சென்னை ஜி.பி.ஓ-வில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பார்சல் செக் ஷனில் மணி என்ற பியூன் இருந்தான். (தபால் துறையில் இவர்களைப் பேக்கர் என்பார்கள்.) அவன் இளைஞன். துடிப்பானவன். முகம் சுளிக்காமல் வேலை செய்வான். அவ்வப்போது என்னிடம் வந்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பான்.
அந்த சமயத்தில் நான் ஒரு தையல் மெஷின் வாங்கி இருந்தேன். தையல் வேலயை தீவிரமாகக் கற்க ஆரம்பித்தேன். என் மனைவி, 'உஷா தையல் வகுப்பி'ல் சேர்ந்து கற்க ஆரம்பித்தாள். அவள் எனக்குச் சொல்லிக் கொடுப்பாள். ஆபீசில் ஒரு நாள் ‘தையற்கலை’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். மணி அப்போது வந்தான். “ என்னா சார், நாவலா” என்றான்.
“ இல்லை மணி. நான் டெய்லரிங் கற்றுக் கொள்கிறேன். இது தையற்கலைப் புத்தகம்.” என்றேன்.
“ அப்படியா சார்... இந்த புத்தகத்தை எல்லாம் தூக்கி த்தூர வையுங்கள். நான் சொல்லி கொடுக்கிறேன்.” என்றான்.
தொடர்ந்து “ சார், நீங்க இன்னா கேட்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். ‘ உனக்கு என்னடா தெரியும். அளக்காதேடா’ன்னு சொல்லப்போறீங்க. நீங்க கேட்டதாகப் பாவித்துக் கொண்டு நான் பதில் சொல்கிறேன்.” என்றான்.
“ உம்.” என்றேன், பாதி அசுவாரசியமாய்..
"சார், நான் ஒரு டெய்லராக இருந்தவன் தான். காஜா பையனாக இருந்து டெய்லராக வளர்ந்தவன். கட்டிங் கூட தெரியும். எனக்கு டெய்லரி்ங் வேலை அலுத்துப் போய்விட்டது....."
"என்னது? என்னமோ முப்பது நாற்பது வருஷம் வேலை செய்து அலுத்துப் போனது போல சொல்றியே" என்றேன்.
" சார் மூணு வருஷத்துக்கு மேலே அந்தத் தொழிலில் இருந்தேன். இதில் பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்று எனக்குத் தெரிந்துவிட்டது. அதனால் தான் இந்த பேக்கர் வேலைக்கு வந்து விட்டேன்".
" என்ன மணி நீ என்ன சொல்றே? நீ சொல்றது எனக்குப் புரியலையே".
"ஆமா சார் அந்த மூணு வருஷம் நான் பொங்கல் கொண்டாடலை. தீவாளி கொண்டாடலை. தமிழ்ப் புதுவருஷம் கொண்டாடலை ......ஏன் எந்த பண்டிகையையும் கொண்டாட முடியலை. .... பண்டிகை என்றால் டெய்லர்களுக்குத்தான் வேலை அதிகம். பண்டிகை சமயத்தில் இருபத்துநாலு மணி நேரமும் உழைச்சாகணும் தீபாவளி என்றால் சொல்லவே முடியாது.. காலை மூணு மணி நாலு மணிக்குக்கூட கடைக்கு வந்து டிரஸ் வாங்கிகிட்டு போவாங்க. ஊரெல்லாம் பண்டிகை கொண்டாடும், நாம கொண்டாட முடியாது. ஊருக்கெல்லாம் லீவு, நமக்கு ஒரே நாளில் முணு ஷிஃப்டு. பணமும் சம்பாதிக்கணும். வாழ்க்கையையும் அனுபவிக்கணும், சார்.. அதனாலே அந்த தொழிலுக்கே முழுக்குப் போட்டுவிட்டேன்," என்றான்.
"சபாஷ் மணி” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தேன். அன்று முதல் அவனை பேக்கர் மணியாகப் பார்க்காமல் ஞானோதயம் பெற்ற மணியாகத்தான் பார்த்தேன்.
அவன் சொன்னதை ஒரு உபதேசமாகத்தான் எடுத்துக் கொண்டேன்.
(பின்குறிப்பு: என் தையல் திறமையைப் பற்றி தனிப்பதிவாகப் போடப் பார்க்கிறேன்)
* * * * *
இனி இரண்டாவது மணியைப் பார்ப்போம். ஜி. பி. ஓ. விலிருந்து மாற்றலாகி டில்லி போனேன். அவ்வப்போது சென்னை வருவேன். ஒரு சமயம் ஜி.டி.யில் சென்னை வந்து கொண்டிருந்தேன். கேட்டரிங் பையன் எங்கள் பெட்டிக்கு காபி, சாப்பாடு சப்ளை பண்ணிக் கொண்டிருந்தான். அவன் பெயர் மறந்து விட்டது.
ரயில் மணி என்று வைத்துக் கொள்ளலாம். சின்னப் பையன் தான். சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தான்.
நாக்பூரில் ரயில் நின்றது. கிளம்பும்போது மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்து ஏறினான். அவன் கையில் ஒரு மூட்டை இருந்தது. தொப்பென்று என் சீட்டுக்கருகில் அதைப் போட்டான். ”சார்.. மூட்டை இங்கேயே இருக்கட்டும்.மெட்ராஸ் வந்ததும் எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்..
அன்று மாலை அவனுக்கு சிறிது ஓய்வு நேரம் கிடைத்தபோது என்னிடம் வந்தான்.
“மூட்டைப் பத்திரமாக இருக்கிறது.. கவலைப்படாதே” என்றேன்.
“ எனக்கு ஒரு கவலையும் இல்லை, சார்:” என்று சொல்லியபடியே கீழே என் காலருகில் உட்கார்ந்தான். “ சும்மா ரெஸ்ட் எடுத்துக்க வந்தேன்” என்றான்.
:”சார், மூட்டையிலே ஒண்ணும் தப்பான பொருள் எதுவும் இல்லைங்க.. கடலை பருப்புதாங்க.. நாக்பூர்லே பதினஞ்சு அணா.. இங்கே வாங்கிகிட்டுப் போயி மெட்ராஸ்ல ஒரு கடையிலே கொடுத்துடுவேன்.. அங்கே ரொம்ப டிமாண்ட். லாபத்திலே வித்துடுவேன். அது மாதிரி மெட்ராஸிலிருந்து ரேடியோ ஆயில் வாங்கிகிட்டு வந்து பஹார்கஞ்ச் மார்க்கெட் கடையிலே கொடுப்பேன். அதிலும் லாபம் வரும்” என்றான்.
“கெட்டிக்காரப் பையனப்பா நீ... ஆனால் இப்படி ரயிலில் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பது போரடிக்கவில்லயா? ஊரோடு ஒரு வேலையைப் பார்த்துக் கொள்ளலாமே? உங்கப்பா,.. அம்மா ஒண்ணும் சொல்லலியா? என்று கேட்டேன்.
“ என்ன ,, என்ன. என்ன கேட்டீங்க?. அப்பா.. அம்மா! நல்லா கேட்டீங்களே.. அவங்களாலேதான் இந்த நாய் படாத பாடுபட்டுகிட்டு இருக்கிறேன்”
”என்னப்பா சொல்றே?.” என்றேன், இவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்கும் ஆர்வத்தை வெளிக்காட்டிகொள்ளாமல், :”நீ என்ன சொல்றேப்பா?” என்றேன்..
”சார்.. எங்கப்பாவின் முதல் சம்சாரத்தோட பிள்ளை நான்... எங்க அம்மா இறந்துட்டதும். அப்பா இரண்டாம் கலியாணம் பண்ணிகிட்டார்... அவங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்புறம் ஆரம்பிச்சது எனக்கு சனி தசை... அடி, உதை, நெருப்பு சூடு, பட்டினி.. எங்க சித்தியை ராட்சசின்னு சொல்லமாட்டேன்.. ராட்சசி எங்க சித்தியா வந்தாங்க, அவ்வளவுதான்! ஒரு நாள் என்னை அடி அடின்னு அடிச்சாங்க. “வெளீயே போடா.. இனிமேல் வீட்டுக்குள்ளே காலை வெச்சே, ஒடிச்சிடுவேன்.” என்று கத்தித் துரத்திட்டாங்க... தெரியும், அப்பா ஒண்ணும் சொல்லலையான்னு நீங்க கேட்க வர்றீங்க... அப்பா ஒரு கோழைங்க.. பொண்டாட்டியைக் கண்டால் நடுக்கம்.. அப்ப ஒரு சபதம் எடுத்தேன் வீட்டை விட்டுதானே சித்தி துரத்திட்டாங்க.. சரி..உயிரை விட்டாவது பணத்தைச் சேர்த்து சொந்தமாக ஒரு வீடு வாங்கிடணும்னு சபதம் எடுத்துகிட்டேன். வீடு வாங்கினதும், சித்தி கிட்ட போய் “ நான் சொந்த வீடு வங்கிட்டேன்...அதுக்குள்ளெ நீ காலை வெக்கக்கூடாதுன்னு சொல்லப்போறேன்” என்றான்.
“ அப்படியா.. இது வரைக்கும் எவ்வளவு சேர்த்து வெச்சிருக்கே..?” என்று கேட்டேன்.
“ உங்ககிட்ட சொன்னா தப்பில்லே.....பதினஞ்சாயிரம் ரூபாய்... இதுலேயே வீடு வாங்கலாம்.. ரொம்ப சின்னதாகக் கிடைக்கும். இன்னும் பத்தாயிரம் ருபாய் சேர்ந்தால் போதும். நல்ல வீடு கிடைக்கும், சார்”
“ தம்பி.. உன் மன உறுதியைப் பாரட்டறேன், மணி.. இன்னும் ஒண்ணு நீ செஞ்சியானால் இன்னும் அதிகமாகப் பாராட்டுவேன்..” என்றேன்.
“ இன்னா செய்யணும்?”
“ யோசிச்சுப் பாரு..உங்க சித்தியாலதான் உனக்கு வீடு வாங்கணும்னு வெறி வந்தது. அதனாலே வீடு வாங்கினதும் சித்தியைக் கூப்பிட்டு, புடவை எல்லாம் வாங்கிக் கொடு. அப்பதான், அவங்க செய்த தப்பு அவங்களுக்கு உறைக்கும்” என்றேன்..
“ சார்.. வீடு வாங்கறப்போ என் கோபமும் குறைஞ்சிருக்கும்; நீங்க சொன்னதும் நினைவிலிருக்கும்.. அப்போ அவங்களைக் கூப்பிட்டாலும் கூப்பிடுவேன்... வர்றேன்.. சார்” என்று சொல்லிவிட்டுப் போனான்.
மன உறுதி என்ற பாடத்தை இந்த மணி எனக்குப் போதித்ததாக நான் கருதுகிறேன்.
படிக்கின்ற எங்களுக்கும் மன உறுதி ஏற்படட்டும் ! நன்றி!
ReplyDeleteManiyana Post !!!!!!!!!
ReplyDeleteKothamalli
மணியான தகவல்கள்...
ReplyDeleteதேவி
SUPER
ReplyDeleteபொதுவாக தங்களின் பதிவுகள் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும். சில சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் ரயில் மணி பற்றிய பதிவு மனதை நெகிழ வைத்து விட்டது. இப்போது அந்தப் பையனுக்கு எத்தனை வயதிருக்கும். வீடு கட்டியிருப்பாரா? சித்தியை தன் வீ்ட்டிற்கு கூப்பிட்டு அவர் நாண நன்னயம் செய்திருப்பாரா? இது போல சித்தி கொடுமை தற்காலத்தில் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல்தான்.
ReplyDeleteஜெ.பாபு
கோவை 20
If you won't mistake me and take it in the right spirits, the two people in this blog have impressed me more than anyone else written about so far. They had also expressed themselves vividly. I am sure both have succeeded in their lives.
ReplyDelete- R. J.
>>>> ஜெ.பாபு கோவை 20 -----. ஆனால் ரயில் மணி பற்றிய பதிவு மனதை நெகிழ வைத்து விட்டது. இப்போது அந்தப் பையனுக்கு எத்தனை வயதிருக்கும். ===
ReplyDeleteரயில் மணிக்கு 60-65 வயது ஆகியிருக்கும் இப்போது!
மணியான கதைன்னு சொல்லப்பாத்தா கொத்துமல்லியும் தேவியும் முந்திகிட்டாங்க! அதனால என்ன? சொல்லிட்டா போறது. மணியான கதைகள்!
ReplyDeleteஆமாம் ப்லாக் பேரும் டெம்ப்லேட்டும் மாத்திட்டீங்களா என்ன?
ரயில் மணி பதிவு நெஞ்சைத் தொட்டது. ரயில் மணி தற்போது எங்கிருந்தாலும் வளமுடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
ReplyDeleteடெய்லர் மணி - ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கும், அதன் இரண்டாவது பக்கத்தை நாம் பார்க்கத் தவறி விடுகிறோம்.அவர் சொன்னது போல எங்கள் ஊரிலும் தீபாவளியன்று விடியற்காலம் 5 மணி வரை டெய்லர்கள் முழு மூச்சுடன் தைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
Jagannathan said...If you won't mistake me and take it in the right spirits, the two people in this blog have impressed me more than anyone else written about so far.+++>>>
ReplyDeleteWhy should I mistake you. You are free to have your opinions. Yes, I also felt that these two Manis have taught me few lessons. The incidents which happend some 45 years back are still fresh in my memory. Certainly Not because of memory power ( which incidentally is declining fast!)but because the Manis have etched themselves deep in my mind.
Keep reading. It will not harm you very much!
<<<< திவா said... .. ஆமாம் ப்லாக் பேரும் டெம்ப்லேட்டும் மாத்திட்டீங்களா என்ன?
ReplyDeleteஇல்லையே. MASTHAED-ட்டை அவ்வப்போது மாத்துவேன். பொறந்ததிலிருந்து அதே பேர் தான்.
டெம்பிலேட்டை மாற்றவில்லையே... பாராட்டுக்ளுக்கு நன்றி
super
ReplyDelete