அகில இந்திய வானொலி நிலையம், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், அரசு விளம்பர இலாகா, நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்றவைகள் (காசு அதிகம் தராவிட்டாலும்) மொழி பெயர்ப்பு வேலை தருவதை அறிந்தேன். அங்கெல்லாம் ’வேண்டியவர்’களுக்குத்தான் சான்ஸ்! உங்களுக்குத் தமிழ் மொழியை விட அங்குள்ள சிலரை அதிகம் தெரிந்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் பிரதி உபகாரம் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். என்னிடம் இந்த இரண்டும் இல்லை.
இங்கேயே எழுத வேண்டும்
நான் வானொலி நிலையத்தில் மொழிபெயர்ப்பாளனாக நுழைந்ததும் ஒரு சுவையான அனுபவம்.
வெளிநாட்டு தமிழ் ஒலிபரப்பு நிறைய இலாகாவில் மொழிபெயர்ப்புப் பணிக்கு பலருக்கு வாய்ப்பும் பணமும் தரப்படுகிறது என்று எனக்குத் தற்செயலாகத் தெரிந்தது. இந்தப் பணிகளில் ஈடுபட்டு கொஞ்சம் பணம் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் வெளியில் அதைப்பற்றி மூச்சுகூட விடமாட்டார்கள்.
வீர்மானி என்ற ஒரு சிந்தி மொழியாளர்தான் வானொலி நிலையத்தில் தமிழ் புரோகிராம் எக்ஸிகியூடிவ்வாக இருந்தார். . ஒரு நாள் அவருக்குப் போன் செய்தேன். ” நான் தமிழ் எழுத்தாளன். பலருக்கு மொழிபெயர்ப்பு வேலை நீங்கள் தருகிறீர்கள். எனக்கும் வாய்ப்பு தரக்கூடாதா?” என்று கேட்டேன்.
"உங்களுக்கு எதற்கு சான்ஸ் தர வேண்டும்? நீங்கள் எந்த விதத்தில் ஸ்பெஷல்?'' என்று அவர் கேட்டார். "” ஸ்பெஷல் இல்லை. என் மொழிபெயர்ப்புத் திறனை டெஸ்ட் செய்து பாருங்கள். சரியில்லை என்றால் நான் எதுவும் கேட்க முடியாது. நன்றாக இருக்கிறது என்றால் ஏன் எனக்கும் வாய்ப்பு தரக் கூடாது?'' என்று கேட்டேன்.
"என் எதிரிலேயே மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். தயாரா?'' என்றார்.
சவாலை எற்றுக் கொண்டு போனேன். திரு வீர்மானியை சந்த்திதேன். “டைரக்டரைப் பார்க்கலாம் வாருங்கள்” என்றார். ஒற்றை நாடியாக இருந்த அந்த தமிழ் அதிகாரியிடம் என்னை அழைத்துச் சென்றார். (அவர்தான் கவிஞர் துறைவன் என்பது பின்னால் தெரிந்தது.)
ஒரு ஆங்கில உரையைத் தந்தார். அங்கேயே உட்கார்ந்து எழுதினேன். சரியாக 35 நிமிடங்களில் முடித்தேன். திரு துறைவனுக்குச் சிறிது ஆச்சரியம். “ இவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டபடியே, என் மொழிபெயர்ப்பை வார்த்தைக்கு வார்த்தை சரி பார்த்தார். ஒரே ஒரு வார்த்தையை மாற்றச் சொன்னார்.
"நான் எழுதின வார்த்தைதான் மிகவும் பொருத்தமானது. சரியானது'' என்று கூறி விளக்கினேன். ( அது என்ன வார்த்தை என்பது இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.) அவருடைய மொழிபெயர்ப்பு சரியில்லை என்று நான் சொன்னதை “ ஆம். நீங்கள் சொலவது தான் சரி” என்று பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்.
"வெரிகுட். உங்கள் மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. மிஸ்டர் வீர்மானி, இவருக்கு முக்கியமான மொழிபெயர்ப்புகளைக் கூடக் கொடுக்கலாம்'' என்று கூறினார். (அதாவது உத்தர விட்டார்.)
அதன் பிறகு சில வருஷங்கள் மொழிபெயர்ப்புச் செய்தேன். பிரதமர், குடியரசு தலவை உரைகள் என்றால் வீர்மானி என்னை அழைப்பர்ர், “ நீங்கள் மொழி பெயர்த்து, ஸ்க்ரிப்டை ட்யூடி ரூமில் கொடுத்து விடுங்கள்.” என்பார். பிறகு ஆட்கள் மாறிவிட்டனர். எனக்கும் சான்ஸ் குறைந்து விட்டது. நானும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பத்திரிகைகளில் எழுதுவதற்கே நேரம் போதவில்லை ஆனால் பின்னால் தமிழ் செய்தி வாசிபப்வர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் தேர்வு செய்யும் கமிட்டியில் அவர்களாகவே என்னைப் போட்டார்கள். இத்தனைக்கும் கமிட்டியில் போட்டவர் தமிழ் தெரியாத உயர் அதிகாரி!
டில்லியில் உள்ள பல விளம்பர நிறுவனங்களுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பாளர்களின் சேவை தேவைப்படும்; ரேடியோ ஸ்பாட்டிற்குக் குரல் கொடுக்கவும் ஆள் தேவைப்படும். இந்த மாதிரி மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வெளிவரும் விளம்பரங்களில் எத்தனையோ தவறுகள் இருக்கும். இருந்தாலும் விளம்பரக் கம்பெனிக்காரர்களுக்குத் தமிழ் தெரியாததால் மொழி பெயர்ப்பாளர்கள் செய்த தவறுகள் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை! ஆனால் அவைகளை எல்லாம் நான் குறித்து வைத்திருந்தேன். தவ்றுடன் வந்த பத்திரிகை விளம்ப்ரங்களையும் வெட்டி ஒரு பைலில் வைத்திருந்தேன். அந்த பைல் பின்னால் எனக்கு ஒரு பெரிய விளம்பரக் கம்பெனியில் ந்ல்ல சம்பளத்தில் எனக்கு மிக மிக பிடிதத காபிரைட்டிங்க் வேலையை வாங்கி தந்தது. இந்த விவரங்கள் பின்னால்!
கோர்ட் சம்மன்
டில்லியில் பல சங்கங்கள் இருந்தாலும், எல்லாம் நிதி வசதியில் குசேலர்தான். சாவனீர் போட்டு விளம்பரதாரர்கள் தரும் பணத்தைக்கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது சர்வ சாதாரணம் (சில சமயம் சாவனீர் மூலமாக 50000 ரூபாய் வசூலாகும். செலவு ஐம்பத்தைந்து ஆயிரம் ஆகிவிடும். முக்கியமாகப் பெரிய
ஃபெஸ்டிவல் நடத்தும்போது!) எல்லாருக்குமா விளம்பரங்கள் சுலபத்தில் கிடைத்து விடுகிறது? ஆகவே பணம் திரட்ட மற்றொரு முறை தமிழ்த் திரைப்படங்களைக் காலைக்காட்சிகளாகத் திரை இடுவதுதான். இதற்குத் தமாஷா வரி விலக்குப் பெற வேண்டும். பல நிபந்தனைகள் இருக்கும். இருந்தாலும் ஒரு சில தனிப்பட்ட நபர்கள், ’லெட்டர் பேடில்’ சங்கங்களைத் தோற்றுவித்துப் படங்களைப் போட்டுப் பணம் பண்ணுகிறார்கள் என்பதால் நிபந்தனைகளை டில்லி அரசு கடினமாக்கிவிட்டது. வரி விலக்கு பெற ஒரு நிபந்தனை, ” வழக்கமாக சினிமா திரையிடப்படும் அரங்குகளில் படம் காட்டப்படக் கூடாது. நடன, நாடக நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கங்களில் காட்டத்தடை இல்லை. இதன் காரணமாக உடனே நாடக அர்ங்கங்கள் சினிமா புரொஜக்டர்களைப் பொருத்தின; சிலர் புரொஜக்டர்களை வாடகைக்குத் தரத் துவங்கினர். பாயின் கீழ் நுழைந்தால் கோலத்தின் கீழ் நுழைகிற கதை தான்!
ராமகிருஷ்ணபுரம் என்ற பகுதியில் ஒரு "சௌத் இந்தியன் அசோசியேஷன்' இருக்கிறது. அவர்கள் திரைப்படம் போட்டுப் பணம் திரட்ட விரும்பினார்கள். சென்னையில் உள்ள படாதிபதிகளிடம் எனக்குச் செல்வாக்கு உள்ளது என்ற தவறான எண்ணத்தினால் எதாவது படம் ஓசியில் வாங்கித்
தரும்படி சொன்னார்கள். எப்போதோ நான் ஜம்பமாக அலட்டிக் கொண்டதால் வந்த வினை! ஆகவே வேறு வழி இல்லாமல் நானும் பிரமாதமாகத் தலையாட்டி விட்டேன். அது டில்லி கோர்ட் சம்மனுக்கு வழி வைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. ( தொடரும்)
No comments:
Post a Comment
............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!