August 09, 2010

பாரதி ராஜாவும் நானும்.-- கடுகு

”ஹலோ பாரதிராஜா.. எப்படி இருக்கீங்க?’
“அடேடே.. நீங்களா?  உங்களுக்கு நான் போன் பண்ணேனே நேற்று கூட..”
---  இப்படித்தான் கட்டுரையை ஆரம்பிக்க ஆசை. ஆனால் பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்க வேண்டும் என்பது என் கொள்கையாதலால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பாரதிராஜாவை ஒரே ஒரு தரம்தான் சந்தித்து இருக்கிறேன். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறேன். (“அப்படியா, இதை வைத்துக் கொண்டு பத்து பதிவு எழுதிவிட மாட்டீர்களா” என்று பலர் சொல்லக்கூடும். இல்லை, ஒரு பதிவு தான் எழுதப் போகிறேன்.)
*                *                      *
            ஒரு சமயம் டில்லியிலிருந்து சென்னை வந்திருந்தபோது வழக்கம்போல் ஆசிரியர் சாவி அவர்களை\ச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் ‘சாவி பதில்கள்” எழுதி கொண்டிருந்தார்.
“இந்தாங்க  ஏழு, எட்டு கேள்வி கார்டுகள். பதில் என்ன எழுதலாம் என்று பாருங்கள்” என்றார்.
கேள்விகளில் ஒன்று, அப்போது  பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்த  ‘வேதம் புதிது’ படத்தைப் பற்றி இருந்தது. இதுதான் கேள்வி: ”பாரதிராஜா, தன் வேதம் புதிது படத்தில் நமது வேதங்களைத் தாக்கி சில வசனங்களை சேர்த்திருக்கிறாராமே?
   சாவியிடம் கேள்வியை படித்துவிட்டு, நான் சொன்னேன், “படம் தயாரிப்பில் இருக்கிறது.. இந்த சமயத்தில் எப்படி கருத்துக் கூறமுடியும்?  பாரதிராஜா நமது வேதங்களைத் தாக்ககூடியவர் அல்ல. அப்படியே அவர் தாக்கி இருந்தாலும் கவலை வேண்டாம். நமது வேதங்களைச் சுலபமாக யாராலும் அழித்துவிட முடியாது.” என்கிற ரீதியில் சொன்னேன். நீங்கள் சொல்வது சரிதான். அப்படியே எழுதிவிடுகிறேன்.” என்று சொல்லியபடியே அதை எழுதிவிட்டார்.  இரண்டு தினங்களுக்குப் பிறகு சாவி இதழ் வெளியானவுடன், பாரதிராஜா இதைப் பார்த்திருக்கிறார். உடனே சாவி அவர்களுக்குப் போன் பண்ணி ”என்ன சார்,.கேள்வி பதில் பகுதியில் இப்படி எழுதி இருக்கிறீர்களே... வேதம் புதிது படத்தில் நான் தவறாக ஒன்றுமே சொல்லவில்லையே,,” என்பது மாதிரி சற்று வருத்தத்துடன் கேட்டிருக்கிறார்..
அதற்குச் சாவி “ஒன்று செய்கிறேன்.. உங்களைப் பேட்டிகாண ஒருத்தரை அனுப்புகிறேன். விரிவாக எல்லாவற்றையும் சொல்லுங்கள். அப்படியே போட்டுவிடுகிறேன்” என்றார்.. அன்று மாலை சாவி அவர்களைப் பார்க்கப் போனபோது, விவரங்களைச் சொல்லி விட்டு “ நீங்கள் போய் வந்தால் எனக்கு மட்டுமல்ல. பாரதிராஜாவுக்கும் திருப்தியாக இருக்கும்” என்றார்.. நான் “சரி” என்றேன். பாரதிராஜாவுக்குப் போன் செய்து, “எப்போது பேட்டி வைத்துக் கொள்ளலாம்?” என்று கேட்டார்.. மறு நாள் காலை பத்து மணிக்கு அலுவகத்தில் சந்திக்கலாம் என்று பாரதிராஜா சொன்னார்.
அவரிடம் சாவி, ”பத்துமணிக்குச் சரியாக ஒருவர் வருவார். அவரைக் காத்திருக்க வைக்கக்கூடாது. உடனே அவரை நீங்கள் சந்திக்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் வரை பேட்டி நீடிக்கலாம் ” என்றார்..  பாரதிராஜா ”சரி, சார்” என்றார்.
+          +                          +                     +                              +
மறுநாள் காலை  9.55க்கு பார்சன் காம்ப்ளெக்ஸிலிருந்த பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு நான் சென்றேன்.  அலுவலகத்தில் இருந்தவர்களிடம் பெயரைச் சொன்னதும் “உட்காருங்கள்... இதோ சார் வந்து விடுவார்:”என்றார்கள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு “வாங்க சார்...மேலே போகலாம்.”: என்று  சொல்லி அழைத்துப் போனார்கள்.
பாரதிராஜாவின் அறைக்குள் நான் நுழைந்ததும் முகமலர்ச்சியுடன் வணக்கம் சொன்னார்.. “வாங்க சார்... இன்று ஆயுத பூஜை.  பூஜையை முடித்துவிட்டு பேட்டியைத் துவங்கலாமா.. நீங்களும் பூஜையில் கலந்துகொள்ளுங்களேன்” என்றார். பூஜை முடிந்ததும் பேட்டியைத் துவக்கினேன்
தங்கு தடை  இல்லாமல் ஒரு கம்பீரத்துடன் தெளிவான கருத்துகளை மளமளவென்று சொன்னார், நான் கேட்ட கேள்விகள் அவருக்குப் பிடித்திருந்தன,
பேட்டி சாவியில்  வெளியானதும், அவர் சாவிக்குப் போன் பண்ணி தனது மகிழ்ச்சியையும் கட்டுரைக்குப் பாராட்டையும் தெரிவித்தார்,
*                              *                             *                       *
           இதற்கு சில வருஷங்களுக்கு முன்பு  நடந்ததை இப்போது சொல்கிறேன்.
டில்லியிலிருந்து சென்னை வந்திருந்த சமயம் பாரதிராஜாவின் ‘புதுமைப் பெண்’ படத்தைப் பார்க்கப் போனேன்.
படத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு லேசான வியப்பு ஏற்பட்டது. (படம் எல்லா விதத்திலும் பிரமாதமாக இருந்தது என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.)  வியப்பிற்குக் காரணம், நான் எழுதிய ‘அலை பாயுதே கண்ணா” என்ற நாவலில் வரும் பல அம்சங்கள் அதில் இருந்தன. நிறைய ஒற்றுமைகள் இருந்தன. நம்முடைய நாவலைப் படித்து, அதன் பாதிப்பால் உருவான கதையாக  இருக்குமோ என்று நான் எண்ணும் அளவுக்கு பல ஒற்றுமைகள் இருந்தன.
        டில்லிக்குத் திரும்பியதும் பாரதிராஜாவிற்குக் கடிதம் எழுதினேன், ஒற்றுமைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு எழுதினேன்,. முடிவுரையாக ”என்னுடைய நாவலைப் பார்த்துக் காபி அடித்து இருக்கிறீர்கள் என்று நான் கூறவில்லை., வழக்குத் தொடரப் போகிறேன் என்றும் நினைத்துவிடாதீர்கள் .... சிற்சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் சில அம்சங்களில் ஒற்றுமைகள் ஏற்படக்கூடும். ஒருக்கால் உங்கள் உதவியாளர்கள் யாராவது என் நாவலைப் படித்து அதிலிருந்து சில சம்பவங்களை சொல்லியிருக்கலாம்” என்று எழுதினேன். இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு பாரதிராஜாவிடமிருந்து கடிதம் வந்தது. ”உங்கள் நாவலை நான் படிக்கவில்லை. அதை வாங்கிப் படித்துவிட்டு எழுதுகிறேன். ”சில சமயம் இரண்டு பேருடைய கற்பனையில் ஒரே மாதிரியான அம்சங்கள் வரக்கூடும் என்று தாங்கள் பெருந்தன்மையுடன் எழுதி இருந்தீர்கள். அதைப் பாராட்டுகிறேன்” என்கிற ரீதியில் சற்று நீளமான கடிதம் எழுதி இருந்தார்,
அதன் பிறகு அவருக்கு நானும் கடிதம் எழுதவில்லை. அவரும் எனக்கு எழுதவில்லை. . இதனால் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.

8 comments:

  1. வேதம் புதிது பாரதி ராஜாவின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று என்பது என் அபிப்ராயம். படம் பார்த்த பின் உங்கள் கருத்தை நீங்கள் எழுதவில்லையே?

    உங்கள் ‘ அலை பாயுதே கண்ணா ‘ பாரதிராஜாவின் ‘ புதுமைப் பெண் ‘ ஒப்பீட்டை வெளியிடுங்களேன் எங்கள் பார்வைக்கு. உங்களுக்கு பாரதி ராஜா மீண்டும் எழுதாதது உங்களுக்கு வருத்தம் இல்லை என்பது சரியாக இருக்காது. அதை நீங்கள் பெரிது படுத்தவில்லை என்பதுதான் சரி. இந்த பதிவை அவர் பார்வைக்கு யாராவது கொண்டு சென்று பின்னூட்டம் பெற்றால் நன்றாக இருக்கும்.
    -ஜெ.

    ReplyDelete
  2. கடுகு....... said...

    <<>>
    தேவை இல்லை. எல்லாம் பழைய சமாசாரம். இதற்குப் பிறகுதான் பாரதிராஜாவை நான் சந்திதேன். அப்போது கூட நான் பேசவில்லையே.
    .. படத்தை ரொம்ப நாள் கழித்துதான் பார்த்தேன்.அபாரமான படம்.
    ஒற்றுமைகள் மறந்துவிட்டன. 30 வருஷங்களுக்கும் மேல் ஆகிவிட்டதே.. பாரதிராஜா நான் மிகவும் மதிக்கும் கலைஞர்.

    ReplyDelete
  3. அலைபாயுதே கண்ணா நாவல் இப்பொழுது‍ எங்கே கிடைக்கும் சார்.
    ஜெ.பாபு
    கோவை- 20

    ReplyDelete
  4. << அலைபாயுதே கண்ணா நாவல் இப்பொழுது‍ எங்கே கிடைக்கும் சார்.
    ஜெ.பாபு>>>
    சில மாதங்கள் கழித்துப் போடப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    அலை பாயுதே கண்ணா நாவல் படித்திருக்கிறேன். மோனா(சாவி குழுமத்திலிருந்து வந்த) மாத நாவல் இதழில் வந்ததுன்னு நினைக்கிறேன். அந்த டைமில் தினமலர் வாரமலரில் வாங்க மாட்டேன் வரதட்சிணை என்ற தலைப்பில் மணமகள் தேவை விளம்பரங்கள் பகுதி ஆரம்பித்திருந்தார்கள். இந்தக் கதையில் அப்படி ஒரு விளம்பரத்தின் மூலமாக இந்தக் கதையின் ஹீரோ, ஹீரோயின் கல்யாணம் நடக்கும். இரண்டு பேரும் டெல்லியில் குடும்பம் நடத்துவது, கதாநாயகன் புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது, இதெல்லாம் ஞாபகம் இருக்கு. இப்ப இந்தப் பதிவைப் பார்த்ததும், உடனே அந்த நாவலைப் படிக்கணும்னு ரொம்ப ஆசையாக இருக்கிறது.

    நீங்கள் பார்க்கிறேன் என்று காமராஜர் பாணியில் சொல்கிறீர்களே சார்!

    ஏற்கனவே இந்த நாவல் பதிப்பகங்களின் மூலமாக வெளியிட்டு இருக்கீங்களா? தகவல் தந்தீர்கள் என்றால் வாங்கிப் படிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

    பாரதிராஜாவை சந்தித்த போது அந்தக் கடிதத்தைப் பற்றி கேட்கவில்லையா? சரி, அவருக்கும் அந்தக் கடிதம் உங்களிடம் இருந்து வந்தது என்று தெரியவில்லையா?

    ஒரு வேளை நீங்கள் அவருக்குக் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், இன்றைக்கு வரைக்கும் உங்கள் மனதில் அது உறுத்திக் கொண்டேதான் இருந்திருக்கும். உங்கள் கருத்துகளை மனம் விட்டு கடிதமாக எழுதின பின், அவரிடமிருந்து ஒரு பதிலும் வந்ததும் அத்தோடு அதை விட்டு விட்டீர்கள் போலும்.

    நீங்கள் அதை பெரிதுபடுத்தவில்லை என்பது உங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.

    தயவு செய்து உங்களைப் பாராட்டி எழுதியிருக்கும் மேலே உள்ள வரிகளைப் பிரசுரியுங்கள் சார். ஏனென்றால், இன்றைக்கு சின்ன விஷயம், பெரிய விஷயம் எல்லாவற்றையும் மனசுக்குள் போட்டு, புழுங்கிக் கொண்டே இருப்பதால்தான் நிறைய பேர் நிம்மதியைப் பறி கொடுக்கிறார்கள்.
    வாழ்க்கையில் எல்லாவற்றையும் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், என்பதற்கு இதெல்லாம் ஒரு பாடம், உங்களிடமிருந்து நாங்கள் இவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  6. கடுகு சார்,

    நீங்கள் அனுப்பிய 'அகஸ்தியன் நாவல்கள்' மூன்றையும் (மின்டோ ரோடு, அலை பாயுதே கண்ணா, சொல்லடி சிவசக்தி) ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல், அலை பாயுதே கண்ணா நாவலுக்கும், புதுமைப் பெண் படத்துக்கும் வியக்கத்தக்க பல ஒற்றுமைகள்.

    அட்டை வடிவமைப்பு ஸாரதி (82 வயது இளைஞர்) என்று குறிப்பிட்டுள்ளது உங்கள் அபார நகைச்சுவை உணர்ச்சியைக் காட்டுகிறது...

    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்

    ReplyDelete
  7. <<< BalHanuman said......அலை பாயுதே கண்ணா நாவலுக்கும், புதுமைப் பெண் படத்துக்கும் வியக்கத்தக்க பல ஒற்றுமைகள். >>>>
    நன்றி..

    ReplyDelete
  8. திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு
    பாரதிராஜாவை சந்தித்தபோது எனக்கே மறந்து போய்விட்டது. ஞாபகம் இருந்தாலும் சொல்லியிருக்க மாட்டேன். என்னைப் போறுதவரை அது முடிந்துபோன் விஷயம்.
    அலைபாயுதெ கண்ணா புத்தகம் 1000 காபி லைப்ரரியில் வாங்கிக் கொண்டார்கள். என்னிடம் சில காபிகள் உள்ளன. அவைகளைக் கண்டுபிடிக்க எனக்கு நேரம் தேவைப்படும்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!