March 24, 2010

மங்களகுமாரி - கடுகு

"ஏய்...அம்மா.. உன்னைத்தானே, மூணு  மணிக்கு போட்டோகிராபர் பிரபு வர்றார். புடவையைப் பொட்டி போட்டு வை. லாலா கடையிலிருந்து நாலு ஜிலேபி வாங்கி வை. பிலிம் செலவுக்கென்று கவர்லே நூறு ரூபாய் நோட்டு போட்டு வை. பிரபுவுக்குக் கொடுக்கணும் அம்மா... பிரபு அண்ணன் பெரிய ஆள் அம்மா... அன்னிக்கு நடிகர் சங்க விழாவிலே பாத்தேன். ரஜினியின் தோள்மேல கைபோட்டுப் பேசிட்டிருந்தாரு.''
"அடி மங்களகுமாரி... தோள் மேல கையைப் போட அவங்களுக்குச் சொல்லியா கொடுக்கணும். பாரேன், போட்டோ எடுக்கற சாக்கிலே உன்மேலே கூடத்தான் கையைப் போடுவாரு... எப்படியோ நீ பெரிய ஸ்டாராக வந்தால் சரிதான்...'' - இது அம்மா.
சினிமா என்ற வெல்லக்கட்டியால் ஈர்க்கப்படும் பல்லாயிரக் கணக்கான எறும்புகளில் மங்களகுமாரியும் ஒருத்தி.
இவள் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்போதே இரண்டு வீட்டையும்,  கணிசமான தொகையையும் விட்டு அப்பா காலமாகிவிடவே, தன் தாயாருடன் சென்னைக்கு வந்து விட்டவள் மங்களகுமாரி. தமிழ்த் திரை உலகின் ராணியாகத் திகழ வேண்டும் என்பதே இவளது ஆசை. ஆகவே சொத்து பத்துகளை விற்று விட்டு,சென்னைக்கு வந்து சுமாரான வீட்டில் குடியேறினார்கள்.
நாட்களும், அதைவிட வேகமாகப் பணமும் ஓடினவே தவிர சினிமா சான்ஸ் கிட்டவில்லை. ஆனால் அவள் நம்பிக்கை இழக்கவில்லை. சினிமா பித்து அவள் ரத்தத்தில் ஊறியிருந்தது.
எட்டுப்பக்க கவர்ச்சிப் படங்கள், பின் - அப், "மனம் திறந்து' சொல்லும் கட்டுரைகளுக்கான படங்கள் ஆகியவற்றில் மங்களகுமாரி காட்சி அளித்திருக்கிறாள். இந்த மாதிரிப் படங்களில் நடிக்கத்தான் சான்ஸ் வந்ததே தவிர திரைப்படத்தில் வரவில்லை. பத்திரிகை நிருபர்களிடம் நிறைய பேசுவாள்.
"எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா, டான்ஸ் என்றால் உசிருங்க. ஒரு தபா பாத்தா அப்படியே ஆடுவேனுங்க. ஸ்கூல்லே டான்ஸ் பிரைஸ் வாங்கியிருக்கேன். டிராமாவெல்லாம் ஆக்ட் பண்ணியிருக்கேன். கோவை கலா சேவா மன்றம் நாடகங்கள்ளே நடிச்சிருக்கேன். போட்டோ ஆல்பம் பாக்கறீங்களா... இத பாருங்க, கலெக்டர் பட்டம் கொடுத்தாரு, நடிப்புக் குயில்னு...
"எனக்கு நடிப்புத் திறமை நெறைய இருக்கு.ஆர்வம் இருக்கு.  டைரக்டர் கம்பராஜா, "ஒரு கிராமம் கண்ணீர் விடுகிறது' படத்திலே சான்ஸ் கொடுக்கிறதா சொல்லியிருக்கார். என் ஆல்பத்தைப் பார்த்த தேவேந்திரன், "உனக்குத் தகுந்த ரோல் வரும்போது சொல்லி அனுப்பறே'ன்னு சொல்லியிருக்காரு. டி. கே.ராவ் கூட கூப்பிட்டு அனுப்பிச்சாரு. ஆனால் அதுக்குள்ளாற, தன் ரேட்டைக் குறைச்சிக்கிட்டு ஜெய ரோஜா நடிக்க ரெடின்னுட்டாங்க. எனக்கென்ன குறைச்சலுங்க? முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்னுதான் சொன்னேன்; கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்னு சொன்னேனா..? ரசிகர்கள் விருப்பப்படிதாங்க நடிக்கணும்...''
