August 13, 2010

கோளறு பதிகம்,-10:

பாடல்-10:
தேனமர்பொழில் கொளாலை விளைசெந்நல்துன்னி
      வளர் செம்பொனெங்கும் நிகழ
நான் முகன் ஆதியாய பிரமாபுரத்து
      மறைஞானஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
      நலியாத வண்ணமுரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்களில் வானில்
      அரசாள்வர்ஆணை நமதே.

தேன் அமர் பொழில் கொள் ஆலை - தேன் நிரம்பிய மலர்கள் நிரம்பிய சோலைகளும் கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு நோக்கினும் கரும்பாலைகளும்

விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ - செந்நெல் எங்கும் மிகுதியாக விளைந்து சிவந்த பொன்னைப் போல் திகழ இருக்கும்

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து - நான்முகனாகிய பிரம்மனை முதலாகக் கொண்டு எல்லாத் தேவர்களும் நிலையாகத் தங்கியிருக்கும் பிரமாபுரமாகிய சீர்காழியின்

மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் - தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த

ஆன சொல் மாலை ஓதும் - சிறந்த இந்தச் சொல்மாலையை ஓதுகின்ற

அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே - அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி. 
                                  ********************************************

2 comments:

  1. Thank you so much sir......Kothamalli

    ReplyDelete
  2. கோளறு பதிகம் பற்றி ஒரு முறை திருமதி.சாரதா நம்பி ஆரூரான் கூறியது மறக்க முடியாதது..எதாவது பொருள் தொலைந்து போனால்..கோளறு பதிகம் படிக்க போன் பொருள் திரும்பக் கிடைக்கும் என்றார்.. நான் பல தடவை சொல்லி பயண் பெற்றிருக்கிறேன்...வழக்கமாக பூஜையிலிருக்கும் விக்ரகங்கள் - சின்ன சைஸ்- அநேகமாக கிருஷ்ணர் - பழைய பூவைப்போடும் போது கொல்லைப்புறம் - போய் விடுவார்..பயந்து போய் தேடு தேடு என்று தேடி அப்புறம் கோளறு பதிகம் முண முணக்க ...பின்னால் வாழை மரத்தடியில் மூச்சைப்பிடித்துக்கொண்டு கிடந்தாலும் நம் கையில் கிடைத்ததும் சிரிக்கிறாரே... அது எப்படி?..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!