September 28, 2010

 வரதராஜுலு - கேரக்டர்

குறிப்பு:  சாவி அவர்கள் தன் அலுவலக மேஜையில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது எப்போதோ கோபுலு வரைந்த ஒரு ஓவியம்  அவர் கையில்  அகப்பட்டது. கோபுலு வரைந்திருந்த இந்த ஓவியத்தை திரு. சாவி எனக்கு அனுப்பி, அதற்கேற்ற மாதிரி ஒரு கேரக்டர் எழுதச் சொன்னார்.
         பிளாஸ்டிக் ஹாண்ட்பாக், வலைப்பையில் டிபன் பாக்ஸ், உயிரை எந்த நிமிடத்திலும் விடத் தயராக இருக்கும் ஆயிரம் ஒட்டுக்குடை, பட்டை பெல்ட், உயரம் குறைவான, "பிடிக்கும் பாண்ட்'  -- இவைதான் திருவாளர் வரதராஜுலுவின் ஸ்டாண்டர்ட் அலங்காரங்கள். பாலைவனத்தின் நடுவே ஓடும் சிற்றாறு போல், பரந்த வழுக்கைத் தலையின் நடுவில் நெளிந்து பறக்கும் மூன்று தலைமுடிகளும், புருவங்களுக்கிடையே உள்ள இரண்டு சுருக்கங்களும் அவரைக் கோபக்காரராகக் காட்டுவதைக் கவனிக்காமல், அவரிடம் பேச்சுக் கொடுத்தால், வந்தது வம்பு.
வரதராஜுலுவுக்கு பல விஷயங்களின் மேல் சதா கோபம். அவர் கைப்பையிலி ருக்கும் கடிதங்களின் பிரதிகளைப்
பார்த்தால் தெரியும், அவர் கோபத்திற்குக் காரணங்கள். காரசாரமான கடிதங்கள் எழுதுவதுதான் வரதராஜுலுவின் ஒரே வேலை.
ஜெயில் வார்டராக இருந்து ரிடையரான இவருடைய கண்களுக்குப் பலர் குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். பதவி இல்லாததால் அவர்களைச் சிறைக்குள் அடைக்க முடியவில்லை. ஆகவே தன்னுடைய கோபத்தைக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் தீர்த்துக் கொள்கிறார். யாருக்கு வேண்டுமானாலும் எழுதுவார். ஐ.நா. காரியதரிசி முதல் காட்டாங்குளத்தூர் கர்ணம் வரை எல்லாருக்கும் எழுதுவார்.
காலை ஒன்பதரைக்குச் சாப்பிட்டுவிட்டு, டிபனைக் கட்டிக் கொண்டு - வெறும் மோர் சாதம் தான் -  கிளம்பினார் என்றால் நேரே லைப்ரரிக்குத்தான் போவார்.

September 24, 2010

என் கண்களில் நீர் தளும்பியது.கேப் கேனவரெல். அமெரிக்க விண்வெளி  மையம் உள்ள இடம். ஃப்பளாரிடா மாநிலத்தில் கிழக்குக் கரையோரம் உள்ளது கென்னடி ஸ்பேஸ் சென்ட்டர்.
அடுத்த வாரம் விண்ணில் விடப்படவிருக்கும் ஸ்பேஸ் ஷட்டில், ராக்கெட்டின் முதுகில் இணைக்கப்பட்டு செங்குத்தாக நின்று கொண்டிருக்கிறது.


மனிதனின் அபார சாதனைகளின் ஒரு உன்னத சிகரம் ஸ்பேஸ் ஷட்டில். உலகின் பல அற்புதமான முன்னேற்றங்களுக்கும் வசதிகளுக்கும் வழி வகுத்தது விண்வெளி ஆராய்ச்சியில் பெற்ற வெற்றிகள். ஏன், தோல்விகளும் கூட!

அங்கு விண்வெளி பயண முயற்சிகளின் போது உயிரிழந்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள். சற்றே வளைந்த பிரமாண்டமான கான்கிரீட் பலகை. (42 அடிக்கு 50 அடி அளவு )கறுப்பு கிரானைட் பதிக்கப்பட்டு. உயிரிழந்த வீரர்களின் பெயர்களை முழுவதுமாக கல்லில் துளையிட்டு எடுத்து, பலகையின் பின்னாலிலிருந்து இயற்கையான வெளிச்சம் வருமாறு செய்திருக்கிறார்கள். பெயர்கள் வெள்ளியால் பொறிக்கப்பட்டவை போல் கிரானைட்டில் மின்னுகின்றன. எப்போதும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த கிரானைட் பலகையின் பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, சூரியனை நோக்கி மெள்ளத் திரும்பும் வகையில் மோட்டாரும் பொருத்தி இருக்கிறார்கள்.
 
இந்த நினைவுச் சின்னத்தின் அருகே அஞ்சலியாக சில வாசகங்களை கிரானைட்டில் பொறித்திருக்கிறார்கள்.

""புதிய எல்லைகளை வெற்றி கொள்ள மனித சமுதாயம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம், அம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு. விண்வெளியை வெற்றி கொள்வதற்கு உயிருக்கு ஆபத்தான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்பதை நெஞ்சார நம்பி, தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அஞ்சலியாக இந்நினைவுச் சின்னம் மே 9, 1991 அன்று அர்ப்பணிக்கப்படுகிறது''

இந்த வாசகத்தைப் படித்ததும் என் கண்களில் நீர் தளும்பியது. இன்றைய இன்டர்நெட், சாட்டிலைட், டி.வி. நிகழ்ச்சிகள் என்று பல நூறு வசதிகளை அவர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் வைத்த மரக்கன்று நமக்குப் பழம் தருகிறது.

அவர்கள் செய்த உயிர்த் தியாகத்தை என்றும் நன்றியுடன் நினைவில் போற்றுவோம்!

The Memorial
"Whenever mankind has sought to conquer new frontiers, there have been those who have given their lives for the cause. This astronauts memorial, dedicated May 9, 1991, is a tribute to American men and women who have made the ultimate sacrifice believing the conquest of space is worth the risk of life."
( என்  மொழிபெயர்ப்பை யாராவது மேம்படுத்தினால் நல்லது!)


இதோ மற்றொரு மொழிபெயர்ப்பு:
""புதிய எல்லைகளை வெற்றி கொள்ள,  மனித சமுதாயம் விழையும் போதெல்லாம், அம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு. மே 9, 1991 அன்று  அர்ப்பணிக்கப்படும் இந்த விண்வெளி வீரர்கள் நினைவுச் சின்னம், விண்வெளியை வெற்றி கொள்வதற்கு உயிருக்கு ஆபத்தான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்பதை நெஞ்சார நம்பி, தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அளிக்கப்படும் புகழ் அஞ்சலி.

கம்பன் வைத்த ஐஸ்!

கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதிய அழகானப் பாடலை
இங்கு தருகிறேன்.

கம்பனின் எழுத்தாணியின் கூர் மழுங்கி விட்டது.
மாவண்டூரில் உள்ள சிங்கன் என்பவரின் இரும்புப் பட்டறைக்குச் செல்கிறார். அவரிடம் தனக்கு ஒரு எழுத்தாணி செய்து தருமாறு கேட்கிறார். சிங்கன் விரைவாகச் செய்து தருகிறார்,. கம்பரும் மனம் மகிழ்ந்து சிங்கன் மீது ஒரு பாடல் இயற்றிக் கொடுக்கிறார். (இது ஒரு ஊகம்தான்!)
இதோ அந்தப்  பாடல்!

ஆழியான் ஆழி; அரன் மழுத்தான் என்பான்;
ஊழியான் அங்கை எழுத்தாணி அருள் என்பான்;
கோழியான் குன்றெரிய வேல் என்பான்;
மாவண்டூர் சிங்கன் உலைக்களத்திற் சென்று!

September 19, 2010

இரண்டு மணிப்பயல்கள்!-- கடுகு

சென்னை ஜி.பி.ஓ-வில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பார்சல் செக் ஷனில் மணி என்ற பியூன் இருந்தான். (தபால் துறையில்  இவர்களைப் பேக்கர்  என்பார்கள்.)  அவன் இளைஞன். துடிப்பானவன்.  முகம் சுளிக்காமல் வேலை செய்வான். அவ்வப்போது என்னிடம் வந்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பான்.
அந்த  சமயத்தில் நான் ஒரு தையல் மெஷின் வாங்கி இருந்தேன். தையல் வேலயை தீவிரமாகக் கற்க ஆரம்பித்தேன். என் மனைவி, 'உஷா தையல்  வகுப்பி'ல் சேர்ந்து கற்க ஆரம்பித்தாள். அவள் எனக்குச் சொல்லிக் கொடுப்பாள்.  ஆபீசில் ஒரு நாள் ‘தையற்கலை’ என்ற  புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். மணி அப்போது வந்தான். “ என்னா சார், நாவலா” என்றான்.
“ இல்லை மணி. நான் டெய்லரிங்  கற்றுக் கொள்கிறேன். இது தையற்கலைப் புத்தகம்.” என்றேன்.
“ அப்படியா சார்... இந்த  புத்தகத்தை எல்லாம் தூக்கி த்தூர வையுங்கள். நான் சொல்லி கொடுக்கிறேன்.” என்றான்.

September 14, 2010

மூன்று கடிதங்கள் - கடுகு

இது என் பெண்ணின் தொடர்பான பதிவு என்றாலும் அவளைப் பற்றி பெருமை அடித்துக் கொள்ளும் பதிவு இல்லை..(அப்படிப்பட்ட பதிவு ஒன்றைப் பின்னால் போட்டாலும் போடுவேன்.)
1. இந்திரா காந்தி.
என் பெண்ணிற்கு எட்டு வயது சமயத்தில் இந்திரா காந்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்ப விரும்பினாள். ஒரு வாழ்த்து அட்டையைத் தயார் செய்தாள். அதை நேரிலே சென்று கொடுக்க ஆசைப்பட்டாள். அந்த காலத்தில் பிரதமர் தினந்தோறும் காலை சுமார் 10,15 நிமிஷம் பொதுமக்களை அவரது இல்லத்தில் சந்திப்பார். காலையில் எட்டு மணிவாக்கில் பிரதமர் இல்லத்திற்குப் போனால் பெயர் விலாசம் எழுதி கொண்டு உள்ளே விடுவார்கள். உள்ளே புல் தரையில் எல்லாரையும் உட்காரச் சொல்வார்கள். என் பெண்ணை  அழைத்துக் கொண்டு போனேன்.. நிறைய குழந்தைகள் வந்திருந்தார்கள்.அனைவரும் உள்ளே போனோம்.. ககுழந்தைகளை உட்காரச் சொன்னார்கள். பெரியவர்கள் பின்னால் நின்று கொண்டு இருந்தோம். இந்திரா காந்தி. வந்தார். குழந்தைகள் நமஸ்தே சொல்ல அவரும் பதிலுக்குச் சொன்னார். அவர்கள் கொடுத்த வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.
சுமார் பத்து நாள் கழித்து பிரதமர் அலுவலம் என்ற முத்திரையிட்ட கவர் என் பெண்ணிற்கு வந்தது.

கவலையை விடு,

This, Too, Shall Pass Away -- 
Lanta Wilson Smith

When some great sorrow, like a mighty river,
      Flows through your life with peace-destroying power,
And dearest things are swept from sight forever,
     Say to your heart each trying hour:
              "This, too, shall pass away."

When ceaseless toil has hushed your song of gladness,
     And you have grown almost too tired to pray,
Let this truth banish from your heart its sadness,
   And ease the burdens of each trying day:
       "This, too, shall pass away."

When fortune smiles, and, full of mirth and pleasure,
   The days are flitting by without a care,
Lest you should rest with only earthly treasure,
   Let these few words their fullest import bear:
       "This, too, shall pass away."

When earnest labor brings you fame and glory,
   And all earth's noblest ones upon you smile,
Remember that life's longest, grandest story
  Fills but a moment in earth's little while:
       "This, too, shall pass away."September 09, 2010

ஒரு ஹீரோ வில்லனாகப் பார்க்கிறார் -கடுகு

அன்று நான் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த போது என் அருமை நண்பர் எழுத்தாளர் ஏகாம்பரம், "என்னய்யா சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்?  என்னுடைய கட்டுரையையா?" என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

"இல்லை சுவாமி.. சினிமாவினால் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று பேராசிரியர் பரிவிராஜக சர்மா, ஆசிரியர் கடிதத்தில் வெளுத்துக் கட்டிப் பிய்த்துக் உதறியிருக்கிறார்" என்றேன்.

"சர்மாவுக்கு வேறு வேலை இல்லை. சரியான பேத்தல் ஆசாமி. சினிமாவினால் கெட்டுப் போவது என்னவோ சுலபமான காரியம் மாதிரி எழுதுகிறார், அவருக்கு மோகன் குமாரைப் பற்றித் தெரிந்திருந்தால் இப்படி எழுதமாட்டார்" என்று கதையை தொடர்ந்தார்.

எழுத்தாளர் ஏகாம்பரம் சொன்ன கதை
      மோகன்குமார் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை, சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். சினிமாப் பைத்தியம். ஒரு நாளில் இரண்டு படம் கூடப் பார்ப்பான். இப்படித் தொடர்ந்து பல படங்களைப் பார்க்கப் பார்க்க அவனுள் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டன. சினிமாவில் வரும் வில்லன்களும் ரௌடிகளும் கடைசி சீன்வரை அட்டகாசமாகவும் உல்லாசமாகவும் இருப்பதையும் கண்டு தானும் ஒரு ரௌடியாக வேண்டும் என்று முடிவெடுத்தான். அப்போது ஆரம்பித்தது அவனது தொல்லைகள்.

விண்ணிலே கோலம் -கடுகு

ஸ்பைரோக்ரஃப் என்ற பிளஸ்டிக்கால் ஆன விளையாட்டுப் பொருளைப் 
பார்த்திருப்பீர்கள்,
அதை உபயோகித்துப் பல் வேறு விதமான டிசைன்களை போடமுடியும். அந்த டிசைனன்களின் சிறப்பு ஒற்றைக்கோடு. ஆனால் அந்தக்  கோடு பலல வித வட்ட, நீள்வட்டப்பாதைகளில் போவதையும் கோடுகள் ஒன்றை ஒன்றைத் தொட்டுக் கொண்டும் ஊடுருவிக் கொண்டும்  போவதைப் பார்த்திருப்பீர்கள்.
வெவ்வேறு கலர் பென்சிலை உபயோகித்தால் அவை மேலும் அழகாக அமையும்.
சரி, கடவுள் கூட இந்த ஸ்பைரோகிராஃப் படங்களை இடைவிடாது பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக வரைந்து கொண்டிருக்கிறர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் ஸ்பைரோக்ராஃப் படங்களை விண்வெளியில் வரைகிறார். கோலங்களைப்போட  சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் போன்ற கிரகங்களை  உபயோகிக்கிறார்!
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு விதமான பாதையில் செல்கின்றது. அந்த பாதைகள் யாவும் ஸ்பைரோக்ராஃப் பாதைகளைப்போல் இருக்கின்றன. (இல்லை அந்த பாதைகளைப்போல் ஸ்பைரோக்ரஃப் படங்கள் இருக்கின்றன என்று சொல்லுவது தான் சரி.)

முதலில் வீனஸ் (வெள்ளி கிரகம்) போகும் பாதையை   படத்தில் பாருங்கள் இந்த அழகான பாதையில் பரந்த வான வெளியில் ஒரு தரம் போய்வர வீனஸ் ( வெள்ளீ) கிரகத்திற்கு பதிமூன்று ஆண்டுகள் ஆகின்றதாம். பூமியிலுள்ளவர்களுக்கு இது எட்டு ஆண்டுகளுக்குச் சமம்.
    மற்ற கிரகங்களின் விண்வெளிப் பாதையின் அழகைக் கவனியுங்கள். ஜூபிடர் (வியாழன்) கிரகத்திற்கு 12  ஆண்டுகளும், செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு ஆண்டுகளும் மெர்குரி (புதன்) கிரகத்திற்கு 88 நாட்களும் சனி கிரகத்திற்கு முப்பது ஆண்டுகளும் பிடிக்கிறதாம். இந்த கோலப் பாதைகளில் கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.
    தியோனி பப்பாஸ்  (Theoni Pappas)  என்பவர் இது மாதிரி பல நூறு சுவையான தகவல்களைத் தன் புத்தகங்களில் தந்திருக்கிறார். அவர் எழுதிய  The Joy of Mathematics, More Joy of Mathematics, Math A Day,The    Music Of Reason ஆகிய நான்கு புத்தகங்கள் என்னிடம் உள்ளன. ஒரு பக்கத்திற்கு ஒரு தகவல் என்ற விதத்தில், கணிதம் சம்பந்தமான விஷயங்களை தந்திருக்கிறார். எந்த பக்கத்தைத் திருப்பினாலும் ஒரு சுவையான தகவல் கிடைக்கும்.

September 04, 2010

டாக்டர் குருவாயூரப்பன். எம்.டி ( MASTER OF DIVINITY!)

கடவுள் அன்றாடம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால் நாம் அவைகளுக்கு அதிக மதிப்பு தருவதில்லை. கடவுள் தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்.. எனக்கு மிகவும் வேண்டிய பெண்மணியின் வாழ்க்கையில் நடந்த, ஆனால் எளிதில் நம்ப முடியாத அற்புதத்தைப் பற்றி எழுதப் போகிறேன். இது நான் நேரிலேயே பார்த்தது என்று முதலிலேயே கூறி விடுகிறேன்.

சில வருஷங்களுக்கு முன்பு - 1995ல்- நாங்கள் எட்டு பேர் குருவாயூர் போகக் கிளம்பினோம். அது வரை நான் குருவாயூர்  போனதில்லை. எங்களுடன் ஒரு பெண்மணியும் வந்திருந்தார். ரயில் ஏறியதும் அவர் ”அம்மாடி.. என்னாலே அதிக நேரம்  நிற்கவோ   உட்காரவோ முடியாது. நான் படுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லியபடியே, தன் இடுப்பிலிருந்து ஒரு பட்டையான பெல்ட்டைக் கழட்டினார்.
“ என்ன மாமி..இது? இத்தனை பட்டையாக இருக்கிறது இந்த பெல்ட்?”  எங்களில் ஒருத்தர் கேட்டார்.  ”அதுவா .... இந்த பெல்ட் இல்லாவிட்டால் என்னால் ஒரு நிமிஷம் கூட நிற்கமுடியாது. என் முதுகு எலும்பில் இரண்டு இணைப்புகள் சரியாக இல்லை. L- 4, மற்றும் L - 5 இல் தேய்மானம் ஆகிவிட்டதால், அந்த இடத்தில் உடல் கனத்தின் பாதிப்பு ஏற்படுகிறது. பதினைந்து வருஷமாக என்னோடு ஒட்டு உறவாடிக்கொண்டிருக்கும் பெல்ட் இது.”
”எப்பவுமா பெல்ட்?...”
”ஆமாம் அம்மா ....  இதுக்குமுன்னே ஒரு இரும்பு பட்டையை பெல்ட் போல் செய்து கொடுத்தார்கள். அதன் கனம் ஒரு கிலோவுக்கு மேல்  இருக்கும்.”.
”நீங்கள் டில்லியில் இருந்தீர்களே  .. அங்கே பெரிய ஹாஸ்பிடலில் காண்பித்தீர்களா?. 

புள்ளிகள்: பிரஞ்சு அதிபர் டி கால்

என் பழைய நோட்டுப் புத்தகங்ளைப் பார்த்து கொண்டிருந்த போது  கிடைத்தத் துணுக்கு.
1959-69-ல் பிரஞ்சு அதிபராக  இருந்த சார்லஸ் டி கால்  பற்றிய இரண்டு சுவையான தகவல்.
*                *              *                *
பிரான்சின் அதிபர் தேர்தலுக்கு அவர் 1958’ல் நின்ற போது அவருடைய சொந்த கிராமான Colombey-Les-Deux-Eglises-ல் உள்ள 500 வாக்குகளில் 499 பேர் அவருக்கு வாக்களித்திருந்தார்கள். ஒருத்தர் மட்டும் அவருக்கு வாக்களிக்கவில்லை. அவர்?  டி காலின் சமையல்கார அம்மா!.
டிகால், இந்த தள்ளாத வயதில் (70) பாரீஸ் போய் உழைப்பது அவருடை உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று அந்த அம்மாள் கருதியதால் அவருக்கு எதிராக வாக்களித்தாராம்! 
அக்கறை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது!
*        *                *                *
டிகால் அதிபரானதும், அதிபர் மாளிகை இரவு நேர அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும்  இட்ட ஒரு உத்தரவு:
 அதிபரை எதற்கும் எழுப்பக்கூடாது -- உலகப்  போர்  மூண்டுவிட்டால் தவிர! 
: "Do Not Disturb the President of the Republic Except in Case of World War."


கமனியக் கனவினை

பாரதியாரின் பாஞ்சாலி சபதம் ஒரு உணர்ச்சிக் காவியம்.  எந்த இடத்திலிருந்து படித்தாலும்  நெஞ்சை உருக்கி விடும். கவிதை வரிகள் வெள்ளம் போல் பாய்ந்துள்ளன. ஒரு அழகான வர்ணனையை பார்க்கலாம்  இப்போது.
    
   தருமர் சூதாட்டத்தில் தோற்றுப் போய்க்கொண்டே இருக்கிறார். கடைசியில் பாஞ்சாலியையேப் பணயம் வைத்து விட்டார். பாரதியாருக்கு நெஞ்சு  துடிக்கிறது. பாருங்கள் பாஞ்சாலியை எப்படி வர்ணிக்கிறார் என்று!
 *            *              *
 பாவியர் சபைதனிலே,
1.புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
2.ஆவியில் இனியவளை
3.உயர்த்து அணி சுமந்து உலவிடு செய்யமுதை,
4.ஓவியம் நிகர்த்தவளை,
5.அருள் ஒளியினைக்
6.கற்பனைக்கு உயிரதனைத்
7.தேவியை,
8.நிலத்திருவை,
9.எங்கும் தேடினும் கிடைப்ப அரும் திரவியத்தை,

படிமிசை இசையுறவே  நடை
10.பயின்றிடும் தெய்விக மலர்க்கொடியைக்
11.கடிகமழ் மின்னுருவை,
12.ஒரு கமனியக் கனவினைக்
13,காதலினை,
14.வடிவுறு பேரழகை
15 இன்பவளத்தினைச்

சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்!
 ---------------------

 கமனிய == விரைந்து மறையும் (   FLEETING)
இது தான் பொருள் என்று நினைக்கிறேன்.  பொருள் தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது)