September 09, 2010

விண்ணிலே கோலம் -கடுகு

ஸ்பைரோக்ரஃப் என்ற பிளஸ்டிக்கால் ஆன விளையாட்டுப் பொருளைப் 
பார்த்திருப்பீர்கள்,
அதை உபயோகித்துப் பல் வேறு விதமான டிசைன்களை போடமுடியும். அந்த டிசைனன்களின் சிறப்பு ஒற்றைக்கோடு. ஆனால் அந்தக்  கோடு பலல வித வட்ட, நீள்வட்டப்பாதைகளில் போவதையும் கோடுகள் ஒன்றை ஒன்றைத் தொட்டுக் கொண்டும் ஊடுருவிக் கொண்டும்  போவதைப் பார்த்திருப்பீர்கள்.
வெவ்வேறு கலர் பென்சிலை உபயோகித்தால் அவை மேலும் அழகாக அமையும்.
சரி, கடவுள் கூட இந்த ஸ்பைரோகிராஃப் படங்களை இடைவிடாது பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக வரைந்து கொண்டிருக்கிறர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் ஸ்பைரோக்ராஃப் படங்களை விண்வெளியில் வரைகிறார். கோலங்களைப்போட  சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் போன்ற கிரகங்களை  உபயோகிக்கிறார்!
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு விதமான பாதையில் செல்கின்றது. அந்த பாதைகள் யாவும் ஸ்பைரோக்ராஃப் பாதைகளைப்போல் இருக்கின்றன. (இல்லை அந்த பாதைகளைப்போல் ஸ்பைரோக்ரஃப் படங்கள் இருக்கின்றன என்று சொல்லுவது தான் சரி.)

முதலில் வீனஸ் (வெள்ளி கிரகம்) போகும் பாதையை   படத்தில் பாருங்கள் இந்த அழகான பாதையில் பரந்த வான வெளியில் ஒரு தரம் போய்வர வீனஸ் ( வெள்ளீ) கிரகத்திற்கு பதிமூன்று ஆண்டுகள் ஆகின்றதாம். பூமியிலுள்ளவர்களுக்கு இது எட்டு ஆண்டுகளுக்குச் சமம்.
    மற்ற கிரகங்களின் விண்வெளிப் பாதையின் அழகைக் கவனியுங்கள். ஜூபிடர் (வியாழன்) கிரகத்திற்கு 12  ஆண்டுகளும், செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு ஆண்டுகளும் மெர்குரி (புதன்) கிரகத்திற்கு 88 நாட்களும் சனி கிரகத்திற்கு முப்பது ஆண்டுகளும் பிடிக்கிறதாம். இந்த கோலப் பாதைகளில் கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.
    தியோனி பப்பாஸ்  (Theoni Pappas)  என்பவர் இது மாதிரி பல நூறு சுவையான தகவல்களைத் தன் புத்தகங்களில் தந்திருக்கிறார். அவர் எழுதிய  The Joy of Mathematics, More Joy of Mathematics, Math A Day,The    Music Of Reason ஆகிய நான்கு புத்தகங்கள் என்னிடம் உள்ளன. ஒரு பக்கத்திற்கு ஒரு தகவல் என்ற விதத்தில், கணிதம் சம்பந்தமான விஷயங்களை தந்திருக்கிறார். எந்த பக்கத்தைத் திருப்பினாலும் ஒரு சுவையான தகவல் கிடைக்கும்.

2 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    அமரர் கல்கி அவர்களுக்கு நீங்கள் அணிவித்து இருக்கும் புகழ் மாலையைப் படிக்கும்போது, தாங்கள் கல்கியின் ரசிகர் என்று சொல்வதை விட அவருடைய பக்தர் என்பது தெரிகிறது. இந்தப் பகுதியின் மூலம் என்னைப் போன்ற கல்கி ரசிகர்கள் அவருடைய நினைவைப் போற்றுகிறோம்.

    உங்களுடைய எழுத்துகளை இந்த வலைப் பூவின் மூலம் படிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பது மிகப் பெரிய வரம். உள்ளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் பதிவை படித்ததும், ஸ்பைரோக்ராஃப் மாதிரியே மலரும் நினைவுகள் வட்ட வட்டமாக கண் முன்னால் சுற்ற ஆரம்பித்தாயிற்று.

    ஸ்பைரோக்ராஃப் வாங்கி வைத்துக் கொண்டு, நாள் பூராவும் வித விதமாக வரைந்து கொண்டு இருந்ததுண்டு. வண்ண வண்ண பால் பாயிண்ட் பேனாக்கள் வாங்கி, நான்கு அல்லது ஐந்து இழைகள் கூட வரைவோம்.(அப்போதெல்லாம் ஸ்கெட்ச் பேனாக்கள் கிடையாது). பெரிய ட்ராயிங் போர்ட் மாதிரி வைத்துக் கொண்டு, ட்ராயிங் பின்களை வைத்து, பேப்பரை அசையாமல் வைத்து, மிகப் பெரிய ஸ்பைரோக்ராஃபை, போட்டி போட்டுக் கொண்டு வரைந்தது நினைவுக்கு வருகிறது.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களை படிக்க வேண்டும் என்று ஆசையுடன் தலைப்புகளைப் பார்த்தால், என்னைப் பயப்படுத்தும் MATHS என்ற வார்த்தைகள் அவற்றில் இருப்பதுதான் யோசனையாக இருக்கிறது:):)

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு,
    நன்றி. பப்பாஸ் புத்தகங்களைப் படிக்க கணித அறிவு அதிகம் தேவை இல்லை. வாங்கிப் படியுங்கள்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!