September 14, 2010

மூன்று கடிதங்கள் - கடுகு

இது என் பெண்ணின் தொடர்பான பதிவு என்றாலும் அவளைப் பற்றி பெருமை அடித்துக் கொள்ளும் பதிவு இல்லை..(அப்படிப்பட்ட பதிவு ஒன்றைப் பின்னால் போட்டாலும் போடுவேன்.)
1. இந்திரா காந்தி.
என் பெண்ணிற்கு எட்டு வயது சமயத்தில் இந்திரா காந்தியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்ப விரும்பினாள். ஒரு வாழ்த்து அட்டையைத் தயார் செய்தாள். அதை நேரிலே சென்று கொடுக்க ஆசைப்பட்டாள். அந்த காலத்தில் பிரதமர் தினந்தோறும் காலை சுமார் 10,15 நிமிஷம் பொதுமக்களை அவரது இல்லத்தில் சந்திப்பார். காலையில் எட்டு மணிவாக்கில் பிரதமர் இல்லத்திற்குப் போனால் பெயர் விலாசம் எழுதி கொண்டு உள்ளே விடுவார்கள். உள்ளே புல் தரையில் எல்லாரையும் உட்காரச் சொல்வார்கள். என் பெண்ணை  அழைத்துக் கொண்டு போனேன்.. நிறைய குழந்தைகள் வந்திருந்தார்கள்.அனைவரும் உள்ளே போனோம்.. ககுழந்தைகளை உட்காரச் சொன்னார்கள். பெரியவர்கள் பின்னால் நின்று கொண்டு இருந்தோம். இந்திரா காந்தி. வந்தார். குழந்தைகள் நமஸ்தே சொல்ல அவரும் பதிலுக்குச் சொன்னார். அவர்கள் கொடுத்த வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.
சுமார் பத்து நாள் கழித்து பிரதமர் அலுவலம் என்ற முத்திரையிட்ட கவர் என் பெண்ணிற்கு வந்தது.

பிரித்துப் பார்த்தால்  இந்திரா காந்தி. கைப்பட எழுதிய கடிதம்.  பிறந்த நாள் வாழ்த்து அட்டைக்கு நன்றி தெரிவித்து இருந்தார்,  நாலு வரிதான்.  மொத்த கடிதத்தையும் அவரே எழுதி கையெழுத்திட்டு இருந்தார்!

2.கிரிஸ்டியன் பார்னார்ட்
உலகின் முதல் முதல் இருதய மாற்று ஆபரேஷனைச் செய்து சாதனைப் படைத்தவர். தென் ஆப்பிரிக்காவில் கேப் டவுனில் உள்ள  க்ரூட் ஷூர் மருத்துவமனையில் 1967-ம் ஆண்டு டிசம்பர் 3’ம் தேதி டானிஸ் டர்வெல் என்ற இளம் பெண்ணின் இருதயத்தை வஷன்ச்கி என்ற முதியவருக்குப் பொருத்தினார், இந்த விவரங்களை எல்லாம் அவர் தன் சுய சரித்திரத்தில் விவரமாக எழுதி இருந்தார். அந்த பகுதிகளைத் தமிழ்ப்படுத்தி எழுதினேன். குங்குமத்தில் வெளியாயிற்று, கட்டுரையை என் பெண்ணிற்குப் படித்துக் காட்டினேன்.  இந்த சாதனையும் நெகிழ்ச்சிகரமான சம்பவங்களும் மொத்த புத்தகத்தையும் படிக்கும் ஆர்வத்தை அவளுக்குத் தூண்டின.  புத்தகத்தைப் படித்து முடித்தாள். அதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு கிரிஸ்டியன் பார்னார்ட் மற்றொரு சாதனையைச் செய்தார். உடலுக்கு வெளியே, நல்ல இருதயத்தைப் பொறுத்தி, பிறகு அதை உள்ளே வைத்தார். (அது என்ன சாதனை என்பது சரியாக நினைவில் இல்லை,) இந்தச் செய்தியை படித்த என் பெண்ணிற்கு – அப்போது அவளுக்கு வயது 15- இந்த அறுவை சிகிச்சைப் பற்றி சில சந்தேகங்கள் வந்தன.
“நான் கிரிஸ்டியன் பார்னார்டிற்குக் கடிதம் எழுதிக் கேட்கப் போகிறேன்” என்றாள். அவள் ஆர்வத்திற்குத் தடை போட எனக்கு விருப்பமில்லை. உத்தேசமாக அவர் முகவரியை அவளிடம் கொடுத்தேன். அவள் கடிதம் எழுதினாள். பதில் வரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் சுமார் 15 நாட்களுக்குப் பிறகு பார்னாட்டிடமிருந்து பதில் வந்தது.
“உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். நீங்கள் பள்ளி மாணவி என்று எழுதி இருக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கு நான் கொடுக்கும் விளக்கங்களைப் புரிந்து கொள்ள  ஓரிரண்டு ஆண்டாவது  மருத்துவப் படிப்பு படித்திருக்க வேண்டும்.” என்று எழுதி  இருந்தார். (கையெழுத்து அவர் காரியதரிசி போட்டிருந்தார்,)

பில் கிளிண்டன்       
அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல நாடுகளிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு ஃபுல்ப்ரைட் என்ற பெயரில் ஒரு ஸ்காலர்ஷிப்பைத் தருகிறது அவரவர் தாங்கள் ஈடுபட்டுள்ள துறையில் மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுவர வகை செய்யும் திட்டம் இது. இரண்டு மூன்று கட்டங்களாக பேட்டி நடத்தி ஒரு நாட்டிற்கு இரண்டு அல்லது மூன்று பேரைத் தேர்ந்தெடுக்கிறது.  ஹ்யூபர்ட் ஹம்ஃப்ரீ என்ற உதவி ஜனாதிபதியின் பெயரில் நிறுவப்பட்ட அமைப்புத் தரும் இந்த ஸ்காலர்ஷிப்பின் பெயர் ஹ்யூபர்ட் ஹம்ஃப்ரீ ப்ரோக்ராம் என்று பெயர், அமெரிக்காவுக்குச் சென்று
ஒரு சர்வகலாசாலையில் ஒரு வருட காலம் தங்கி தேவையான இடங்களையும் அமைப்புகளையும் பார்த்துவிட்டு வரலாம். வீட்டிற்கே வந்து விசா படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போய் விசாவையும் வீட்டிற்கே வந்து கொடுத்துவிடுகிறார்கள். எல்லா செலவுகளும் அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும். ஒரு நிபந்தனையும் கிடையாது. வருட முடிவில் எல்லோரையும் வாஷிங்டனுக்கு வரவழைத்து ஒரு சர்டிஃபிகேட்டைத் தருவார்கள். ஒரு செய்தித்தாளின் பாதி அளவில் இருக்கும் பத்திரம் அது. அதில் ஏழெட்டு வரிகள் தான் அச்சடிக்கப்பட்டிருக்கும். இன்னார், இந்த ஆண்டு ஹ்யூபர்ட் ஹம்ஃப்ரி  திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிகரமாகப் பயின்று முடித்தார். கீழே அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டிருப்பார். கிட்டத்தட்ட இருநூறு பேர் பத்திரத்திலும் ஜனாதிபதி பில் கிளிண்டன்,  தானே கையெழுத்திட்டிருந்தார், ஃபோட்டோ காபி எதுவும் செய்யவில்லை. இப்படிப்பட்ட சர்டிஃபிகேட்டை நான் பார்த்து வியந்தேன். அந்த  சர்டிஃபிகேட் என் வீட்டில் இருக்கிறது. (இது என் மகளுக்குக் கிடைத்த சர்டிஃபிகேட் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.)

6 comments:

  1. அறிவுத் தாகமும் ஆர்வமும் உள்ள பெண்ணுக்கு ஊக்கப்படுத்தி நல்வழிகாட்டிய தந்தையாக நீங்கள்! பெண்ணின் பெயரை இப்போதைக்கு மறைத்தாலும், பின்னர் வெளியிடுவீர்கள் - அவரின் மற்ற சாதனைகளைப் பற்றிய பதிவுகளுடன் என்று நம்புகிறேன்.

    இந்திரா காந்தியின் சந்திப்புபற்றி படித்ததும், இன்று மக்களை கிட்ட சந்திக்க பயப்படும் / உயர் பாதுகாப்பு வளையத்திலிருக்கும் தலைவர்களை நினைக்கும்போது பரிதாபகமாக இருக்கிறது.
    -ஜெ.

    ReplyDelete
  2. அய்யா வணக்கம் ,
    உங்களின் வாசகி நான் . உங்கள் நகைச்சுவை கட்டுரைகளை கல்கியில் மிகவும் ரசித்து படிப்பேன். உங்கள் ப்ளாக் மிகவும் அருமை.தொடரட்டும் உங்கள் நகைச்சுவை சேவை.

    ஸ்ரீதேவி

    ReplyDelete
  3. Ungal blog thodangiyathu muthal athai vidamal padippathu ennudaya sowbhayamagyamaha karuthukiren

    ReplyDelete
  4. Good thing happening around you அவர்களுக்கும்
    virutcham அவர்களுக்கும் -- மிக்க நன்றி

    ReplyDelete
  5. Anandhi is the joy of your life! May you have many more occasions to remember and write about!

    Papri & Sri Ram

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!