March 01, 2010

தாயி - கடுகு

தம்புச் செட்டி தெருவின் அந்தப் பழைய கால வீட்டின் நடை வழியில் உள்ள திண்ணையில் அமர்ந்து இரும்புரலில் வெற்றிலைப் பாக்கு இடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் "தாயி'யின் வயது என்ன? அவளுக்கே தெரியாத விஷயம் இது. பலருக்கு நினைவு தெரிந்த நாள் முதலே அவள் கிழவியாகவே இருக்கிறாள்.
உடல் எல்லாம் சுருக்கம். வெளுத்த தலை முடி அவள் கறுத்த நிறத்தை மேலும் அதிகப்படுத்திக் காட்டும். அந்த வீட்டின் எட்டு குடித்தனக்காரர்களின் வேலைக்காரி அவள். ஆகவே அவளுக்கு அந்த நடைத் திண்ணையில் இருக்க உரிமை உண்டு. எத்தனையோ குடித்தனக்காரர்கள் வந்து போனாலும், முப்பது வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் நடக்கும் நல்லவை, கெட்டவைகளில்
பங்கு கொண்டு குடித்தனக்காரர்களின் வாழ்க்கையில் -- அதாவது அந்த வீட்டில் இருந்த காலத்திற்கு மட்டுமாவது - ஓர் அங்கமாக இருப்பவள் தாயி.
அந்த வீட்டிற்குள்  வேறு ஒரு வேலைக்காரனோ, வேலைக்காரியோ வர முடியாது. சரியாக வேலை செய்கிறாளோ இல்லையோ, துணிகளை அழுக்கு போக துவைக்கிறாளோ இல்லையோ, பாத்திரங்களைக் கரி போகத் தேய்க்கிறாளோ இல்லையோ, வீட்டை ஒழுங்காகப் பெருக்குகிறாளோ இல்லையோ - தாயியை யாரும் ஒன்றும் கேட்க முடியாது
"நாளையிலிருந்து வேலைக்கு வேண்டாம்' என்றும் சொல்லவும் முடியாது. தப்பித் தவறி யாராவது சொல்லிவிட்டால் அன்று எல்லாருடைய  வீட்டு வேலையும் அப்படியே நின்று விடும். அத்துடன் தாயி "ஓ' வென்று முணுமுணுப்பதும் தொடங்கிவிடும்!
"இன்னா ஜானகி? குடித்தனம் வந்து ஆறு மாசம் ஆச்சில்லை, அதான் தாயியை வூட்டைவுட்டு போகச் சொல்றே! நான் ஏன் போவணும்? இஸ்டமில்லைன்னா நீ வூட்டைவுட்டு காலி பண்ணிட்டு போ. என்னடான்னு பார்த்தேன். காலேஜ் படிச்ச பொண்ணில்லே, அது தான் இப்படிப் பேசுது.! ஒரு கண்ணு போட்டா தன்னாலே தெரியும் தாயின் மஹிமை.! கொழந்தையை குளிப்பாட்ட தெரியாம அவஸ்தை படறபோது தானே இவுங்க இங்க்லீஸ் படிப்பு வண்டவாளம் தெரியும்!  போம்மா..... இப்படித் தான் விமலா சொல்லிச்சு. கடைசிலே இடுப்பு வலி எடுத்தபோது தாயிதான் கூட ரூம்லே இருக்கவேண்டியிருந்திச்சி.... "தாயி, நீ இல்லாட்டி நான் செத்தே போயிருப்பேன்''னு சொல்லிச்சு. இந்த வூடு கட்டினதிலிருந்து நான் இங்கே இருக்கிறேன். வூட்டுக்காரர் தனபாலு இருக்கிறாரே, அவரே என்னைப் போகச் சொல்ல முடியாது. இந்த தாயியோட தோளில் வளர்ந்த புள்ளைதானே அது!  சரி உன்னோட மல்லுக்கு நின்னது என் தொண்டை தண்ணிதான் வறண்டு போச்சு. அரை டம்ளர் காப்பித் தண்ணி கொடு... அட, சும்மா பாக்காதே ..... போம்மா கொழந்தே.... '' என்பாள் தாயி.
தாயிக்கு குழந்தை குட்டி எதுவும் கிடையாது. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள். ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வயிற்றுப் பொழைப்புக்காக சென்னை வந்தவள். வீடு கட்டும் போது சிற்றாளாகச் சேர்ந்தவள். பிறகு அந்த வீட்டுடனேயே ஐக்கியமாகி விட்டாள். அந்த வீட்டிற்குக் குடி வரும்  குடித்தனக்காரர்களின் சுக துக்கத்தில் தாயி பங்கு கொள்வாள். ஆமாம், அவளுக்கென்று வாழ்க்கையில் உரவும் இல்லை; உற்றரும் இல்லை. சுகமும் இல்லை. துக்கமும் இல்லை.
குடித்தனக்காரர்களிடமிருந்து சாதம், குழம்பு, ரசம் என்று வாங்கிச் சாப்பிடுவாள். டீ, காப்பியும் கிடைத்துவிடும். இல்லை என்றால் தெருக்கோடிக் கடையில் டீ, இடியாப்பம் வாங்கிச் சாப்பிடுவாள். ஆகவே அவளுக்குக் கிடைக்கும் சம்பளத்தின் பெரும் பகுதி மிச்சமாகிவிடும் அதை ஒரு சுருக்குப் பையில் போட்டு வைத்திருப்பாள்.
"தாயி, இந்த பணத்தைச் சேர்த்து வைக்கிறயே, என்ன செய்யப்போறே'' என்று கேட்டால் "போயேன் பங்களா கட்டப்போறேன்! நான் கண்ணை மூடினால், கட்டை முட்டை வாங்க பணம் வேண்டாமா? செலவு போக மீதி பணத்திலே மாரியம்மன் கோவிலில் கூழ் வாத்துடுவாங்க. ஏழை பாழைங்க சாப்பிட்டு விட்டுப் போகட்டும்'' என்பாள்.
"ஏம்பா, நாராயணா... இன்னா ராவிக்கு அப்பிடி கூப்பாடு போட்டிக்கிட்டு கிடந்தே? உன் பொண்சாதி சரியா சமையல் செய்யலியா? நான் சொல்றேனே பாவம், அதுக்கு மாசம் ஆயிடிச்சு. நீ சும்மா திட்டினா என்னா செய்யும்? அதை உன் மாமியார் வூட்லே கொண்டு வுட்டுடு. ரவை கூட அதாலே வேலை செய்யமுடியலே. நீ விடிகாலை போய் ராத்திரி பத்து மணிக்கு வர்றே. பாவம் ஒண்டியாய் இன்னா செய்யும். ... ஏய் பாபு, இன்னா சாக்குக் கட்டியைத் துண்றியா? என்னடான்னு பார்த்துக்கிட்டிருக்கேன். இரு, இரு உன்னை ரெண்டு கண்ணன் கிட்டே புடிச்சு கொடுத்துடறேன்........ சொக்காயை ஏன் கடிக்கறே? உங்கப்பா அந்த சேட்டு கடையிலே உழைச்சு வாங்கின புது சட்டை. உனக்கு இன்னா தெரியும் இதெல்லாம்...... போ மணியாச்சு.... பையை எடுத்துக்கிட்டு. வா. இஸ்கோலுக்கு நேரமாவல்லே? இட்டுகிட்டு போறேன், வா....''
"ஏம்மா, லட்சுமி... உன் மாமியார் மாவு அரைக்கணும்னு சொன்னாங்களே, கொடு அரைச்சுக்கிட்டு வறேன், அப்புறம் உன்னைத்தானே கூப்பாடு போடும். ஆமாம் நேத்தி ராத்திரி ஊத்தினியே கொழம்பு, உப்பு ஜாஸ்தி, புளியே இல்லை. கத்திரிக்காய் வேகல்லை. அதான் உன் மாமியார் திட்டுது..... சமையல் பார்த்து செய்யு! எதுக்கு வீணா பேச்சு கேக்கறே?''
"ஏம்மா ராஜம்மா, குழந்தையை ஏன் இப்படி அழுவ வுடறே? இப்படி கொண்டா, நான் கால்ல போட்டு தூங்கப் பண்றேன், நீ சமையல் பண்ணு. உன் வூட்டுக்காரரை ஆபீஸுக்கு அனுப்பு. வண்டியைப் புடிச்சு ஆவடிக்கு போவணும் இல்லை?
"சாந்தா அம்மா...... ராவிக்கெல்லாம் ஒரே குளிரு. காய்ச்சல் அடிச்சுது. எனக்கு ரெண்டு மொளகைப் போட்டு சூடா கஷாயம் பண்ணி ஒரு டம்ளர் கொடு. இன்னிக்கி என்னாலே வூடுகூட பெருக்க முடியாது. யாராவது ஒரு வாய் கஞ்சி வெச்சி ஊத்தணும்.....''

தாயி அந்த வீட்டின் வேலைக்காரி தான். இருந்தாலும்  எல்லாரையும் வேலை வாங்குவாள் அவ்வப்போது!
அந்த வீட்டின் சுவர், நிலைப்படிமாதிரி, தாயியும் அந்த வீட்டின் ஒரு முக்கிய பாகம்.

3 comments:

 1. இந்த மாதிரி வேலைக்காரர்கள் அந்த காலத்தில் இருந்தார்கள்!!

  ReplyDelete
 2. ராஜ சுப்ரமணியன்March 1, 2010 at 10:02 AM

  மிக அருமையான, நுணுக்கமான உருவகப் படைப்பு (characterisation) தாயியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.

  ஒரு வீட்டின் படத்தை போட்டிருக்கிறீர்களே, அது எங்கள் கடலூர் வீட்டைப் போலவே இருக்கிறது. பழைய நினைவுகள் மீண்டும் ...

  ReplyDelete
 3. அருமை.
  கொஞ்சம் மாடி வீட்டு மாதுவை நினைவு படுத்தியது.


  virutcham

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :