August 13, 2010

கிருஷ் -- கேரக்டர்

கிருஷ்ணசாமி என்ற பெயர் கர்நாடகமாக இருகிகிறது
என்று அதை நசுக்கி `கிருஷ்' என்று ஆக்கிக் கொண்டிருக்கும் கேரக்டரைச் சந்திக்க வேண்டுமானால் காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் திருவல்லிக்கேணியில் உள்ள லட்சுமி லாட்ஜின் மூன்றாவது மாடியில் உள்ள கோடி அறையில் சந்திக்கலாம். அதன் பிறகு அவன் ஆபீஸ், சினிமா கிளப், `தீர்த்தம்' என்று போய் ரூமிற்குத் திரும்ப நேரமாகும்! பல இரவுகள் கிளப்பிலேயே தங்கிவிடுவான்.
கிருஷ் ரொம்ப ரொம்ப நல்ல ஆசாமி. நாற்பத்திரண்டைத் தாண்டிய கட்டைப் பிரம்மச்சாரி. ஒரு பெரிய மருந்துக் கம்பெனியில் சேல்ஸ் மானேஜர். வேலையில் அசகாய சூரன். லெட்டர்களுக்குப் பதில் `டிக்டேட்' பண்ணினால் யாரும் கை வைக்க முடியாது! அபார ஞாபக சக்தி. எந்த மாட்டை எப்படிக் கறக்கவேண்டும் என்று தெரிந்தவன். கை நிறைய சம்பளம். மாங்காடு காமாட்சியின் மேல் எவ்வளவு பக்தியோ அவ்வளவு பக்தி `ஜானி வாக்கர் ரெட் லேபிள்' புட்டி மீதும்! தன் சகோதரியின் குழந்தைகளுக்குத் துணி மணி என்று தாரளமாகப் பணம் செலவு செய்வான்; அதே சமயம் ரம்மியிலும் நிறைய பணத்தைக் கரைப்பான். ஊர் கவலைகளைத் தன் தலையில் போட்டுக்கொள்ளும் கவலை இல்லாத மனிதன் இவன்! ("வாழ்க்கையை ஒரு மோர்க்குழம்பாக ஆக்கக் கூடாது. அது அதற்கு ஒரு கம்பார்ட்மெண்ட் பண்ணி வைத்திருக்கிறேன்.'')
காலை ஆறு மணிக்கு சுப்ரபாதம் படிக்காமல் இருக்கமாட்டான்.
”அதனால் நாள் முழுவதும் லஷ்மி அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், தேவாரம் என்று இருக்கவேண்டுமா? வாழ்க்கையில் சீட்டு ஆடுபவனெல்லாம் கெட்டவனாக இருக்கிறானா? அல்லது பக்திமானாகக் காட்சி அளிப்பவன் எல்லாம் நல்லவனாக இருக்கிறானா? இரண்டுமில்லை. ஒரு சன்னியாசிக்குள் ஒரு அயோக்கியன் இருக்கிறான்; ஒரு அயோக்கியனுக்குள் ஒரு சன்னியாசி இருக்கிறான்'' என்பான். "ஏண்டா கிருஷ், கல்யாணம் கார்த்தி எதுவும் பண்ணிக் கொள்ளவில்லை.'' என்று கேட்டால் "நீ ஏன் மொட்டை அடித்துக்கொள்ளவில்லை?'' என்பது போல் இடக்காகக் கேட்பான்.  "எதற்குடா அடித்துக்கொள்ள வேண்டும்?'' என்போம். "அது மாதிரிதான் நானும் கல்யாணம் எதற்குப் பண்ணிக்கொள்ள வேண்டும்?'' என்பான்.
கிருஷ்ஷின் அறையில் படுக்கை, மேஜை, அலமாரி ஆகிய இடங்களில் பணம் இறைந்து கிடக்கும். சம்பாதிப்பதை எல்லாம் செலவழித்து விடுவான். பெரும்பாலான தொகையைத் தன் சகோதரியின் குழந்தைகளுக்கும் மற்ற உறவினர்களுக்கும் கொடுப்பான். சில்லறை சில்லறையாக அவ்வப்போது பணம் கொடுப்பதால் அவனை யாரும் பழிக்கமாட்டார்கள். "கிருஷ் குடிக்கிறானே தவிர, ரொம்ப பக்தி'' , ”ஏதோ சீட்டு கீட்டு என்று போகிறான் என்றால் பொழுது போவதற்குத்தான். மற்றபடி தங்கம்”, என்கிற மாதிரி எல்லாம் பாராட்டுவார்கள்!
கிருஷ்ஷின் விசித்திரமான போக்குகளுக்கு மற்றவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள் (பணம் பேசுகிறதே!) "அபூர்வ ராகங்கள்’ படத்துக்கு ஏழு டிக்கட் வாங்கி வந்திருக்கிறேன். நைட் ஷோ'' என்பான். உறவினர்களை டாக்சியில் அழைத்துச் செல்வான்.
படம் முடிந்ததும் "இப்படியே காலாற நடந்து போகலாம்'' என்று நாலு மைல் இழுக்கடிப்பான்!
திடீர் என்று அகால வேளையில் தன் அக்கா வீட்டிற்குச் சென்று, "பசிக்குது. வத்தல் குழம்பு சாதம் பண்ணிப் போடு'' என்பான். அதே சமயம் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் அவர்கள் எவ்வளவு வருந்திக் கூப்பிட்டாலும் தலை காட்டமாட்டான். ஒரு வருஷம் முழுக்க சினிமா பார்க்காமல் இருந்திருக்கிறான். தொடர்ந்து 16 நாட்கள் ஒரே படத்தையும் பார்த்திருக்கிறான்! அவனை `எக்ஸ்ட்ரீம் ஆசாமி' என்பார்கள். அது உண்மை!

3 comments:

  1. Great. Have u written about me.- Venk

    ReplyDelete
  2. நல்லா இருந்திச்சு.--டில்லி பல்லி

    ReplyDelete
  3. SUPER STORY SIR.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!