபரப்பு நிறைய இலாகாவில் மொழிபெயர்ப்புப் பணிக்கு பலருக்கு வாய்ப்பும் பணமும் தரப்படுகிறது என்று எனக்குத் தற்செயலாகத் தெரிந்தது.  இந்தப் பணிகளில் ஈடுபட்டு கொஞ்சம் பணம் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் வெளியில் அதைப்பற்றி மூச்சுகூட விடமாட்டார்கள்.
வீர்மானி என்ற ஒரு சிந்தி மொழியாளர்தான் வானொலி நிலையத்தில் தமிழ் புரோகிராம் எக்ஸிகியூடிவ்வாக இருந்தார். . ஒரு நாள் அவருக்குப் போன் செய்தேன். ” நான்  தமிழ் எழுத்தாளன். பலருக்கு மொழிபெயர்ப்பு வேலை நீங்கள் தருகிறீர்கள்.  எனக்கும் வாய்ப்பு தரக்கூடாதா?” என்று கேட்டேன்.
         "உங்களுக்கு எதற்கு சான்ஸ் தர வேண்டும்?  நீங்கள் எந்த விதத்தில் ஸ்பெஷல்?'' என்று அவர் கேட்டார். "” ஸ்பெஷல் இல்லை. என் மொழிபெயர்ப்புத் திறனை டெஸ்ட் செய்து பாருங்கள். சரியில்லை என்றால் நான் எதுவும் கேட்க முடியாது. நன்றாக இருக்கிறது என்றால் ஏன் எனக்கும் வாய்ப்பு தரக் கூடாது?'' என்று கேட்டேன்.
"என் எதிரிலேயே மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். தயாரா?'' என்றார்.
சவாலை எற்றுக் கொண்டு போனேன். திரு வீர்மானியை சந்த்திதேன். “டைரக்டரைப் பார்க்கலாம் வாருங்கள்” என்றார். ஒற்றை நாடியாக இருந்த அந்த தமிழ் அதிகாரியிடம் என்னை  அழைத்துச் சென்றார். (அவர்தான் கவிஞர்  துறைவன் என்பது பின்னால் தெரிந்தது.)
ஒரு ஆங்கில உரையைத் தந்தார். அங்கேயே உட்கார்ந்து எழுதினேன். சரியாக 35 நிமிடங்களில் முடித்தேன். திரு துறைவனுக்குச் சிறிது ஆச்சரியம். “ இவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டீர்களா?”  என்று கேட்டபடியே, என் மொழிபெயர்ப்பை வார்த்தைக்கு வார்த்தை சரி பார்த்தார்.  ஒரே ஒரு வார்த்தையை மாற்றச் சொன்னார்.

உதிரிப் பூ - தப்பு நடந்து போச்சு

அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA சந்திரனில் ஆர்ம்ஸ்ட்ராங்கை இறக்கிய சாதனை படைத்தார்கள். சரி, அதற்குப் பாராட்டுக்கள் ஆனால் அந்தக் காலத்தில் ஒரு தவறைச் செய்து விட்டார்கள். இத்தனை வருடம் ஆகியும் அதைத் திருத்தவில்லை. காரணம், சந்திரனில் மனிதன் இறங்கித்தான் அதைத் திருத்த வேண்டும்.
மனிதனை சந்திரனில் இறக்கத் திட்டமிட்ட போது, முதன் முதலில் காலடி வைத்தவுடன் விண்வெளி வீரர் என்ன சொல்ல வேண்டும்  என்பதற்கும், அங்கு இந்தச் சாதனையைக் குறிக்க ஒரு உலோக போர்ட் வைத்து அதில் என்ன வாசகம் இருக்க வேண்டும் என்பதற்கும்  இரண்டு குழுவை நாஸா நியமித்து இருந்தது.

போர்டில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்களைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவிற்கு வில்லியம் சஃபைர் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் நியுயார்க் டைம்ஸ் தினசரியின் தலைமை நிருபர்.
அது மட்டுமல்ல... ஆங்கில மொழி மற்றும் பதங்கள் ( Langauge and Words) தொடர்பாகவும் பொன்மொழித் திரட்டுகளாகவும்  பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். 2009’ல் தான் அவர் காலமானார்.. கமிட்டியில் ஜனாதிபதியின் உரைகளைத் தயாரித்துக் கொடுப்பவர் கூட இருந்தார்.
 அந்தக் கமிட்டி சிபாரிசு செய்த வாசகம் கொண்டப் பலகையை நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங்க் பதித்து விட்டு வந்தார். அதில் செதுக்கப்பட்டிருந்த வாசகம் " HERE MEN FROM THE PLANET EARTH FIRST SET FOOT UPON THE MOON  JULY 1969, A.D.   WE CAME IN PEACE FOR ALL MANKIND"

