August 01, 2010

கமலாவும் எருமை மாடும் - கடுகு

  பொழுது விடிந்தால் சில வீடுகளில் டீவி போடுவார்கள்; சில வீடுகளில் ரேடியோ போடுவார்கள்;  வேறு சில வீடுகளில் ’சுப்ரபாதம்' போடுவார்கள். ஆனால் என் வீட்டில் விடிந்ததும் போடப்படுவது சண்டை!
    ஆமாம். தினந்தோறும் எங்கள் வீட்டுப் பால்காரர் வேதாசலத்துடன் கமலா-- அதாவது என் அருமை மனைவி -- ஒரு பத்து நிமிஷம் சண்டை போடுவாள். "என்னடா, கடன்காரா பாலா இது? இல்லை பாலாறா, புழலேரியா, செம்பரம்பாக்கமா? வர வர பாலில் ஒரே தண்ணி... அடுத்த மாதத்திலிருந்து நிறுத்திடப் போறேன்'' என்று கத்துவாள்.

 வருஷம் 365 நாள் -- லீப் வருஷத்தில் 366 நாள் -- இதே ராகம், இதே பல்லவி.
    இரண்டு வருஷமாகத்தான் வேதாசலம் பால் ஊற்றுகிறான். அதற்கு முன் அவனுடைய அப்பா தணிகாசலம் பால் ஊற்றி வந்தார். அவரிடமும் கமலா இதே பாட்டு. ஆனால் சாஹித்தியத்தில் சிற்சில வார்த்தைகள் மாறியிருக்கும். "என்னடா, கடன்காரா' என்று சொல்ல மாட்டாள். "என்னங்க, தணிகாசலம்" என்று சொல்வாள்!
    கமலா எவ்வளவு கத்தியும், எருமை மாடு முதுகின் மேல் தண்ணீர் பட்டது மாதிரி, எதுவும் அவன் மனத்தில் ஒட்டாது. பார்க்கப் போனால், அப்படி கமலா கத்தாவிட்டால், "அம்மாவுக்கு என்ன உடம்போ?'' என்று யோசிப்பான். கமலா கத்துவதைக் கேட்டுக் கேட்டு என் காது மரத்து விட்டது என்று கூடச் சொல்லலாம். ஒரு காது வழியாகப் புகுந்து ,அதே காது வழியாக வெளியே போய்விடும்! ஆனால், அன்று என் போதாத வேளை, ஒரு காது வழியாகப் போன அவளது கத்தல் மற்றொரு காது வழியாக வெளியே போகுமுன் என் மூளையை லேசாகத் தாக்கி விட்டுச் சென்றது.
    பால்காரர் சென்றதும், கமலாவிடம் கேட்டேன். "ஏன் கமலா, தினமும் இந்த பால்காரரோட சண்டை போடறது, எத்தனை வருஷம் ’கன்னித் தீவு' மாதிரி தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது?''
    "நான் சண்டைக்காரி. அதுதான் சண்டை போடறேன். நீங்க ஆம்பிளையா, லட்சணமா, "ஏண்டா, இப்படி பண்றேன்"னு ஒரு வார்த்தை கேட்டா அவனுக்குக் கொஞ்சம் உறைக்கும்...''
    "நான் சொன்னால் உறைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. என் வாழ்க்கையில் நான் நிதர்சனமாகக் கண்ட உண்மை.''

    "போதும். நீங்க எங்க வர்றீங்கன்னு புரியறது. இப்படி இடக்கரடக்கலாகப் பேசறது உங்கள் வம்சத்திலேயே ஊறின கலையாச்சே. சரி, ஏதோ சொல்ல வந்தீங்களே, அபூர்வமா! சொல்லுங்க'' என்றாள் கமலா.
    "இல்லை கமலா, இப்படி அவனோட மல்லுக்கு நிக்கறதை விட்டுட்டு பேசாமல் ஒரு பசு மாட்டை வாங்கிக் கட்டிப் போட்டால், பிரச்னை தீர்ந்திருமில்லையா?''
    "அம்மா... அம்மா... இங்கே வா. உன் அருமை மாப்பிள்ளை சொல்றதைக் கேளு.  நான் தினமும் மல்லுக்கும் பாப்ளினுக்கும் பாலியெஸ்டருக்கும் நிக்கறதைப் பார்த்து, அப்படியே மனசு உருகி ஒரு ஐடியா கொடுத்திருக்கார், வாம்மா. வா, வந்து கேளு...'' -- கமலா பொய்யான உற்சாகத்துடன் தன் அருமை அம்மாவைக் கூப்பிட்டாள்!
    கதவுக்குப் பின்னால் நின்று, நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த என் மாமியார், "கமலா, கேட்டுக் கொண்டிருந்தேண்டி. போன வருஷம் உன் தம்பி தொச்சு முட்டிண்டான்...'' என்று ஆரம்பிக்க,
    "அம்மா, அம்மா... நீ ஒண்ணு, தொச்சு பேச்சை எடுக்காதே. மூணாவது கண்ணு, நாலாவது கண்ணுன்னு வரிசையாத் திறந்துடும்...''
    "செய்யறதையும் செஞ்சுட்டு பேச்சையும் வாங்கிக்கணும்னு அவன் தலையிலே பிரம்மா எழுதிப்புட்டான். விடுடி. என்னமோ சொல்ல வந்தாரே உங்காத்துக்காரர்...'' என்றாள் என் மாமியார்.
    "சொல்லுங்கோ...''
    "உங்க ஆவர்த்தனம் முடிஞ்சுட்டுதா? டீவியில பசு வளர்ப்பதைப் பத்தி ஒரு புரோகிராம் பார்த்தேன். அப்போ தோணித்து இந்த ஐடியா...''
    "டீ.வி.யில அந்த புரோகிராம் இதோடு 50 தடவையோ 60 தடவையோ வர்றது. போகட்டும். பசு மாடு வாங்கலாம்னு உங்களுக்கே தோணிப்புடுத்தா! போன வருஷம் தொச்சு சொன்னபோது, நரசிம்மாவதாரம் எடுக்காத குறையாக அவனைக் குதறி எடுத்தீர்களே!''
    "தொச்சு காட்டியது பசு மாடா? கிட்டத்தட்ட ஒரு எலும்புக்கூடு மாதிரி இருந்தது. இங்கே பசு மாடுகள் சினிமா போஸ்டர்களைத் தின்று தான் ஜீவிக்கின்றன என்றால், உன் தம்பி தொச்சு காட்டின பசு, ஓமக்குச்சி நரசிம்மன் நடிச்ச சினிமா போஸ்டரை மட்டும் சாப்பிட்ட மாடு மாதிரி இருந்தது!''
    "தொச்சு காட்டின பசு மாட்டை விட்டால் வேறு பசுவே கிடையாதா? எல்லாம் ஒரேயடியாக அஸ்தமிச்சு போயிடுத்தா?''
    "ஏண்டி கமலா, ஏதோ பழைய கதையை சொல்லிப் பிலுபிலுன்னு சண்டை போட்டுண்டு இருக்கே?  இப்போ பசு மாடு வாங்கலாம்னு சொல்றாரே, அதுக்கு ஆக வேண்டியதைப் பாரு...''
    "நான் போய் எதைப் பாக்கறது? நான் தொச்சுகிட்ட சொன்னால், இவருக்கு உடம்பு எரியும்! அவரே எங்கேயாவது பார்த்து வாங்கட்டும்''
    "இதோ பார், கமலா... நீங்க இரண்டு பேரும் பேசி முடிஞ்சுதா...? நம்ப பால்காரரையே ஒரு மாட்டுச் சந்தைக்கு அழைச்சுக்கிட்டுப் போய் நல்ல பசு மாடா வாங்கிண்டு வரலாம்.''
    "பேஷாகச் செய்யுங்க!''
    அன்று மாலை லைப்ரரியிலிருந்து பசு வளர்ப்பு, பால் பண்ணை போன்ற புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போது, நடு ஹாலில் தொச்சு அமர்ந்து கொண்டு "பரமஹம்ஸ தொச்சானந்தா' என்கிற மாதிரி உபதேசம் செய்து கொண்டிருந்தான்: ''... அக்கா, இங்க இருக்கிற பசு மாடு இப்பல்லாம் பூஜைக்குத்தான் லாயக்கு. நம்ப ஊர் பசு மாடு கொடுக்கற பால் கொஞ்சம் கூட பிரயோஜனமில்லை. நம்ப ஊர் பசுக்கள், தங்கள் கன்றுக்குட்டிகளுக்கே லேக்டோஜன் தான் கொடுக்கறதுங்களாம்'' என்று சொல்லி உலக மகா ஜோக்கைச் சொன்னது போல் சிரித்தான்.
    அவனது அருமை அக்காவும் மாமியாரும் "தொச்சுவுக்கு எப்படித்தான் இப்படி ஜோக்குகள் தோன்றுகிறதோ தெரியவில்லை' என்று ஒரே டயலாக்கைச் சொன்னார்கள்.
    "அவனுக்கு மட்டும் டைம் கிடைச்சால் நகைச்சுவை கதையா எழுதித் தள்ளுவான். ஹøம்'' என்று என் மாமியார் அலுத்துக் கொண்டாள். என் தலையைப் பார்த்து விட்டு இந்த வசனத்தை "ஷாட்"டில் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்!
    "வாங்க அத்திம்பேர்... வாங்க. கைநிறையப் புத்தகம். எனக்கும் புத்தகம் படிக்கணும்னுதான் ஆசை. ஆமாம், அத்திம்பேர், என்னமோ ஆடோ மாடோ வாங்கப் போறீங்கன்னு கேள்விப்பட்டேன்...'' என்றான் தொச்சு.
    "ஆடு, மாடு மட்டும் இல்லை. ஒரு புலி கூட வாங்கப் போறேன். உங்க அக்காவுக்கு புலிப்பால் காப்பி சாப்பிடணும்னு ஆசை வந்துட்டா என்ன செய்யறது?''
    "ஒண்ணுடா தொச்சு, புலிப்பால் காப்பிக்கு பதில் எலிப்பால் காப்பி வேணும்னா இந்த வீட்டிலே உடனே கிடைக்கும். இந்த வீட்டில் எலிகள் குச்சிப்புடி, பரதநாட்டியம், ஒடிஸின்னு எல்லா டான்ûஸயும் எல்லா சமயத்திலேயும் ஆடிண்டு இருக்கு. உங்க அத்திம்பேருக்கு அதுங்க மேல உயிரு. அதனால தான் வேறு வீடு கூடப் பார்க்க மாட்டேன் என்கிறார்...''
    "கமலா... உனக்குத் தேவை என்ன? வீடா, மாடா?''
    "அடா...அடா...பட்டிமன்ற தலைப்பு மாதிரி சொல்லிப்புட்டாரே அத்திம்பேர்!'' என்று திடீரென்று ஒரு கீச்சுக்குரல் எனக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தது. தொச்சுவின் மனைவி அங்கச்சிதான். போச்சுடா!
    "அக்கா... அத்திம்பேர் எங்கோ அலைஞ்சுட்டு வர்றார். சூடா ஒரு கப் காப்பி கொண்டு வா. எனக்கு இப்ப வேண்டாம். டிபன் சாப்பிட்ட பிறகு சாப்பிடறேன்'' என்றான் தொச்சு.
    "தொச்சு... ஒரு பசு மாடு வாங்கலாம்னு ஐடியா...''
    "பசு மாடுதானே... வாங்குங்க. எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை...''
    "சொல்லு, இழுக்கறயே...''
    "அத்திம்பேர்... பசு மாட்டை விட எருமை மாடு பெட்டர் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்குத் தெரியாதா?''
    நான் வீட்டிற்கு வருவதற்கு முன் அக்காவும் தம்பியும் மாமியாரும் பேசி ரிகர்ஸல் நடத்தி இருக்க வேண்டும்.
    "தொச்சு. பசு மாடோ எருமை மாடோ எதுவாக இருந்தாலும் ஓ.கே. நமக்குத் தேவை பால், அவ்வளவுதான். ஆமாம்... எருமை மாடு சந்தை எங்கே நடக்கிறதுன்னு தெரியுமா?'' என்று கேட்டேன்.
    "அத்திம்பேர்... எப்போ என்கிட்ட வேலையைக் கொடுத்திட்டீங்களோ,  கவலையை விடுங்க.''
    "உன்னிடம் எங்கேப்பா நான் வேலையைக் கொடுத்தேன்?'' என்று கேட்கவில்லை. "உன்னிடம் வேலையைக் கொடுத்து விட்டு கவலையை விடுவதா? அதன் பிறகு தான் கவலையே ஆரம்பமாகும்' என்றும் கேட்கவில்லை. ஏன் என்று கேட்டு என் மானத்தை வாங்காதீர்கள்!
    அடுத்த இரண்டு வாரத்திற்கு தொச்சு தலைகாட்டவில்லை. அதாவது எனக்குத்தான் தலைகாட்டவில்லை. ஆனால் நான் இல்லாத சமயத்தில் அக்காவைப் பார்த்து விட்டுப் போயிருக்கிறான் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. பால்காரருடன் கமலாவும் சண்டை போடாததிலிருந்து எங்கள் வீட்டில் வெண்மைப் புரட்சி விரைவில் வெடிக்கக் கூடும் என்றும் தெரிந்தது. ஆனால் எனக்குத் தெரியாதது, இந்த வெண்மைப் புரட்சி வெடிப்பதால் என் பர்ஸிற்கு எவ்வளவு சேதம் ஏற்படும் என்று!
    "அத்திம்பேர்... பால் கவலையை விடுங்க. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரம் தான்! அதுக்கு முன்னே ஒரு தௌஸண்ட் ரூபீஸ் கொடுங்க'' என்றான் தொச்சு ஒருநாள் காலை.
    கடன் வாங்கும்போது இங்கிலீஷில் கேட்டால் கூச்சம் ஏற்படாது என்று யாரோ தொச்சுவிற்குச் சொல்லிக் கொடுத்து இருக்க வேண்டும். பார்க்கப் போனால், தொச்சுவைப் பொறுத்தவரை இந்த உபதேசம் தேவை இல்லாதது!
    "ஆயிரம் ரூபாய் என்று வாய் புளித்ததோ, மாங்காய்புளித்ததோ என்று கேட்டு விட்டாய். ரூபாய் என்ன இங்கே கூரையைப் பிய்த்துக் கொண்டா கொட்டுகிறது...? ஏண்டாப்பா, மாடு வாங்கற வேலையை உன்கிட்ட கொடுத்தேனோ...!''
    "என்ன அலுத்துக்கறீங்க? அவன் என்ன பத்தாயிரம், இருபதாயிரம் கேட்டானா?'' என்று கமலா "கார்கில்' குரலில் ஆரம்பிக்க,, கமலாவின் பின்னாலேயே வந்த கமலாவின் அம்மா, "அடி அசடு... அவ்வளவு பணமெல்லாம் அவா அம்மா, அக்கா தாண்டி கேட்கலாம்...'' என்றாள்!
    "பாவம், தொச்சு கேட்டதே இல்லை, பார்... கமலா, ஏதாவது சொல்லி என் கோபத்தைக் கிளறாதே. தொச்சு கேட்டவுடனே தலையை அடகு வெச்சாவது பணத்தைத் திரட்டிக் கொடுக்கணுமா?...''
    "உங்க தலையை அடகு வைச்சால், ஒண்ணேகால் ரூபா கூடக் கிடைக்காது.''
    "அக்கா... அக்கா... ஏன் வீணாக வார்த்தையை வளர்க்கறே? அத்திம்பேரே, பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டா வருகிறது என்று தானே கேட்டீர்கள். அத்திம்பேர், நீங்க ஜீனியஸ். எப்படித்தான் கரெக்டா வார்த்தையை செலக்ட் பண்ணி கேட்டீர்களோ!'' என்று தொச்சு சமாதான முயற்சியில் இறங்கினான்.
    "கேளுங்க, அத்திம்பேர். கூரை போடத் தான் ரூபாய் கேட்டேன். நாளைக்கு மாடு வந்தால் கொட்டகை வேண்டாமா? நம்ப மாட்டுக்குக் கொட்டகை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் தான் பால் நிறைய கறக்கும்னு இன்டர்நெட்ல படிச்சேன்'' என்றான்.
    "மாடு இருக்கிற திசையே தெரியலை. கூரையாம், கொட்டகையாம், இன்டர்நெட்டாம்.''
    "அத்திம்பேர்... மாடு இருக்கிற திசை வடக்கு. பதினைஞ்சு நாளா என் வேலையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு மாட்டு வேட்டையில தான் இருந்தேன்.''
    "நீ ஒரு வேலையில் இறங்கினால், உடம்பு கஷ்டத்தைப் பார்ப்பியா... பசியைப் பார்ப்பியா... தாகத்தைப் பார்ப்பியா...'' இந்த மாதிரி சர்ட்டிபிகேட்டை இதுவரை கமலா ஆயிரக்கணக்கில் கொடுத்திருப்பாள். (சே, தப்புப் பண்ணிவிட்டேன். கணக்கில் வைத்திருந்தால் கின்னஸ் ரிகார்ட் புத்தகத்தில் கமலாவின் பெயர் வரச் செய்திருக்கலாம்!)
    "கமலா... தொச்சுவைப் பேச விடேன்.''
    "அத்திம்பேர்... நான் நிறைய விசாரிச்சேன். மாடு வாங்கணும்னா குஜராத் போகணும். இல்லையென்றால் பஞ்சாப் போகணும். வேறு எங்கே மாடு வாங்கினாலும் அது சும்மாடுதான்!''
    "இதோ பாரு தொச்சு...''
    "சொல்லி முடிக்கறேன். அதுக்குள்ள அவசரப்படாதீங்க அத்திம்பேர்... இங்க இருக்கிற மாடுகள் கறக்கிற பாலில் கொஞ்சம் பால் பவுடர் போட்டால்தான் பாலா இருக்கும். இல்லாவிட்டால் பால், தபால் தான்.''
    "அதுக்காக டில்லி, பல்லின்னு யாருப்பா போகிறது? செலவைச் சொல்லு முதலில்.''
    "தொச்சு... நீ என்னமோ உல்லாசப் பயணம் செய்யறதுக்கு டில்லி போகறதாக உன் அத்திம்பேர் நினைக்கிறார். உள்ளூரிலேயே ஒரு மாடு வாங்கிப் போடு. அது ஆடிக் கறக்கிற மாடோ பாடிக் கறக்கிற மாடோ எப்படியிருந்தாலும் சரி... உன் அத்திம்பேருக்கும் ஆடவும் வரும், பாடவும் வரும்'' -- கமலா.
    "சும்மா இரு அக்கா... நீ ஏதாவது குத்தலாச் சொல்லிண்டு'' என்று அவள் வாயை அடைத்து (சும்மா ஒரு பாவ்லா என்று எனக்குத் தெரியும்!) விட்டு, "அத்திம்பேரே... பஞ்சாப், ஹரியானா பக்கம் இருக்கின்ற முர்ரா எருமைகளைப் போல அருமையான எருமைகள் எதுவும் கிடையாது...விலை கொஞ்சம் கூடக் குறைய ஆனாலும் வாங்கிப் போட்டு விட்டால், பால் தாராளமாகக் கிடைக்கும். பால், தயிர், வெண்ணெய், நெய் எதுக்கும் பஞ்சமே இருக்காது. மிதமிஞ்சி இருக்கும். "இந்தாடா தொச்சு' என்று எனக்குக் கூட கொடுப்பீர்கள்!''
    "உனக்கு மட்டும் இல்லை. உன் சித்தப்பா, பெரியப்பா அவங்களுக்கும் தருவேன். தொச்சு, இதெல்லாம் நடக்காத கதை'' என்றேன் தீர்மானமாக. எனது எத்தனையோ தீர்மானங்கள் தவிடுபொடி ஆனதுபோல் இதுவும் ஆயிற்று. முப்படை தளபதிகள் (மாமியார், கமலா, தொச்சு) மூவரின் முன்னே, நான் ஒரு சின்னக் கொசு!

— — —
    டெலிபோன் அலறியது. தொச்சுவாகத் தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டே (அல்லது பயந்து கொண்டே!) டெலிபோனை எடுத்தேன்.
    "அத்திம்பேர்... எல்லாரும் செüக்கியமா? டில்லியில் பயங்கர வெயில்... மெட்ராஸ் கத்திரி வெயில் இதுக்கு முன்னே ஒண்ணுமில்லை...''
    "சரிப்பா... போன காரியம் என்ன ஆச்சு? அதை முதலில் சொல்லு.''
    "நாலு பேரை விசாரிச்சேன். என்னோட ஸ்கூல்ல படிச்ச தோதாத்திரியைக் கண்டுபிடிச்சேன். அவன் என்னோட படிக்கறச்சே சுத்த வடிகட்டியாக இருந்தான். இப்போ ரொம்ப தேறிப் போய்ட்டான்.''
    "போகட்டும். அவனாவது தேறி விட்டானே?''
    "அத்திம்பேர்... என்னை நைசாகக் கிண்டல் பண்றீங்க... அதிருக்கட்டும்... நாளைக்கு "சஹாதாரா' போறேன். அங்கதான் நல்ல எருமைகள் கிடைக்குமாம். வெலையும் ஜாஸ்தி இருக்காது. தோதாத்திரிக்கு இங்கு நிறைய பேர் தெரிஞ்சிருக்கு. இன்னிக்கு குதுப்மினார் அழைச்சிண்டு போறான்...''
    "சீப்பாகக் கிடைச்சுதுன்னு குதுப்மினாரை வாங்கிடப் போறே! சட்புட்டுனு நல்ல எருமையாக வாங்கிண்டு ஊரைப் பார்க்கிற வழியைப் பாரு... நீ அங்கே இருக்கிற ஒவ்வொரு நாளும் டாக்ஸி மீட்டர் மாதிரி என் மீட்டர் ஏறுது...''
    "கால்நடை இலாகாவில் ஒரு வெடர்னரி டாக்டர் அவனுக்கு ஃப்ரண்டு. அவர்தான் ஹெல்ப் பண்றார். அப்புறம் ஏதாவது பாத்து கொடுன்னு சொல்லியிருக்கான்.''
    "ரொம்பப் பாத்து, ரொம்பக் கொடுத்துடப் போறே... உன் கை தாராளம்... அதிருக்கட்டும். மாட்டை எப்படிக் கொண்டு வரப் போறே?''
    "ஒரு சூட்கேஸில் எடுத்துக் கொண்டு வந்து விடட்டுமா, அத்திம்பேர்? இதோ பாருங்க, அத்திம்பேர். இந்த மாதிரி சில்லறைக் கவலை எல்லாம் என்கிட்டே விட்டுடுங்க...''
    "அதுவும் சரிதான். சின்னக் கவலைகள் உனக்கு. பெரிய கவலைகள் எனக்கு. அப்படித்தானே?''
    "போங்க, அத்திம்பேர். எப்பவும் எழுதற மாதிரி ஜோக்காகப் பேசுவீங்க. இது எஸ்டிடி கால். மீட்டர் விஷம் போல் ஏறிடும். வெச்சுடறேன்.''
— — —
    "கார்கில்ல சண்டை நடக்கறது. இப்போ அங்கே போயிருக்கிறாரே அக்கா... ஏன்க்கா, டில்லிக்குக் கிட்டதானே கார்கில்? ஏன் தான் இப்படிக் குண்டு போடற இடத்துக்கெல்லாம் போறாரோ?'' தொச்சுவின் மனைவி அங்கச்சி சாதாரணமாகப் பேசினாலே, அழுது கொண்டே முகாரி ராக ஆலாபனை பண்ணுவது போல் இருக்கும். இப்போது கேட்கவே வேண்டாம்!
    "அசடே, தொச்சு பெரிய கில்லாடி. சண்டை நடக்கிற இடத்துக்கு அவன் ஏன் போகப் போகிறான்? அம்மா, அங்கச்சிக்கு அரை கப் காப்பி கொடு'' என்று சொன்னாள் என் மனைவி.
    "காப்பின்னு சொன்னதும் ஞாபகம் வர்றது. ஆத்துல மருந்துக்குக் கூட காப்பிப் பொடி இல்லை. நானும் பத்து நாளா இவர்கிட்ட சொல்லிண்டே இருந்தேன். மாடு, மாடுன்னு அலைஞ்சுண்டிருந்ததில் அவருக்கு டைமே கிடைக்கவில்லை'' என்றாள் அங்கச்சி. சந்தடிசாக்கில் கந்தகப் பொடி வைப்பதில் அவள் கில்லாடி!
    மாடு பேரைச் சொல்லி, தொச்சு குடும்பம் நன்றாகத் தான் நம்மிடம் "கறக்கிறது' என்று ரகசியமாக நினைத்துக் கொண்டேன். உரத்த சிந்தனை செய்தால் கூட கமலாவுக்குக் கேட்டு விடும்! கமலாவுக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் பாம்புச் செவி, ஏன், என் கனவில் வரும் டயலாக்குகள் கூட அவளுக்குக் கேட்டு விடும்!
    "அங்கச்சி... நீ ஒண்ணும் கவலைப்படாதே. தொச்சுவுக்கு ஒண்ணும் ஆகாது. அவன் பத்திரமாகத் திரும்பி வருவான். வந்ததும் ஆஞ்சேநயருக்கு நான் வடைமாலை சாத்திடறேன்'' என்றாள் என் மாமியார்.
    "பாட்டி... பாட்டி... எவ்ளோ வடை மாலை சாத்தப் போறீங்க? எனக்கு வடை ரொம்பப் பிடிக்கும்'' என்று தொச்சுவின் பிரஜை ஒன்று குரல் கொடுத்தது.
    "யார் யாருக்கு என்னென்ன பிடிக்குமோ சொல்லிடுங்க. அதையெல்லாம் ஆஞ்சநேயருக்குச் சாத்தறதாக வேண்டிக் கொள்ளலாம்'' என்றேன்.
    "அம்மா... உன் மாப்பிள்ளை அகஸ்தியர் இப்போ துர்வாசராயிட்டார். கோபம் வந்துடுத்து.''
    அந்தச் சமயம், டெலிபோன் மணி அடித்தது. தொச்சுதான். ஸ்பீக்கர் ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு அங்கச்சி "ஓ"வென்று கத்திப் பேசினாள்.  "யாரு... நான் தான் அங்கச்சி பேசறேன். எப்படி இருக்கீங்க? சண்டை நடக்கிற இடத்துக்கெல்லாம் போகாதீங்க. உங்களைப் பத்தித்தான் ஒரே கவலை. மாடு என்னாச்சு? இதோ அத்திம்பேர்கிட்ட பேசுங்க.''
    "அத்திம்பேர்... ஒண்ணும் கவலைப்படாதீங்க. மாடு வாங்கிட்டேன். வேளைக்கு நாலு லிட்டர் கறக்கிறது..."எருமைன்னாலும் பார்க்கிறதற்கு லட்சணமாக இருக்கு...''
    "அப்போ அழகுப் போட்டியிலேயும் கலந்து கொண்டு பிரைஸ் ஜெயிக்கும். வருங்கால மிஸ் மெட்ராஸ் எருமையை வாங்கி இருக்கே. ரயிலில் "புக்' பண்ணறதைப் பத்தி விசாரிச்சு, உடனே "புக்' பண்ணிவிட்டு வாப்பா. அங்கச்சி ஒரே கவலைப்படறா. அவ, நாலு நாளா வீட்டில பச்சைத் தண்ணி கூடச் சாப்பிடலை. பசி, தாகம் எடுக்கும் போது இங்கே வந்து சாப்பிடறா...''
    "போங்க, அத்திம்பேர் எல்லா சமயத்திலேயும் டக், டக்னு எப்படித்தான் ஜோக் அடிக்க வருகிறதோ?''
    "எருமைக்கு எவ்வளவு ஆச்சு?''
    "அப்படி இப்படி அரைகுறை இந்தியில் பேசி பன்னிரண்டுக்கு முடிச்சுட்டேன்.''
    "சரிப்பா... சீக்கிரம் ஊரைப் பார்க்க வந்து சேரு. இப்பவே உங்க அக்கா ஃபில்டரில் காப்பிப் பொடியைப் போட்டு டிகாக் ஷன் ரெடி பண்ணி வெச்சிருக்கா. எருமை வந்தவுடன் பால் கறந்து உனக்குத் தான் முதல் கப் காப்பி...'' என்றேன்.
— — —
    "என்ன கமலா... எருமைக்குப் போய் பன்னிரண்டாயிரமா? தொச்சு ஜாஸ்திதான் கொடுத்துட்டான் போல இருக்கிறது...''
    "வேளைக்கு அஞ்சு லிட்டர் கறக்கற மாடுன்னா வெலையும் ஏறத்தாழத்தான் இருக்கும்.''
    "அஞ்சு லிட்டரா? தொச்சு நாலு லிட்டர் என்று தானே சொன்னான். அதுக்குள்ள அஞ்சாயிட்டது? அது டில்லியிருந்து வந்து சேர்றதுக்குள்ளே 30, 40 லிட்டர் கூட ஆயிடும். பால் கறந்து மாளாது.''
    "போறும்... அசடாட்டம் பேசாதீங்க. மாடு விக்கறவன்கிட்ட நாலு லிட்டர் கறக்கற மாட்டுக்கு நம் வீட்டுக்கும் வந்ததும் நல்ல தீனி, கீனி கொடுத்தால் மேலே ஒன்றிரண்டு லிட்டர் கூட கறக்கும்.''
    "தாராளமாகக் கறக்கட்டும். எனக்கு ஒரு ஆட்சேபணை யுமில்லை. மாட்டுக் கொட்டகையில் கோலம் போட்டு வை. தொச்சுகிட்டேயிருந்து தகவல் ஒண்ணும் காணோம்.''
    "நீங்க தான், போன் பேசினால் அதிக பில் ஏறிடும். அவசியமானால் மட்டும் பேசுன்னு சொல்லியிருக்கீங்களே? அத்திம்பேரோட பணம் என்றால் அவனுக்கே கரிசனம் ஜாஸ்தி. அதுவே உங்க...''
    "போறும் கமலா, ’என்னுடைய கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா’ன்னு ஆரம்பிச்சுடாதே'' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே டெலிபோன் மணி அடித்தது.
