February 03, 2010

கல்கியும், பக்தியுடன் நானும் -- கடுகு

,ஒரு சிறிய முன்னுரை.
இந்த தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இட்லி-வடையில் சமீபத்தில் பிரசுரமாயிற்று. உங்களில் பலர் படித்து இருப்பீர்கள். இருந்தாலும் அதை - அவர்கள் அனுமதியுடன் இங்கு போடுவதற்கு இரண்டு காரணங்கள்:
முதலாவது: கல்கி அவர்களைப் பற்றி என் பதிவில் இல்லாவிட்டால், எனக்கு விமோசனமே கிடையாது!
இரண்டாவது: இட்லி வடையில் எழுதிய போது, கட்டுரை அதிக நீளமாகிவிடப் போகிறதே என்ற அச்சத்தில், சில செய்திகளை எழுதவில்லை. இப்போது என் பதிவில் அவைகளையெல்லாம் சேர்த்திருக்கிறேன்.  ஆகவே முழுமையாக மீண்டும் படியுங்கள்.  கல்கியை பற்றி எத்தனை தடவைப் படித்தாலும் நல்லதுதான்.
என்னுடைய தாளிப்புப் பதிவை டிசம்பர் 5’ம் தேதி துவக்கினேன். காரணம் அது கல்கி என்னும் அரிய தமிழனின் நினைவு தினம்

-------------------------                              +++++++++
நான் எழுதிய எல்லா புத்தகங்களின் முன்னுரைகளிலும் கீழ்கண்ட வாசகம் இருக்கும். ஏதோ ஒப்புக்கோ, என்னைப் பற்றி உயர்வான எண்ணம் படிப்பவர்களின் மனதில் தோன்ற வேண்டும் என்பதற்காகவோ எழுதப்பட்டதல்ல இது!

என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை , சிரத்தால் வணங்கி , கண்களில் ஒற்றிக் கொண்டு இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!.

கல்கி அவர்கள்தான் எனக்குள் எழுத்தார்வத்தை விதைத்தார். முதல் முதலில் 1952’ல் பொன் விளையும் பூமி என்ற கட்டுரையை கல்கியில் வெளியிட்டார். (இந்தக் கட்டுரையை எழுத எனக்கு எப்படி வாய்ப்பு வந்தது  என்பதைப் பின்னால் சொல்லுகிறேன்.) ’தம்பி உனக்கு எழுத்துத் திறமை இருக்கிறது’ என்பதை "பேஷ்" என்று ஒரே வார்த்தையில் சொல்லி எனக்கு ஊக்கமளித்தவர் அவர். என் பூஜையில் உள்ள அவரது படம். 12. 12. 1954. தேதியிட்ட ( கல்கி அவர்கள் மறைந்த அடுத்த வாரம்) விகடனில் வெளியான அட்டைப்படம், அந்தப் படம், அந்த காந்த சக்தி அவ்வப்போது அசரீரி மாதிரி ’பேஷ்’ என்று சொல்லி என் ஆர்வத்திற்கு உரமிட்டு வந்து கொண்டிருக்கிறது.

கல்கி அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு இரண்டு வருடங்களே தான் கிடைத்தது. 1952’ல் கீழ்ப்பாக்கம் குருசாமி ரோடில் கல்கி அலுவலகத்தில்
அவரை முதல் முதலாகச் சந்தித்தேன். அதற்குப் பிறகு பல முறை சந்திக்க  வாய்ப்புகள் கிடைத்தன. அந்த இரண்டு வருடங்களை எப்படி நான் மறக்க முடியும்.! புத்தி தெரியும் பருவத்திலிருந்த எனக்கு அந்த சந்திப்புகள் போதித்த பாடங்கள் ஏராளமானவை!
அவரது எழுத்துகள் மிகவும்  எளிமையானவை. மிகவும் வலிமையானவை. அவை தான் பாரதிமணி மண்டபத்திற்கு நிதி திரட்டித் தந்தவை; மகாபலிபுரத்தின் மகோன்னதத்தையும், அஜந்தாவின் அற்புதத்தையும்
எடுத்துக் காட்டியவை.; நாமக்கல் கவிஞருக்கு நிதி வசூலித்துத் தந்தவை: தமிழ் இசை இயக்கத்திற்கு அசுர பலம் ஈந்தவை; சோழனையும் பல்லவனையும் சாதாரண மக்களுக்கும் அறிமுகப்படுத்தியவை. எலலாவற்றிற்கும் மேலாக சமூகசேவையில் ஈடுபட்டிருந்த அமைப்புக்களுக்கும் இளைஞர் சங்கங்களுக்கும் உற்ற தோழனாக அமைந்தவை. இச்சங்கங்களில் முத்தியால்பேட்டை இளஞர் சங்கமும், செங்கல்பட்டு சேவா சங்கமும் அவருடைய செல்லப் பிள்ளைகள் என்று அந்த காலத்தில் பிரசித்தம்!

இவை யாவும் உங்களுக்குத் தெரியாதவை அல்ல. என் மன நிறைவுக்காக, நானே எனக்குச் சொல்லிக் கொள்வதற்காகத்தான் இவற்றை எழுதியுள்ளேன்.
*    *    *    *
கல்கி அவர்களின் தொடர்பு எனக்கு எப்படி கிடைத்தது? செங்கல்பட்டில் சேவா சங்கம் என்ற அமைப்பை சில மூத்தவர்கள் உருவாக்கினார்கள். வயதிலும் படிப்பிலும் பதவியிலும் பெரியவர்களாக இருந்தும் என்னைப் போனற பொடியன்களையும் சேர்த்துக் கொண்டார்கள். உயர் அதிகாரி ஏம்.ஈ. ரங்கசாமி, ஆத்தூர் சீனி வாச ஐயர் (சோவின் தந்தையார்), ஓ. வி.. அளகேசன், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ண ஐயர், பாரி அண்ட் கோ மானேஜர் . பி.மணி போன்றவர்கள்  அதன் ஆதரவாளர்கள். அப்போது ஒரு சமூகப் பிரச்சினைப் பற்றி கல்கி அவர்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினோம். மூன்று தினங்கள் கழித்து கல்கி கைப்பட எழுதிய ஒரு கடிதம் எங்களுக்கு வந்தது. ’என்னை வந்து சந்திக்க முடியுமா?’ என்று கேட்டு எழுதியிருந்தார். எங்களுக்கு உற்சாகம் தலைகால் புரியவில்லை. அவரைப் பார்க்கப் போன குழுவில் நானும் ஒட்டிக் கொண்டேன். அவருடைய வீட்டிற்குப் போய் அவரை சந்தித்தோம். அடுத்த வார கல்கி இதழின் சில பக்கங்களை எங்களுக்குக் காட்டினார். எங்கள் கடிதம் கிட்டத் தட்ட முக்கால் பக்கம் அச்சாகி இருந்தது.

பிறகு எங்களைப் பற்றியும் சங்கத்தின் சேவை.யைப் பற்றியும் விரிவாக விசாரித்தார். ”இந்த மாதிரி சங்கங்கள் நிறையத் தோன்ற வேண்டும். உங்களுக்கு  என்னால் இயன்ற உதவிகள் நிறைய கிடைக்கும்” என்று உற்சாகப்படுத்தினார். அதன் பிறகு பல தடவை அவரைச் சந்தித்திருக்கிறோம். காந்தி ஜெயந்தி, பாரதி விழா என்று பல நிகழ்ச்சிகளை சங்கம் நடத்திய போது கல்கி அவர்கள் மூலமாகத்தான் பேச்சாளர்கள் ஏற்பாடு செய்தோம்..

சங்கத்தின் வளர்ச்சிக்காக எம். எஸ். அவர்களின் இசை நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

ஏதாவது நிகழ்ச்சிக்குக் கலந்து கொள்ள, செங்கல்பட்டு வழியாக அவர் போகவேண்டியிருந்தால், மெயின் ரோடிலுள்ள எங்கள் தலைவர் வீட்டில் இறங்கிவிட்டுப் போவார். தலைவர் வீடு எங்கள் வீட்டிற்கு நாலு வீடு தள்ளி இருந்ததால் நான் முதலில் ஆஜராகி விடுவேன்.

ஒரு சமயம் அப்படி அவர் வந்த போது நான் அவரிடம் "நீங்கள் என் வீட்டிற்கு ஒரு தரம் வந்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும்"" என்று சொன்னேன். அவரை வீட்டிற்கு அழைக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது? ”அடுத்த தடவை வருகிறேன். திருக்கழுகுகுன்றத்தில் நடக்கும் மகா நாட்டிற்கு வருவேன்” என்றார். (அது சைவ மடாதிபதிகள் கலந்து கொண்ட பெரிய மாநாடு என்பது மட்டும் தான் இப்போது நினைவில் இருக்கிறது.) சொன்னபடியே வந்தார். அப்போது  எங்கள் வீட்டில் என் சகோதரர் நிறைய அலங்கார மீன்களை வளர்த்து வந்தார். நூற்றுக்கணக்கான் மீன்கள் இருந்தன. அவற்றைப் பார்க்க மாடிக்கு அழைத்துப் போனேன். எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தார். ”அடுத்த தடவை என் பேத்தி கௌரியை அழைத்து வருகிறேன். அவள் மிகவும் ரசிப்பாள்” என்றார். (துரதிர்ஷ்டம், கௌரியை அழைத்து வர வாய்ப்பே வரவில்லை. ஆனால் கௌரி (இப்போதைய ஆங்கில எழுத்தாளர் கௌரி ராம்நாராயணன்) - தன் தாயார் ஆனந்தியுடன் 1998’ல் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களைக் கௌரவப்படுத்தினார்! அவர்களுடன், கல்கி ராஜேந்திரனும் அவரது துணைவியார் விஜயா அவர்களும் அப்போது வந்தார்கள்.)

என் டில்லி இல்லத்தின் பெயர்: கல்கி. என் மகளின் பெயர்: ஆனந்தி. என் புத்தகங்களைப் பிரசுரிக்கும் நிறுவனம்: நந்தினி பதிப்பகம். முதல் புத்தகத்தை வெளியிட்டது: வானதி பதிப்பகம்! நான் உருவாகிய தமிழ் எழுத்துருக்களின் பெயர்கள்: குந்தவி, வந்தியத்தேவன், ராஜராஜன், தாரிணி, கரிகாலன், பொன்னியின் செல்வன்.
ஆம், கல்கி என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டார் அது எனக்கு கிடைத்த பேறு!.
*    *    *   
சோவின் அப்பா எங்கள் சேவா சங்கத்தின் ஒரு தூண். அவர் ஆத்தூரில் பெரிய, நவீன விவசாயப் பண்ணை வைத்திருந்தார். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட கல்கி அந்தப் பண்ணை.யைப் பார்க்க விரும்பினார்  சில மாதங்களுக்கு முன்புதான் மகாபலிபுரம் போகும் வழியில் கல்கி கொஞ்சம் நிலம் வாங்கி, அதில் விவசாயம் துவங்கி இருந்தார். ஆகவே அவர் ஆத்தூர் பண்ணையைப் பார்க்க விரும்பினார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் பண்ணைக்கு வந்தார். அவரை சோவின் அப்பாவும் நாங்களும் வரவேற்றோம். ஐந்து, ஆறுமணி நேரம் சுற்றிப பார்த்தார். சீனிவாச ஐயரின் நவீன சாகுபடி முறை அவருக்குப் பிடித்திருந்தது பகல் உணவிற்குப் பிறகு விடைபெறும் போது ”இந்தப் பண்ணையைப் பற்றி ஒரு கட்டுரை போட நினைக்கிறேன். நானே எழுதுவதைவிட உங்களில் யாராவது ஒருவர் எழுதினால் நன்றாக இருக்கும்”. என்றார். வாயில் ஈ போவது கூட தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து  ""தம்பி நீ எழுதுகிறாயா?"" என்று கேட்டார்.  அந்தக் கேள்வி, அந்தக் கணமே என்னை எழுத்தாளனாக்கி விட்டது. இது சத்தியம்!

நானும் ஒரு கட்டுரையை எழுதி, திரும்பத் திரும்ப நூறு தடவைப் படித்து, திருத்தி, என்னை நானே பாராட்டிக் கொண்ட பிறகு, அதை எடுத்துக் கொண்டு கல்கி அவர்களைப் பார்க்க, சங்கத் தலைவருடன் சென்னை காந்தி நகருக்குச் சென்றேன்.

மாடியில் அவர் அறைக்குப் போனோம் கட்டுரையை வாங்கிப் படித்தார். சும்மா மேலோட்டமாகப் பார்க்கவில்லை. ஒரு வார்த்தைக் கூட விடாமல் படித்தார், என் மனது அப்போது டிக் டிக் என்று அடித்துக் கொண்டது. படித்து முடித்ததும் ’பேஷ்’ என்றார். அந்த ஒற்றை வார்த்தை என்னைப் புதிய உயிராக்கிவிட்டது. அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
திருமதி கல்கி அவர்கள் சுவையான உப்புமா கொடுத்து உபசரித்தார்.

”டேய்,  அவர் ’பேஷ்’ என்று சொன்னது உன் கையெழுத்தைதான்” என்று நண்பர்கள், என்னைக் கேலி செய்தார்கள்.

அடுத்த வார கல்கி இதழில் என் கட்டுரை ’பொன் விளையும் பூமி’ என்ற தலைப்பில் நான்கு பக்கங்களில் வெளியாகி இருந்தது. கல்கி அவர்கள் பல இடங்களில் அதில் கை வைத்து மெருகேற்றிப் பிரசுரித்திருந்தார்.
*    *    *    *
ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு கல்கி அவர்கள் தன் வீட்டில் 31.8.1954 அன்று ஒரு விருந்தளித்தார். அதற்கு எங்களையும் அழைத்திருந்தார். ஜெயப்பிரகாஷ் போன்றவர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவது என்பது எளிதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பா?

ஜே.பியும் பெரியவர்களும் முன் அறையில் சாப்பிட, நாங்கள் பக்கத்து அறையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். எங்களுக்கு முன்னதாகவேச் சாப்பிட்டு முடித்த கல்கி. எங்கள் அறைக்கு வந்து ”என்ன, எல்லாம் சரியாக  வந்ததா?” என்று பரிவுடன் கேட்டார்.

விருந்திற்கு பிறகு, ஜெயப்பிரகாஷுடன் பெரியவர்களெல்லாம் பேசிக்கொண்டிருந்ததை, அவர்களைச் சுற்றி நின்று கொண்டிருந்த  நாங்கள் வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தோம். வெறும் அரட்டை அல்ல. நாட்டைப் பற்றிதான் இருந்தது பேச்சு. எனக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை.  அன்று எனக்கு ஏற்பட்ட பல தாக்கங்கள்தான் என் பிற்கால வாழ்க்கையை பல விதத்தில் செதுக்கி அமைத்தன.
*          *          *            
1954’ம் வருஷம் டிசம்பர் ஐந்தாம் தேதி காலை ஆல் இண்டியா ரேடியோவில் தமிழ்ச் செய்தி அறிக்கையில் கல்கி அவர்கள் அமரரான செய்தியைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் எனக்குப் பெரிய இடி விழுந்தமாதிரி இருந்தது. செங்கல்பட்டிலிருந்து அரக்கப் பரக்க நாங்கள் சென்னையில் அவருடைய காந்தி நகர் வீட்டிற்கு விரைந்தோம்.  அதற்குள் அவரது உடலை கோட்டூர்புரம் மயானத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். உடனே நாங்கள் மயானத்திற்குச் விரைந்தோம். மயானத்தில் ஒரு இரங்கல் கூட்டம் துவங்கி இருந்தது. ம. பொ. சி. உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். ’தமிழோடு நிலை பெற்ற சக்தி’ என்று கவிதை ஒன்றை ஒருவர் வாசித்தார் . ராஜாஜியைப் பேசும்படி கேட்டுக்கொண்டபோது, தன் துக்கம் தாங்க முடியாதது என்று கூறி பேச மறுத்துவிட்டார். பலர் மயானத்தில் சிதையில் வைக்கப்பட்டிருந்த உடலைத் தொட்டு, தரையில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

