March 10, 2010

கமலாவும் டயட்டும் - கடுகு

        ஒரு பெண்ணின் குலம் நாடி, குணம் நாடி அவளைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எனக்குச் சிலர் அறிவுரை கூறியதன் காரணமாக, அதன்படியே கமலாவைத் தேர்ந்தெடுத்து மணந்தேன். நான் இரண்டு தரம் (குலம் நாடி, குணம் நாடி) நாடியதாலோ என்னவோ கமலா இரட்டை நாடியாக ஆகிவிட்டாள்! பருமனைக் குறைக்கப் பல வழிகளைக் கையாள ஆரம்பித்தாள்.
*    "தினமும் அரை மணி நேரம் யோகாசனம் பண்ணினால் உடம்பு ட்ரிம்மாகி விடும்'' என்று ஒரு புத்தகத்தில் படித்த பிறகு யோகாசனத்தில் இறங்கினாள். சரியாக ஐந்து நிமிஷம் பண்ணுவதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு          வாங்கிவிடும். "ஏன்னா, அரை மணி ஆகிவிட்டதா?'' என்று கேட்பாள். "இல்லையே நாலரை நிமிஷம்தான் ஆச்சு'' என்பேன். "உங்க கடிகாரத்தைத் தூக்கி உடைப்பிலே போடுங்கோ. ரொம்ப ஸ்லோ... உஸ்... உஸ்...'' என்று கூறிவிட்டு யோகாசனத்தைத் தொடர்வாள்.
    "கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இப்போ தெம்பாக இருக்கு. ஒரு சுறுசுறுப்பு கூட வருது... நல்ல பசியும் வருது'' என்று சொல்லி லைட்டாக நாலு இட்லி சாப்பிட்டாள்.
    அடுத்த நாள் 20 நிமிஷம் பண்ணுவதற்குள் "தம்' தீர்ந்துவிட்டது. நாலு இட்லி சாப்பிட்டாள்.
    இப்படி தினமும் யோகாசனம் செய்யும் நேரம் தான் குறைந்தது, இட்டிலிகளின் எண்ணிக்கை அல்ல. கடைசியில் "சீ... இதெல்லாம் நம்மால் முடியாது'' என்று யோகாசனத்துக்கு மட்டும் முடிவு கட்டி விட்டாள்.


*    "செவ்வியம், ஜீரகம், மிளகு, சுக்கு, திப்பிலி, காயம், துவர்ச்சிலையுப்பு, சித்திர மூலம் இவற்றுடன் தயிரில் பொரிமாவைக் கலக்கிக் குடிக்கத் தேகம் மெலியும், பசியும் உண்டாகும்'' என்ற ஸ்ரீஹரியின் வீட்டு வைத்தியம் புத்தகத்தைப் படிதத யாரோ சொன்னார்கள்.  இவைகளைச் ஊரெல்லாம் அலைந்து திரிந்து சேகரித்துக் கொடுத்தேன். கமலாவும் பயபக்தியுடன் இந்த மருந்தைச் சாப்பிட ஆரம்பித்தாள். தேகம் மெலியும், பசியும் உண்டாகும் என்று சொல்லியிருந்தார்கள்அல்லவா? அதில் 50 சதவீதம் பலன் தெரிந்து. தேகம் மெலியவில்லை; ஆனால் பசி அதிகரித்தது.  அதாவது இரண்டு மூன்று டம்ளர் தயிரைக் குடித்த பிறகும்! ஆகவே அதன் பிறகு கமலா ’லைட்’ட,கச் சாப்பிடுவாள்!
*    "காய்கறிகளை வெறுமனே வேகவைத்து லேசாக உப்புத் தூவிச் சாப்பிட்டால் போதும். உடல் பருக்காது'' என்று ஒரு சிநேகிதி (அவளுடைய கணவர் கொத்தவால் சாவடியில் கடை வைத்திருப்பவர்!) சொல்ல, கமலா, "இதோ பாருங்கோ, இங்கிலீஷ் வெஜிடபிள் என்ன விலையாக இருந்தாலும் வாங்கிக் கொண்டு வந்து விடுங்கோ'' என்றாள். (கமலா கான்வென்டில் படித்தவள்!) நான் தினமும் விலை உயர்ந்த காலிஃபிளவர், பீட்ரூட், காரட், பச்சைப் பட்டாணி என்று வாங்கிக் கொடுத்தேன். உடம்பு இளைக்கவில்லை. ஆனால் இந்த உணவு முறை அவளுக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது. ஆகவே அதைக் கைவிடவில்லை.

*    "தேன் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது' என்று ஃபெமினாவில் போட்டிருந்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் தேன் புட்டியுடன் நின்றேன். கமலா தேனில் இரண்டு சொட்டுத் தண்ணீர் விட்டுக் குடிக்க ஆரம்பித்தாள்! இதன் காரணமாக நன்றாகப் பசி எடுத்தது. ஆகவே நிறைய நொறுக்குத் தீனி சாப்பிட ஆரம்பித்தாள்.
*    "பச்சைப் பயறு, நரிப் பயறு, கொள்ளு, துவரை, நெல்லி முள்ளி ஆகியவைகளுடன் கூட்டித் தயாரித்த வியஞ்சனத்தைச் சாதத்துடன் சிறிது நெய் விட்டுச் சாப்பிட்டால் நல்லது'' என்று இயற்கை வைத்தியர் ஒருவர் கூற, அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தாள்.
    "கொள்ளுமாச்சு நரிப் பயறுமாச்சு... வாயில் வைக்க வழங்கலை... கசக்கிறது” என்றாள். “ கசக்கிறேதே என்று  விட்டு விடாதே...இன்னும் இரண்டு ஸ்பூன் நெய் விட்டுச் சாப்பிட்டுப் பார்'' என்றேன். “ சரி. இவ்வளவுதூரம் சொல்றதாலே நெய் விட்டுச் சாப்பிட்டுப் பார்க்கிறேன்.” என்றாள். (எத்தனையோ தடவை எத்தனையோ விஷயங்களுக்கு ஆயிரம் தட்வை சொன்னாலும், துடைத்து போட்டுவிட்டுப் போய்விடுவாள். இப்போது ஒரே ஒரு தடவை சொன்னவுடன் ஒத்துக் கொண்டுவிட்டாளே!)   அதன்படியே சாப்பிட ஆரம்பித்தாள். நாளடைவில் வியஞ்சனத்தின் அளவைக் குறைத்து விட்டு அதை ஈடுகட்டும் வகையில் நெய்யின் அளவை ஏற்றி விட்டாள்!
* பழம் மட்டும் சாப்பிடும் வைத்தியத்தை யாரோ சொல்ல வீடே பழக் கிடங்காகியது. பழத்தோல் உதிர் சோலையாகிவிட்டது!
* டப்பா அழகாக இருக்கிறது என்று ,பெயர் தெரியாத சத்துணவு மாவை வாங்கிக் கஞ்சி  போட்டுச் சாப்பிட்டாள். : வாயில் வைக்க வழங்கவில்லை” என்றாள். “ அப்படியானால் நிறுத்திவிடேன்” என்றேன். : “ இன்னும் ஆறு டப்பா சாப்பிட்டுவிட்டு நிறுத்தி விடுகிறேன்.. ஆறு டப்பாவில் பருப்புகளைக் கொட்டி அலமாரியில் வைத்தால் பார்க்க அழகாக  இருக்கும்,” என்றாள்!  அந்த டப்பாவை டிசைன் செய்தவனை மனதிற்குள் சபித்தேன. அதுதான் நான் துணிச்சலாகச் செய்யககூடியது!.

*    கமலா எடுத்த முயற்சி கள் எதுவும் பலனளிக்கவில்லை. எடை ஒரு கிராம் கூட  குறையவில்லை. ஆனால் இந்த  டயட் காரணமாக நான் நன்றாக இளைத்து விட்டேன். என்னை விட என் பாங்க் பேலன்ஸ்,  பேலன்ஸ் பண்ண முடியாமல் தள்ளாடியது!

”ட்யட்டுமாச்சு, மண்ணுமாச்சு. இனிமே அதன் சங்காத்தமே வேணாம்” என்று ஒரு நாள் கமலா  தன் தோல்வியை ஒத்துக் கொண்டாள்.

கமலாவின் தோல்வியைப் பார்த்து, நானே மாபெரும் போரில் வென்றது போல் மகிழ்ச்சி அடைந்தேன்!

6 comments:

 1. மிக நீண்ட தேடலின் பின் உங்களின் blogai கண்டடைந்ததில் மிகவும் மகிழ்ச்சி கொண்ட தங்களின் வாசகன் நான்.

  கமலா - தொச்சு - மாமியார் - தொச்சுவின் மனைவி மற்றும் குழந்தைகள் ம்ம்ம்ம் சிறு வயதில் படித்தது இன்னும் மறக்கமுடியாத எழுத்துகள், பல முறை schoolil நண்பர்களோடு சேர்ந்து படித்து சிறிது பின்பு outstanding studentஆக காரணமான 'தொச்சுவின் orchestra' கதை என்னால் மறக்கமுடியாத எழுத்துகளில் ஒன்று.

  தற்போது தங்களின் கதைகள் எந்த பதிப்பாளர் வெளியீடுகிறார்கள் என்ற விவரத்தை வெளியிட்டால் என்னை போன்ற பல வாசகர்களுக்கு 'சிரிப்பு வலி' தந்த புண்ணியம் கிட்டும்.

  மீண்டும் ஒரு முறை தங்களின் எழுத்துகளை படிப்பதில் கட்டற்ற குஷிஅடையும்....

  ReplyDelete
 2. அன்புள்ள வைத்தி அவர்களுக்கு, இந்த பிளக்கைப் ப்ற்றி இட்லி வடையில் போட்டிருந்தார்கள். கடுகு என்று போட்டாலே கூகுள் தேடிக் கொடுத்து விடுமே!
  உங்கள் ஈ மெயில் விவரஙகள் கொடுங்கள். என் புத்தகங்கள் பற்றிய விவரங்களைத் தருகிறேன்.
  அதென்ன தொச்ச்வின் ஆர்கெஸ்ட்ராவால் நீங்கள் outstanding student ஆன கதை. அதைத் தெரிவியுங்களேன். நாட்டுக்கு சேவை செய்த மாதிரி இருக்கும்!!!!

  ReplyDelete
 3. எனக்கு தமிழ் இணைய எழுத்துகள் குறித்த பரிச்சயம் அவ்வளவாய் இல்லை, மிகவும் சில நாட்களைதான் இந்த தேடல், தங்களின் எழுத்துகளின் தொடர்ப்பு விட்டுபோய சிலவருடங்கள் ஆகிறது அதைத்தான் குறிப்பிட்டுஇருந்தேன்.

  என் email id vaithees@gmail.com, தங்களின் புத்தகங்கள் குறித்த விவரம் தெரிவிக்கவும்.

  தொச்சுவால் அவதி பட்டது அவரின் அத்திம்பேரான நீங்கள் மட்டுமல்ல நானும் என்னுடைய பெஞ்ச்மேட்சும் கூடத்தான், தமிழில் கம்ப்யூட்டரில் டைப் அடிக்க இப்போதுதான் பழகி கொண்டிருக்கிறேன்; வெகு விரைவில் சேவை செய்ய காத்திருக்கும்...

  ReplyDelete
 4. உங்கள் எழுத்துக்கு மாமி தான் முதல் விசிறியும், விமர்சகருமாமே! எங்களுக்கு உங்கள் எழுத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு வலிக்குமே நன்றி, உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் போறாது!

  ReplyDelete
 5. anpuLLa SNKM: சில சமயம் விசிறி: சில சமயம் விசிறிக் கட்டை என்று இல்லாதவரை சந்தோஷமே!

  ReplyDelete
 6. Vanakkam sir. Could you please provide your book details? My email id is maheshrvi@gmail.com, Thank you so much for making us laugh.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :