September 28, 2010

 வரதராஜுலு - கேரக்டர்

குறிப்பு:  சாவி அவர்கள் தன் அலுவலக மேஜையில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது எப்போதோ கோபுலு வரைந்த ஒரு ஓவியம்  அவர் கையில்  அகப்பட்டது. கோபுலு வரைந்திருந்த இந்த ஓவியத்தை திரு. சாவி எனக்கு அனுப்பி, அதற்கேற்ற மாதிரி ஒரு கேரக்டர் எழுதச் சொன்னார்.
         பிளாஸ்டிக் ஹாண்ட்பாக், வலைப்பையில் டிபன் பாக்ஸ், உயிரை எந்த நிமிடத்திலும் விடத் தயராக இருக்கும் ஆயிரம் ஒட்டுக்குடை, பட்டை பெல்ட், உயரம் குறைவான, "பிடிக்கும் பாண்ட்'  -- இவைதான் திருவாளர் வரதராஜுலுவின் ஸ்டாண்டர்ட் அலங்காரங்கள். பாலைவனத்தின் நடுவே ஓடும் சிற்றாறு போல், பரந்த வழுக்கைத் தலையின் நடுவில் நெளிந்து பறக்கும் மூன்று தலைமுடிகளும், புருவங்களுக்கிடையே உள்ள இரண்டு சுருக்கங்களும் அவரைக் கோபக்காரராகக் காட்டுவதைக் கவனிக்காமல், அவரிடம் பேச்சுக் கொடுத்தால், வந்தது வம்பு.
வரதராஜுலுவுக்கு பல விஷயங்களின் மேல் சதா கோபம். அவர் கைப்பையிலி ருக்கும் கடிதங்களின் பிரதிகளைப்
பார்த்தால் தெரியும், அவர் கோபத்திற்குக் காரணங்கள். காரசாரமான கடிதங்கள் எழுதுவதுதான் வரதராஜுலுவின் ஒரே வேலை.
ஜெயில் வார்டராக இருந்து ரிடையரான இவருடைய கண்களுக்குப் பலர் குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். பதவி இல்லாததால் அவர்களைச் சிறைக்குள் அடைக்க முடியவில்லை. ஆகவே தன்னுடைய கோபத்தைக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் தீர்த்துக் கொள்கிறார். யாருக்கு வேண்டுமானாலும் எழுதுவார். ஐ.நா. காரியதரிசி முதல் காட்டாங்குளத்தூர் கர்ணம் வரை எல்லாருக்கும் எழுதுவார்.
காலை ஒன்பதரைக்குச் சாப்பிட்டுவிட்டு, டிபனைக் கட்டிக் கொண்டு - வெறும் மோர் சாதம் தான் -  கிளம்பினார் என்றால் நேரே லைப்ரரிக்குத்தான் போவார்.
எல்லா பத்திரிகைகளையும், அகப்பட்ட பக்கத்திலிருந்து முன் பின்னதாகவாவது படித்துவிடுவார். இதற்குள் லஞ்ச் டைம் வந்து விடும். டிபனைச் சாப்பிட்டு விட்டு பார்க்கிற்கு வந்து விடுவார். பேனாவை எடுத்து வரி வரியென்று வரிந்து கட்டுவார். கடிதங்களுக்கு ரெஃப்ரன்ஸ் நம்பர் இல்லாமல் எழுத மாட்டார். பல சமயங்களில் முன்பு எப்போதோ, நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ரெஃப்ரன்ஸைக் குறிப்பிடுவார். கடிதத்தைப் பார்க்கும் ஜெர்மன் குடியரசுத் தலைவரோ, கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவோ, பிரிட்டிஷ் ராணியோ  அவரது பழைய கடிதங்களைப் பாதுகாத்து வைத்து திரும்பவும் எடுத்துப் பார்ப்பார்கள் என்ற நினைப்பில்!
வரதராஜுலுவின் கருத்துக்களைச் சற்று பார்க்கலாம்.

"சென்ற வருடம் மார்ச் 7-தேதி நான் எழுதிய கடிதத்திற்கு தங்களிடமிருந்து பதில் வரவில்லை. ஜனாதிபதி தேர்தல் நடக்கப் போகும் சமயத்தில் இப்படி மெத்தனமாக இருப்பது தவறு. யார் வேட்பாளர் என்ற சண்டை எதற்கு? அரசியல்வாதிதான் இப்பதவியில் இருக்க வேண்டுமா? இந்த நாடு உருப்படாமல் போனதே அரசியல்வாதிகளால்தான். ஏன், என்னைப் போன்ற நேர்மையாளர்கள் இருந்தால் கெட்டுவிடுமா? பார்க்கப்போனால், நானும்  ஒரு விதத்தில் அரசியல் தொடர்புடையவன். எரவாடா சிறை வார்டனாக இருந்த போது ....''

"......பௌர்ணமி சமயமானாலும் தெரு விளக்குகள் இரவு பூராவும் எரியவேண்டுமா என்ன? இந்த செலவுக்கு யார் பணம் கட்டுவது? மக்களின் வரிப் பணத்தை வசூலிப்பவர்கள் இதைச் சிந்திக்க வேண்டாமா?.....''

"எந்த தேசத்திலும் இப்படி நடந்ததில்லை என்று எண்ணும்படி டிம்பக்டூவில் பூகம்பம் தலைவிரித்து ஆடியிருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் அசம்பளி தேர்தல் எப்போது என்று கேட்டிருப்பதைப் பார்த்து மனம் கொதித்தேன். டிம்பக்டூவிற்கு  நீங்கள் நிதி வசூலித்துக் கொடுத்தால் என்ன? என்னைப் போன்றவர்களிடம் நிதியுமில்லை, வசூலிக்கும் திறமையும் கிடையாது........''

"சிகரெட் பிடிப்பவர்கள் துண்டுகளை அணைக்காமல் கீழே போடுகிறார்கள். இதனால் பலர் தங்கள் கால்களைச் சுட்டுக் கொள்கிறார்கள். போலீஸ் "ஐ. ஜி.'யான நீங்கள் இதைப் பற்றிச் சிந்தித்தது உண்டா?...''

"சென்னையில் தண்ணீர் இல்லை என்று ஓலமிடுகிறார்கள். இமயமலையில் பனிக்கட்டி அளவில்லாமல் இருக்கிறது. நிலக்கரியை வெட்டி எடுத்து அனுப்புவது போல் பனிக்கட்டியை ஏன் அனுப்பக்கூடாது? வழியில் உருகிவிடுமே என்று சில பிரகஸ்பதிகள் கேட்கக்கூடும். உருகட்டுமே. அந்தந்த  ஊர்களின் ஜலப் பிரச்னை தீரட்டுமே...''
கென்னடி, வாஜ்பாய் , அமிதாப் பச்சன், மைக்கேல் ஜாக்ஸன் , வினோபா பாவே என்று பலருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.  அவர்கள் மேல்  அவர் கொண்டுள்ள கோபம் சொல்லி முடியாது.. பின் என்ன? வரதராஜுலு எழுதிய கடிதங்களுக்கு இது வரை அவர்கள் பதில் எழுதவில்லையே!

பின் குறிப்பு: ”பிரமாதமாக எழுதி இருக்கீங்க” என்று  பின்னால் கோபுலு அவர்களிடமிருந்து பாராட்டு கிடைத்தது!

8 comments:

  1. ஒரு எண்ணம்.

    விகடனில் அறுபதுகளில் கேரக்டர் என்று ஒரு ஃபீச்சர் ரெகுலராக வந்து கொண்டிருந்தது. உதாரணத்துக்கு ஒருவர் எப்போது தபால் ஆபீஸ் பக்கம் சென்றாலும் மனி ஆர்டர் படிவம் ஒன்றை வாங்குவார், ஏனெனில் அக்காலத்தில் அது இலவசம்.

    இன்னொரு கேரக்டர் முருகேசன் என்று பெயர். தொழிலாளி, ஆனால் தான் கூடும் இடங்களில் எல்லாம் மற்றவரை டாமினேட் செய்பவர். இந்த கேரக்டரின் விரிவாக்கம்தான் பிற்காலத்தில் “ஒரு சைக்கிள், ஒரு ஔடி ஒரு கொலை” என்னும் சாவியின் நாவல் ஒன்றில் முக்கிய பாத்திரமாக மாறியது.

    இவையெல்லாம் சாவியே எழுதியது என நான் நினைத்து கொண்டிருக்கிறேன். இப்போது பார்த்தால் அவையெல்லாம் உங்கள் கைவண்ணம் என தோன்றுகிறது.

    நான் எண்ணுவது உண்மையா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. டோண்டு ராகவன் அவர்களுக்கு, பின்னூட்டத்திற்கு நன்றி. சாவிதான் கேரக்டர் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதினார். அவர் மாதிரி நானும் கேரக்டர்களை பின்னால் எழுதினேன். தினமணி கதிரில் அவரே பிரசுரித்தார்.
    சாவியும் நானும் என்ற பதிவில் விவரமாக எழுதி இருக்கிறேன். இதோ லிங்க் விவரம்:

    http://kadugu-agasthian.blogspot.com/2009/12/blog-post_14.html#more

    ReplyDelete
  3. என்ன ஒரு திறமை! மற்றவர் எல்லொரும் அந்தப் படத்தைப் பார்த்து காற்றில் குடை கிழிவதாகவும், மழை வரப்போவதாகவும் மட்டும் கற்பனை செய்வார்கள். நீங்கள் எப்படி, எப்படி அந்த மனிதரை இவ்வளவு டீடைலாக விவரித்திருக்கிறீர்கள்! கோபுலுவே பாராட்டியதற்கு அப்புரம் நாங்கள் என்ன சொல்வது? தலை வணங்குகிறேன். - ஜெ.

    ReplyDelete
  4. Jagannathan said... அவர்களுக்கு, மிக்க நன்றி. அது மாதிரி மனிதரை நீங்கள் எப்போதோ பார்த்திருக்கக் கூடும். அதனால் தான் இவ்வளவு ரசிக்கிறீர்கள்..
    தலை வணங்குகிறேன் என்றெல்லாம் எழுதினால் என் தலை வீங்கிவிடும்.ஆகவே தவிர்க்கவும். டைப் செய்யும்போது ‘ர்’ முதலில் டைப் ஆகவில்லை. என் கம்ப்யூட்டர் மகா கெட்டி!

    ReplyDelete
  5. chance a illa sir. i like it very much. nowadays no body is writing like you. we are gifted to follow your blog.

    ReplyDelete
  6. ஸ்ரீதேவி அவர்களுக்கு,
    அசுக் அசுக்.. ஒன்றுமில்லை. ரொம்ப ஐஸ் வைத்து விட்டீர்கள். அதனால் ஜலதோஷம் மற்றும் தும்மல்! சுகமான சுமைகள் என்பது போல் இது மாதிரி ‘ஐஸ்’களால் தும்மல் வருவ்தும் சுகமாகத்தான் இருக்கிறது!!

    ReplyDelete
  7. தங்களின் ஒவ்வொரு கேரேக்டரும் படிக்கும் போது, இப்படி கேரேக்டர்களை தினமும் நமது வழித்தடங்களில் , இங்கே அமெரிக்காவில் பலதரப்பட்ட பல நாடுகளை சேர்ந்த கேரெக்டர் பார்க்கிறோம், ஆனால் உங்கள் மாதிரி நகைச்சுவையாக பார்பதற்கு மற்றும் ஒரு பரிணாமம் எங்கள் பார்வைக்கு கண்டிப்பாக தேவை. தினமும் உங்கள் ப்ளாக் வரும் போது புதிதாக ஏதேனும் கேரெக்டர் இருகிறதா என்பதே எனது தேடல்.

    ReplyDelete
  8. Jay Narayan said... உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இன்னும் சில கேரக்டர்களைப் போட இருக்கிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!