March 20, 2010

அன்புள்ள டில்லி- 15

ஒரு சமயம் சோ டில்லிக்குத் தன் நாடகக் குழுவினருடன் வந்திருந்தார். அவரைப் போய்ப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.  துக்ளக் பத்திகையை ஆரம்பிக்கு முன்பு அவர் வந்திருந்தார்.
பத்திரிகை நிருபர் கூட்டம் ஒன்றை நடத்தினார். போயிருந்தேன். அங்கு  அவரிடம் "எந்தக் கேள்விக்கும் தயாரா?' என்று கேட்டு அதற்கு, அவரும் "சரி' என்று சொன்ன பிறகு பல சங்கடமான கேள்விகளைக் கேட்டேன்: அவரைக் காரசாரமான கேள்விகளையும் கேட்டேன்.. சோவும் சளைக்காமல் பதில் சொன்னார். கூட இருந்த நிருபர்கள் எனக்கும் அவருக்கும் எதோ சச்சரவு தான் வந்துவிட்டது என்று எண்ணி, பைத்தியக்காரத்தனமாக சமாதானம் (!) செய்ய முயன்றார்கள். "யு ஹேவ் வன் தி பேட்டல்; பட் லாஸ்ட் தி வார்'' என்று இங்கிலீஷில் கூறினார்கள். சோவோ, "ஸார், அவர் கேட்பதைக் கேட்கட்டும்'' என்று அமைதியாகச் சொன்னார். அதன் பிறகு பேட்டிக் கட்டுரையை எழுதினேன். தினமணி கதிரில் "சோவுடன் ஒரு மோதல்' என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியாயிற்று
. (அதே வாரம் குமுதம் இதழ், சோ எழுதிய "மோதாமல் ஒரு நாளும் இருக்க மாட்டேன்'  என்ற தலைப்பில், இலவச இணைப்பு ஒன்றைத் தந்தது. என் "மோதல்' கட்டுரையைப்  பார்த்து விட்டு ஒரு பிரபல பத்திரிகாசிரியர், "இந்தப் பேட்டி, தி இண்டர்வியூ ஆஃப் தி இயர்' என்று மனதாரப் பாராட்டினார்.
(இந்த கட்டுரையைத் தேடிப் பிடிக்கப் பார்க்கிறேன். அகப்பட்டால் பின்னால் வெளியிடுகிறேன்.)
(சோ அப்போது மொட்டை இல்லை: நான் அவ்வளவு வழுக்கை இல்லை. நேருக்கு வெயிஸ்ட் கோட் போல, சோவுக்கு மொட்டையையும், எனக்கு வழுக்கையையும் கோபுலு டிரேட் மார்க ஆக்கி விட்டார்!)
அண்ணாவின் மீசை
அண்ணா ராஜ்ய சபை உறுப்பினராக இருந்த சமயம் (என்று நினைப்பு). அப்போது  அண்ணா,  ஜப்பான் முதலிய வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று திரும்பினார். வெளிநாட்டு அனுபவங்களைக் கேட்டு எழுத அவரைப் பார்க்கப் போனேன். திரு. செழியனின் புதுடில்லி இல்லத்தில் அண்ணா இருந்தார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் போய் வந்த விவரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த போது, '' இந்தப் பயணத்தில் போது எனக்கு ஒரே ஒரு சங்கடம்தான் எற்பட்டது. அது செல்ஃப் ஷேவிங். பழக்கமே இல்லாத காரணத்தால் அவதிப்பட்டேன். முக்கியமாக என் மீசை விஷயம்தான் ரொம்பத் தொல்லையாகப் போய்விட்டது. வலது பக்கம் அதிகமாக இருப்பதாகத் தோன்ற, இடது பக்க மீசையைச் சிறிது வெட்டினால் அது பெரிதாகவும் வலது சின்னதாகவும்ஆகிவிடும். கடைசியில் எனன் செய்தேன் தெரியுமா? மீசையையே எடுத்து விட்டேன்'' என்றார். மீசை இல்லாத அண்ணாவைப் படம் பிடித்துப் பத்திரிகைக்கு அனுப்பினேன்.
ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டதால் இப்போது ஒரு சின்ன ரகசியத்தை இங்கு வெளியிடலாம் என்று நினைக்கிறேன். ஜப்பானில் அண்ணா ஒரு சின்ன கிமோனோ டிரஸ் கே.ஆர். ராமசாமியின் பெண்ணிற்காக வாங்கினாராம். ஆனால் அத்துடன் சேர்த்து வாங்க வேண்டிய மேல் துணிப்பட்டை ஒன்றை வாங்க மறந்து விட்டாராம். "செழியன், அந்தத் துணியை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.சாயங்காலம் ஜன்பத் மார்க்கெட்டிற்குப் போகலாம். ஜப்பானில் வாங்கிய கிமோனோவுடன் சேர்த்துக் கொடுத்தால் சரியாகிப் போய்விடும். இல்லாவிட்டால் குழந்தைக்கு முழுத் திருப்தி கிடைக்காது'' என்றார்.
அதன்படியே வாங்கிக் கொடுத்திருப்பார் என்று நம்புகிறேன்.
டில்லியில் எம்.ஜி.ஆர்.
டில்லியில் இருந்த போது ஆறு ஏழு சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர். அவர்களை நெருங்கிப் பார்க்க வாய்ப்புகள் கிடைத்தன. "அடிமைப் பெண்', "உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களின் தயாரிப்பின் போது டில்லி வந்திருந்தார்.
"அடிமைப் பெண்' ஷூட்டிங் முடிந்து ஜெய்பூரிலிருந்து டில்லி திரும்பும் தினம் அவருக்கும் ஜெயலலிதா, சந்திரபாபு ஆகியவர்களுக்கும் திரு. தெய்வீகன் எம்.பி.ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.   மலை 6 மணிக்கு பார்ட்டி. ஆனால் துரதிருஷ்டவசமாக ஜெய்ப்பூர் - டில்லி விமானம் மிகுந்த தாமதமாக வந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் லேட் என்று நினைக்கிறேன்.
விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குக் கூடப் போகாமல் நேரே எம்.பி.யின் வீட்டிற்கு எல்லாரையும் எம். ஜி.ஆர். அழைத்து வந்தார். "தெய்வீகன், லேட்டாயிடுத்து. பரவாயில்லை. உங்கள் விருந்தை அவசரப்பட்டு முடிக்க வேண்டாம். நிதானமாக நீங்கள் திட்டமிட்டபடி நடக்கட்டும்'' என்றார்.
எம்.ஜி.ஆரும் மற்றவர்களும் அந்த பங்களாவிலேயே தங்க வசதி செய்து இருந்தார் திரு. தெய்வீகன்.
    "நான் ஒரு தயாரிப்பாளன் என்ற முறையில் இவர்களை அழைத்து வந்திருக்கிறேன். ஆகவே அவர்களுக்கு அசோகா ஓட்டலில்தான் தங்க வசதி தர வேண்டும். நான் மட்டும் தனியாக வந்திருந்தால் இங்கு தங்குவேன். எவ்விதத் தடையுமில்லை'' என்றார்.
   ஜெய்ப்பூரிலிருந்து எம்.ஜி.ஆர். திரும்பியபோதுதான் முதன் முதலாய் குல்லாய் போட்டுக்கொண்டார். அங்கு குல்லாயை வாங்கிய போது அதை நிரந்தரமாக உபயோகிக்கலாம் என்று நினைத்திருக்க மாட்டார் என்பது என் கணிப்பு. அதுவே அவருடைய டிரேட் மார்க் ஆகிவிட்டது.
    அதே மாதிரி, "உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்பிற்காக வந்த போதும், எல்லாரும் அசோகா ஓட்டலில் இறங்கினார்கள். எம்.ஜி.ஆருக்கு சாப்பாடு அனுப்பும்படி யாரோ ஒருவர் போனில் ஆர்டர் கொடுத்தார். "இருப்பா... எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் எனக்கு சாப்பாடு... யார் யாருக்கு என்ன வேணுமோ என்று கவனித்து விட்டுக் கடைசியாக என்னைக் கவனிக்கலாம். முதலில் அதைச் செய்'' என்றார்.
அவரை மறு நாள் வழி அனுப்ப விமான நிலயம் சென்றோம் விமானக் கூடத்தில் அவரைப் பார்க்க எ\ஏகப்பட்ட கூட்டம். வெயிட்டிங் ஹாலில் உட்கார்ந்திருந்தார்.  புகைப்படக்காரர் போட்டோ பிடித்துக் கொண்டே இருந்தார். சுமார் 3,4 ரோல் படம் எடுத்திருப்பார். அப்போது எம்.ஜி.ஆர். அவரைப் பார்த்து, "என்னப்பா... எத்தனைப் படம் என்னையே எடுப்பாய்?'' என்று கேட்டார்.
புகைப்படக்காரர் உடனே, "சார், உங்களை மட்டும் எடுக்கவில்லை. உங்கள் பின்னால் ஒருவர் ஒருவராக உங்களது விசிறிகள் வந்து நிற்கிறார்கள். பாருங்கள் எவ்வளவு பெரிய க்யூ நிற்கிறது என்று. அவர்களையும் சேர்த்துத்தான் படம் பிடிக்கிறேன். உங்களுடன் ஒரு படம் எடுத்துக் கொள்வது அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக் கூடிய வாய்ப்பா?'' என்றார்.
"ஓ, அப்படியா சமாசாரம்! சந்தடி செய்யாமல் சோபாவிற்குப் பின்னால் ஆட்கள் மாறி மாறி நிற்கிறார்களா? கில்லாடிகள்தான்'' என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அதற்குப் பிறகு சுமார் 50, 60 படங்கள் எடுத்து இருப்பார் புகைப்படக்காரர். (அவருக்கு நல்ல வேட்டை!)
     “புத்தக்கடை இங்கு இருக்கிறதா” என்று கேட்டார்..இருக்கும் இடத்தைச் சொன்னேன். அங்கு அவர் போகும் போது நான் பின் தொடர்ந்தேன். ஐந்து ஆறு புத்தகங்கள் வாங்கினார். என்ன புத்தகங்கள் என்று யாராலும் ஊகிக்கவே முடியாது.   அவர் வாங்கியவை அனைத்தும் நகைச்சுவைப் புத்தகங்கள்.  MAD  MAGAZINE  வெளியிட்டப் புத்தகங்கள்.

     பின்னால் சில வருடங்கள் கழித்து அவரை ஒரு படத்தில் காமெடி நடிகராக்கிய பெருமை எனக்கு உண்டு. இதைப் பற்றி...
( தொடரும்)

4 comments:

 1. As usual too good... it was exciting to read unknown info about known personalities... thanks to you to share your personal experiences.... if can please write an MGRum Naanum".

  - Sri :)

  ReplyDelete
 2. Superb!!!!!!! Experiences are really unique...Great. Please post that article on CHO. Thankyou.

  ReplyDelete
 3. ஆர்வத்தை தூண்டிவிட்டுட்டீங்க, சோ மற்றும் எம்.ஜி.ஆர் கட்டுரைகளுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :