ஒரு முன்குறிப்பு:
இந்த கட்டுரையை என் சொந்த அத்தையின் கணவர், அதாவது என் அத்திம்பேரை மனதில் வைத்து எழுதினேன். கிட்டதட்ட அவர் எப்படி இருப்பாரோ அப்படியே விவரித்து இருந்தேன். நான் எழுதிய போது அவர் காலமாகிப் பல வருஷங்கள் ஆகிவிட்டிருந்தன.
இதற்கு வழக்கம் போல கோபுலு படம் போட்டார். இந்த கட்டுரை வெளியான கதிர் இதழில் கோபுலு வரைந்த படத்தைப் பார்த்தபோது, எனக்கு பயங்கர வியப்பு. அப்படியே அத்திம்பேரை நேரில் பார்த்து வரைந்தது போல் இருந்தது! நூறு சத விகிதம்! ஆமாம். நூறு சத விகிதம்.
கோபுலு எத்தனை பெரிய ஜீனியஸ்! அவருக்கு ஒரு பத்மஸ்ரீ... ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
------------------------------
மணி என்ன? எட்டரையா? ஒரு நிமிஷம் இருங்கள். சாமண்ணா வந்து விடுவார். கடிகாரம் முன்னே பின்னே போனாலும் போகும். சாமண்ணா நேரம் தவறமாட்டார்! நீங்கள் சௌகார்பேட்டை ஜெனரல் முத்தையா தெருவில் வசிப்பவராக இருந்தால், சரியாக எட்டு முப்பதுக்கு சாமண்ணா அந்தத் தெருவழியாகச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள் கடந்த இருபத்தைந்து
வருஷத்திற்கும் மேலாக சாமண்ணா, ஒரு லேவாதேவி சௌகாரின் காஷியர், நகை மதிப்பீட்டாளர், மானேஜர் எல்லாம்! அதோ வருகிறார் சாமண்ணா
பளிச்சென்று, கச்சம் வைத்துக் கட்டப் பட்ட வெள்ளை மில் வேஷ்டி. முழுக்கை வெள்ளை சட்டை (கையில் ஒரு `டக்' போட்டது) உத்தரீயம். ஜேபியில் இரண்டு மூன்று பேனாக்கள். அறுபதைத் தாண்டியவரானாலும் நடையில் மிடுக்கு. குடுமியா ஜில்பாவா என்று அறிய முடியாத ஒரு நடுத்தர நீளமுடி. ஈரத்தலையை ஆற்றியபடியே, நுனி மூக்கில் உட்கார்ந்திருக்கும் கண்ணாடி வழியே உலகை சர்வ திருப்தியுடன் பார்த்துக்கொண்டு செல்லும் பாங்கு. இவை எல்லாம் சாமண்ணாவின் ட்ரேட் மார்க்குகள். கவலை இல்லாத மனிதன் என்று சாமண்ணாவைச் சுலபமாக வர்ணிக்கலாம். இத்தனைக்கும் அவருக்கு எத்தனையோ தொல்லைகள், கவலைகள்.
”அட போய்யா. கவலைப்பட்டுக்கொண்டு மூலையில் உட்கார்ந்தால் தீர்ந்துபூடுமா? மரம் வெச்சவன் கவலைப் படட்டும்!” என்று வேதாந்தம் பேசுவார்.
கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ காலையில் இங்கிலீஷ் பேப்பரை வாங்கி வரிவரியாகப் படிக்காமல் விடமாட்டார். குதிரை ரேசில் நிறைய ஈடுபாடு. ஞாயிற்றுக்கிழமைகளில் ரம்மியில் ஐக்கியமாகி விடுவார். என்றாவது ஒரு நாள் குதிரையோ சீட்டோ பணத்தை வாரிக்கொடுக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு அவரிடம் கிடையாது. "பணம் வந்தால் சரி. வராவிட்டால் சரி. பணக்கஷ்டம் எல்லாருக்கும்தான். அமெரிக்காவை ஆகா ஓகோ என்று சொல்றாங்க...அங்கே மட்டும் ஏழை இல்லையா?.. பாங்க் கொள்ளைகள் இல்லையா?... என்பார்.
குதிரை, சீட்டு தவிர அவருக்குத் தன் லேவாதேவி தொழிலில் அபார ஈடுபாடு உண்டு. தானே சௌகார் போன்றும். பலருக்குத் தானே சொந்தப் பணத்தைக் கடன்கொடுப்பது போலும் பேசுவார்.....
"சேட் பையன் மங்கள்மல் இருக்கானே, என் மடியில் வளர்ந்த பையன். ஆயிரம் கொடு என்றால் கண்ணை மூடிக்கொண்டு கொடுப்பான். நேற்று என்ன ஆச்சு தெரியுமா?அட்வகேட் ராமதுரை அர்ஜண்டா ஐயாயிரம் வேணும்னு வந்து நிக்கறார். கல் வெச்ச நெக்லசைக் கொண்டு வந்தார். கல் போனால், சேதாரம் போனால். இரண்டரை சவரன் தேறுவதே சந்தேகம். அவருக்கோ பணம் அவசரம். வேறு நகையும் இல்லை. `சாமண்ணா, உன்னை நம்பி வந்துட்டேன். கையை விரிக்காதே' என்கிறார். பார்த்தேன். ராமதுரையை நம்பலாம். ”மங்கள், இன்கோ பாஞ்ச் ஹசார் தேதோ' என்றேன். ஒரு வார்த்தை பேசணுமே! எண்ணிக் கொடுத்தான்....
சினிமா ஆக்டராம். என்னவோ பேர் சொன்னான். காசு மாலை கொண்டு வந்தான். பத்து ரூபா கேட்டான். கண்ணாலேயே பாத்து "நமக்கு இந்த நகை வேண்டாம்'' என்று அனுப்பிவிட்டேன் 14 காரட் நகை.... சாமண்ணாவின் கை விரலே உரைகல்... தொட்டாலே தெரிஞ்சுடும்!
மங்கள் பி.ஏ. படிச்சிருக்கான் என்று பெயர். இங்கிலீஷில் ஒரு லெட்டர் எழுதத் தெரியாது. நான் டிக்டேட் பண்ணினால் எழுதிக் கொடுப்பான்...''
சாமண்ணாவின் இங்கிலீஷ் பிரமாதமாக இருக்கும். மெட்ரிகுலேஷன்தான் படிப்பு என்றாலும் இங்கிலீஷ் பேப்பரைப் படித்துப் படித்தே அபார நிபுணத்துவம் பெற்று விட்டார்! சீட்டு ஆட்டத்தின்போது தகராறு வந்துவிட்டால் இங்கிலீஷீல் பிய்த்து உதறுவார். அவ்வளவு சரளம்! அவரது ஆங்கில அறிவு, காட்டில் காய்ந்த நிலாவாக வீணாய்ப் போகிறதே என்று நம்மை ஆதங்கப்படச் செய்யும்.
ராத்திரி சாப்பாட்டிற்குப் பிறகு தெருமுனையில் உட்கார்ந்து பன்னிரண்டு மணிவரை அரட்டை அடிப்பார். "மைசூர் பிளேட்டிற்கு என்ன அக்செப்டன்ஸ்?... சண்டே ரம்மியிலே பாயிண்ட்ற்கு ஒரு பைசாவாக்க வேண்டும்?'' என்பது போன்ற விஷயங்களாகத்தான் பெரும்பாலும் இருக்கும்!
உண்மையிலேயே சாமண்ணா ஒரு கேரக்டர்!
பத்மஸ்ரீ என்பது இப்பொழுது கோயம்பேட்டில் விற்கும் கறிகாய் போன்ற விஷயமாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் வாங்கலாம். அதனால் கோபுலுவிற்கு அதனைக் கொடுத்து கோபுலுவின் தரத்தை குறைக்க வேண்டாம்.
ReplyDeleteபத்மஸ்ரீக்கு கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான் விடுங்க சார்.
ReplyDeleteகோபுலு படம் இல்லாமல்...யார் கதையை படித்தாலும் லயிக்க முடியாது உண்மைதான்...ஆனால் உங்களை(தேவன்.etc.) போல் எழுதுபவர்கள்... அப்படியே நாடகம் பார்ப்பது போலேன்னா தத்ரூபமா எல்லாத்தையும் கோர்வையா சொல்றேள்..
ReplyDelete