"இப்போ பரத நாட்டியம், குச்சிப்புடி கத்துக்கிட்டு இருக்கேன். "பாடி' கொஞ்சம் "பில்ட்' பண்ணிக்கோன்னு மேக்கப் முருகேஷ் சொன்னாரு! "வாடாதப்பூக்கள்'ளே நான்தான் நடிச்சிருக்கணும். டைரக்டர் கூட வரச் சொல்லுன்னு சொன்னாராம். அதுக்குள்ளாற யாரோ வேண்டாதவங்க "இவ கால்ஷீட் தகராறு பண்ணுவா'ன்னு வத்தி வெச்சுட்டாங்க. மன்னார்குடி வேலாயுதம் "எல்லாம் புதுமுகங்களாப் போட்டு எடுக்கப் போறோம், நடிக்கிறியா'ன்னு கேட்டார். அவரும் புதுத் தயாரிப்பாளர். சரிங்கன்னு சொல்லி, இரண்டு மாசம் தேதி கொடுத்தேன். ஆனால் அவரு எடுக்கலை. நமக்கு வாடாதப்பூக்கள்  சான்ஸும் வாடிப் போயிடுச்சு...
"பிரபு அண்ணன் வராரு. வாங்கண்ணே, போட்டோவுக்கு நான் ரெடி. டிரஸ்ஸு நீங்க சொல்றபடி... இன்னா சாப்டறீங்க... பிரபு அண்ணன், பத்திரிகையிலே அட்டைப் படமா வர்றதுக்கு வழி பண்ணுங்க... சும்மா கட்பாடி விளம்பரப் படம் மாதிரியே எடுத்துக்கிட்டு இருந்தால் எப்படி? பிரபு அண்ணன், அந்த அம்மா... பேர் சொல்லக்கூடாது... அவங்களைப்பத்தி இத்தோட ஆறுதடவை கிசுகிசுவிலே வந்துடுத்துங்க. நம்மள பத்தி ஒண்ணுகூட வரல்லீங்க... சொல்லுங்க, வேணும்னா தூக்கமாத்திரை சாப்பிடறேன். பேப்பர்லே நியூஸ் வருமே.  பிரபு அண்ணே, உங்களுக்குத்தான் அந்த "மாங்காடு புரடக் ஷன்' கம்பெனியில் அல்லாரும் வேண்டியவங்களாச்சே. சிபாரிசு செய்யக்கூடாதா? நம்ப போட்டோ ஆல்பம் ஒண்ணு கொடுக்கறேன். அண்ணே... வயசு ஏறிகிட்டே போவுதே...''
     மங்களகுமாரி மட்டுமல்ல, மங்களகுமாரிகள் யாவரும் நம் அனுதாபத்துக்கு உரியவர்கள்!

4 comments:

  1. Sir,
    Is this your old article ? because today cinema chance is being chased in different ways? People are very clever!!!

    - Kothamalli

    ReplyDelete
  2. Some old things have not changed. But methods have further deteriorated. yes, this is an old article but slightly updated. I agree with you.

    ReplyDelete
  3. பாவம்! வேறென்ன சொல்வது?

    ReplyDelete
  4. இது மாதிரி நிறைய பேர் இங்கே சென்னையில் இருக்கிறார்கள்...எனக்குத் தெரிந்த பெண் ஒருவர்-முதலில் அறிமுகம் ஆனபோது பெண் - இப்போது அம்மணி- நாற்பதைக்கடந்தவர்..இப்போதும் கூட என்ன நம்பிக்கையில் சலிக்காமல் அலைகிறாறோ..நல்ல புத்திசாலி..பாங்க் பரிட்சை எழுதி இருந்தால் ..நிச்சயமாக இந்நேரம் ஏ.ஜி.எம். டி.ஜி.எம். லெவலுக்குப் போயிருப்பார்.. யாரைச் சொல்கிறேன் .. புரிகிறதா..?

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!