லிப்ஸ்டிக் முதல் ராட்சஸ டீசல் இஞ்சின்வரை ஏகப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் பெரிய பம்பாய்க் கம்பெனியின் டில்லிப் பிரதிநிதி திருவாளர் ஜெயம். சீஃப் ரெஸிடன்ட் எக்ஸிக்யூட்டிவ்' என்ற அட்டகாசமான பெயராக இருந்தாலும் அவர் செய்வது, சர்க்கார் அலுவலகத்தில் அவரது கம்பெனி சம்பந்தப்பட்ட ஃபைல்களை வேகமாக நகர்த்தி வெற்றிகரமான முடிவிற்கு கொண்டுவரும் லியாசன் அதிகாரி வேலைதான். மகாராணி பாக் என்ற இடத்தில் ஒரு பெரிய மாளிகை. ஆபீஸ் கம் கெஸ்ட் ஹவுஸ். மூன்று கார்கள். நான்கு டெலிபோன்கள். டெலக்ஸ். உதவி மானேஜர், டைப்பிஸ்ட் என்று ஏழெட்டு பேர்.
பம்பரத்திற்கு மறு பெயர் ஜெயம் என்று சொல்லும்படி எப்போதும் படு பிஸி. டெலிபோனில் யார் யாரையோ `பிடித்து'ப் பேசிக் கொண்டிருப்பார். பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றொரு டெலிபோன் அலறும். "யார்... அடடே! வர்மாஜி, குட்மார்னிங்... கார் தானே? அப்பவே அனுப்பிட்டேனே.. இரண்டு நாள் என்ன, மூணுநாள் கூட வெச்சுகிட்டு அனுப்புங்க. நான் எங்கே ஸார் கலியாணத்திற்கு வருகிறது. சரி, கட்டாயம் இரண்டு நிமிஷம் தலையைக் காட்டுவேன். ஓ.கே.....''
ஆஜானுபாகுவான ஆசாமி. மதிப்பை ஏற்படுத்தும் வழுக்கை. `ஓவல்டின்'னாகவே சாப்பிடுவதாலோ என்னவோ இடை தாரளமாகப் பருத்து அதன் விளைவாக ஏற்பட்ட `ஓவல் ஷேப்' உடல். அறுபது வயதானவர் என்று ஜாதகத்தைப் பார்த்துதான் கண்டுபிடிக்க முடியும். தலைக்குள் ஆயிரம் விஷயங்களையும் திட்டங்களையும் வைத்திருந்தாலும் வெளியே காட்டாத முகபாவம். வாய் நிறைய புன்னகை; அரட்டை.
ஜெயம் காரியம் ஆகவேண்டியவர்களைத்தான் காக்காய் பிடிப்பார் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரு கௌரவத்திற்காக சென்னையிலிருந்து வரும் பிரமுகர்களைத் தன் கெஸ்ட் ஹவுசில் தங்க வைப்பார். அவர்களுக்கு ராஜோபசாரம் செய்வார். அவர்களால் ஒரு காலணா லாபம் இருக்காது. இருந்தாலும் அவர்களைத் தன் வீட்டிற்கு கூப்பிடாமல் விடமாட்டார்.
முக்கியமாக இசை, நாட்டியக் கலைஞர்கள் யாரும் அவரது விருந்தாளியாக இல்லாமலிருக்க முடியாது! டில்லி சபாக்காரர்களுக்கும் இது ஒரு விதத்தில் சௌகரியம். கலைஞர்களை பைசா செலவில்லாமல் தங்கவைத்து விடலாம்!
"ஜெயம்! அக்டோபரில் லால்குடி வரார்.. சாவனீருக்கு ஒரு பக்கம் விளம்பரம்....''
"என்னை எதுக்கய்யா கேட்கறே? ஹேர் ஆயில் விளம்பரத்தைப் போட்டுக்கோ.... ஆபீஸுக்கு போன் பண்ணு. செக் அனுப்பச் சொல்றேன். லால்குடி ஸோலோவா?.... வெரிகுட்.... நான் வரேன்பா. சிவாஜி லஞ்சுக்கு வரார்....''.
"சிவாஜியா ஸார்? இன்னும் யார் யார் ஸார்....?''
