February 23, 2015

ஐயோ, வேண்டாம் புகழ்!


 எக்கச்சக்கமாக விலையேறி இருக்கிறதே என்று கூட லட்சியம் பண்ணாமல் யாரோ அரை கிலோ மிளகாய்ப் பொடியை (குண்டூர் ரகம்) அவர் கண்களில் அப்பியது போல இருந்தது. எழுத்தாளர் ஏகாம்பரத்துக்கு! அவருடைய கண் எரிச்சலுக்குக் காரணம் கஞ்சன்-க்டிவிடிஸோ அல்லது வள்ளல் க்டிவிடிஸோ அல்ல. அவருக்கு எதிரே இருந்த பேப்பரில் வந்திருந்த ஒரு சின்னச் செய்தி.
 
  "பிரபல எழுத்தாளர் "மைதா"வின் புதிய நாவல் வெளியீட்டு விழா, ஓட்டல் கீதா கார்டனில் நடைபெற்றது. மாண்புமிகு. உயர்திரு, மேதகு, வணக்கத்துக்குரிய, தவத்திரு என்று பல புள்ளிகள் "மைதா"வின் எழுத்து வன்மையை வன்மையாகப் புகழ்ந்து பாடியிருந்தார்கள் --- தம்புரா சுருதிகூட இல்லாமல்!

இதைப்
படிக்கப் படிக்க, அவருக்குப் படிப்படியாக எரிச்சல் அதிகமாகியது!
  மயிலாப்பூர் தாமோதரன் என்னும் "மைதா' சிறந்த எழுத்தாளர். நான்கு வருஷத்துக்கு முன் இவருடைய முதல் கதை பிரசுரமாயிற்று. ஆனால் பத்து வருஷமாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஏகாம்பரத்தை விட, அவருக்குப் பிரபலம் ஏற்பட்டுவிட்டது. எங்கே பார்த்தாலும் மைதாவின் கதைகளுக்கு வரவேற்பு.
  ஏகாம்பரம் தம்முடைய எட்டுக் கதைகள் திரும்பி வந்தால் கூட வருத்தப்பட மாட்டார். ஆனால் "மைதா"வின் கதை ஒரு பத்திரிகையில் வந்து விட்டால் அவ்வளவுதான். மிதந்து கொண்டிருக்கும் கப்பலையும் கவிழ்த்து விட்டு, கன்னத்தில் கையுடன் உட்கார்ந்து விடுவார்.

February 11, 2015

முன்யோசனை- யோசனை -ஐடியா- உத்தி

1. அமிதாப்பச்சனுக்கு அடிபட்டபோது...

    சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு படப்பிடிப்பின் போது அமிதாப்பச்சனுக்கு அடிபட்டது நினைவிருக்கும்.
    அவரை பம்பாய் எடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டது. ஏர்போர்ட் வரை அவரை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல வேண்டும்.
    அந்தப் பாதை ஒரு  நோயாளியை எடுத்துச் செல்வதற்கு உகந்ததாக இருக்குமா    என்பதைக் கண்டறிய வேண்டும் என்று டைரக்டர் மன்மோஹன் தேசாய் தீர்மானித்து, ஒரு ஆம்புலன்ஸில் தானே படுத்துக் கொண்டு, விமான நிலையம் வரை ஓட்டச் சொன்னார்.
    இரண்டு, மூன்று பாதைகள் வழியாகச் சென்று திரும்பி, எந்த வழியில் அதிக மேடு பள்ளம் இல்லையோ அந்தப் பாதையில் அமிதாப்பச்சனை எடுத்துச் செல்ல முடிவெடுத்தார்.
    இப்படி அலுங்காமல் குலுங்காமல் எடுத்துச் சென்றதும், அமிதாப் உயிர் பிழைக்க ஒரு காரணமாக இருந்தது.
    இது தான் முன் யோசனை, திட்டமிடுதல்.

யோசி, யோசி.
    எதையும் யோசிக்காமல் செய்வது பல சமயம் இழப்புக்கு வழி வகுக்கும்.
    யோசி, யோசி.
    உலகப் புகழ் பெற்ற கம்ப்யூட்டர் கம்பெனியான ஐ.பி.எம்.மின் தாரக மந்திரமும் இதுதான். யோசித்தால் தானாகத் திட்டமிடுவீர்கள்
1950-ல் மர்லீன் டீட்ரிச் என்ற அமெரிக்க நடிகைக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
    அவர், விழா நிர்வாகிகளிடம் ஒரே ஒரு தகவல் கேட்டார்: "விழா மேடையில் படுதாக்களும், செட்களும் போடுவீர்களே அவை  எந்த வர்ணங்களில் அமைக்க இருக்கிறீர்கள்?''
    அவர்கள் தந்த விவரத்தைப் பின்பற்றி, விழாவன்று, தான் அணிய வேண்டிய உடைகளின் வண்ணங்களைத் தீர்மானித்தார். அதனால் பரிசு பெற மேடைக்கு வந்த போது அவருடைய உடைகள் , மேடைப் படுதா வர்ணங்களுக்கு இசைவாக அமைந்து, அனைவரையும் கவர்ந்தன.
    முன்பே யோசனையுடன் திட்டமிட்டதன் பலன் இது!

 ராஜாஜியின் ஐடியா

 ராஜாஜியைப் பற்றி ஒரு துணுக்கு உண்டு. விமானப் பயணம் செல்லும்போது சுயவிலாசமிட்ட கவர் ஒன்றை எடுத்துக் கொண்டு போவாராம். விமான நிலையத்தில் பயண இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக் கொள்வார். அந்த ரசீதை (பாலிஸி?) கவரில் போட்டு, தன் வீட்டுக்குப் போஸ்ட் செய்து விட்டு, விமானத்திற்குள் செல்வாராம்.

இது உண்மையோ, கற்பனையோ தெரியாது. முன் யோசனைக்கும் திட்டமிடுதலுக்கும் இது ஒரு நல்ல உதாரணம்.
  நண்பரின் உத்தி 
என் நண்பர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். நாலைந்து மாதங்கள் தங்கிவிட்டு வர திட்டம். அமெரிக்க கிளம்புமுன் வீட்டின் அறைகளை, பீரோக்களை நன்றாகப் பூட்டினார்.