February 21, 2010

கமலாவும் ஷாப்பிங்கும்

  மனைவியுடன் ஷாப்பிங் போவதற்குச் சில பேருக்குப் பிடிக்காது. எனக்கு அப்படி அல்ல. என் அருமை மனைவி கமலா ஷாப்பிங் போகக் கிளம்பினால் நானும் கூடவே செல்வேன். ஷாப்பிங்கிற்கு மட்டுமல்ல, காய்கறி கடைக்குப் போகும் போதும்கூடச்  செல்வேன். இதனால் பல தொல்லைகளும் செலவுகளும் ஏற்பட்டாலும், சில சமயங்களில் (கவனிக்க:சில சமயங்களில்!) லாபமும் ஏற்பட்டிருக்கிறது.
    கறிகாய்க் கடைக்குச் சென்றால் கமலா விலை அதிகமாக இருக்கும் காய்கறிகளையே வாங்குவாள்.
    ''...காலிஃபிளவர் என்ன விலை?'' என்று தான் ஆரம்பிப்பாள்.
    "அதன் விலையை ஏம்மா கேக்கறீங்க?... அதெல்லாம் சேட்டுங்க வாங்கறது''  இது கடைக்காரரின் வழக்கமான மனோதத்துவ அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பதில்.
    "நாங்களும் சேட்டுதாம்பா, சொல்லு'' என்பாள் கமலா.
    "பதினெட்டு ரூபாய்'' என்று சொல்ல நினைத்தவர் "இருபது ரூபாய் கிலோ" என்பார்.
    திருமதி கமலா 'சேட்' மறுபேச்சு சொல்லாமல் வாங்கி விடுவாள். அதுவும் கறிகாய்க் கடையில் வேறு சில "ஜரிகை புடவைகள்' வந்திருந்தால் இப்படி ஜம்பத்திற்காகவே வாங்கிவிடுவாள். ஆகவே என் பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள நானும் அவளுடன் போக ஆரம்பித்தேன்.
    அவள் "காலிஃப்ளவர் என்ன விலை?'' என்று கேட்டதும். உடனே நான் "என்ன கமலா, தினமும் காலிஃப்ளவரும் பச்சை பட்டாணியும் தானா?'' என்று முகத்தில் அலுப்பை வரவழைத்துக் கொண்டு கேட்பேன். (நான் ஒரு சின்ன நடிகர் திலகம்!)
    "அதனாலென்ன, அவ்வளவும் ரத்தம்!'' என்பாள் சற்று உரக்க. மார்க்கெட்டுக்கு வந்திருந்த மாமிகளில் யாருக்காவது காது மந்தமாக இருந்தால்? என்ற முன் யோசனை காரணமாக.
    "ரத்தமாக இருந்தால் என்ன? நாம் என்ன மூட்டைப் பூச்சியா அல்லது சைதாப்பேட்டை கொசுவா?'' என்று மனத்திற்குள் கேட்டுக் கொண்டு, "கமலா ஒரு சேஞ்சிற்குக் கத்திரிக்காய் வாங்கு'' என்பேன். (என் பர்ஸில் வெறும் "சேஞ்ச்' இருப்பது எனக்குத் தானே தெரியும்?)
    கமலா வேண்டா வெறுப்பாகக் கத்திரிக்காய் வாங்குவாள். இந்த நாடகத்தால் எனக்குப் பணமும் மிச்சம், கமலாவின் ஜம்பத்திற்கும் லாபம்.   
      இந்த அனுபவத்தின் காரணமாக, கமலா ஷாப்பிங் என்று சொல்ல ஆரம்பித்த அடுத்த  கணமே, "வந்தேன் இதோ' என்று கிளம்ப ஆரம்பித்து விட்டேன்.
    "லிஸ்ட் போட்டுக்கோங்க' என்பாள். லிஸ்ட் எழுதிக் கொண்டு போயிருக்கிறாளே தவிர, அதன்படி இதுவரை வாங்கியதே இல்லை. ஏன், சில சமயம் லிஸ்ட்டில் உள்ள ஒரு சாமானும் வாங்கியிருக்க மாட்டோம். ஆனால் நிறைய ஷாப்பிங் செய்திருப்போம்.
    ஒரு சமயம் பாண்டி பஜாருக்குப் போனோம். தேங்காய்த் துருவி வாங்க. (என்னய்யா, இத்தனை வருஷங்களாகத் தேங்காய்த் துருவி இல்லாமலா குடித்தனம் நடத்தினீர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? அதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர் ஃப்ளாட்கார மாமியிடம் இருந்தது. அவர்கள் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள். ஹூம்! 25 வருஷம் இருந்தவர்கள் இப்படி திடீர் என்று காலி பண்ணினால், எதிர் வீட்டுக்காரர் தேங்காய்த் துருவிக்கு என்ன செய்வார்கள் என்ற யோசனை அவர்களுக்கு இருக்க வேண்டாமா? என்ன மனுஷ்யர்கள்! அதன் பிறகு அந்த ஃப்ளாட்டுக்கு நாலைந்து கட்டை பிரம்மச்சாரிகளா குடி வர வேண்டும்? இனி சொந்தமாகத் தேங்காய்த் துருவி வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.)
    கடைக்குப் போனதும், "தேங்காய்த் துருவி இருக்கிறதா?'' என்று கமலா கேட்டாள்.
    "அடடா இல்லைம்மா... அடுத்த வாரம் வருது... புதுசா மாங்காய் பேசின் வந்திருக்கு. பாக்கறீங்களா? புதுமாடல்'' என்றார் கடைக்காரர்.
    "புது மாடல்' என்றால் போதும் கமலா வாங்கிவிடுவாள். (ஒரு சமயம் "இது புது மாடல் உலக்கை' என்று கடைக்காரர் சொன்னவுடன் கமலா அதை வாங்கி விட்டாள் . வீட்டிற்கு வந்ததும், "உலக்கை என்றால் என்ன?'' என்று கேட்டாள்!)
    மாங்காய் பேஸினைக் கமலா வாங்கிவிட்டாள். அத்தோடு முடிந்ததா வியாபாரம்? வாழைக்காய்த் தட்டு. கத்திரிக்காய்க் கூடை, பூசணிக்காய் ஸ்பூன் என்று கோயம்பேட்டையே  வாங்கிவிட்டாள். ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல வேண்டும். அவள் வாங்கியது எல்லாம் புதுமாடல்கள்! ;பக்கத்து வீட்டு பங்கஜத்திடம் நாலு நாள் ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்’! அந்த மகிழ்ச்சி அவள் முகத்தில் இருந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும் தெரிந்தது.
   
    கமலா புடவைக் கடைக்குப் போனால் எனக்குக் குளிர் ஜுரமே வந்து விடும்.  புடவை வாங்க  ஏழெட்டு மணி நேரம் செலவழிப்பாள்.கிட்டதட்ட புடவைகளை  ஸ்டாக் எடுக்காத குறையாகப் பார்த்துவிட்டு, ஒரு புடவை வாங்குவாள். அதுவும் புடவையைப் போட்டுக் கொடுக்கும் பிளாஸ்டிக் பை, அவளுக்குப் பிடித்திருந்தால்தான்! கமலாவின் புடவைப் பித்தை எப்படிப் போக்குவது என்று நானும் என் மணிபர்ஸும் திணறிக் கொண்டிருந்த போது ஒரு நாள், புத்தா கார்டன் புடவைக் கடையில் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது.
    "இந்தப் புடவை எப்படி இருக்கு பார்த்தீங்களா?'' என்று கமலா கேட்டதும் வழக்கம் போல் விலைச் சீட்டைப் பார்த்தேன். 440 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது.
    "இரண்டாயிரம் ரூபாய்க்கு ரொம்ப நன்றாக இருக்கிறது. கொள்ளை லாபம்'' என்றாள் கமலா.
    "கொள்ளை நமக்கு, லாபம் கடைக்காரருக்கு!'' என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்த போது தான் நான் போதிமர புத்தனானேன்.
    "கமலா, புடவை ரொம்பப் பிரமாதமாகத்தான் இருக்கு. இதேமாதிரி புடவை என் அக்கா சரோஜாவிடம் கூட இருக்குன்னு நினைக்கிறேன்'' என்றேன்.
    இதைக் கேட்டதும் கமலாவிற்கு 440 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. உடனே "புடவை சாயம் போய்விடுமோ என்னமோ என்று தோன்றுகிறது. வேண்டாம் இந்த மாதிரிப் புடவையே!'' என்றாள் கமலா.
    என் அக்கா மேல் அவளுக்கு அவ்வளவு பாசம்!
    அதன் பிறகு "அக்காகிட்டே இதே மாதிரி ஒண்ணு இருக்கே'' என்ற மந்திரத்தைச் சொன்னால் போதும், கமலா வாங்க எடுத்த பொருளை அப்படியே போட்டுவிட்டு நகர்ந்து விடுவாள்!

 இப்படி எல்லாம் நல்லபடியாக ப் போய்க்கொண்டிருந்த சமயம் எங்கள் தெருவில் புதிதாக  ஒரு புடவைக் கடையைத் துவங்க ஆயத்த வேலைகளை யாரோ ஆரம்பித்திருந்தார்கள். ஷெல்ஃப்கள். ஷோ கேஸ்கள் எனறு போட்டு கொண்டிருந்தார்கள். ”ஆண்டவா, இது என்ன சோதனை! வாரத்திற்கு  ஏழு நாளும் உபவாசம்  இருக்கிறேன்; அங்கப் பிரதிட்சணம் செய்கிறேன்; காவடி எடுக்கிறேன்: மண் சோறு சாப்பிடுகிறேன்; நடந்தே மலைக்கு வருகிறேன். என்ன செய்வாயோ ஏது செய்வாயோ.  நீ தான் காப்பாற்றவேண்டும்.” என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். ’நாளைக்குக் கடை திறப்பு விழா’ என்று போர்டு எழுதியிருந்தது, ’உம்.. கடவுளுக்கு காது கேட்கவில்லை’ என்று வருத்ததோடு மறுநாள் காலை கடைப் பக்கம் போனேன். ஆஹா! கடவுள் காப்பாற்றி விட்டார். என்னே அவர் கருணை! நான் போன சமயம் புது போர்டை  லாரியிலிருந்து இறக்கி வைத்துகொண்டிருந்தார்கள். பார்த்தால்.. என் கணகளையே நம்ப முடியவில்லை. புடவைக் கடையின் பெயர்:  சரோஜா அண்ட்  சரோஜா சாரீஸ்!   கமலா,  கடையின் பக்கம் முகத்தைக் கூட  நிச்சயம் திருப்பமாட்டாள்!
*              *             *              *
    கமலா நகைக்கடைக்குப் போனால்... ... மன்னிக்கவும், மன்னிக்கவும்.. கமலா கடைக்குக் கிளம்பிவிட்டாள். நானும் கூடப் போகாவிட்டால் ஆபத்து. அக்காவிடம் நிச்சயம் இல்லை என்று தெரிந்த நகையை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தால் நான் தொலைந்தேன்.  ஆதிமூலமே.........!

18 comments:

 1. நிறைய ஷாப்பிங் டிப்ஸ் கொடுத்தமைக்கு நன்றி :))

  ReplyDelete
 2. ஐடியாவெல்லாம் பிரமாதம். மைண்ட்ல வெச்சிக்கிறேன். இந்த மாதிரி, பதி தெய்வங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கற போஸ்ட்லாம் மட்டும் என் மனைவி கண்ணுக்கு தெரியாம இருக்க ஏதாவது வழி இருக்கா???

  :-)))))

  ReplyDelete
 3. ஏன் சார்...முன்னொரு பதிவில் மாமி ரொம்ப சிக்கனமா ஷாப்பிங் பண்ணுவாங்கனு வாரிந்தீங்க...இப்ப இப்பிடியா?

  ReplyDelete
 4. DEAR VENG:
  சிக்கன ஷாப்பிங் இல்லை.
  ஓசி கறிவேப்பிலை ஷாப்பிங்!

  ReplyDelete
 5. I got nice shopping experience; thank you. Next time Mamai leaves for sari shopping, please call me also (my mobile number is xxxxx xxx34). I wish to observe it closely.

  ReplyDelete
 6. Kadugu sir,
  I really enjoy your blogs ... very humorous and funny..
  best wishes sir

  ReplyDelete
 7. Kadugu sir..

  Whenever I feel depress I used to hear Vishnusahasranamam OR watching some Balakrishna (telugu) movie.. Nowadays I started reading your blog (eventhough I read so many times).. he he he he

  ReplyDelete
 8. There is more logic in humor than in anything else. Because, you see, humor is truth.
  Laughter is the best medicine என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
  நகைச்சுவையும் நானும் என்று ஒரு கட்டுரை எழுத எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.-- கடுகு

  ReplyDelete
 9. Again, you made my day. I just loved it. Especially "திருமதி கமலா 'சேட்'", timing and flow is too good.

  -Arasu

  ReplyDelete
 10. //(என்னய்யா, இத்தனை வருஷங்களாகத் தேங்காய்த் துருவி இல்லாமலா குடித்தனம் நடத்தினீர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? அதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர் ஃப்ளாட்கார மாமியிடம் இருந்தது. அவர்கள் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள். ஹூம்! 25 வருஷம் இருந்தவர்கள் இப்படி திடீர் என்று காலி பண்ணினால், எதிர் வீட்டுக்காரர் தேங்காய்த் துருவிக்கு என்ன செய்வார்கள் என்ற யோசனை அவர்களுக்கு இருக்க வேண்டாமா? என்ன மனுஷ்யர்கள்! அதன் பிறகு அந்த ஃப்ளாட்டுக்கு நாலைந்து கட்டை பிரம்மச்சாரிகளா குடி வர வேண்டும்? இனி சொந்தமாகத் தேங்காய்த் துருவி வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.)//

  Simply phenomenal...vizhunthu vizhunthu sirithen sir..thodarattum ungal "nagai"suvai...

  ReplyDelete
 11. Aiya,
  I just found your blog only today! How did I miss?!
  It's a pleasure to read your writing and couldn't stop until I finish all!
  Last week during our visit to London British Museum, I accidentally touched one of ancient Egyptian manuscripts, one of the security told (warned) "these are priceless sir, don't touch, please...thank you!"
  I would rate your memories same as this - PRICELESS, especially about the giants like Sujatha, JanakiRaman...I do try imagine about two families in scooters with boys (Kesava and Ranga Prasad) towards Cinema!
  God bless Internet!
  Wishing and encouraging you to write more on this.

  Essex Siva

  ReplyDelete
 12. Dear Essex Siva,
  Good you found my blog atleast after two months of launch. I am elated to find that you rate my memeories priceless. I accept this compliment with all the humility I can command and thank god for all the opportunities he gave me and also some little talent to write. I feel I am truely blessed-- Kadugu

  ReplyDelete
 13. நாங்களும் சேட்டுதாம்பா, சொல்லு'' என்பாள் கமலா.

  ஹஹாஹா அவங்க சேட், நீங்க சேட்டை

  ReplyDelete
 14. "நாங்களும் சேட்டுதாம்பா, சொல்லு'' என்பாள் கமலா.

  கமலா மாமி சேட். நீங்க சேட்டை

  ReplyDelete
 15. ரசித்தேன் தேன்

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!