    "அத்திம்பேர்... தொச்சு பேசறேன்...ஒரு சின்ன பிரச்னை...''
    " நீயே ஒரு பிரச்னை. உனக்கு ஒரு பிரச்னையா?''
    "தமாஷை விடுங்க அத்திம்பேர். மாட்டை ரயிலில் புக் பண்ணப் போனேன். ஒரு ஆளை வெச்சு ஓட்டிக் கொண்டு போனேன், ரயில்வே ஆபீசுக்கு... அவங்க பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாங்க.''
    "என்ன குண்டு? அதைத் தூக்கி அப்படியே கார்கில்ல போட வேண்டியதுதானே?''
    "கரெக்ட் அத்திம்பேர். கார்கில் சண்டையாலதான் இப்ப பிராப்ளம். ராணுவ வீரர்களுக்கு சப்ளை, ஆயுதங்கள் டாங்க் என்று நிறைய அனுப்புவதற்கு கூட்ஸ் வண்டிகள் நிறையத் தேவைப் படுவதால் இன்னும் மூணு மாசத்துக்கு "மாடு' புக்கிங் போன்றவைகளுக்குத் தடை பண்ணியிருக்காங்களாம்.''
    "அடப்பாவமே, லாரியில் கொண்டு வர முடியாதா?''
    "லாரி சார்ஜில் நாலு மாடே வாங்கி விடலாம். ரயிலில் மூணு மாசம் புக்கிங் கிடையாதுன்னா என்ன செய்யறது?''
    "என்னப்பா தொச்சு... மாட்டை வாங்கறதுக்கு முன்னே இதையெல்லாம் விசாரிச்சிருக்க வேண்டாமா? சரி, இப்ப என்ன செய்யப் போறே? ... எருமையை யாருக்காவது வித்து விட்டு வந்து சேரு. டில்லி எருமைப் பால் இல்லாவிட்டால் குடி முழுகிப் போய் விடாது. வந்த விலைக்கு வித்துடு...'' 
    ஸ்பீக்கர் போனில் பேசிக் கொண்டிருந்ததால் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் கமலாவும், மாமியாரும். "பாவி பாகிஸ்தான் கடன்காரனால் நமக்குத்தான் கஷ்டம், நஷ்டம்'' என்று பொதுவாகச் சொன்னாள் கமலா, என் ரியாகஷ்னைக் கண்டுபிடிக்க!
    "கஷ்டம் தொச்சுவுக்கு... நஷ்டம் எனக்கு. போகட்டும். உள்ளூரிலேயே ஒரு மாடு வாங்கிக் கொண்டால் போச்சு'' என்றேன். தொச்சு மேல் இருந்த எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல்! (காட்டினாலும் பிரயோஜனமில்லை என்பதால்!)
    "ஆமாம். அவனுக்கு உடம்பு கஷ்டம் மட்டுமில்லை. அத்திம்பேருக்கு நஷ்டம் ஆயிடுத்துன்னா அவனுக்கு மனசு கஷ்டம் கூட. அவன் மனசு கிடந்து அடிச்சுக்கும்'' என்றாள் என் மாமியார்.
    சந்தர்ப்பத்திற்கேற்ப சட்டென்று டயலாக்குகளைத் தயார் பண்ணுவதில் என் மாமியாருக்கு இணை, என் மனைவி கமலாதான்!
    நாலு நாள் கழித்து தொச்சு வந்து சேர்ந்தான்.
    "அத்திம்பேர்... எருமையை விக்கிறதுக்குள்ள நான் பட்டபாடு! தோதாத்திரிக்கு நிறைய பேரை தெரிஞ்சிருந்தும் உண்டு, இல்லைன்னு ஆயிடுத்து. அடிமாட்டு விலை கேட்கிறானுங்க. கடைசியில் மாட்டை விற்றால் போதும் என்று ஆயிடுத்து. எட்டாயிரத்திற்குத் தள்ளி விட்டேன்.''
    "நாலாயிரம்தானே நஷ்டம். போகட்டும். நான் ஜாஸ்தி எதிர்பார்த்தேன். பாவம், உங்க அக்காவுக்குத்தான் ரொம்ப ஏமாற்றம்'' என்றேன்.
    "நீங்களே மனசு வந்து மாடு வாங்கணும்னு சொன்னது கடவுளுக்கே பொறுக்கலை. கார்கில்ல சண்டையை வரவழைச்சுட்டார்.''
    "கார்கில் போர் முடியட்டும் கமலா. நானே போய் ஒரு நல்ல முர்ரா எருமையை வாங்கிண்டு வரேன்.''
    "வேணாம்பா. வேண்டவே வேண்டாம். அப்போ ஒரு உலக சண்டையே வந்தாலும் வந்து விடும்...'' என்றாள் கமலா.
— — —
    "ஏண்டா கடன்காரா... இப்படி பாலில் தண்ணீர் கொட்டறே. இது பாலாறா, புழலேரியா, செம்பரம்பாக்கமா?'' -- கமலா தான்.
    ஆஹா! வழக்கமான சுப்ரபாதம் துவங்கி விட்டது!

20 comments:

  1. அருமையான நகைச்சுவைக் கதை. நன்றி! ஒரு சிறு விண்ணப்பம். முந்தையப் பதிவுகளை கடைசியில் லிஸ்ட் செய்யாமல் முதலிலேயே லிஸ்ட் செய்தால் சவுகரியமாக இருக்கும்.

    ReplyDelete
  2. Superb! நகைச்சுவை பாலாறு மாதிரி பாய்கிறது. - ஜெ.

    ReplyDelete
  3. <<< Subbaraman said...அருமையான நகைச்சுவைக் கதை. நன்றி! ஒரு சிறு விண்ணப்பம். முந்தையப் பதிவுகளை கடைசியில் லிஸ்ட் செய்யாமல் முதலிலேயே லிஸ்ட் செய்தால் சவுகரியமாக இருக்கும். >>>தெரிந்தவரை செய்திருக்கிறேன். பாருங்கள். ---கடுகு

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    சென்ற வாரம்தான் ஸ்ரீமான் சுதர்சனம் (4வது முறையாக)படித்தேன். குடவாசலுடன் ஒப்பிட்டால், தொச்சு தங்கம் இல்லையா! ஆனால் குடவாசல் சுதர்சனத்தின் தங்கை கணவன். தொச்சு மச்சினன் ஆயிற்றே. குடவாசல் அதிகாரம் செய்து சாதிப்பதை தொச்சு அன்பாக(!) சாதிக்கிறார்.

    மச்சினர் உடையோர் மனம் கலங்க மாட்டார்!

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு; நன்றி. -

    ReplyDelete
  6. Sir,
    Superb!!!!!! ( How people are managing you at home??????? Especially your mother in law!!!)

    Kothamalli

    ReplyDelete
  7. <<< Anonymous said..
    Superb!!!!!! ( How people are managing you at home??????? Especially your mother in law!!!)>>>
    அது தொழில் ரகசியம்....!

    ReplyDelete
  8. Your blog is really refreshing my mind. i used to read your post every half an hr. i will stop working and read a part of your post and continue my work and again the same. Thanks!

    ReplyDelete
  9. <<< Altruist said... Your blog is really refreshing my mind. >>>>
    Thanks.I know, after reading for few minutes, you will feel office work is more interesting and less boring!... Am I right? :):)

    ReplyDelete
  10. Probably his (Altruist's) boss in on constant round supervising his staff! Luckily I am retired and there is none to bother me from enjoying your writing non-stop! - R.J.

    ReplyDelete
  11. //Thanks.I know, after reading for few minutes, you will feel office work is more interesting and less boring!... Am I right? :):)//
    Not like that.... (lol)...your blog is very decent and hilarious. Your writing reminds me of "Devan","Lakshmi" and "Mereena". I could hardly see some decent writers in the sequel except you.

    ReplyDelete
  12. //Jagannathan said...
    Probably his (Altruist's) boss in on constant round supervising his staff! Luckily I am retired and there is none to bother me from enjoying your writing non-stop! - R.J.//
    Not like that.. my job is very monotonous thats why i feel this blog as very relaxing. This blog gives a free "Laughter therapy"!

    ReplyDelete
  13. << >

    Thank god you did not type a 'S" before 'laughter'!

    ReplyDelete
  14. இந்திரன்... சந்திரன்.

    :-)))

    ReplyDelete
  15. ரசித்து, ருசித்து படித்தேன். அருமையான நகைச்சுவை கதை.

    பாலில் தண்ணீர் அதிகமாக இருந்ததற்கு இன்னுமொரு காரணம்: பால்காரர்களின் பேரிலேயே ஜலம் இருந்தது(வேதாசலம் & தணிகாசலம்)

    நன்றி. உங்களுடைய புகைப்படத்தை தேடினேன், கிடைக்கவில்லை.

    சரவணபாபு ஸ்ரீனிவாசன்

    ReplyDelete
  16. என் படம் எதுக்கு? அதுவும் எருமைமாடு பக்கத்ததில் போட்டால், எது நான் என்று உங்களூக்குக் குழப்பம் வந்ததாக எழுதுவீர்கள்.

    ReplyDelete
  17. "பரமஹம்ஸ தொச்சானந்தா' படித்ததும் நான் வேலை பார்ப்பது நூலகத்தில் என்பதையும் மறந்து சிரித்துவிட்டேன். உண்மையிலேயே Laughter therapy than!

    ReplyDelete
  18. 2010 ஆகஸ்டில் போட்ட பதிவை சுமார் ஒரு வருஷம் கழித்துதான் பார்க்கிறீர்களா?
    .ஆறிப போயிருந்தாலும் ஊசிப் போகவில்லை!

    ReplyDelete
  19. உங்கள் பதிவுகள் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் சுடச்சுடத்தான் இருக்கின்றன. ஆறிப்போகாது...நேரம் கிடைத்தால் SAB Tvயில் வரும் Tharakh Mehtha Ka Ulta Chashma என்ற நகைச்சுவைத் தொடர் பார்க்கவும். (நான் சீரியல் பார்க்கும் ரகம் அல்ல)அதில் வரும் பல கேரக்டர்கள் நீங்கள் உருவாக்கும் கேரக்டர்களைப் போலவே இருக்கும். குறிப்பாக சுந்தர் என்ற பாத்திரம் அப்படியே தொச்சு மாதிரியே இருக்கும்.

    ReplyDelete
  20. அப்படியா... மிக்க சந்தோஷம்.

    இப்போது நான் வெளிநாட்டில் இருக்கிறேன். இங்கு SAB பார்க்க இயலாது.:(

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!