தமிழ் முத்து- 3 அந்தகக் கவியின் அற்புதப் பாடல்

அந்தகக் கவியின் அற்புதப் பாடல்
சோனையும் காத்து, நல்லானையும் காத்துத் துரோபதைதன்
தானையும் காத்து, அடைந்தானையும் காத்து. தடத்தகலி
மானையும் காத்து, அனுமானையும் காத்து, மடுவில் விழும்
ஆனையும் காத்தவே, என்னைக் காப்பது அரிதல்லவே!
           -- .பார்வை இல்லாத காரணத்தால்  ’அந்தகக் கவி’ வீரராகவ முதலியார் என்று  அழைக்கப்பட்ட புலவர்  எழுதியது.பாடல். எந்த நூலில் உள்ளது என்று தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது)

சோனை= கோவர்த்தனகிரி
நல் ஆனை =  பசுக்கள்
தானை  = ( திரௌதியின்) ஆடை
அடைந்தானையும் = சரண் அடைந்த விபீஷணன்
தடத்து அகலி மானையும் = அகலிகை
அனுமானையும் = அனுமான்
மடுவில் விழும் ஆனை = கஜேந்திரன்

March 07, 2010

உதிரிப்பூ - கல்கியும் சின்ன அண்ணாமலையும்

உங்களில் பலர் சின்ன அண்ணாமலை என்ற பெயரை  கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஐம்பதுகளில் காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர். ராஜாஜயின் சீடர். கல்கியின் பக்தர். நகைச்சுவை மன்னன். புத்தகப் பிரசுரகர்த்தர். 
அவரது தமிழ்ப் பண்ணைப் புத்தகங்கள் மிகவும் நேர்த்தியாக இருக்கும். பனகல் பார்க் எதிரில் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தார், அந்த லைப்ரரியில் நான் உறுப்பினனாகி நிறையப் புத்தகங்களைப் படித்தேன். நுழைவாயிலில் ஒரு போர்ட் வைத்து அதில் பொன்மொழிகளை எழுதி வைப்பார். அதைப் படிக்கவே பலர் அங்கு வருவார்கள்.  பொன்மொழிகளை எழுதிக் கொள்வேன். பின்னால் அவைகளை என் கதைகளில் உபயோகி த்து இருக்கிறேன்.
அவருடைய பொதுக்கூட்ட உரைகளைக் கேட்டுகொண்டே இருக்கலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். கண்டறியாதன கண்டேன், சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்று பல புத்தகங்களை எழுதியுள்ளார். அண்ணாமலை என்ற இவர் பெயருக்கு முன்னால்” சின்ன” என்று வார்த்தையைச் சேர்த்து அவர் பெயரை மாற்றியவர்: கல்கி.
=============================

தேவகோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ராஜாஜியை அழைத்திருந்தார்கள். ராஜாஜி வரும் கூட்டத்தில் அவ்ர் முன்னிலையில் பேச வேண்டும் என்று சின்ன அண்ணாமலைக்குப் பயங்கர வேகம்.  யார் யாரையோ பார்த்துக் கெஞ்சி அனுமதி வாங்கி கொண்டார்.துரதிர்ஷடம், ராஜாஜி வருவதற்கு முன்னமேயே பேசச் சொல்லிவிட்டார்கள்.
      ராஜாஜியை பற்றிய ஒரு கட்டுரை ஆனந்த விகடனில் வந்திருந்தது, அதைச் சின்ன அண்ணாமலை மனப்பாடம் செய்து வைத்து இருந்தார் இவர் பேச ஆரம்பித்ததும் நல்ல வேளையாக ராஜாஜி வந்து விட்டார்.  .மனப்பாடம் செய்ததை சின்ன அண்ணாமலை உற்சாகத்துடன்  பேசினார். கிட்டதட்ட வார்த்தைக்கு வார்த்தை,  கூட்டம் கரகோஷம் செய்தது. பேசி முடிந்ததும் ராஜாஜியின் பாதம் தொட்டு வணங்கினார். சின்ன அண்ணாமலையின் தலையைத் தொட்டு “ நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்று சொல்லி  ராஜாஜி ஆசி கூறினார்!

March 05, 2010

உதிரிப்பூ

வலைப்பூ ரசிகர்களுக்கு,
இந்த வலைப்பூவில்  இடை இடையே  உதிரியாகச் சின்ன சின்ன சுவையான துணுக்குகளைத் தர எண்ணீயுள்ளேன். என் பழைய, புதிய டயரிகளிருந்து எடுத்துப் போடுகிறேன். இதைப்  POT POURRI என்று அலட்டலாகச் சொல்லலாம். அல்லது தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் என்றும் சொல்லலாம்!
--- கடுகு

வேம்பு. - கடுகு

தெருவை ஒட்டியிருக்கும் அந்தக் கார்ஷெட்டில் நாலு டேபிளைப் போட்டுச் சுடச்சுட இட்லி, தோசையையும் சுவையான காபியையும் சப்ளை செய்பவர்தான் அந்த அம்பாள் கஃபேயின் முதலாளி கம் சர்வரான திருவாளர் வேம்பு.
நல்ல சிவப்பு. சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட கன்னம். அழகான குடுமி. (தேவன் எழுதிய `மிஸ்டர் வேதாந்தம்' கதை படிச்சிருக்கேளா? கோபுலு சார் என்னை பார்த்துத்தான் வேதாந்தத்தைப் படம் போட்டிருப்பாரோன்னு தோண்றது!') ஜொலிக்கும் கடுக்கன். தும்பைப் பூவைப் பழிக்கும் வெள்ளை அரைக்கை சட்டை; மடித்துக கட்டப்பட்ட வேட்டி. இதுதான் வேம்பு.
சுத்தம் என்பதுதான் அவர் ஓட்டலின் முதல் சிறப்பு. சின்ன காரேஜ் பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவர்கள் இரண்டு ட்யூப்லைட். ஸ்டூல் மேஜை நாற்காலிகள். காரேஜின் பின்பக்கம் உள்ள சமையல் அறைக்குச் செல்லும் வழியை மறைக்கும். அழுக்குப் படியாத கர்ட்டன் எல்லாம் அவர் சுத்தத்திற்கும் தரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும்.

March 04, 2010

தமிழ் முத்து -2

புறநானூற்றுப் பாடல்

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
         - பாண்டியன் அறிவுடை நம்பி

விதிர்த்தும்,=சிதறுதல்

March 02, 2010

கமலாவும் கதைச் சுருக்கமும் -- கடுகு

  "உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தைக் கூடக் கோவையாகக் குழப்பாமல் சொல்லத் தெரியாது. நீங்கள சரியான் அசமஞ்சம்!'' என்று எனக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தாள் என் அருமை மனைவி கமலா. ஏன் இப்படிச் சொன்னாள் என்பதற்கு எங்களுக்குள் நடந்த ஒரு பழைய  உரையாடலை  எடுத்துச் சொன்னால் போதும். உங்களுக்கு விளங்கிவிடும்.'' ( ஏன்.   பழைய  உரையாடல் என்றா  கேட்கிறீர்கள்? இந்த சர்ட்டிபிகேட் கொடுத்த பிறகு இந்த மாதிரி உரையாடலுக்கு அவள் முற்றுப்புள்ளி வைத்து  விட்டாளே!)
ஒரு நாள் ----
    "ஆமாம், மூன்றாம் பிறை படம் போய்ட்டு வந்தீங்களே, என்ன கதை, சொல்லுங்கோ?''
    "ஸ்ரீதேவிதான் ஹீரோயின்... ஸ்ரீதேவி  வந்து........''
    "மூக்கு ஆபரேஷனுக்கு அப்புறம் எடுத்த படமா இது? ஸ்ரீதேவியின் மூக்குலே ஏதாவது வித்தியாசம் தெரியுதா?''
    "மூக்கு ஆபரேஷனும் இல்லை. நாக்கு ஆபரேஷனும் இல்லைன்னு அறிக்கை கொடுத்திருக்காங்களே... படிக்கலையா?' பண்ணிக்கலைன்னு சொல்றதை ஏத்துக்கணும்.”
    “ஸ்ரீதேவியை பத்தி ஒரு வார்த்தை தப்பா சொல்லக்கூடாதுடாப்பா!! ”
     “சரி.. சரி... கதையைக் கேளு  ஸ்ரீதேவிக்கு அம்னீஷியா...''
    "உங்க பெரிய மாமாவுக்கு வந்ததே அதுவா?''

அன்புள்ள டில்லி - 12

பணம் புரளும் டில்லி
இந்தியாவின் தலைநகர் என்பதால் டில்லியில் பிழைப்பதற்கு எராளமான வழிகள் உள்ளன. இங்குள்ள அரசாங்கக் கட்டிடங்களுக்கு (பல மாடிகள் கொண்டவை) வெள்ளை அடித்தே கோடீசுவரனாகிவிட முடியும். குண்டூசி சப்ளை செய்து பணக்காரனாக ஆக முடியும். டில்லி காண்டிராக்டர்களின் சொர்க்கம். லைசென்ஸ், பர்மிட் முதலியன வழங்கும் அலுவலகங்கள் பல இருப்பதால் இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும் வருபவர்கள் எராளம். இதனாலும் இவர்கள் தரும் "காபி செலவு"களினாலும் பணப் புழக்கம் எராளம். தரகர்கள் வளமாக வாழும் பூமி இது.
பார்ட்டிகள் நிறைந்த டில்லி
            டில்லியில் விருந்துகளுக்குப் பஞ்சமே இல்லை. தூ தரகங்கள் அவ்வப்போது தேர்ந்தெடுத்து அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று அழைப்பு விடுப்பார்கள். "உண்டறியாதன உண்டேன்' என்று கூறும் அளவிற்குக் கிடைக்கும். சில சமயம் பரிசுப் பொருள்களும் தரப்படும். அத்துடன் சைக்ளோஸ்டைல் செய்யப்பட்ட பத்திரிகைக் குறிப்பு எதாவது தருவார்கள். "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற வாசகத்தை மறக்காத நிருபர்கள், தங்களிடம் தரப்பட்ட குறிப்பைப் பத்திரிகையில் பிரசுரித்து விடுவார்கள்.
இன்ன எம்பஸியில் பார்ட்டி என்று தகவல் கிடைத்தாலே போதும், அழையாத விருந்தாளிகளாகப் போகிறவர்களும் உண்டு.
ஒரு சமயம் ராஷ்டிரபதி பவன் டீ பார்ட்டிக்கு எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது. என் மனைவி கமலாவுடன் சென்றேன். (கமலா இதற்காகப் புது பட்டுப் புடவை வாங்கிக் கொண்ட விவரங்கள் எல்லாம் இங்கு அனாவசியம்) சின்னப் பொதுக் கூட்டம் மாதிரி கூட்டம். எல்லாரும் ஹாலில் நின்று கொண்டிருந்தோம். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாததால் பல பேருக்கு யாருடன் பேசுவது என்று தெரியவில்லை. அவரவர் தங்கள் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

March 01, 2010

தமிழ் முத்து-1

நம் தமிழ் இலக்கியங்களில நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் அழகான பாடல்கள் ஏராளமாக உள்ளன. தனிப் பாடல்களிலும் பல முத்துகள் உள்ளன. என் கண்ணில் பட்ட, அழகு சொட்டும் பாடல்களைப் பல வருடங்களாக என் நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றைத் தொடர்ந்து இப்பகுதியில் போட எண்ணியுள்ளேன்.
-----------------
வான் கலந்த மாணிக்க வாசகா! நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!
-திருவாசகத்தின் சிறப்பு பற்றி ராமலிங்க சுவாமிகள்

தாயி - கடுகு

தம்புச் செட்டி தெருவின் அந்தப் பழைய கால வீட்டின் நடை வழியில் உள்ள திண்ணையில் அமர்ந்து இரும்புரலில் வெற்றிலைப் பாக்கு இடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் "தாயி'யின் வயது என்ன? அவளுக்கே தெரியாத விஷயம் இது. பலருக்கு நினைவு தெரிந்த நாள் முதலே அவள் கிழவியாகவே இருக்கிறாள்.
உடல் எல்லாம் சுருக்கம். வெளுத்த தலை முடி அவள் கறுத்த நிறத்தை மேலும் அதிகப்படுத்திக் காட்டும். அந்த வீட்டின் எட்டு குடித்தனக்காரர்களின் வேலைக்காரி அவள். ஆகவே அவளுக்கு அந்த நடைத் திண்ணையில் இருக்க உரிமை உண்டு. எத்தனையோ குடித்தனக்காரர்கள் வந்து போனாலும், முப்பது வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் நடக்கும் நல்லவை, கெட்டவைகளில்
பங்கு கொண்டு குடித்தனக்காரர்களின் வாழ்க்கையில் -- அதாவது அந்த வீட்டில் இருந்த காலத்திற்கு மட்டுமாவது - ஓர் அங்கமாக இருப்பவள் தாயி.
அந்த வீட்டிற்குள்  வேறு ஒரு வேலைக்காரனோ, வேலைக்காரியோ வர முடியாது. சரியாக வேலை செய்கிறாளோ இல்லையோ, துணிகளை அழுக்கு போக துவைக்கிறாளோ இல்லையோ, பாத்திரங்களைக் கரி போகத் தேய்க்கிறாளோ இல்லையோ, வீட்டை ஒழுங்காகப் பெருக்குகிறாளோ இல்லையோ - தாயியை யாரும் ஒன்றும் கேட்க முடியாது
"நாளையிலிருந்து வேலைக்கு வேண்டாம்' என்றும் சொல்லவும் முடியாது. தப்பித் தவறி யாராவது சொல்லிவிட்டால் அன்று எல்லாருடைய  வீட்டு வேலையும் அப்படியே நின்று விடும். அத்துடன் தாயி "ஓ' வென்று முணுமுணுப்பதும் தொடங்கிவிடும்!