March 28, 2010

டி சில்வா - கடுகு

மீட் மிஸ்டர் டி சில்வா, பளிச்சென்று வெள்ளைச் சட்டை, வெள்ளை பாண்ட், பளபளவென்று பாலிஷ் செய்யப்பட்ட பூட்ஸ், பாந்தமான பெல்ட், கச்சிதமான டை, தீர்க்கமான மூக்கு, சுத்தமாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை, வ்கிடில்லாத்  கிராப். ஐம்பதைத் தொட்டுக் கொண்டிட்ருந்தாலும் முறுக்கான தோற்றம். டி சில்வா! பம்பாய் மின்சார ரயில் ட்ரைவர். தமிழ்நாட்டிலிருந்து பம்பாய்க்குச் சென்ற ஆங்கிலோ இந்தியர். தமிழ், இந்தி, மராட்டி, இங்கிலீஷ் எல்லாவற்றையும் ஒரே பாணியில் கிட்டத்தட்ட அதே அளவு கொச்சையில் பேசுவார்! ரயிலில் ட்யூட்டியில் செல்லும் போது தன்னந்தனியே செல்ல வேண்டியிருப்பதால், ஓய்வுகிடைத்தால் ஓயாமல் பேசுவார். ஜாலியான ஆசாமி. தன்னுடைய சொந்த கஷ்டங்களைப் பற்றிப் பேசும்போது கூட தமாஷாகத்தான் பேசுவார். டி. சில்வா இல்லாமல் பம்பாயில் பல ஆங்கிலோ இந்திய நிகழ்ச்சிகள் நடக்காது. பியானோ வாசிப்பார். பக்தி கீதங்கள் பாடுவார். சர்ச் நிதிக்காக சிறுவர் நடன நிகழ்ச்சிகள் தயாரிப்பார். டான்ஸ் கொஞ்சம் வரும்.
"ஹலோ டி சில்வா... ஹெடு யு டு.?
"ஏன் கேக்றே... ப்ளடி வவுத்தெர்ச்சல். நம்ப பெரிய பொண்ணுக்கு மேரேஜ் பண்ணேன். மாப்ளே கேட்டான், பால் ரூம் டான்ஸ் ஆடுமான்னு. சொல்லிக் கொடுத்திருந்தேனே. இருந்தாலும் கைல வேற கேட்டான். டி.வி. வேணுமாம். சோபா வோணுமாம். போரிவிலியிலே  ஒன் ரூம் குவார்ட்டர். சோபா போட எடம் ஏது? கேக்றான். ஷெர்டன்லே ஸ்டுவர்ட். நல்ல சம்பளம்.... கைல கேஷ் கேக்கறான், டிவென்டிஃபைவ் தௌசண்ட். ஜூவெல்ஸ் வித்து கொடுத்தேன். இன்னா செய்யறது? டௌரி சிஸ்டம் இருக்கும் வரைக்கும் என் மாதிரி பொண் பெத்தவங்களுக்கு கஸ்டம்தான். ஜீஸஸுக்கு கண் தெரிலியே.... யார்னாச்சியும் அவர் கைல பைனாகுலர் கொடுத்தா நம்ப கஸ்டத்தைப் பார்ப்பார்...
"சின்ன டாட்டர் எமிலி கிட்டே சொல்லிவிட்டேன். நீ நல்ல புள்ளையா பாத்து லவ் பண்ணு. ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லிட்டேன், லவ் பண்ற பையனை இரண்டு வருஷம் கழிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு. ஸ்டெடியாக இருக்கறவனான்னு பாக்கணும். சும்மா கேர்ல் ஃப்ரெண்டு அது இதுன்னு சொல்லி மிஸ்பிகேவ் பண்ணா, அந்த ஃபிரண்டை பிராண்டுன்னு சொல்லியிருக்க்றேன்.  டைப்பிங்க், ஷார்ட் ஹாண்ட் எல்லாம் எமிலி பாஸ் பண்ணிருக்கு. பரத நாட்டியம் க்ளாஸ் போவுது. இந்த டமில் சின்மா மேல க்ரேஸா அலையுது.  பியானோவிலே ஓரம்போன்னு சுத்த கன்ட்ரி பாட்டைப் பாடுது.
"சின்ன பொண்ணுக்கு நேர் எதிரு பீட்டர். வேளைக்கொரு சட்டை, டை, மாத்துவாரு பதினாலு வயசாவல்லே. நேவியில் போவப் போறானாம். பாட்டுப் பாடறான். அஸந்து பூடுவே. என்ன வாய்ஸ், இன்னா பிட்ச் போவுது. படிப்புதான் ஏறலை. ஆனால் பொழச்சுக்குவான்.  . . . . கிறிஸ்துமஸ் வர்றது. லீவ் கேட்டால் . சூப்பரண்ட் மூக்கால அழுவான் அல்லாரும் லீவ் கேட்டா எப்படின்னு என்னைக் கேட்டால்....? நானா சூப்ரண்ட்? இந்த டைம்லேதான் நாலு பியானோ புரோகிராம் இருக்கும். பைஸா வரும். ஒங்க வெஸ்டர்ன் ரயிலே ஓட்டிக்கிட்டிருந்தால் மட்டும் வண்டி ஓடுமா? `இருபத்தைந்து வருஷமா சர்ச் கேட், மெரைன் லைன், சார்னி ரோடு, ககிராண்ட் ரோடு, சென்ட்ரல், மகாலட்சுமி, பரேல், எல்ஃபின்ஸ்டன், தாதர், மாதுங்கோ ரோடுன்னு போய் போய் வந்தாச்சி. லைஃப்லே இந்த டைம்லே தான் கொஞ்சம் சேஞ்ச். நம்ப கைலேயும் சேஞ்ச் வரும். நம்ப டாடியும் மெட்ராஸ்லே டிரைவரா இருந்தார். அவராவது நம்பள வேற லைன்லே  மாட்டி  இருக்கணும்.. அவரை ஏன் சொல்லணும்? மே ஹிஸ் ஸோல் ரெஸ்ட் இன் பீஸ் ஓ.கே. போய்ட் வர்ரேன். சின்ன பொண்ணுக்கு பர்த்தடே. மல்லீப்பு வாங்கிட்டுப் போவணும். ரொம்ப புடிக்கும்....''
டி சில்வா, அவர் ஓட்டும் மின்சார ரயிலைப் போல் அடுத்த கணம் விரைந்து மறைந்து விடுவார்!

4 comments:

  1. பெஞ்ச் படம் சூப்பர் சார் .
    எமிலி அப்புறம் என்ன ஆனாங்க ?

    ReplyDelete
  2. யதிராஜ சம்பத் குமார்March 29, 2010 at 8:12 PM

    உங்கள் கேரக்டர் படைப்புகள் அனைத்துமே அருமை. அனைவரையுமே ஒரு கணம் நம் கண் முன்னே நிறுத்தி விடுகின்றன.

    ReplyDelete
  3. <<< யதிராஜ சம்பத் குமார் said...உங்கள் கேரக்டர் படைப்புகள் அனைத்துமே அருமை. அனைவரையுமே ஒரு கணம் நம் கண் முன்னே நிறுத்தி விடுகின்றன>>> மிக்க நன்றி. பாராட்டுகளை ‘கல்கி’ அவர்களுக்கே உரித்தாக்குகிறேன்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!