August 05, 2010

நான் அலபாமக்காரன்

சில வருஷங்ககளுக்கு முன்பு அமெரிக்காவில் ஆர்லாண்டோவில் உள்ள டிஸ்னிலாண்டிற்குப் போயிருந்தேன். அப்போது ‘ யூனிவர்ஸல் ஸ்டூடியோஸ்’ என்ற பிரம்மாண்ட தீம் பார்க்கிற்குச் சென்றேன். சினிமா சம்பந்தமாக  பல நூறு விஷயங்கள் இருந்தன. பத்து மணி நேரத்திற்கும் அதிகமாகப் பார்த்தும் பலவற்றைப் பார்க்க முடியவில்லை.
      அதில் ஹிட்ச்காக் அரங்கம் ஒன்று இருந்தது, ஹிட்ச்காக்  சம்பந்தமான புகைப் படங்கள், தகவல்கள் மட்டுமல்ல, ஹிட்ச்காக் படத்தின் ஒரு காட்சியை  ஷூட் பண்ணிக் காண்பிக்க ஒரு சின்ன செட்டையும் போட்டு வைத்திருந்தார்கள்.  ஒரு உயரமான கட்டிடம். தூரத்தில் சுதந்திர தேவியின் சிலை.. காமிரா.சின்ன லிஃப்ட், விளக்குகள் எல்லாம் இருந்தன, அப்போது ஒரு அறிவிப்பு வந்தது.” இப்போது ஒரு திகில் காட்சியைப் படம் பிடித்துக் காண்பிக்கப் போகிறோம். இந்த உயரமான கட்டடத்தின் மேலே இருந்து ஒருவர் கீழே பல நூறு அடி விழப்போகிறதை. படம் பிடிக்கப் போகிறோம்.  இரண்டு நிமிஷப் படம் ... இதில் கைகால்களை உதறிக் கொண்டேஅலறியபடி  கீழே விழுபவராக நடிக்க ஒருவர் தேவை.. அவரை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்:
சட்டென்று யாரும் முன்வரவில்லை. இரண்டு மூன்று நிமிஷங்களுக்குப் பிறகு ஒரு இளைஞன் ”நான் நடிக்கிறேன்” என்று முன் வந்தார். அவரை  அறிமுகப்படுத்தி கொள்ளச் சொன்னார்கள்.
அவர் மேடை ஏறி “ எல்லாருக்கும் வணக்கம். என் பெயர் ராபர்ட்.. நான் சிறந்த மாநிலமான அலபாமாவிலிருந்து வருகிறேன். I COME FROM THE GREAT STATE OF ALABAMA!) ’என்று கம்பீரமாகச் சொன்னார்.. அவருக்கு தன் மாநிலத்தின் மீது அவ்வளவு பற்று!  அமெரிக்காவில் அலபாமா என்றால் சற்று இளக்காரம் தானாம்.
அப்படி அவர்  சொன்னதைக் கேட்டதும் என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
நாம் எப்போதாவது  “தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்” என்பதற்குப் பதில் “ பெருமை வாய்ந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி இருக்கிறோமா?  ..
யோசித்துப் பார்ப்போம்..

பின் குறிப்பு: சரி, அந்த திகில் காட்சியை எப்படிப் படம் பிடித்தார்கள்?
ஒரு சிறிய ஸ்டூலின்மேல் மல்லாந்து படுக்கச் சொன்னார்கள்.கை காலை
உதறிக் கொண்டே அலறுவது மாதிரி நடிக்கச் சொன்னார்கள்.  லிஃப்டில் காமிராமேன் உட்கார்ந்ததும், டைரக்டர் ஸ்டார்ட் சொன்னார். இரண்டு பிரம்மாண்டமான ஃபேன்களை ஓடவிட்டார்கள். லிஃப்ட் விர்ரென்று 20,30 அடி உயரம் மேலே சென்றது. அவ்வளவுதான் ஷூட்டிங்.
       உடனே படத்தைப் போட்டுக் காண்பித்தார்கள். மியூசிக்கையும் சேர்த்து இருந்தார்கள். அலபாமாக்காரர் குளோஸ் என்று பயப்படும் அளவுக்கு திகில் காட்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவர் அரை அங்குலம் கூட கீழே விழவில்லை!

2 comments:

  1. >>நாம் எப்போதாவது “தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்” என்பதற்குப் பதில் “ பெருமை வாய்ந்த தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லி இருக்கிறோமா?

    கடுகு சார்,
    உண்மையிலேயே சிந்திக்க வைத்த கேள்வி. நன்றி.

    ReplyDelete
  2. ஆசை தான் சொல்லிக்கொள்ள. பழம் பெருமை வாய்ந்த தமிழ்நாடு என்பது பொருத்தம். நாட்டு நிகழ்வுகளைப் பார்க்கும்போதும் படிக்கும்போதும் தமிழ்நாடு / இந்தியா என்று பெருமை வருவது சந்தேகம். பெரும்பான்மை பொது மக்களும், மிகச்சில நல்ல தலைவர்கள் / தொழிலதிபர்கள் / அதிகாரிகள் மட்டும் போதவில்லை. குற்றங்கள் குறைந்து, நேர்மையாளர்கள் மிகுந்து, நீதிமான்கள் சரியான நீதியை சீக்கிரமாக அளித்து இந்தியாவை / தமிழ்நாட்டை பெருமைக்குரியதாக ஆக்க கடவுளை வேண்டுகிறேன். - ஜெ.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!