பாரதியாரின் பாஞ்சாலி சபதம் ஒரு உணர்ச்சிக் காவியம். எந்த இடத்திலிருந்து படித்தாலும் நெஞ்சை உருக்கி விடும். கவிதை வரிகள் வெள்ளம் போல் பாய்ந்துள்ளன. ஒரு அழகான வர்ணனையை பார்க்கலாம் இப்போது.
தருமர் சூதாட்டத்தில் தோற்றுப் போய்க்கொண்டே இருக்கிறார். கடைசியில் பாஞ்சாலியையேப் பணயம் வைத்து விட்டார். பாரதியாருக்கு நெஞ்சு துடிக்கிறது. பாருங்கள் பாஞ்சாலியை எப்படி வர்ணிக்கிறார் என்று!
* * *
பாவியர் சபைதனிலே,
1.புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
2.ஆவியில் இனியவளை
3.உயர்த்து அணி சுமந்து உலவிடு செய்யமுதை,
4.ஓவியம் நிகர்த்தவளை,
5.அருள் ஒளியினைக்
6.கற்பனைக்கு உயிரதனைத்
7.தேவியை,
8.நிலத்திருவை,
9.எங்கும் தேடினும் கிடைப்ப அரும் திரவியத்தை,
படிமிசை இசையுறவே நடை
10.பயின்றிடும் தெய்விக மலர்க்கொடியைக்
11.கடிகமழ் மின்னுருவை,
12.ஒரு கமனியக் கனவினைக்
13,காதலினை,
14.வடிவுறு பேரழகை
15 இன்பவளத்தினைச்
சூதினில் பணயம் என்றே
கொடியவர் அவைக்களத்தில் அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்!
---------------------
கமனிய == விரைந்து மறையும் ( FLEETING)
இது தான் பொருள் என்று நினைக்கிறேன். பொருள் தெரிந்தவர்கள் எழுதினால் நல்லது)
Fleeting என்பது தான் மிகச்சரியான பொருள் தான்
ReplyDeleteபாஞ்சாலி சபதத்தில் இவ்விடத்தில் வரும் வீமனின் வசனம் என்னை மிகவும் கவர்ந்த பகுதி. இங்கே ஆசிரியர் கூற்றாக வரும் வரிகளுக்கும், வீமன் பேசும் வரிகளுக்கும் ஒரு தொடர்ச்சி இருப்பதைக் காணலாம். தருமனைச் சாடும் அக்கோபத்தில் வெளிப்படுவது வீமன் திரௌபதி மீது கொண்டிருக்கும் ஆழமான காதல் தான். கோப வரிகளைப் படித்துவிட்டு நாம் நெகிழ்வது ஒரு அழகுமுரண்.