"எனக்கு எந்த சினிமா ஆக்டர் பேர் தெரியும்? நாலைஞ்சு ஹீரோயின் பவுடரும், லிப்ஸ்டிக்குமாக இருக்குதுங்க... அப்புறம் யாரோ யங்க் பாய்ஸ். `சுண்டைக்காய் வத்தல் குழம்பு போடறியா'ன்னு கேட்டார் சிவாஜி. சுண்டைக்காய் வாங்கப்போறேன்.......'' என்று பறப்பார். சங்கீதக் கலைஞர்கள் உரிமையுடன் போய் தங்கக் கூடிய இடம் ஜெயத்தின் கெஸ்ட் ஹவுஸ். "சாயங்காலம் என் கச்சேரிக்கு வர்றீங்களா ஜெயம்?'' என்று அவர்கள் மரியாதைக்கு கேட்பார்கள். "கச்சேரியா.... நமக்கு எங்கே சார் டயம்? ஐந்நூறு ரூபாய் டிக்கெட் இரண்டு வாங்கி வெச்சிருக்கிறேன். எங்கே வர்றது? பொழைப்பைப் பார்க்கணுமே. இந்த ஜாண் வயிற்றுக்காக அலைந்தாகணுமே......பத்து கோடி ரூபாய் பிராஜக்ட் ஒண்ணு நம் `பெண்டை' நிமிர்த்திடறது.... நான் வரேன். எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா? மெட்ராஸுக்கு மாமியுடன் பேசினீங்களா? அட, நீங்க ஒண்ணு, தாரளமாப் பேசுங்க சார். பையா, சாருக்கு ஏ.ஸியைக் குறைச்சு வை. ஐஸ்க்ரீம் வேண்டாம். சாயங்காலம் கச்சேரி..தொண்டை கட்டிடப் போகிறது. அப்புறம் சபாக்காரன் என்னைச் சபிப்பான்! டிரைவர், சின்ன வண்டியை நான் எடுத்துக்கிட்டுப் போறேன். பெரிய வண்டியை இவர் யூஸ் பண்ணட்டும்... வரேன்'' என்று கூறிக்கொண்டே ஓடுவார்!
எழுத்தாளர்கள், நாட்டியக் கலைஞர்கள், பக்தி விரிவுரையாளர்கள் என்று எந்தத் துறையை சேர்ந்த பிரமுகராக இருந்தாலும் இவருக்கு கெஸ்டாக இருந்தாக வேண்டும்!
சங்கீதம் தெரியாது. கதை, நாவல்கள் படிப்பதில்லை. பக்திக்கும் இவருக்கு வெகுதூரம், இருந்தும் அவர்கள் பெரிய மனிதர்களாக, நாலு பேருக்குத் தெரிந்த ஆசாமிகளாக இருப்பதால் அவர்களைத் தன் நண்பர்களாக ஆக்கிக் கொண்டுவிடுவார்.
"ஒரு ரைட்டர் வந்திருக்கார். பேர் சட்டுனு ஞபகத்துக்கு வரவில்லை..தொல்காப்பியம்அது இதுன்னு பேசறார். நமக்கு ’அறஞ்செய விரும்பு’ வே முழுசா தெரியாது.. அவர் கவிதை எழுதுறவரா?... நான் எங்கேப்பா மாகசீன் படிக்கிறேன்...'' என்பது மாதிரி பலரைப்பற்றி பல சமயங்களில் கேட்பார்.. ஏன், ஒரு சமயம் சிவாஜியிடமே "என்ன சார்... ஒரு அம்பது படத்திலாவது நடிச்சிருப்பீங்களா?'' என்று கேட்டிருக்கிறார்!
ஜெயம் இவ்வளவு உதவி செய்கிறாரே, அதைப்பற்றி ஜம்பமாகப் பேசுவார் என்று நினைக்கிறீர்களா? ஊஹூம், ஆசைக்காகச் செய்பவர்; பெருமைக்காக அல்ல!
ஜெயம் ரொம்ப நல்லவருனு சொல்லுங்க.. ரொம்பப் பேரு இருக்காங்க போல.. வசதியையும் வாய்ப்பையும் இப்படி நல்லவிதமாய் பயன்படுத்தவும் மனது வேண்டுமே..உங்களின் விவரிப்பு நன்று
ReplyDeleteJayam's another name is Kadugu??? .. I am just kidding.. It is very nice... I like to lighter (and also fire) movements with famous personalities. Please do it.. atleast once in a week... Regards Ranga
ReplyDeleteSir,
ReplyDeleteIs it a real story or your imagination ??? Couldn't believe !!!!!
Kothamalli
Respected Sir,
ReplyDeleteYour caricature of Sreeman Jayam brought him to life and made him adorable by all.
Incidentally, I, being not 'Kadugu', didn't note down all the past jewels of நகைப் பெட்டி & நகைச்சுவைப் பெட்டி. I sincerely regret it. Is there any way I can access them again and make note?
Regards,
R. Jagannathan
Incidentally, I, being not 'Kadugu', didn't note down all the past jewels of நகைப் பெட்டி & நகைச்சுவைப் பெட்டி.
ReplyDelete====
I will make a posting of all the quotes one of these days. Unfortuntely the quotes etc posted on the sidebar are not saved but I have some texts saved in my system.
Sir,
ReplyDeleteIs it a real story or your imagination ??? Couldn't believe !!!!!
Kothamalli
=== All characters whether good or bad are from my imagination. அத்தை கேரக்டரைப் படித்துப் பாருங்கள். முடிக்கும்போது கண்களைத் துடைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது
Thank you, Sir. - R. J.
ReplyDelete