திரைப்படத் தயாரிப்பாளர் கலாகேந்திரா' கோவிந்தராஜன் என் நண்பர். அவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டு "எதிர் நீச்சல்' படம் போடுவதற்கு ஏற்பாடு செய்தேன். விளம்பரப்படுத்தி டிக்கெட்டுகள் மளமளவென்று விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். "படம் பிரிண்ட் உங்களிடம் சேர்ப்பது என் பொறுப்பு'' என்று அவர் என்னிடம் கூறி இருந்ததால், கவலை இல்லாமல் இருந்தேன்.
ஆனால் ஒரு ஆசாமி ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். அவர், அந்தப் படத்தின் டில்லி டிஸ்ட்ரிப்யூடர். தன் தொழிலில் மண்ணைப் போடுபவர்களைச் சும்மா விடக் கூடாது என்று தீர்மானித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் யார் யார் என்று கண்டுபிடித்து, வக்கீலை வைத்து, கோர்ட்டில் அவரது உரிமைகள் மீறப்படுவதாக மனு கொடுத்து சம்மன் "சர்வ்' செய்ய எற்பாடு செய்து விட்டார்.
சங்க நிர்வாகிகள் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள். எப்படியாவது பணம் செலவு செய்தாவது, சம்மனை இவர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டார்,
இதன் காரணமாக டிஸ்ட்ரிப்யூடர் அமீனாவிற்கு "காப்பி செலவு', டாக்ஸி வசதி எல்லாம் கொடுத்து சம்மன் "சர்வ்' செய்து விட்டார் .
நல்ல காலம், சங்கத்தில் எனக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் இருக்கவே எனக்குச் ச்ம்மன் வரவில்லை. (பொறுப்பில்லாத ஆசாமியாக இருப்பதிலும் நன்மை இருக்கிறதைக் கவனியுங்கள்!)
ஆனால் சம்மன் பெற்றவர்கள் யாவரும் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுக்குத் தைரியம் கொடுப்பதற்காக (?) நானும் டில்லி கோர்ட்டுக்குச் சென்றேன்.
தலைநகரில் உள்ள கோர்ட்! உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சிதான் எற்பட்டது. ஒரு மேஜையில் நீதிபதி. சுற்றிலும் ஒரே சள சள கூட்டம். பீடிப் புகை, வாக்குவாதங்கள். அழுக்குச் சுவர்கள். தள்ளாடும் நாற்காலிகள். மேஜைகள். பெயிண்டையே பார்த்தறியாத கதவுகள். ஜன்னல்கள். எதிர்க் கட்சி வக்கீல் எதோ உருதுவில் ஜட்ஜ் (மாஜிஸ்டிரேட்டோ?) அவர்களிடம் சொன்னார். அவர் எங்களைப் பார்த்து இந்தியில் கேட்டார். எங்களில் ஒருவர், "யுவர் ஹானர்...'' என்று ஆரம்பித்து இங்கிலீஷில் பதில் சொன்னார். மாஜிஸ்டிரேட்டோ, "ஹான்ஜி, போலியே'' என்று இந்தியில் சொன்னார்.
"என்னடா இது, ஆங்கிலத்தில் பேசினால் நம் கேஸ் தோற்றுப் போய் விடுமோ' என்ற அச்சத்தில் பட்லர் இந்தி(!)யில் சங்க காரியதரிசி பேச ஆரம்பித்தார். கேஸ் தோற்றுவிட்டால், போலீஸ் வண்டியில் ஏற்றி திஹார் ஜெயிலுக்குப் அழைத்துப் போய் விடுவார்கள் என்று கலாட்டா செய்து கொண்டிருந்தோம்.
"உங்கள் சங்கத்தில் "எதிர் நீச்சல்' படமா போடப் போகிறீர்கள்?''
"அப்படித்தான் உத்தேசம்.''
"படத்தின் பிரிண்ட் உங்களிடம் இருக்கிறதா?''
"இல்லை.''
"பின் எப்படிப் படத்தைத் திரையிடப் போகிறீர்கள்?''
"புரொட்யூசர் தனது டிஸ்ட்ரிப்யூடர் மூலமாக பிரிண்ட் தர எற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்.''
"டிஸ்ட்ரிப்யூடர் தராவிட்டால் என்ன செய்வீர்கள்?''
"நிகழ்ச்சியைக் கேன்சல் செய்து விடுவோம்.''
"அப்படியா? இதை ஒரு மனுவாக எழுதிக் கொடுங்கள்'' என்றார்.
எங்களில் ஒருவர் எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்துவிட்டு, மாஜிஸ்டிரேட், "கேஸ் டிஸ்மிஸ்ட்'' என்று சொல்லிவிட்டார்.
பாவம், டிஸ்ட்ரிப்யூட்டர் எகப்பட்ட செலவு செய்து வழக்கைப் போட்டிருந்தார்.
கோர்ட்டுக்கு வெளியே வந்தோம். (இந்த சமயத்தில் அந்தக் கோர்ட் அறையில் உள்ள கூட்டத்தில் யாரோ ஒருவர் எங்கள் நண்பரின் பார்க்கர் கோல்ட் பேனாவை பிக்பாக்கெட் அடித்து விட்டார். மாண்புமிகு மாஜிஸ்டிரேட் முன்னிலையில்! சட்டத்தின் சாட்சியாக பிக் பாக்கெட்! இது டில்லியில்தான் சாத்தியம்!)
டிஸ்ட்ரிப்யூட்டர் சுருதி இறங்கி, "ஸார், ’எதிர் நீச்சல்' பிரிண்ட் கையில் இல்லை. பதிலுக்கு ’காவியத் தலைவி' தருகிறேன். ஆனால் இலவசமாக இல்லை'' என்றார். அதற்கு சம்மதித்து அந்தப் படத்தைப் போட்டோம். மறுவாரமே "எதிநீச்சல்' படத்தை ஓசியில் பெற்றுத் திரையிட்டோம். நல்ல லாபம். அதன் பிறகு டிஸ்ட்ரிப்யூட்டர் நல்ல நண்பராகி விட்டார். அடிக்கடி படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார்.
மூன்று எழுத்தாளர்கள்
தமிழகத்திலிருந்து டில்லிக்கு வரும் எழுத்தாளர்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (அந்த எழுத்தாளர் பத்திரிகை ஆசிரியராக இருந்தால், தங்கள் வீட்டிற்கு அழைத்து விருந்து அளிப்பவர்களும் உண்டு. பதிலுக்குக் கதையைத் தனது பத்திரிகையில் போடாமல் அவரால் இருக்க முடியுமா?) பெயரை எழுதாமல் மூன்று எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்கிறேன். (தயவு செய்து அவராக இருக்குமோ, இவராக இருக்குமோ என்று மூளையைக் கசக்கிக் கொள்ளாதீர்கள்.)
ஒரு இலக்கிய எழுத்தாள நண்பர் டில்லி வந்திருந்தார். அவருடன்கூட வேறு எழுத்தாளர்களும் உலகப் புத்தகச் சந்தையில் கலந்து கொள்ள வந்திருந்தனர். எழுத்தாளர் பாராளுமன்றத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். என் நெருங்கிய நண்பராக இருந்த ஒரு எம்.பி.யிடம் சொல்லி பாஸ் வாங்கினேன். எம்.பி.யே அவரை அழைத்துச் சென்று காலரியில் உட்கார வைத்தார்.
இடைவேளையில் வெளியே வந்தோம். எம்.பி. தன் காரில் எங்களை ஓட்டல் அறைக்குக் கொண்டு வந்து விட்டார். "எப்படி இருந்தது பார்லிமெண்ட்?'' என்று அவரை எம்.பி. கேட்டார். "அடுத்த எலெக் ஷனுக்குப் பிறகு நான் உட்காரப் போகிற இடம்தானே'' என்றார் கையை வீசியபடியே. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. யார் யாருக்கு என்ன மாதிரி ஆசைகள் உள்ளன! பாவம், அதன் பிறகு அவர் டில்லிக்கே வரவே இல்லை என்பது வேறு விஷயம்!
மற்றொரு எழுத்தாளர் உலகப் புத்தகச் சந்தையில் நடைபெற்ற "எழுத்தாளர் கருத்தரங்"கில் சில நிமிடங்கள் பேசினார். ஆம், சில நிமிடங்கள். ஊருக்குத் திரும்பியதும், கருத்தரங்கைப் பற்றி நீண்ட கட்டுரை எழுதி தினமணி கதிருக்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையை என் பார்வைக்கு ஆசிரியர் சாவி அனுப்பியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம், அந்தக் கருத்தரங்கில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் இவர்தான் என்பது போலவும், அவரது கருத்துக்கள் பெரிய கலக்குக் கலக்கியது போலவும் எழுதியிருந்தார். கட்டுரையில் தன் பெயர் வர வேண்டும் என்பதற்காகக் கட்டுரையைப் புனைபெயரில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை பிரசுரமாகவில்லை. அந்தப் புண்ணியத்தை "நான்' கட்டிக் கொண்டேன்!
மூன்றாம் எழுத்தாளர் நேர் எதிர் ரகம். சுய விளம்பரமே பிடிக்காதவர். ஆகவேதான் அவர் பெயரை வெளியிடவில்லை. எழுத்தில் மன்னன். சகலகலாவல்லவன். பேச ஆரம்பித்தால் நகைச்சுவைதான். காளமேகமாகப் பொழிவார். அவரை நான் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். எங்கேயும் தன்னை அறிமுகப்படுத்தக் கூடாது என்று அவர் எனக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தார்.
தன் கணவனின் நகைச்சுவையை விடப் பிரமாதமானது எதுவும் இல்லை என்று நம்பும் (அவனால் தாலி கட்டப்பட்ட ஒரே காரணத்தினால்!) என் மனைவி கமலா கூட அவரது ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரித்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மற்றொரு சமயம் ஒரு சரித்திர நாவல் எழுதுவதற்காக, சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்க்க வந்த போது டில்லிக்கும் வந்திருந்தார். அவர் தனது 200 பக்க நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்த குறிப்புகளைப் பார்த்து நான் வியந்து போனேன். பக்கம் பக்கமாகக் குறிப்புகள். நாலு நாவல்களுக்கு உதவக் கூடிய அளவு குறிப்புகள்! அவர் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். அபார வேகம். அவருடைய பேனா ஒரு சின்ன மோபெட்டோ என்று சந்தேகம் தட்டும் அளவுக்கு பேப்பரில் பரபரவென்று ஓடும். அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுப்பைப் பாட புததகமாக வைக்கும் அளவுக்கு சிறப்பானவை. அவரிடம் திறமையும் தகுதியும் மட்டும்தான் இருந்தன. விருதுகள் பெற அவை போதாதே! ( தொடரும்)
எதிர்நீச்சல் படத்துக்கே எதிர்நீச்சல் போலிருக்கே
ReplyDelete