அடுத்த சில தினங்களுக்குப் பிறகு ராஜாஜி ஹாலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு எஸ். எஸ். வாசன் தலைமை வகித்தார். ராஜாஜி உள்ளம் உருகும்படியான உரை நிகழ்த்தினார். எளிமையான வார்தைகள். சத்தியமான வார்த்தைகள். எல்லார் கண்களிலும் நீர் தளும்பியது. மேடைக்கருகில் நின்று, கேட்டுக் கொண்டிருந்த என்னாலும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
*                    *                           *                         
தொடர்ந்து, கல்கிக்கு அஞ்சலிக் கூட்டங்களை பல அமைப்புகள் நடத்தின என்றாலும், அரண்மனைக்காரத் தெரு கோகலே ஹாலில் நடைபெற்ற கூட்டம் மறக்க முடியாதது. அதில் முத்தியால்பேட்டை இளஞர் சங்கத்தின் காரியதரிசி பேசியது இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
அவர் பேசியது: ""கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் பாரதி விழாவை கல்கி அவர்களின் பரிபூர்ண ஆதரவுடன் பவழக்கார தெருவில் நடத்திக் கொண்டிருந்தோம். தெருவில் தான் மேடை பெரிய கூட்டம். மூன்றாம் நாள் மாலை மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது  நான்  வரவு செலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காசு தீர்ந்து போன நிலைமை. பலருக்கு பணம் பாக்கி. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். மேடையில் உட்கார்ந்திருந்த கல்கி அவர்களிடம் சென்று, ரகசியமாக கவலையுடன் விஷயத்தைச் சொன்னேன். அவர் "தம்பி கவலைப்படாதே, இந்தா. என் வீட்டு மேஜை சாவி, வீட்டிற்குப் போய் என் மேஜை டிராயரைத் திறந்து, அதிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு வா"என்று சொல்லி சாவியைக் கொடுத்தார். நான் போய் எடுத்து வந்தேன். இளஞர்கள் மீது அவருக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை .....". என்று பேசிக்கொண்டே வந்த அந்த இளைஞர், துக்கம் தாளாமல் மேடை.யில் நின்றுக் கொண்டே, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார்.. இவ்வளவு பெரிய கூட்டத்தில், மைக் முன்னால் நின்று அழுகிறோமே என்று அவருக்குத் தோன்றவே இல்லை. காரணம், கல்கி அவர்கள் மீதிருந்த அபார பக்தி.
அவர் அழுததை விடுங்கள், கூட்டத்தில் அப்போது கண்ணீர் விடாதவர் இல்லை. அவர்களில்  எத்தனை பேர் எத்தனை தடவை  இந்த உணர்ச்சிகரமான சம்பவத்தைத் தங்கள் நண்பர்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லி இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்! ஆயிரம் போதனைகளை விட இந்த ஒரு சிறு சம்பவம் எத்தனை பேர் மனதில் உன்னதமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை யோசியுங்கள்.
மனிதன் எதனால் உயர்கிறான் என்று ஒரு அற்புதமான கட்டுரையைக் கல்கி எழுதினார்.  என்னை கேட்டால், இப்படிப்பட்ட சம்பவங்களே போதும். ஆயிரம் கட்டுரைகள், உபதேசங்கள், போதனைகள், நீதிக்கதைகள் ஆகியவற்றைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தி விடும். என்பேன்.!

இப்படி பல ஆயிரம் இளைஞர்களுக்கு தன் எழுத்தால், பேச்சால், பழகும் விதத்தால், ஊக்க சக்தியாக இருந்தார் கல்கி.
*                        *                               *
சமீபத்தில் கல்கி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் கல்கி தபால் தலையை வெளியிட்டார்கள்.
இது தொடர்பாக ஒரு சின்ன குறிப்பு. ஜனதா அரசு 1977’ல் அமைந்த போது, அப்போது தபால் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் -பெர்னாண்டஸ் அவர்களை சாவியும் நானும் பார்க்கப் போனோம். கல்கி அவர்களுக்குத் தபால் தலை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைத்தோம். "கல்கியைப் பற்றி நான் நன்கு அறிவேன் நிச்சயம் செய்கிறேன். அவரைப் பற்றிய ஒரு குறிப்பை எனக்குக் கொடுங்கள்” என்றார். ஒரு வாரம் கழித்து நான் கொண்டு போய்க் கொடுத்தேன். துரதிர்ஷ்டம், அடுத்த சில வாரங்களுக்குள் ஜனதா அரசே கவிழ்ந்து விட்டது. எங்களுக்கு மிக்க ஏமாற்றம். ஆனால் நூற்றாண்டு விழா சமயத்தில் வெளியானது பற்றி மிக்க மகிழ்ச்சியே!

மற்றொரு அரிய அனுபவத்தை பெருமிதத்துடன் கூற விரும்புகிறேன். பொன்னியின் செல்வன் கதை கடைசி அத்தியாயம் கல்கி இதழில் வெளியான வாரத்தின் போது அவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். தமது வயலைப் பார்வையிட அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். எங்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார். அவருடன் காரில் போவதாலேயே கேள்வி கேட்க எனக்கு அந்தஸ்து வந்து விட்டது என்று கருதிக் கொண்டுவிட்டேன். ஆகவே அவரிடம் ”பொன்னியின் செல்வன் தொடரை முடித்து விட்டீர்களே. கதையில் ஒன்றிரண்டு விஷயங்கள் முழுமையடையவில்லையே” என்று கேட்டேன். தமிழ் உரை நடைக்கு திருப்பம் கொடுத்த அவரை நான் - ஒரு அறிவிலி- என் தகுதி பற்றி யோசிக்காமல் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்டுவிட்டேன். .
அவர் நிதானமாகச் சொன்னார் : "தம்பீ .... இது சரித்திரக் கதை, கதையை சரித்திரத்தை ஒட்டியே, முரண்பாடில்லாமல் எடுத்துக் கொண்டு போகவேண்டும். எனக்குப் பின்னால் வேறு யாராவது இன்னும் ஆராய்ச்சி செய்து இந்த நாவலைத் தொடர்ந்து இன்னும் ஒரு நாவலை என்னை விடச் சிறப்பாக எழுதலாம்" என்றார். 
என்னையும் ஒரு ஆளாக மதித்துக் கூறிய விளக்கத்தை இப்போது எண்ணும் போதும் கண்களில் நீர் திரையிடுகிறது. என்னிடம் கூறிய கருத்துக்களை அடுத்த வார கல்கி இதழில் விரிவாக எழுதினார்.
*                                *                               *                                  
கல்கி அவர்களின் பூத உடலை மயானத்தில் பலர் வணங்கினார்கள் என்று சொன்னேன் அல்லவா? அப்படி வணங்கியவர்களில் நானும் ஒருவன். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அவர் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன்.  அவர் உடல் மேல் வைக்கப்பட்டிருந்த ரோஜா மாலையிலிருந்து  மூன்று நான்கு ரோஜாப் பூக்களை எடுத்துக்கொண்டேன். அந்த பூக்களை ஒரு சிறிய குங்குமப் பேழையில் வைத்து, என் புத்தக அலமாரியில், நான் வைத்திருந்த கல்கி அவர்களின் படத்தின் முன்பு வைத்தேன். அந்த மலர்களைப் பல வருடங்கள் வைத்திருந்தேன். சில நாட்களிலேயே மலர்கள் வாடிவிட்டன. அவற்றின் மணமும் போய் விட்டது. ஆனால் கல்கி அவர்களின் தமிழ் மணம் இன்றும் என் வீட்டில் மெலிதாக மிதந்து கொண்டிருக்கிறது!

23 comments:

 1. யதிராஜ சம்பத் குமார்February 3, 2010 at 8:00 AM

  சாண்டில்யன், சோ, போன்றோர்களுடனான தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 2. Dear Sir,

  சில நாட்களிலேயே மலர்கள் வாடிவிட்டன. அவற்றின் மணமும் போய் விட்டது. ஆனால் கல்கி அவர்களின் தமிழ் மணம் இன்றும் என் வீட்டில் மெலிதாக மிதந்து கொண்டிருக்கிறது.


  This is master piece. :) Keep rocking..

  Regards
  Rangarajan

  ReplyDelete
 3. Kadugu Sir, Wonderful Narration about the one and only Kalki. You can only provide us such a treasure of information on that great humanatarian and writer. My eyes became moist while reading this piece. Thank you, sir.

  ReplyDelete
 4. naanum aluthutein sir...

  ReplyDelete
 5. யதி அவர்களுக்கு:
  சாண்டில்யனைப் பற்றி எழுதும் அளவக்கு ப்ரிச்சயம் இல்லை.
  சோவை பற்றி எழுதுகிறேன்

  ReplyDelete
 6. யதிராஜ சம்பத் குமார்February 3, 2010 at 11:27 AM

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 7. What can I add to the comments already published above? You had enough 'Punniam'to move so closely with Kalki and we are lucky to read your experiences and feelings. Very touching and genuine emotions. Thank you, - R. Jagannathan

  ReplyDelete
 8. Yes. I also feel that it was God's will adn blessigns that made me to get little closer to persons of great eminence and character.

  ReplyDelete
 9. அற்புதமான அனுபவங்கள் தான்! பெரியவர்களை பற்றி எல்லாம் எங்களை போன்றவர்கள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு! நன்றி சொல்லி முடியாது, வணங்குகிறோம்!

  ReplyDelete
 10. Dear Sir

  My eyes were heavy with unshed tears when i finished reading this article.

  Namaskaram

  Raju-Dubai

  ReplyDelete
 11. Mr Raju-Dubai: That is the greatness of Kalki -- A patriot, a connoisseur of arts, a freedom fighter and a novelist par excellence.

  If you were moved to tears it does not show my capacity as a writer. It shows the greatness of the person about whom I had written rather sketchily.

  ReplyDelete
 12. சார்...அப்படியே “ஆயிரத்தில் ஒருவன்” சரித்திர கொலைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்....! கல்கி அவர்களைப் பற்றி எழுதிய பேனாவால், இதைப்பற்றியும் எழுத சொல்வது தவறுதான்...!

  ReplyDelete
 13. முகமூடிFebruary 6, 2010 at 2:18 AM

  பொறாமையாக இருக்கிறது!! உங்கள் அனுபவங்களை படித்தால். கிடைத்தற்கரிய வாய்ப்பு. மேன்மக்கள் மேன்மக்களே!! என்பதை பறைசாற்றும் பதிவு. பெருமான் வாழ்ந்த இடத்தில் (காந்திநகர்) நானும் வாழ்கிறேன் என்று நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கிறது. நீங்கள் சோவின் தந்தை ஆத்துார் சீனிவாச ஐயர் அவர்கள் பற்றியும் எழுதவேண்டும். அவர் பற்றி சோ பல பேட்டிகளில் மேற்கோளிட கேட்டிருக்கிறேன்; சொன்னதிலிருந்து - அவர் ஒரு dynamic & versatile personality என்று அறிய முடிகிறது;

  ReplyDelete
 14. அன்புள்ள முகமூடி, வணக்கம். காந்தி நகர் மூன்றவது கிராஸ் தெருவில்தான் க்ல்கி இருந்தார்.

  சோவின் அப்பாவைப் ப்ற்றி பின்னால் எழுதுகிறேன்.

  இந்த கட்டுரைகளில் என்னை மறந்து விடுங்கள். நான் ஒரு NON-ENTITY.
  அழகான் மலரின் புகைப்படத்தை பார்த்தால் மலரை ரசியுங்கள். காமிராவைப் பற்றி எண்ணிகொண்டிருக்காதீர்கள்.

  ReplyDelete
 15. Kadugu Sir,
  Thanks for sharing lot of events with us.

  ReplyDelete
 16. Dear kadugu Sir,

  Even by reading your article about Mr.Kalki's ceremony, tears are coming out of my eyes. I heard that he is such a great personality. We are quite happy to hear those good moments through people like you.

  Thanks for sharing your golden moments.

  ReplyDelete
 17. இப்படி எல்லாம் எங்களை அழ வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டே எழுதுகிறீர்களா?
  கல்கி பற்றிய இந்தக் கட்டுரை அருமை என்று நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் அழுததை சொல்லி ஆகி விட்டது.
  நல்ல மனிதர்கள் பற்றி நல்லதாய் நாலு விஷயம் கேட்பது சந்தோஷமாய் இருப்பதோடு
  நேரம் செலவழித்து படித்து விட்டு ஏன் படித்தோம் என்று எண்ண வைக்காமல் படித்த நொடிகள் முழுவதுமே அதற்கான பயனை நமக்கு கொடுத்து விட்டதான மலைப்பையும் சேர்த்து தருவது எவ்வளவு நல்ல விஷயம்

  நன்றி
  virutcham

  http://www.virutcham.com

  ReplyDelete
 18. <>
  நன்றி.எனக்கு ஓரளவு எழுத்து திறமை இருக்கிறதென்றால் அவர் பரிவுடன் எனக்கு ஈந்தது. (அவர் போட்ட பிச்சை என்று சொல்லமாட்டேன். காரணம் அவ்ர் யாரையும் பிச்சைக்காரனாகப் பார்க்கமாட்டார்.) - கடுகு

  ReplyDelete
 19. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - சங்கு‍
  சுட்டாலும் வெண்மை தரும்.
  கட்டுரையை படித்ததும் இதுதான் நினவுக்கு‍ வருகிறது. கல்கியின் கதையாகட்டும், கட்டுரையாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு‍ மெல்லிய நகைச்சுவை இழையோடும். அதுதான் பலரையும் அவர்பால் ஈர்த்தது. பல விஷயங்களையும் மிகவும் சீரியஸாக அணுகியதால்தான் அவரால் அவ்வளவு எள்ளலாக எழுத முடிந்தது.
  அவர் போன்ற மகானக்ள் வாழ்ந்த பூமி இது‍ என எண்ணும் போது‍ பெருமிதமாக உள்ளது.
  ஜெ பாபு
  கோவை

  ReplyDelete
 20. Hello sir,

  I am great great fan of kalki. i have read a lot of his novels. i wish to read some more of his works. can u suggest me where i can read this.

  mannuchella

  ReplyDelete
 21. mannuchella aavrakalukku,
  YOu may visit Project Madurai where many tamil books are avialable on line.
  Kadugu

  ReplyDelete
 22. அன்புள்ள "காரம் போகாத" கடுகு அவர்களே :
  கல்கி அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவருடன் பழகிய செய்திகளைப் படித்து விட்டு எனக்கும் அழுகை வந்து விட்டது. என்ன செய்வது, மகான்கள் சீக்கிரம் இந்த உலகை விட்டுப் போய் விடுகிறார்கள். ஆனால் அவர்களின் செய்திகளும், சாதனைகளும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன,உங்களைப் போன்றவர்கள் மூலமாக ! வணக்கம், நன்றி !

  வாஞ்சி

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!