August 18, 2010

சுலப சமையல்: மைசூர்ப்பாகு செய்வது எப்படி? - கடுகு

 வணக்கம்..இங்கு தரப்பட்டுள்ள குறிப்பைப் பார்த்து மைசூர்ப்பாகு செய்து உங்கள் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்!

கணவரிடம் முதலில் சொல்லவேண்டியது:
“இதோ பாருங்கள். நான் மைசூர்ப்பாகு செய்யப் போகிறேன். உங்கள் புத்திர காமேஷ்டிகளை எல்லாம் அரை மணி நேரம் பார்த்துக் கொண்டிருங்கள்” என்று  சொல்லுங்கள்.

பிறகு மேல் பரணில் இருக்கும் அலுமினிய டப்பாவைச் சிரமப்பட்டு கீழே இறக்கித் திறவுங்கள். அது சீயக்காய் பொடி டப்பாவாக  இருக்கும், அதைத் தூக்கி வைத்து விட்டு பிளாஸ்டிக் டப்பாவை எடுக்கவும். “ஏய்..ராஜி, சமையல் அறைக்கு யாரும் வரக்கூடாது. வந்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன்” என்று கதவருகில் நிற்கும் ராஜியைப் பார்த்துக் கத்துங்கள்.

பழைய நியூஸ் பேப்பரைப் பிரித்துப் போட்டுக் கடலை மாவைச் சலிக்க...,,,  ஒரு நிமிஷம்..இருங்கள்  .  “அடே ராம்ஜி! போய் மாடி வீட்டு மாமியிடமிருந்து மாவு சல்லடை வாங்கி வா” என்று சொல்லவும். இதற்கிடையில் வனஸ்பதி டப்பாவில் நெய் குறைவாக இருப்பதைப் பார்க்கவும்.
“உங்களைத் தானே? கோடிக் கடைக்குப் போய்  அரைக் கிலோ வனஸ்பதி வாங்கி வாருங்கள்” என்று கணவரிடம் ஆர்டர் கொடுக்கவும்.

சல்லடையை எடுத்துக் கொண்டு வரும் ராம்ஜியையும், ராஜியையும் இரண்டு அறை வைக்கவும். “நான், நீ” என்று சண்டை போட்டு சல்லடையைக் கிழித்து விட்டீர்களே, சனியன்களே!” என்று மேல் ஸ்தாயில் அலறவும்.
“மாவில் பூச்சியோ, புழுவோ இருந்து விட்டுப் போகட்டும்” என்று கூறி விட்டு மாவை அளந்து எடுத்துக் கொள்ளவும்.

“பணம் கொடு,.. வனஸ்பதி  வாங்கிண்டு வரேன்: என்று சொல்லும் கணவரிடம் “என்கிட்டே ரூபாய் ஏது?  நான் அச்சடித்துதான் கொடுக்க வேண்டும். மசமச என்று இருக்காமல், போய் அக்கவுண்டில் வாங்கி வாருங்கள். எல்லாம் நான் சொல்லித்தரணுமா?” என்று கணவரைச் சாடவும்.

சமையல் குறிப்புப் புத்தகத்தைத் தேடவும்.  “வீட்டில் ஒரு சாமான் வெச்ச இடத்தில் இருக்காது. போதாதற்கு உங்க அம்மா இங்கே வந்து சீராடிவிட்டுப் போய்விட்டாள். எந்த சாமானை எங்கே மாத்தி வெச்சாளோ, இல்லை தன் பெட்டியில்தான் வெச்சாளோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.” என்று மாமியாரைப் பற்றி ( சல்லடை இல்லாமலேயே) சலித்துக்(!) கொள்ளவும்.  

காமிரா அறை, ஸ்டோர் ரூம் எல்லாம் தேடிய பிறகு, சமையல் அறையிலேயே பிறையில் இருக்கும். சமையல் குறிப்புப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளவும்.
“கோபு,  என் மூக்குக் கண்ணாடியைக் கொண்டு வாடா” என்று குரல் கொடுக்கவும்.
வாயிற்கதவை யாரோ தட்டுவதைக் கேட்டுப் போய்ப் பார்க்கவும். “ஐயா வீட்டில் இருக்கிறார். நாளைக்கு மத்தியானம் வாப்பா” என்று எவர்சில்வர் பாத்திரக்காரரை அனுப்பி வைக்கவும்.
கோபு, லதா இரண்டு பேர் முதுகிலும் அறையவும். துடைப்பத்தால் உடைந்த மூக்குக் கண்ணாடியின் தூள்களைப் பெருக்கவும்.
சமையலறையில் கடலை மாவில் நீந்திக் கொண்டிருக்கும் சுதாவை சபித்துக் கொண்டே குளிப்பாட்டுங்கள்.
“தாகம், தண்ணீர்” என்று கேட்டு வரும் பத்ரிக்கு ஒரு  டம்ளர் தண்ணீர் கொடுங்கள். சிதறி இருக்கும் மாவைத் திரட்டுங்கள். புரை ஏறிய பத்ரியின் தலையில் தட்டுங்கள். அவன் கையிலிருந்த டம்ளர் குலுங்கி, தண்ணீர் மாவின் மீது கொட்டிய பகுதியைத் தனியே எடுத்து விடுங்கள்.
சமையல் குறிப்புப் புத்தகத்தைப் புரட்டவும். 87-லிருந்து 102-ம் பக்கம் வரை கிழிந்திருப்பதைப் பார்த்து பல்லைக் கடிக்கவும். “மைசூர்பாகு செய்முறை 94-ம் பக்கம்னு போட்டிருக்கு. அந்த பக்கத்தை கிழிச்சி போட்டிருக்கிறதுகள் பூதங்கள்... ஆண்டிச்சி பெத்தது ஐந்தும் குரங்குகள்” என்று சொல்லிக்கொண்டே தலையில்  அடித்துக் கொண்டு விட்டு, அடுப்பில் வாணலியைப் போட்டு விட்டு கேஸ் அடுப்பைப் பற்ற  வைக்கவும். பக், பக் என்று நாலு தடவை துடித்து விட்டு அடுப்பு அணைவதைப் பார்த்து, “அடப்பாவமே, காஸ் கோவிந்தா?” என்று வெங்கடாசலபதியைக் கூப்பிட்டு  அலுத்துக்  கொண்ட பிறகு, கிரஸின் ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள்.
பின்கட்டு மாமியிடமிருந்து ஸ்டவ் பின்’ வாங்கி வர ராஜியைத் துரத்துங்கள். ராஜி வெறும் கையுடன் வந்ததும்,‘கேட்டை, மூட்டை, செவ்வாய்’ என்று முணுமுணுத்துக் கொண்டே, ”அறுந்த கைக்கு சுண்ணாம்பு தர மாட்டாளே?” என்று பின்கட்டு மாமியை சபிக்கவும். ஸ்டவ்வை பற்ற வையுங்கள். வாணலியை எடுத்து அடுப்பில் வையுங்கள். ஒரு மூலையாக எரிவதைப் பார்த்து ‘கர்மம்’ என்று ஸ்டவ்வைத்  திட்டுங்கள்.
ஓரளவு சூடாகி விட்டிருந்த வாணலியை கவனக் குறைவாகத் தொட்டதால் எற்பட்ட தீக்காயத்திற்கு மருந்து போடவும். பிறகு சிறிது நெய்யை விட்டுக் கடலைமாவை லேசாக வறுக்கவும். வாசற்கதவு காலிங்-பெல் சப்தத்தை கேட்டுவிட்டு  கதவைத் திறக்கப் போகவும். “நெய் கால் கிலோவா வங்கிண்டு வந்திருக்கீங்க? இது எந்த மூலைக்கு?  இவ்வளவு வடிகட்டியா இருக்கீங்களே.”  என்று கணவரைக் காயவும்
 “கடையில் இவ்வளவுதான் இருக்கிறது என்று கடைக்கார சொன்னார்”  என்று சொல்லும் கணவரை[ப் பார்த்து தலையில்லேசாகத் தலையில் தட்டிக் கொள்ளவும். ‘விடியா மூஞ்சி வேலைக்குப் போனால் வேலை கிடைக்காது. வேலை கிடைச்சலும் கூலி கிடைக்காது’ என்ற பொன்மொழியை உதிர்க்கவும்.  

வாணலியில் கருகிப் போய் விட்டிருக்கும் மாவைக் குப்பைத்தொட்டியில் கொட்டி விட்டு, மறுபடியும் மாவை அளந்து வறுத்து எடுக்கவும்.
இடையே சர்க்கரை டப்பாவை எடுக்கவும். கியூவில் நிற்கும் சுதா, ராஜி, லதா, கோபு, ராம்ஜி எல்லோருக்கும் ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போடுங்கள். “இன்னும் கொஞ்சம் கிடையாதுடா. இப்படி சர்க்கரை பலகாரம் பண்ணினால் மைசூரும் கிடையாது. பாகும் கிடையாது. எல்லாரும் ஹாலுக்குப் போங்க” என்று கத்தல் போட்டுத் துரத்தவும்

மாவு பொன்னிறமாக வறுபட்டதும் இறக்கி வைக்கவும். வேறொரு பாத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் போட்டு அடுப்பில் வைக்கவும்.
“என்னடி அழுகை?” என்று கேட்டுக் கொண்டே ஹால் பக்கம் போகவும். ‘வீல்’ என்று கதறிக் கொண்டு, மாடிப்படியின் கீழ் கிடக்கும் லதாவைத் தூக்கிக் கொள்ளுங்கள்.
“ஏண்டா, சனியனே! குழந்தையை மாடியிலிருந்து தள்ளி விட்டாய்?” என்று திட்டி விட்டு, கோபுவை சற்று விளாசவும்.
“உங்கள் மாதிரிதானே இருக்கும் உங்கள் புத்திரசிகாமணிகளும்! அந்தக் காலத்தில் நீங்கள் ஆடாத ஆட்டமா?” என்று கணவரை இடித்துக் காட்டவும்.
குழந்தையைச் சமாதானம் பண்ணவும்.
”என்ன ஆச்சு”  என்று கேட்டுக்கோண்டே வரும் பின்கட்டு மாமியிடம் “ஒண்ணுமில்லை மாமி. படியிலிருந்து விழுந்து விட்டாள்” என்று  சொல்லவும். ”கை எலும்புக்கு ஏதாவது ஆகி இருக்குமோ?” என்று கவலைப்படுங்கள்.
டாக்சியில் கணவருடன் ஆஸ்பத்திரிக்குப் போகவும். பிளாஸ்டர் மாவு கட்டுப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வரவும்.
காய்ந்து கருகிப் போயிருக்கும் சர்க்கரையைப் பாத்திரத்தோடு ஸிங்கில் தூக்கிப் போடவும்.
“ஏன்னா, ஐம்பது ரூபாய் எடுத்துக் கொண்டு போய், காமாட்சி கேஃபிலிருந்து மைசூர் பாகு வாங்கி வாருங்கள்” என்று கணவரிடம் சொல்லி விட்டு ‘அம்மாடி’  என்று ஈசிசேரில் படுக்கவும்.
அரை மணி நேரத்தில் மைசூர் பாகுடன் கணவர் திரும்பியதும்  அனைவருக்கும் ஸ்வீட் கிடைத்து விடும். குழந்தையின் பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும்.

(அடுத்த வாரம், சுலப சமையல் குறிப்புடன் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது பர்வதவர்த்தினி மாத்ருபூதம்.)

13 comments:

 1. பிரமாதமான சமையல் குறிப்பா இருக்கே.. கலக்கல்!!!

  ReplyDelete
 2. //“உங்கள் மாதிரிதானே இருக்கும் உங்கள் புத்திரசிகாமணிகளும்! அந்தக் காலத்தில் நீங்கள் ஆடாத ஆட்டமா?” // மாமி சின்ன வயசில் மாமாவாத்துக்குப் பக்கத்தாகமா?!
  காமாட்சி கேஃபில் அக்கௌண்ட் வைத்திருந்தாளா? வனஸ்பதி வாங்கவே பணம் இல்லை என்றாரே! எப்படியோ எஙளுக்கு மைசூர்பாகு கொடுத்து விட்டீர்கள், நன்றி. - ஜெ.

  ReplyDelete
 3. þÐìÌ §Áø ²¾¡ÅÐ ±Ø¾ þÕ측? ¿øÄ ¿¨¸Í¨Å ¸¨¾ ÀÊò¾ ¾¢Õôô¾

  ReplyDelete
 4. மைசூர்பாக் செய்வதை விட தங்கமணி கம்மல்களைத் தொலைப்பது மிகக்கடினமான காரியம். ஆனால் அவள் கணவன் ரங்கமணி அதற்கு பின்னால் செய்ய வேண்டிய வேலையோ மிகக் கடினம். எப்படி? விளக்குகிறேன்:

  அதைச் செய்ய தங்கமணி கீழ்க்கண்ட ஸ்டெப்களில் செல்ல வேண்டும்.
  1. ஒரு வெள்ளிக்கிழமையாக பார்த்து தேர்ந்தெடுக்கவும். மாதத்தில் கடைசி வெள்ளிக் கிழமையாக இருப்பது முக்கியம். கணவரது அலுவலகத்தில் நிதியாண்டு முடிவு களேபரம் இருப்பது அவசியம். ஏன் என்பதை கடைசியில் நீங்களே உணரலாம்.
  2. சமையல் மேடையின் மேல் சிங்க் இருக்குமிடமாகப் பார்த்து பக்கத்தில் உட்காரவும். சேலைத் தலைப்பு மேடை மேல் பரவியிருக்க வேண்டும். சிங்க் குழாய் திறந்து தண்ணீர் உளே விழுந்து கொண்டிருக்க வேண்டும்.
  3. அவ்வாறு பரவிய தலைப்பின் மேல் ஒரு கிண்ணியை வைக்க வேண்டும். அதில் மூக்குத்தி/கம்மலைக் கழட்டிப் போடவும்.
  4. கையில் செல்பேசி இருப்பது அவசியம். தோழி குட்டி ரேவதி பற்றி எஸ்ரா அவர்கள் கூறியது, பக்கத்தாத்து கோமளம் மாமி அப்பளம் இடும்போது, அவாத்து மாமா நான்கைந்து அப்பள உருண்டைகளை லவுட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் மேற்படி கோமளவல்லி மாமியால் கையும் களவுமாக பிடிபட்டு அர்ச்சிக்கப்பட்டது போன்ற நாட்டுக்கே முக்கியமான விஷயங்களை செல்பேசியை தலையை காக்காய் மாதிரி ஒரு பக்கம் சாய்த்து தோளின் மேல் வைத்து கன்னத்தால் அழுத்திக் கொண்டே பேச வேண்டும்.
  5. வேலைக்காரி ஜயகவுசல்யாவை விட்டு “அம்மா, பாத்திரம் தேய்க்க புளி போடு, புளி போடு” என்று காது புளிக்கும் வரை கத்தச் சொல்ல வேண்டும்.
  6. பேச்சு தடைப்பட, “இதோ போட்டுத் தொலைக்கிறேன்” என கத்திக் கொண்டே விருட்டென எழுந்திருக்க வேண்டும்.
  7. கிண்ணி சிங்கில் விழுந்து கவிழ, கம்மல் தண்ணீரில் விழுந்து சிங்க் வெளிக் பைப்புக்குள் செல்ல வேண்டும்.

  ஆக இம்மாதிரி ஏழுக்கு குறையாத கஷ்டமான ஸ்டெப்புகள் தங்கமணிக்கு உள்ளன.

  ரங்கமணி செய்ய வேண்டியதோ ரொம்ப சுலபமான வேலை. சிங்கிலிருந்து வெளியே சென்ற கம்மலை சாக்கடையில் கையை விட்டு நோண்டி அடுத்த சில மணிகளுக்குள் எடுக்கலாம், இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு, அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வேறு கம்மல் வாங்குவது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்
  பி.கு. இது குறித்து நான் இட்ட ஒரு பதிவு: http://dondu.blogspot.com/2009/02/blog-post_14.html

  ReplyDelete
 5. Good Thig.. அவர்களுக்கு:
  நான் தான் புரிகிற மாதிரி எழுதுவதில்லை என்பதால் நீங்களும் இப்படி எழுதவேண்டுமா?

  ReplyDelete
 6. <<<>>>>>>
  நல்ல காலம். அல்வா செய்யும் முறையை எழுதவில்லை. எழுதி இருந்தால் “
  எங்களுக்கு அல்வா கொடுத்து விட்டீர்கள்”என்று எழுதி இருப்பீர்கள்!

  ReplyDelete
 7. டிஸ்கியில் Good thing எழுதியது இதுதான்.

  இதுக்கு மேல் ஏதாவது எழுத இருக்கா? நல்ல நகைசுவை கதை படித்த திருப்தி.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 8. மாமியாரைப் பற்றி ( சல்லடை இல்லாமலேயே) சலித்துக்(!) கொள்ளவும்.
  ரொம்ப “கெட்டி”காரர் சார் நீங்கள்....!

  ReplyDelete
 9. ஆஹா..அருமை! காமாட்சி கேஃப் மைசூர் ஃபா!

  ReplyDelete
 10. இப்படி ஒரு மைசூர்பாக் குறிப்பை நான் எங்குமே படிச்சதில்லை :) சுலப சமையல் என்றதுமே ஆஹா நமக்கு எதுனா கிடைக்குமா காலையில் அவசரமா எதாவது செய்து பிள்ளைகளுக்கு கட்டி கொடுத்துட்டு ஓடறோம் ஆபிசுக்கு. இப்படி ஏதாச்சும் சுலப சமையல் கிடைச்சா புதுசா எதானும் செய்த மாதிரியும் இருக்குமேன்னு வந்தா... ஹாஹா படிச்சதுமே சிரிப்பை அடக்க முடியவில்லை சார்.. மைசூர் பாக் செய்றதுக்குள்ள மாமியின் டென்ஷன் பலமடங்கு கூடி பிபி ஏறி இருந்திருக்குமே :) அப்புறம் எங்கிருந்து மைசூர்பாக் செய்ய :) கடையில் வாங்கிட வேண்டியது தான்.. அருமையான ரசிக்க வைத்த நகைச்சுவை பகிர்வு சார்.. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

  ReplyDelete
 11. Manjubashini Sampathkumar அவர்களுக்கு, உங்கள் பாராட்டு கிடைத்தது. மிக்க நன்றி.(2010ல் போட்ட பதிவு இப்போதுதான் தங்கள் பார்வையில் பட்டிருக்கிறது. சிரிக்கவும் சிந்திக்கவும் பல பதிவுகள் உள்ளன. - கடுகு

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :