பிரபல பத்திரிகையின் ஆசிரியர் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்; பெரிய நிறுவனத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை. ஆகவே அவர் பணம் கேட்டவுடன் கொடுக்கத்தான் தோன்றியது. கொடுத்தேன். அதே சமயம் சங்கடத்தை விலை கொடுத்து வாங்கினேன்.
சென்னை திரும்பியதும், அவர் என்னை மறந்து விட்டார். சுமார் மூன்று
மாதங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டுக் கடிதம் போட்டேன். பதில் இல்லை. அப்புறம் போன் பண்ணினேன். டில்லியிலிருந்து போன் என்றால் "இல்லை' என்று சொல்ல அந்த போனுக்கே பழக்கப்படுத்தி விட்டாரோ என்னவோ, சுலபமாக அகப்படவில்லை. சக பத்திரிகை ஒன்றிலிருந்து பேசுவதாகப் பொய்சொன்ன போது போனில் அகப்பட்டார். "அடேடே பணம்தானே! ஏழாம் தேதி அனுப்பி விடுகிறேன்'' என்றார். (அவர் சொன்ன தினத்தின் தேதி எட்டு!)
நானும் பொறுமையாக இருந்து, பிறகு பல தடவை போன் செய்தேன். (டில்லி-சென்னை எஸ்.டி.டி. வாழ்க!) ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையாகச் சொன்னார். (எழுத்தாளராயிற்றே, கற்பனை இல்லாமல் இருக்குமா?)
சென்னை நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவரும் பில் கலெக்டர் மாதிரி சென்று வசூல் செய்ய முயற்சி செய்தார். ஆனால் பணம் என்னவோ வரவில்லை.
சுமார் எட்டு மாதங்கள் போய்விட்டது. அப்புறம் ஒரு நாள் போனில் அகப்பட்டார். அவர் சொன்னார். "உங்கள் பணம் டிராஃப்ட் வாங்கி அனுப்பி விட்டேன். நேற்று அனுப்பினேன். உங்களுக்கு ஓரிரு நாளில் வந்து விடும்... அப்படி வராவிட்டால் (!!), தபாலில் தொலைந்து போனால் (!!!) சொல்லுங்கள். உடனே ட்யூப்ளிகேட் வாங்கி அனுப்பி விடுகிறேன்'' என்றார். இப்படி இவர் சொன்னபோதே அப்பன் குதிருக்குள் இல்லை என்று அவர் சொல்கிறார் என்று தெரிந்து விட்டது.. டிராஃப்ட் ’எதிர்பார்த்தபடி' வரவில்லை.
இரண்டு மாதம் கழித்து சென்னை வந்தேன். அவர் அலுவலகத்திற்குப் போனேன். என்னை பார்த்தும் அவருக்கு ‘ஷாக்’!
"என்ன சார், பணம் எங்கே?'' என்று கேட்டேன்.
அவரோ, டில்லியில் மாதம் மும்மாரி பெய்கிறதா?, இந்திரா காந்தி என்ன சொல்கிறார்?,டிம்பக்டூவில் ரொம்ப கொசுத் தொல்லையாமே? ரீகன் செய்தது சரியா? என்பது போன்ற விஷயங்களை ஆரம்பித்தார். நான் விடாக்கண்டனாக மாறி, "பணம்... பணம்... வேறு ஒரு பேச்சும் வேண்டாம். எனக்கு நிறைய வேலை இருக்கிற்து. பணத்தைக் கொடுங்கள். சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணி விடுகிறேன்'' என்றேன். "இரண்டு நாள் டைம் கொடுங்கள். வேண்டுமானால் என் கடிகாரத்தை வைத்துக் கொள்ளுங்கள்!'' என்றெல்லாம் சொன்னார். கடிகாரம் அடமானம்!.
"கடிகாரம், பலகாரம், சிலப்பதிகாரம் எதுவும் வேண்டாம். உங்கள் முதலாளியைப் பார்த்துப் பேசட்டுமா?'' என்றேன். கடைசியில் மசிந்தார். "இருங்கள்... வீட்டிற்குப் போய் பணம் கொண்டு வருகிறேன்'' என்று சொல்லி விட்டுப் போனார்.
"நீங்கள் திரும்பி வர நாலு நாள் ஆனாலும் பரவாயில்லை. இந்த ரூமிலேயே உட்கார்ந்திருக்கப் போகிறேன். இங்கே சௌகரியம் இல்லை என்றால் உங்கள் முதலாளி அறைக்குப் போய்விடுகிறேன்'' என்றேன். (முதலாளி என்ற வார்த்தைக்கு மிகவும் சக்தி இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்து விட்டதால்!)
"சரி, வீட்டிற்குப் போய் கொண்டு வருகிறேன்'' என்றார்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பணம் கொண்டு வந்து கொடுத்தார்.
அவர் பெயர் வேண்டாம்... இது அவரை இழிவுபடுத்துவதற்காக எழுதும் கட்டுரை அல்ல. பெரிய பதவியில் இருப்பவர்களில் சில அழுகல் பேர்வழிகளும் உண்டு என்பதைத் தெரியப்படுத்தவே எழுதினேன். (பாவம், ஒன்றிரண்டு வருடத்திற்குள் என்று நினைக்கிறேன், அவரை அந்த நிறுவனம் வீட்டிற்கு அனுப்பி விட்டது. (யாரோ ஒருத்தர் ‘முதலாளி'யிடம் போய் சொல்லியிருக்க வேண்டும்!)
போகட்டும். இனி டில்லியில் என் வீட்டிற்கு வந்த சிலரைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். (அதிகமாகச் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமல்!)
டைரக்டர் பாலசந்தர்
டில்லியில் "வறுமையின் நிறம் சிவப்பு' படம் எடுப்பதற்காக பாலசந்தர், கமல், ஸ்ரீதேவி முதலியோர் வந்திருந்தனர். சுமார் ஒரு மாதம் கேம்ப் போட்டிருந்தார்கள்.பாலசந்தரை, ஏஜிஸ் ஆபீஸ் காலத்திலிருந்து அறிந்தவன். நான் அப்போது சென்னை ஜி.பி.ஓ-வில் இருந்தேன். எங்கள் துறையில் இருந்தவர் எங்கள் ஊர்க்காரரான் பி. ஆர், கோவிந்தராஜன். (பின்னால் இவர் கலாகேந்திரா கோவிந்தராஜனாகி விட்டார். அபூர்வ ராகம் உட்பட பல திரைப்படங்களைத் தயாரித்தார். பி. ஆர், கோவிந்தராஜன், தயாரிப்பாளர் பாலாஜி, பாலசந்தர் ஆகியவர்கள் GUP AND GAS, பாலசந்தரின் புஷ்பலதா, தீன் பத்தி; சார் ராஸ்தா போன்ற பல காமெடி நாடகங்களைப் போடுவார்கள். பாலசந்தரும் நடிப்பார். நான ஒரு நாடகத்திற்கு திரை இழுத்திருக்கிறேன். அவருடைய புஷ்பலதா நாடகத்தை சென்னை ஜி.பி.ஓ கிளப்பில், அலுவலகத்தில் உள்ள சதுக்கத்தில் போட்ட போது கோவிந்தராஜனுடன் பாலசந்தரும் வந்தார்கள் என்று நினைவு. ( கோவிந்தராஜன்தான் சென்னை திருவல்லிக்கேணி ஹ்யூமர் கிளப் என்னும் ஆலமரத்தை வளர்த்தவர்!)
நான் டில்லிக்கு போய் விட்டேன் என்றாலும், கலாகேந்திரா கோவிந்தராஜனும் அவரும் டில்லிக்கு வரும் சமயங்களில் அவர்களைச் சந்தித்து இருக்கிறேன். சிறிது கூட வேஷமில்லாமல் மிகவும் இயல்பாகவே இருப்பவர்.
”வறுமையின் சிவப்பு டில்லியில் நடக்கிறது படப்பிடிப்புக்கு நீங்கள் உதவ வேண்டும்” என்று என்னை டெலிபோனில் கேட்டு கொண்டார். கே.பி. டில்லி வந்ததும் என்னைத் தொடர்பு கொண்டார்."வறுமையின் நிறம் சிவப்பு' கதையைச் சில வரிகளில் சொல்லிவிட்டு, "இந்தக் கதைக்குத் தேவையான லொகேஷன்கள் வேண்டும். நீங்களே பிளான் பண்ணி, ஊரைச் சுற்றிக் காண்பியுங்கள்'' என்றார். அதன்படியே இரண்டு நாட்கள் சுற்றினோம். என் வீட்டிற்கு அருகில் தெரு சந்திப்பில் பிரம்மாண்டமான சிவாஜி சிலையை அப்போதுதான் நிறுவி இருந்தார்கள். அதைக் காட்டும் சாக்காக, என் வீட்டுப் பக்கமாகக் காரை ஓட்டச் சொன்னேன். ” சார். இங்கேதான் என் வீடு. ஒரு நிமிஷம் வந்துவிட்டுப் போங்களேன்” என்றேன்.வந்தார்.
படம் எடுக்கும் போது பல நாட்கள் அவருடன் கூடவே இருந்தேன்.
தினமும் காலையில் ஜன்பத் ஓட்டலுக்கு நான் சென்று விடுவேன். லௌஞ்சில் கமல் உட்கார்ந்து இருப்பார். மற்றவர்கள் வரும் வரை பேசிக்கொண்டு இருப்போம். சினிமாவைத் தவிர பல விஷயங்கள். அப்போது கமல் ஒரு ரகசியத்தை என்னிடம் சொன்னார். ச்மீபத்தில அதை அவரே வெளியாக்கிவிட்டதால். நான் அதை இங்கு சொல்வதற்குத் தடை இல்லை. ”யாரைப் பார்த்தாலும் அவர்களுடைய துறை, ஆர்வம் சம்பந்தமாக ஒரு கேள்வியைக் கொளுத்திப் போட்டுவிடுவேன். அவர்களை நிறையப் பேச விடுவேன். இதன் காரணமாக எனக்குப் பல விஷயங்களைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள முடிகிறது.” என்றார் கமல். ( என் விஷயத்தில். பாவம் அவருக்கு ஏமாற்றமே கிட்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை!)
பிறகு எட்டு மணிவாக்கில் ஜன்பத் ஓட்டலிலிருந்து பாலசந்தர், கமல், அனந்து எல்லாரும் பொடி நடையாக யு.என்.ஐ..கேன்டின் என்று பிரபல பெயரில் அழைக்கப்படும் மரத்தடி ’கையேந்தி பவனு’க்குச் செல்வோம்.அனவரூம் அங்கு சாப்பிடுவோம்.. நின்று கொண்டு தான் சாப்பிட வேண்டும் என் அலுவலகத்திற்குப் பின் கட்டிடத்தில்தான் யு.என்.ஐ..கேன்டின் இருந்தததால் கான்டீன்காரர் திரு சூரியநாராயணனுடன் எனக்கு நல்ல பழக்கம். ஆகவே சினிமா யூனிட்டையே விசேஷமாகக் கவனித்தார்.. பல சமயம் கட்டுப்படியாகுமா என்று கூடப் பார்க்காமல்! ஸ்பெஷலாக மெனு தயாரிப்பார்..
ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு “ரசம் கிடைக்குமா” என்று ஸ்ரீதேவி கேட்டாராம். புரடக்ஷன் மானேஜர் கணேசன், யு.என்.ஐ..கேன்டினுக்கு வந்து கேட்க, அவர் ஸ்பெஷலாகத் தயார் பண்ணிக் கொடுத்தார்.
.
வறுமையின் நிறம் சிவப்பை' ஹிந்தியில் எடுக்க கமல், பாலசந்தர் ஆகியோர் டில்லி வந்த போது, ஷூட்டிங் நடத்துவதற்கு அவர்கள் பட்டபாடு சொல்லி முடியாது. காரணம் அப்போது "ஏக் தூஜே கேலியே' வெளியாகி விட்டிருந்தது! ". கமலைப் பார்த்ததும், "அரே, ஹமாரா கமல்ஹாஸ்ஸன் ஆகயா'' என்று சொல்லிக் கொண்டு, ஜனங்கள் ஏகமாகக் கூட்டம் கூட ஆரம்பித்தார்கள். டில்லிக்குச் சற்று வெளியே உள்ள ஜனக்புரி போன்ற பகுதிக்குப் போய்ப் படப்பிடிப்பை வைத்துக் கொண்டோம். லஞ்சிற்குக் கான்டீனுக்கு வந்தாலும், காருக்குள் இருந்து கொண்டே கமல் சாப்பிட வேண்டி இருந்தது.
படப்பிடிப்பின் போது நான் செய்த ‘அணில்’ உதவிகளுக்கு பாலசந்தர் மிகவும் மதிப்பளித்து, அந்தப் படத்தின் டைட்டிலில் முதல் கார்டில் என் பெயரைப் போட்டு நன்றி தெரிவித்து இருந்தார். ஆகவே நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் அது என்று சிபாரிசு செய்கிறேன்! குறைந்த பட்சம் டைட்டில் வரைக்குமாவது பாருங்கள்! (ஹி..ஹி...)
அத்துடன் என்னை பாலசந்தர் மறந்து விடவில்லை என்பது பின்னால் தெரிந்தது. (தொடரும்)
விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் பழமொழி ஞாபகம் வந்தது. நான் என்னுடைய சிறு வயது முதல் உங்கள் விசிறி. ஹிஹிஹி எனக்கு இப்போதும் சிறு வயதுதான்-உங்களை விட 3 வயது குறைவு.
ReplyDeleteஅப்படி என்றால், நீங்கள் எனக்குத் தம்பி மாதிரி!
ReplyDeleteதம்பி உடையான் (நகைச்சுவைப்)‘படைக்க’ அஞ்சான்! இனிமேல் தைரியமாக வெளுத்துக் கட்டுகிறேன்!!
நீங்களும் கமல், பாலசந்தர் போன்ற பெரிய மனிதர்களும் சாப்பிட்ட யூ.என்.ஐ கேண்டீனில் நானும் சாப்பிட்டிருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது.1986-88 ல் பார்லிமெண்ட் ஸ்ட்ரீடில் என் அலுவலகம்.
ReplyDeleteஅப்போதெல்லாம் அது இவ்வளவு பிரலம் என்று தெரியாது.(அலுமினிய தட்டு வேறு.) பின்னாளில் சுஜாதா, கஸ்தூரி ரங்கன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் எல்லாம் அங்கு கஸ்டமர்ஸ் என்று படித்ததுண்டு.
சென்ற வருடம் தில்லி விஜயத்தின் போது மனைவி மகனுக்கு காட்டலாம் என்று நினைத்தேன், வழியே தெரியவில்லை. நிறைய மாறிவிட்டது. இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.
/// படப்பிடிப்பின் போது நான் செய்த ‘அணில்’ உதவிகளுக்கு பாலசந்தர் மிகவும் மதிப்பளித்து, அந்தப் படத்தின் டைட்டிலில் முதல் கார்டில் என் பெயரைப் போட்டு நன்றி தெரிவித்து இருந்தார். ஆகவே நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் அது என்று சிபாரிசு செய்கிறேன்! குறைந்த பட்சம் டைட்டில் வரைக்குமாவது பாருங்கள்! (ஹி..ஹி...) ///
ReplyDeleteNext time when it is telecast, I will aurely look out for this.
Everyone writes about UNI canteen, what is so special about that? My relatives now in Delhi haven't even heard of this.
பணத்தை ஒரு வழியாக வசூல் செய்துவிட்டீர்கள், நீங்கள் ஒரு வசூல் ராஜாதான் :))
ReplyDeleteஇப்போது ஜனக்புரியில் வசிக்கிறேன். அந்த காலத்தில் இந்த இடம் டில்லிக்கு வெளியே இருந்ததை நினைத்தால் ஆச்சரியமாய் இருக்குது. இப்போது டில்லி ஜனக்புரியும் தாண்டி எங்கேயோ போய்விட்டது.
ReplyDelete-அரசு
// நான ஒரு நாடகத்திற்கு திரை இழுத்திருக்கிறேன் // Ha..ha.. In the film 'Kaaathalikka Neramillai' Sachu will say 'Ranikku Saamaram Veesi Irukken'- antha maathiri irunthathu! Aammam, neengal KB-udan busy aaga irunthapodhu, ungal office velaya yaar paarththaa? Avarukkum titileil oru card pottirukkanum! - R. Jagannathan
ReplyDeleteDear Sir,
ReplyDeleteOf course you are a good வசூல் ராஜாதான் :)). I believe, I guessed the person correctly in your last post itself.
Keep rocking...
Regards
Rangarajan
<<< Aammam, neengal KB-udan busy aaga irunthapodhu, ungal office velaya yaar paarththaa? >>>
ReplyDeleteMy job was interantonal accounting. The periodcity of the accounts was3 months and a three month delay is normal!!!
Please await a small posting about UNI Canteen
ReplyDelete//ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு “ரசம் கிடைக்குமா” என்று ஸ்ரீதேவி கேட்டாராம். புரடக்ஷன் மானேஜர் கணேசன், யு.என்.ஐ..கேன்டினுக்கு வந்து கேட்க, அவர் ஸ்பெஷலாகத் தயார் பண்ணிக் கொடுத்தார்.//
ReplyDeleteஅகால வேளையில், அதுவும் 1980'களின் டில்லியில் ஒரு பணம்படைத்த நடிகைக்கு "தமிழ்நாட்டு ரசம்" கிடைக்கிறது...நடிக்கும் படமோ "வறுமையின் நிறம் சிவப்பு"...என்ன ஒரு irony, சார்...
ரமேஷ், பெங்களூரு.
<<.என்ன ஒரு irony, சார்...
ReplyDelete>> IRONY இல்லை...ரசம் அந்த ஓட்ட்லிலும் கிடைத்து இருக்கும். ஆனால் யு.என்.ஐ..கேன்டீன் ரசத்தின் ருசிக்கு ஈடாகாது என்பதையும் கேன்டீன்காரர் செய்த அசாதாரண சேவையையும் எடுத்துக் காட்டவே இதை எழுதினேன்... ஸ்ரீதேவி அவர்கள் எவ்வித பந்தாவும் இல்லாமால்தான் இருந்தார். ஸ்ரீதேவி மட்டுமல்ல, கமல் கூட. ஒரு ஜாலியான குடும்ப விழா மாதிரிதான் இருந்தது.
ஆஹா என்ன ஒரு ருசி! ரசமும் - ரசமான தகவல்களும் சேர்த்துப் படைத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஅரசாங்க ஊழியர் என்றால், அந்த காலத்திலேயே...யாரும் வேலை செய்யரேதே இல்லைபோல.....!
ReplyDeleteஎன அரசு பணி அனுபவங்களை எழுதினால் பல வால்யூம்கள் எழுத வேண்டி இருக்கும்! ஆபீசுக்கு வ்ந்து போக சம்பளம்; வேலை செய்ய ஓவர்டைம்!
ReplyDeleteஎன்பது பலரின் கொள்கை
It's amazing to follow you sir ,,, great going,,, Don forget to post about u r cine experiences now and then,,,It will be like pepper in pongal which is not so tasteful but is needed
ReplyDeleteநீங்கள் தாளித்த ரசம் ரஸமாகவே இருந்தது.....
ReplyDeleteSir...Noted your clarification on Sridevi & rasam...thanks.
ReplyDelete//ஆபீசுக்கு வ்ந்து போக சம்பளம்; வேலை செய்ய ஓவர்டைம்!//
LOL....excellent!!!
Ramesh, Bangalore.