March 17, 2010
பாலா துரைசாமி - கடுகு
டில்லி துக்ளக் ரோட்டில் உள்ள பிரம்மாண்டமான பழையகால பங்களாவின் முன்புறம் உள்ள பரந்த புல் தரையில் பளிச்சென்று போடப்பட்டிருக்கும் வெள்ளை பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு குரோட்டன் செடிகளை சீர் செய்யும் தோட்டக்காரருக்கு உத்தரவுகள் கொடுத்துக்கொண்டு, கார் ட்ரைவருக்கு `ஐயாவை ட்ராப் பண்ணிவிட்டு வந்த பிறகு தன்னை எங்கெங்கே அழைத்துப் போகவேண்டும், என்பன போன்ற விவரங்களைச் சொல்லிக்கொண்டு, சமையல்கார கெடுவாலிப் பையனிடம் அன்றைய மெனுவைச் சொல்லிக்கொண்டே `வுமன் அண்ட் ஹோம்' இதழை தன்னுடைய கோல்ட் ரிம் கண்ணாட் வழியாக சர்வ அலட்சியத்துடன் படித்துக்கொண்டடிருப்பவர்தான் திருமதி பாலா துரைசாமி. (அப்பாடா, மூச்சு வாங்கினீர்களா?) பாலா துரைசாமிக்கு, அவரைப் பார்த்து இப்படி பெருமூச்சு விட்டால், வியப்பு அடைந்தால், ஏன் பொறாமைப்பட்டால் கூட ரொம்ப சந்தோஷம்!)
டில்லி சர்க்காரின் பல குடுமிகளில் ஒன்றைத் தன் கையில் வைத்திருக்கும் துரைசாமியின் (ஐ.ஏ.எஸ். முப்பது வருஷமாக டில்லி வாசம்.) மனைவி பாலா. காலேஜ் பட்டம் பெற்றவர். ஆசைக்கு ஒன்று (ஜெர்மனியில் டாக்டர் கணவனுடன் இருக்கிறாள்.) ஆஸ்திக்கு ஒன்று (அமெரிக்காவில் மெட்டல்லர்ஜி படிக்கிறான்.) கவலையில்லாத வாழ்க்கையாதலால் பணக்காரக் குண்டுத்தனத்தை உடல் பிடித்துக்கொண்டது. டில்லியில் உள்ள பெரிய அதிகாரிகளின் மனைவிமார்களின் சங்கத்தில் முக்கிய உறுப்பினர்.
`அம்மா டெலிபோன்' என்று பையன், நீண்ட ஒயரைக் கொண்டே டெலிபோனை புல் தரைக்கே கொண்டு வந்து கொடுக்கிறான் பாலா துரைசாமியிடம்.
"ஹலோ, யெஸ்...பாலா ஹியர், சொல்லு சுமதி. அமெரிக்கன் எம்பஸியில் ஏலமா? போகலாமா? கர்ட்டன்ஸ் நல்லதாக வாங்கணும். கிராக்கரி செட் கிடைச்சால் வாங்கலாம். நம்ம வாணி, போன மாசம் ஒரு செட் வாங்கினாள். 850 ரூபாய்க்கு படு சீப்...
"சினிமாவுக்கா? நான் வரவில்லை. பிரிமியர் ஷோவிற்கு வரும்படி அமிதாபே கூப்பிட்டான். வரலைடாப்பான்னுட்டேன். இன்னிக்கு நாம் போனால் நாளைக்கு நம்மகிட்ட வந்து ஏதாவது ஹெல்ப் கேட்பாங்க. சொல்றேனே... எனக்கு இதெல்லாம் பிடிக்காது. முப்பது வருஷமாக இங்கே இருக்க்றேனே. குதுப்மினார் போய்ப் பார்த்ததில்லை. வருஷாவருஷம் ராஷ்டிரபதி பவனிலிருந்து ரிபப்ளிக் டே பார்ட்டிக்கு அழைப்பு வரும். ஹூம்..போனதில்லையே! எல்லா டாம், டிக் அண்ட் ஹாரியும் அசோகா ஓட்டலுக்குப் போய் சாப்பிடறாங்க... நான்? நெவர். நெவர்! உள்ளே காலை வெச்சதில்லை.... பாரு சுமதி.. டே இன் டே அவுட், யார் யாரோ வந்து இந்த விழாவிற்கு வரணும், அந்த கச்சேரிக்கு வரணும்னு கூப்பிடறாங்க.... பாலாவிற்கு வேறு வேலை இல்லையா? பாலாவை ஃபுட்பாலாக ஆக்கிவிடுவாங்க....
"ஏர் இண்டியா, ஆஸ்திரேலியாவிற்கு முதன்முதலாக சர்வீஸ் ஆரம்பிச்சபோது, போய் வருவதற்கு இலவச டிக்கட் அனுப்பினாங்க. நான் வரமுடியாது'ன்னுட்டேன்... அவங்களுக்கு என்ன? டிக்கெட்டை அனுப்பிடுவாங்க... நாம்தானே போய்வரவேண்டும்! நம்மால் முடியாதுப்பா!''
பாலா துரைசாமி, தன் பெருமையை இப்படித்தான் பறை சாற்றிக் கொள்வார். "எல்லாம் ஃப்பூ இவருக்கு?'' என்று நீங்கள் வியப்படைய வேண்டும்; நமக்கு இவைகளில் ஒன்றுகூட கிடைக்கவில்லேயே என்று பெருமூச்சு விட வேண்டும்!
"போனவருஷம் ஸ்டேட்ஸுக்கு போனேனே. என் பிள்ளையின் அபார்ட்மென்ட்லிருந்து இரண்டு மைல் தூரத்தில்தான் டிஸ்னிலாண்ட். போய் பார்த்து விட்டு வரலாம், வாம்மா' ன்னு உயிரை வாங்கினான். `குழந்தை ! உன்னைப் பார்க்கத்தான் இங்கே வந்தேனே தவிர, ஊரைப் பார்க்க இல்லை. எல்லா ஊரும் ஒண்ணுதான். என்ன டிஸ்னிலாண்ட், என்ன மெரைன் லாண்ட், போடா' என்று சொல்லிவிட்டேன்'' என்பார்.
உண்மையில், அமெரிக்கா போனபோது எதையும் பார்க்காமல்தான் திரும்பிவிட்டார். `பார்த்தேன்' என்று பெருமையாக கூறுவதைவிட `பார்க்கவில்லை' என்று சர்வ அலட்சியமாகக் கூறுவதில் தான் அவருக்கு சந்தோஷம்.! ஆகவே பாலாவின் பேச்சில், "அதைப் பார்க்கவில்லை ; இவர் அழைப்பை மறுத்துவிட்டேன்'' என்று, தான் நிராகரித்தவைகளின் பட்டியல்தான் இருக்கும்!
"என் மாப்பிள்ளை ஜெர்மனியிலிருந்து எலக்ட்ரிக் அடுப்பு அனுப்பினான். இந்த ’குக்கிங் ரேஞ்சில்’ என்னென்னமோ இருக்கிறதாம். அங்கேயே விலை பத்தாயிரமோ இருபதாயிரமோ ரூபாய். அவன் ஆசைக்கு அவன் அனுப்பினான். அதை இன்னும் `பாக்கிங்க்'கிலிருந்து பிரித்துக்கூட எடுக்கலை. எனக்கு கொய்லா கரி அடுப்பு போதும்.... இந்த புது சமையல்காரப் பையன்தான், காஸ் வேண்டும் என்று மூக்கால் அழுதான். தொலைடா என்று வாங்கிக் கொடுத்தேன்...''
தன் மனைவியின் இந்த விசித்திர குணத்தைப் பற்றி துரைசாமி பொருட்படுத்தியதில்லை. அவருக்கு ஆபீஸைத் தவிர வேறு உலகம் கிடையாது!.
Labels:
கேரக்டர்
Subscribe to:
Post Comments (Atom)
பாலா அம்மையார் பற்றி படித்ததும் எனக்கு என் சிறு
ReplyDeleteவயதில் பக்கத்து வீட்டில் இருந்த டாக்டர் ஆத்து மாமி தான் ஞயாபகத்துக்கு வருகிறார்!!! உருவத்திலும்,குணத்திலும் இவரை போன்றே இருப்பார்.
நந்தா...
Dear kadugu sir,
ReplyDeleteit is really nice to read all your articles. I feel as though my father is talking about his experiences. I am a fan of your writing since my school days. Keep it up.
இன்றைக்கும் கூட இவர் போல இருப்பார்களா என்ன!
ReplyDeleteசில பேர் எப்போதும் எதுவும் புதுமையில்லை என்ற "deja vu" மிதப்பில் இருப்பார்கள் .பாலா மேடம் இதற்கு எதிர்மாறு போல . its surprising to see how people get carried away .super observation sir
ReplyDeletepadma said...
ReplyDeleteசில பேர் எப்போதும் எதுவும் புதுமையில்லை என்ற "deja vu" மிதப்பில் இருப்பார்கள் .பாலா மேடம் இதற்கு எதிர்மாறு போல . its surprising to see how people get carried away .super observation sir
================
Thank you very muchn நல்ல காலம் என் கட்டுரையைப் படிக்கும்போது கூட சிலருக்கு DEJA VU தோன்றி இருக்கக்கூடும்.