ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் கணையாழியில் சுஜாதா எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். நானும் கணையாழியில் சில இதழ்களில் டில்லி வாழ்க்கை என்ற தலைப்பில் எழுதி உள்ளேன். கணையாழி ஆசிரியர் திரு.கஸ்துரிரங்கன் என் நண்பர்.குமுதத்தில் சுஜாதா என்ற பெயரில் ”இதுமட்டும்” என்ற அவருடைய கதை வந்ததும் அவர் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியவர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தார்.
அவருடைய கதை வெளியான வாரம் நான் கரோல்பாக் போக வேண்டிய வேலை இருந்தது. அங்கிருந்த அவர் வீட்டிற்குச் சென்று பாராட்டினேன். அப்போது குமுதத்தில் நானும் ஒரு ஆஸ்தான வித்வானாக இருந்தேன்.
அவரது அலுவலகம் சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்தது.. பார்லிமெண்ட், கன்னாட் பிளேஸ் போன்ற மத்திய டில்லியிலிருந்து சற்றுத் தள்ளியிருந்தது. அதனால் யு.என்.ஐ கேன்டீன் ஜமாவிற்கு அவர் எப்போதாவதுதான் வருவார்.
வித்தியாசமான நடை மட்டுமல்ல, வித்தியாசமான பதப் பிரயோகங்கள், சற்று கவர்ச்சியான வர்ணணைகள் காரணமாகவும் குமுதத்தில் நைலான் கயிறு தொடர்கதை வெளியானதும் அவருடைய பெயர் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டது.
அச்சமயம் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் கதை மறந்து விட்டது. ஆனால் அதில் சில லே அவுட், சில வார்த்தைகளுக்கு வித்தியாசமான ஸ்பெல்லிங், சில எழுத்துக்களைத் திருப்பிப் போட்டிருந்தது, சில வரிகள் சாய்வுப் பாதையாக அமைந்திருப்பது போன்று பல சர்க்கஸ் வித்தைகள் செய்திருந்த அந்தப் புத்தத்தை சுஜாதாவிடம் கொடுத்தேன். ( உதாரணமாக அதில் வந்த ஒரு புதுமையைச் சொல்கிறேன். “அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிஷம் மௌனமாக இருந்தாள்” என்று எழுதிவிட்டு, அடுத்த ஒரு பக்கத்தைக் காலியாக விட்டிருந்தார்கள்,) ”என்னென்னமோ பண்ணியிருக்கான்” என்று வியந்து ரசித்தார். இந்த புஸ்தகத்திலிருந்து அவர் எந்த ஐடியாவையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் வித்தியாசமாக சிந்திக்க அந்தப் புத்தகம் ஒரு சதவிகிதமாவது அவருக்கு உதவியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
* * * *
தினமணி கதிரில் அவரைப் பிடித்துப் போட சாவி விரும்பியதில் வியப்பில்லை. ”உடனே ஒரு கதை வாங்கி அனுப்புங்கள்” என்று அவசரக் கடிதம் அவரிடமிருந்து எனக்கு வந்தது. சுஜாதாவிற்கு போன் பண்ணினேன். எழுதிக் கொடுத்தார். சாவி அடுத்து தொடர் கதைக்கு அடி போட்டார். சாவியின் வேண்டுகோளை ஏற்று, சுஜாதா தொடர்கதை எழுத ஆரம்பித்தார். வாராவாரம் என் அலுவலகம் அல்லது யு.என்.ஐ. கேன்டீனுக்கு வந்து என்னிடம் கொடுப்பார். அதை நான் டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் சென்று அவர்கள் தினமும் சென்னைக்கு அனுப்பும் கூரியர் சர்வீஸில் போட்டு சாவிக்கு அனுப்பச் செய்வேன். கேன்டீன் புல் தரையில் உட்கார்ந்து நிறையப் பேசி இருக்கிறோம்
சாவி டில்லி வந்தபோது அவரை சுஜாதா தன் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தார். சாவி அவரிடம் ”தினமணி கதிர் பத்திரிகையே உங்களுடையதுதான். நீங்கள் எனக்கு ஏதாவது எழுதி அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார். இவரும் எழுதி அனுப்பினார்., ”சுஜாதா லாண்ட்ரி கணக்கு எழுதினால் கூட கதிரில் போட்டிவிடுவீர்களா?”என்று ஒரு வாசகர் கேலியாக எழுதி இருந்தார். அதைக் கதிரில் சாவி பிரசுரித்து இருந்தார். நான் என்ன செய்தேன் தெரியுமா? சுஜாதாவிடம் லாண்ட்ரி கணக்கு எழுதி தரச் சொல்லி சாவிக்கு அனுப்பி வைத்தேன். அதை அப்படியே கதிரில் போட்டுவிட்டா ர் சாவி ! சுஜாதாவின் கதைகளை முடிந்தால் நடுப்பக்கத்தில் வரும்படி லே அவுட் செய்து (டபுள் ஸ்பிரட்) படம் வரையச் செய்து தடபுடலாக சாவி போடுவார்.
டில்லியில் இருந்த ஒரு ஒரு தமிழ் அமைப்பின் துணைத் தலவைராக நான் இருந்தேன். பல கலை நிகழ்ச்சிகள் நடத்துவோம். தமிழ் சினிமா காலைக் காட்சிகளாக ’கமல் டாக்கீ’ஸில் அவ்வப்போது போடுவோம். கமல் டாக்கீஸ் அவர் வீட்டிற்கு அருகில் இருந்தது. டிக்கட்டிற்கு நல்ல டிமாண்ட். என் மனைவியும் நானும் அவருக்கும் சேர்த்து டிக்கட் வாங்கி அவர் வீட்டிற்குப் போய் என் ஸ்கூட்டரில் ரங்க பிரசாத்தை முன்னே நிற்க வைத்துக் கொண்டு போவோம். கேசவ பிரசாதையும், தன் மனைவியையும் தன் ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு வருவார்.
சில மாதங்களுக்குப் பிறகு, பங்களூரில் அவருக்கு வேலை கிடைத்தது. அதனால் சுஜாதா டில்லி வேலையை ராஜினாமா செய்து விட்டார். வீட்டைக் காலி பண்ணி, சாமானகளை பேக் பண்ணி, ரயிலில் டிக்கெட் வாங்கி - எல்லாம் சொந்த செலவுதான் - போக வேண்டியிருந்ததால் அவருக்கு என்னால் ஆன ஒன்றிரண்டு சின்ன உதவிகளைச் செய்தேன். (அவை மறந்து கூடப் போய்விட்டன.)
டில்லியிலிருந்து அவர் புறப்பட்ட போது ரயில் நிலையத்தில் வழி அனுப்பியது மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. வழி அனுப்ப வந்திருந்தவர்கள் இரண்டே பேர் தான். (அல்லது நான் ஒருவன் மட்டும் தானா?) . அவருடைய அலுவலக நண்பர் ஒருவர் இருந்ததாக ஞாபகம்.. ’வழிப் பயணத்தில் ரங்கபிரசாத்தும், கேசவபிரசாத்தும் சாப்பிடுவதற்கு’ என்று ஒரு பொட்டலம் ஓமப்பொடியை அவர்களிடம் கொடுத்தேன்.
ஊருக்குப் போனதும் ”ஓமப்பொடி நன்றாக இருந்தது” என்று மறக்காமல் கடிதம் எழுதியிருந்தார்.
அதன் பிறகு அவரை அதிகம் சந்திக்க வாய்ப்புகள் வரவில்லை. குமுதம் ஆசிரியரான சமயம் குமுதம் அலுவ்லகத்தில் பார்த்து பழைய விஷயங்களை அசை போட்டிருக்கிறேன். , வி,ஜி,பி புதையல் விழா, கம்பன் விழா போன்ற சமயங்களில்சந்தித்து இருக்கிறேன் ப்டில்லி வரும்போது நேரமிருந்தால் யு.என்.ஐ. கேன்டீனுக்கு வருவார்.பார்த்துப் பேசுவோம்.
ஒரு சமயம் கணேஷ்- வசந்த் கதைகளை சீரியல் எடுக்கலாம் என்று நான் பணியாற்றிக் கொண்டிருந்த விளம்பரக் கம்பனியில் சொன்னேன். தமிழ் தெரியாத என் மேனேஜருக்கும் மற்றவர்களுக்கும் ஆங்கிலத்தில் சுஜாதாவின் கதைகளை ’உபன்யாசமே’(!) செய்தேன். அவர்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. சுஜாதாவுடன் தொடர்பு கொண்டு வேலையை ஆரம்பித்தோம்.அப்போது துர்தர்ஷன் மட்டும் தான் இருந்தது. டி.டி.யின் நிபந்தனைகள் , ஸ்லாட் பெறுவதில் உள்ள சங்கடங்கள், நிபந்தனைகள், முதலியவை காரணமாகத் திட்டத்தைக் கை விட வேண்டியதாயிற்று.
* * *
ஒரு சமயம் பல்வேறு விதமான கதைகளை எழுதுவது எப்படி? என்ற தலைப்பில் ஒரு நையாண்டிக் கட்டுரையை கதிரில் எழுதியிருந்தேன். அதில் புதுமை எழுத்தாளர் எப்படி எழுதுவார் என்பதற்கு சுஜாதாவை மனதில் வைத்துக் கொண்டு வார்த்தை விளையாட்டுகளைப் புகுத்தி எழுதியிருந்தேன். ( இந்தக் கட்டுரையைத் தேடி பிடித்துப் பின்னால் போடுகிறேன்!) அதைப் பற்றி என்னிடம் அவர் பேசியபோது, உங்கள் நையாண்டியை என் தம்பி தான் (திரு ராஜகோபாலன்) முதலில் படித்திருக்கிறான். அவன்தான் ”டேய், உன்னை நல்லா வாரி இருக்கிறார் தினமணி கதிரில்” என்று சொன்னான். அவன் உங்களுடைய விசிறி” என்றார்..
ஒரு எழுத்தாளன் நல்ல ரசிகனாகவும் இருக்க வேண்டும். சாவி மாதிரி இவரும் நல்ல ரசிகன். அதனால்தான் அவரால் பல உயரங்களைத் தொட முடிந்தது.
பாருங்களேன்... சென்னையில் கம்பன் விழாவில் அவர் பேசுவதாக இருந்தது. அந்தச் சமயத்தில் நான் சென்னைக்கு வந்திருந்ததால் அந்த விழாவிற்குப் போனேன். விழா ஆரம்பிப்பதற்கு முன்பே வந்த அவர் என்னைப் பார்த்ததும் ”அடேடே, எப்ப வந்தீங்க?” என்று கேட்டுவிட்டு என் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சொன்னது: “கல்கியில் கடைசிப் பக்கம் பார்த்து வருகிறேன். உங்கள் ஆர்ட் புக்வால்ட் டைப் கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன்”என்று சொன்னார். என்னைப் பாராட்டியதற்காக இதைக் குறிப்பிடவில்லை. அவரது ரசிக்கும் மனமும் பாராட்டும் குணத்தையும் எடுத்துக் காட்டவேதான் இதை எழுதியுள்ளேன்.
* * * * *
இது மாதிரியே என் மனைவியும் நானும் பிரசுரித்த நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாராட்டியுள்ளர். பாசுரங்களைப் பதம் பிரித்து நாங்களே கணினியில் டைப் செய்து வடிவமைத்துத் தயாரித்தோம்.. சென்னை புத்தகச் சந்தையில், தான் வாங்கிய ஒரே ரத்தினம் இந்தப் புத்தகம் என்று குங்குமத்தில் எழுதினார். எத்தனை பெரிய பாராட்டு!
* * * *
நிறையப் பேருக்கு தெரியாத விஷயம். சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டு, மறுபடியும் வர ஆரம்பித்த சமயம், சாவி அவர்களுக்குப் பல யோசனைகளை எழுதி அனுப்பினேன். அதில் ஒன்று சுஜாதாவை தலையங்கங்கள் எழுதச் சொல்லுங்கள் என்பது. நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்று எழுதி இருந்தேன். சாவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இவரும் வாராவாரம் எழுதிக் கொண்டு வந்தார்.
* * *
சுஜாதா மறைந்த செய்தி கேட்டு அவர் வீட்டிற்கு விரைந்தேன். சுமார் 2 மணி நேரம் இருந்தேன் பிறகு பெசன்ட் நகர் மயானத்திற்கு வந்தேன். அங்கும் நிறையப் பேர் வந்திருந்தனர். பலர் அவர் தொடர்புள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் மாதிரியும் வாசகர்கள் மாதிரியும்தான் இருந்தனர்.
உடலைச் சிதையில் வைத்து மின்சார சேம்பருக்குள் மயான ஊழியர் ஒருவர் மெதுவாகத் தள்ளிய போது, ஒருவர் (ஊழியர்?) ”சுஜாதா வாழ்க” என்று உணர்ச்சிகரமான குரலுடன் உரக்கச் சொன்னார். இன்னும் சில வினாடிகளில் எரியப்போகும் உடலைப் பார்த்துக் கூறப்பட்ட அந்த இரண்டு வார்த்தைகளைவிட பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன்.
ஆகவே அதே வார்த்தைகளுடன் இதை முடிக்கிறேன்..” சுஜாதா வாழ்க.”
மிக்க நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteசுஜாதாவின் பரம விசிறி நான்; அவரைப் பற்றி மீண்டும் படிக்கும் போது கண்களில் நீர் பெருகுவதை என்னால் அடக்க முடியவில்லை. சுஜாதாவைப் பற்றி பல விஷயங்களை எழுதியதற்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteசுஜாதா உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மறக்க முடியாத பெயர்!. உங்கள் கட்டுரை மூலமாக பல தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 78 வாக்கிலேயே நான் சிறுவனாக இருந்த போதே (அப்போது எனக்கு 10 வயது :) ) அகஸ்தியன் என்ற பெயரில் நீங்கள் சாவியில் எழுதிய கட்டுரை(கதை)களை விரும்பிப் படித்திருக்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் அந்த கட்டுரைக்கு திரு நடனம் வரைந்த ஓவியங்கள் சிரிப்பு மூட்டி, இதில் அப்படி என்ன இருக்கிறது என்று அவற்றைப் படிக்கச் செய்தன. இணையம் எவ்வளவு பெரிய ஜாம்பவானை எங்களுடன் இணைத்திருக்கிறது. இணையத்திற்கு நன்றி!. உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும். உங்கள் வாசகன்
ReplyDeleteமிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி நண்பரே !
ReplyDeleteஆ.. திரும்பவும் யூ.என்.ஐ. கேண்டீன் சாம்பார், சட்னியில எல்லாம் இலக்கியம் கலந்து இருந்திருக்குமோ?
ReplyDeleteசுஜாதா அவர்களை பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றி.. அறிவு ஜீவி.. நல்ல மனிதர்.. உங்கள் கட்டுரையை படித்ததும் கண்ணீர் வருகிறது...
ReplyDeleteTrue, Sujatha was a phenomenon. Like his million readers and fans, I also became his fan right from the beginning. I attended the felicitation function organised by Saavi for Sujatha and some more young writers. I attended the function only to see Sujatha and I cannot express my happiness when the crowd photo printed in the Kadhir had me very clearly - regret the copy is lost sometime in the following years. His greatness can be understood when Kumudam and Vikatan published his wife's interview and a short story respectively recently on his death anniversary. He is an M.G.R. of Tamil magazines! - R. Jagannathan
ReplyDeleteசார்.....”இது மட்டும்” கதையை மீண்டும் பதிவிடுங்களேன்....லின்க் மூலமாக என்னால் படிக்க முடியவில்லை.
ReplyDeleteராயப்பேட்டையிலிருந்து மயிலாப்புர் செல்லவேண்டுமானால் சும்மாவாவது சுல்லிவான் கார்டன் வழியாக செல்வேன். ஓரே காரணம் சுஜாதாவின் வீடு அந்த தெருவில் இருந்தது. அந்த வழியாக செல்லும்போதெல்லாம் மனசு அவ்வளவு பரவசப்படும். டிடிகே சாலையில் பல முறை வாக்கிங் போவதை பார்த்திருக்கறேன். ஆனால் ஒரு தடவை கூட போய் பேச ஏனோ தைரியம் வரவில்லை. பாண்ட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்த படியே ஏதோ சிந்தித்தபடி கீழ் நோக்கி பார்த்துக்கொண்டு நடப்பார். ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் அவரிடம் போய் பேச மனசு விழையும்; ஆனால் அவர் என்ன சிந்தனையில்யிருக்கிறாரோ, எதற்கு disturb செய்யவேண்டும் என்று தயங்கிவிட்டுவிடுவேன். அவர் மறைந்த செய்தி கேட்டு மனசெல்லாம் அவ்வளவு வலி். எழுத்தின் மூலமாக எவ்வளவு நெருங்கியிருக்கிறார் என்று நன்றாக உணரமுடிந்தது.
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது அனுப்பப் பார்க்கிறேன்.
ReplyDeleteநான் LINK எதுவும் போடவில்லையே. !
thanks for sharing.
ReplyDeletethe last lines brought tears in my eyes
http://www.virutcham.com
சுஜாதாவிற்கு மிக சிறந்த அஞ்சலி.
ReplyDeleteதமிழில் அவர் இடத்தை நிரப்ப இன்னும்
யாரும் வரவில்லை.
நன்றி
மதி
Dear kadugu sir
ReplyDeleteare you sure that sujatha's "dhobi account" was published in Dinamani kadir? if my memory serves me right, it was in "chaavi" Magazine that the "dhobi account" of sujatha was published.
yes, sujatha was very actively writing for "chaavi" and "Mona" (monthly story book)in 1977-80 period.
sujatha's marumaan sadagopan(sister's son)is a CA from Nagapatinam.We used to write CA final from trichy( i was studying at tanjore).He used to tell me about his uncle's sense of humour.Sujatha Sir, I understand, was a no nonsense man in office work.
Thank you for sharing your interactions with sujatha,my hero.
Raju-Dubai
To Mr. Dubai Raju,
ReplyDeleteSavi started Savi magazine after leaving Dinamani Kathir sometime in 1978.
As far as my memory goes, Sujatha's laundry "kanakku" in his own handwriting in Tamil was published only in Dinamani Kadir. But I am open to correction.
tan u 4 remembering sujatha
ReplyDeleteஇன்றைக்கு அரசியல், மருத்துவம். விளையாட்டு. அறிவியல் ஏன் பங்கு சந்தை நிலவரம் முதற்கொண்டு எந்த கட்டுரையானாலும். அதில் சுஜாதாவின் மொழி நடையை காண முடிகிறதென்றால் அவரின் ஆளுமையை நம்மால் உணர முடிகிறது. வர்ணாசிரமத்தை காரணமாக கொண்டோ என்னவோ அவரை சரியாக கொண்டாடாத இச்சமுதாயத்தின் அங்கம் என்ற வகையில் எனக்கும் நீர் கோர்க்கிறது.
ReplyDeletemarvelous article sir -- i dedicate this article to all the fans around the world for writer sujatha!!!
ReplyDeleteஏனோ இதை வாசித்தவுடன் ஒரு வெறுமையை உணர்ந்தேன். நண்பர் முகமூடி கூறியபடி எழுத்தால், எத்தனை இதயங்களை தொட்டிருக்கிறார் ! தேசிகனின் நெருங்கிய நண்பனாக இருந்தும், அவரை நேரில் பார்க்க பலமுறை திட்டம் போட்டும், அவரை பார்க்க முடியாமலேயே போய்விட்டது துரதிருஷ்டம் :(
ReplyDeleteஇன்னுமோர் நூற்றாண்டு இரும், நன்றி இந்த அருமையான நினைவு கூரலுக்கு!
அன்புடன்
பாலா
மிக்க நன்றி. மிக அருமையான கட்டுரை..தலைவர் பற்றி..மேலும் இங்கு சென்று "சுஜாதா" வை கிளிக்கவும்.. திரு.சுக வின் அஞ்சலி http://pitchaipathiram.blogspot.com/
ReplyDeleteதிரு ஹரி மூர்த்தி, அன்புடன் பாலா, KKPSK ஆகிய மூவருக்கும்: உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteடில்லியில் நடந்த கல்கி நூற்றாண்டு விழாவில் பேசியபோது என் உரையை ” இன்னுமோர் நூற்றாண்டு இரும்” என்றுதான் முடித்திருந்தேன் சுஜாதா கட்டுரைக்கும் அப்படி முடித்திருக்க வேண்டும். நான் செய்ய விட்டதை நீங்கள் பூர்த்தி செய்து விட்டீர்கள். சந்தோஷம்.
ஒரு சின்ன சந்தேகம். பிப்ரவரி மாதம் போட்ட இந்தப் பதிவை இப்போது தான் பார்த்தீர்களா? மற்ற பதிவுகளையும் படியுங்கள்.
THANKS FOR THIS ARTICLES. I MISS Mr. SUJATHA.
ReplyDeleteமதிற்பிற்குரிய பெரியவர் கடுகு அவர்களுக்கு
ReplyDeleteஉங்கள் ப்ளாக் மிகவும் அருமை. இன்றுதான் தெரிய வந்தது. எனக்கு நல்ல விஷயங்கள் மிகவும் தாமதமாக தான் கிடைக்கும்.
70 80 களில் உங்கள் எழுத்துகளை விரும்பி படிப்பவன் . உங்கள் கட்டுரையின் பல பகுதிகளை உங்கள் பெயரிலேயே என் நண்பர்கள் உடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். நீங்கள் அனுமதி தந்தால்.
மட்டுமே
திரு கிருஷ்ணன் அவர்களுக்கு, என் அனுமதி எதற்கு? தராளமாகச் செய்யுங்கள். உங்கள் மெயில் ஐ டி எழுதுங்கள். ( அதை வெளியிடமாட்டேன்.)
ReplyDelete-கடுகு