February 05, 2010

ஜோதி ஆசீர்வாதம் -- கடுகு

அந்த போர்டு ஸ்கூல் மணி "ணங் ணங்' என்று அடித்ததைத் தொடர்ந்து ஊளையிட்டுக்கொண்டு வரும் சிறுவர், சிறுமியர் பட்டாளத்தின் பின்னால் ஒற்றை நாடியாக, சராசரிக்கும் அதிகமான, உயரமாக, கொசுவம் வைத்த உயரக்கை ப்ளவுஸும், ப்ரூச்சில் கொசுவப்பட்ட பூப்போட்ட புடவையுமாக, தலையில் பிச்சோடாவும், கையில் குடையுமாக வருபவர் தான் பள்ளிக் கூடத்தின் "மிஸ்' ஸான திருமதி ஜோதி ஆசீர்வாதம். அவர் பெயர் ஜோதி என்பதே பலருக்குத் தெரியாது. காரணம், அந்த சின்ன ஊரில் ஒரே பள்ளியின்
"மிஸ்'ஸாக  இருபது வருடங் களாக இருப்பதால் ஊராருக்கு அவர் "மிஸ்' தான். ஆனால் சில சமயம் மிஸ்ஸுக்கு வேறொரு பெயரும் தரப்படும். "நர்ஸ்'! ஆம், பிரசவம் பார்க்கத் தெரிந்த ("மெட்ராஸ் ஜி.எச்.லே நானு ட்ரெய்னிங்கு எடுத்தேன், ஆம்மாம்.'') ஒரே பெண்மணி அவர். படிப்பு அறியாத பெண்கள் இவரை நரசம்மா என்றும் அழைப்பார்கள்.
"என்ன. பாப்பம்மா, நரசம்மா நரசம்மாவுன்னுக் கூப்பிடறே, நர்ஸ் என்று சொல்ல என்னிக்கித்தான் நீங்க கத்துக்கப் போறீங்களோ? நாளைக்கு நரசிம்மான்னு கூட கூப்பிட ஆரம்பிச்சுடுவீங்க. ஒங்களைக் கர்த்தரு தான் காப்பாத்தணும்... அதிருக்கட்டும், இன்னா விஸயம்? இஸ்கோல் இன்ஸ்பெக்டர் வராரு. வேலை இருக்குது. பேஸ்ஸிக்கிட்டு இருக்க நேரமில்லை. ஸமையல் ஸெய்யக்கூட நேரமில்லாமல் ரெண்டு கேக்கைத் துண்ணுட்டு போய்க்கிட்டிருக்கேன் ஸ்கூலுக்கு... இன்னா சொல்றே, ஒம் பொண்ணு வந்திருக்குதா? ஆயிடுச்சா மாஸ்ஸம். வலி எடுத்ததும் சொல்லியனுப்பு.  ஆமாம், அதிருக்கட்டும், உம் பொண்ணுக்குத் தானே போன வருஸம் பொங்கலன்னிக்குக் குளந்தை பொறந்திச்சு. மறுபடியும் பொங்கலுக்கு வந்திருக்குதா? ஸரியாப் போச்சு, வருஸா வருஸம் மாரியம்மனுக்குக் கூழ் வார்க்கறாப் போல வருஸா வருஸம் எனக்கு பீஸ் கொடுக்கறே.....''

            நர்ஸ் பணியில் ஈடுபடும் போது பளீரென்று வெள்ளை ரவிக்கை, புடவை, (தலையில் மல்லிகைப்பூ) ஆகியவையுடன் தான் போவாள்! ஆயிரம் ஒட்டுப்போட்ட டாக்டர் பை, அதனுள்ளே முக்கியமான பொருள் எதுவும் இருக்காது. பஞ்சு, கத்தரி, பாண்டேஜ், டெட்டால் அவ்வளவு தான். ஒரு பழைய ஸ்டெதாஸ்கோப்பை இடது கையில் வைத்துக் கொள்வாள். சில சமயம் வெறுமனே ஸ்டெதாஸ்கோப்பை வைத்துப் பார்த்து விட்டு இரண்டு ரூபாய் பீஸ் வாங்கி விடுவாள். அது பெரிய விஞ்ஞானக் கருவி என்பது கிராம மக்களின் கணிப்பு.
      பிரசவம் பார்க்கும் போது, மிஸ்ஸம்மா, நர்ஸ்ஸம்மாவாக மாறிவிடுவாள். அப்போது எக்கச்சக்கமாக, தப்பும் தவறுமாக ஆங்கில வார்த்தைகளைப் போட்டுப் பேசுவாள். "ஒண்ணும் கவலைப்படாதே, டெலிவரி ஈஸி இல்லை. மெட்ராஸ்லே ஆதைவிட டிபிகல்ட் கேஸ் கொடுப்பாங்க, டிரெய்னிங்கப்போ, மை காட், உயிர் கோ, உயிர் கம்.''"நரஸம்மா வலி தாங்கல்லே., நீங்க தான் காப்பாத்தணும், அய்யோ...அம்மா.''
"இப்படி எல்லாம் கத்தினா எப்படி? பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு எதுக்கு வந்திருக்கிறோம். வலி இல்லாம குளந்தை பிறக்குமா? குளந்தை நல்லா பிறக்கும்படி பார்த்துக்கத்தானே நாங்க இருக்கிறோம்'' என்று அவர் கூறுவது, மருத்துவ உலகத்தினர் அனைவரையுமே பெருமிதத்தில் ஆழ்த்தும்!
"நரசம்மா.. இந்தாங்க இருபது ரூபாய்,'' என்று பீஸ் கொடுக்கும் போது, "சரியாப் போச்சு, இருபது ரூபாயா? ஊரெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு. திட்டம் பரவிடுச்சு, என் தொழில் வருமானம் குறைந்து விட்டது. ஐம்பது ரூபாய்க்குக் குறைந்தால் கட்டுப்படியாகாது. முன்னே போலயா இருக்குது காலம்?  மாசம் இரண்டு, மூணு பிரசவம் இருக்கும். இப்போ ஒண்ணுகூட தேறமாட்டேங்குது.''
பள்ளிக்கூட ஆசிரியை ஆக இருப்பதால் கு.க. பிரசாரம் செய்யவேண்டிய பொறுப்பும் ஜோதிக்கு உண்டு. "நம்ம பொளப்பிலே நாமே மண்ணைப் போட்டுக்கிறது என்பது இதுதான். நாட்டுக்கு நல்லது, ஒத்துக்கிடறேன்.  மேல்வரும்படிக்கு நான் இன்னா செய்றது? பணம் செலவளிச்சி ’ஜி.எச்'லே எடுத்த ட்ரெய்னிங்கு என்னாவறது? மாதாகோவில்லே மோதிரம் மாத்திக்கிட்ட வேளை சரியில்லை. ஆசீர்வாதம் அப்பப்போ வாதம் வந்து படுத்துடுது. நான்தான் உளைக்க வேண்டியிருக்கிறது. ஆரோக்கியமாதா தான் காப்பாத்தணும்....''
         பள்ளிக்கூடத்தில் மிஸ்ஸம்மா ஒரு சர்வாதிகாரிதான். ஏனெனில் அந்த ராஜ்யத்தில் அவளுக்கு எதிராகப் பேசக்கூடிய ஆத்மா யாரும் கிடையாது!
"யாருடா அங்கே, துரைக்கண்ணு,  பாடம் எளுதாமே, தலை சீவாமே வந்து குந்திக்கினு நீ தான் லோ-லோன்னு பேசிக்கிட்டிருக்கியா? உனக்கு துரைக்கண்ணுன்னு பேர் வச்சதுக்கு பதிலா "எருமைக்கண்ணு'ன்னு வெச்சா சரியா இருந்திருக்கும். எந்நேரமும் பேச்சுத்தானா? பாருங்கடா, மதுரை வரான்... ஏண்டா மதுரை, என்ன நிதானமா வர்றே? பகல் சோறு டயமுக்கு வந்திட்டே... நீ பொறக்கும்போது  இரண்டு மணி நேரம் உங்கம்மா உசிரை வாங்கிட்டு பொறந்தே.  அப்போ உங்கம்மா உசிரை வாங்கினே; இப்போ என் உசிரு போவுது.. ஆமா..நேத்து களத்து மேட்டிலே என்ன சண்டை போட்டுகிட்டு இருந்தே?.. சரி, சரி. எல்லாரும் வாய்ப்பாடு சொல்லுங்க.. ஒண்ணோண் ஒண்ணு...''

7 comments:

 1. படிச்சுட்டேன் - நல்லா இருக்கு. எங்க ஊருல எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயும் - ஒரு (பிரசவம் பார்க்கும் ) நரசம்மா இருந்தாங்க - (ஆனா ஸ்கூல் எதுவும் நடத்தலை) அவங்க பேச்சும் இங்கே நீங்க குறிப்பிட்ட சில வசனங்கள் தான்.

  ReplyDelete
 2. // கொசுவம் வைத்த உயரக்கை ப்ளவுஸும் //, I don't know if the sketch is by Gopulu- it doesn't match the description! - R. Jagannathan

  ReplyDelete
 3. படம் கோபுலுதான். பட்த்தைப் பாருங்கள். சரியாகத்தான் இருக்கிறது (இப்போது!)

  ReplyDelete
 4. யதிராஜ சம்பத் குமார்February 6, 2010 at 7:43 AM

  ”ஸ” வருவதெல்லாம் மதறாஸ் தமிழ் பாணியில் புரிந்து கொள்ள வேண்டுமோ? தேவன் இவ்வாறு ப்ரயோகப்படுத்துவதைப் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 5. // சரியாகத்தான் இருக்கிறது (இப்போது!)// Ada Aamaam, thank you! - R. J.

  ReplyDelete
 6. Respected Sir,
  I have not read this kind of comedy in a very long time. I think after devan and Crazy Mohan I am reading this kind of comedy Stupendous .
  the entire Kamala series and Delhi series are fablous

  Iam your regular reader . Please give your phone number i would lik totalk to you once in person . my email id is balajisr@hcl.in

  It is privileage to read your blog

  ReplyDelete
 7. Dear Mr Balaji.S.: I am touched by your apprecitaion.

  I do not want to give my contact details here. I will send you an email a little later,a reply with my contact particulars


  Kadugu

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!