February 05, 2010

கமலாவும் நகைகளும் - கடுகு

  என் அருமை மனைவி கமலாவைப் பற்றி நான் சதா குறைப்பட்டுக் கொண்டு இருப்பதாகத் தான் பலர் நினைக்கிறார்கள்.
    "ஏனய்யா... உம்ம ஒய்ஃபைப் பற்றி உசத்தியாகச் சொல்ல எதுவுமே கிடையாதா? அவனவன் தன் மனைவியைப் பற்றி எத்தனை பெருமை பீற்றிக் கொள்கிறான்? வார்த்தைக்கு வார்த்தை "என் மனைவி ஒரு காரியம் செய்தால் அதைப் போல் வேறு யாரும் செய்ய முடியாது' என்கிற ரீதியில் ஜம்பமடித்துக் கொள்கிறான்?'' என்று சற்றுக் காராசாரமாக என் நண்பர் என்.ஆர்.கே. கேட்டார்.
    அவர் கேட்டது எனக்கு உரைத்தது. யோசித்துப் பார்த்தேன். அப்போது என் தலைக்குள் சடாரென்று பல்ப் எரித்தது. ஞானோதயம் உண்டாயிற்று. கமலாவின் அருங்குணங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.
    அப்போது தான் எனக்கே தெரிந்தது. கலியாணம் ஆகி இத்தனை வருடங்களாகியும் அவள் ஒரு நகை கூட வாங்கிக் கொடுக்கும்படி கமலா என்னைக் கேட்டதில்லை! சற்றுப் பின்னோக்கிப் போய் யோசிக்கிறேன்.
கலியாணம் ஆகி சரியாக ஒரு வருஷம் ஆயிற்று!
    "என்ன கமலா, இன்னிக்கு நம் மேரேஜ் ஆனிவர்சரி... ஏதாவது ஒரு சின்ன நகை வாங்கித் தருகிறேன். அரை சவரனில் நெளி மோதிரம் வாங்கித் தரட்டுமா?'' என்றேன்.
    "நீங்க ஆசையாய்க் கேட்டதே  எனக்குக் காசுமாலை பண்ணிப் போட்டதற்குச் சமம். மோதிரம் போட்டுக் கொண்டு மினுக்கற ஆசை எல்லாம் கிடையாது. இருந்தாலும் உங்க ஆசைக்கு, அதுக்குப் பதிலா ஒரு ஸ்டீல் பீரோ வாங்கிக் கொடுத்துடுங்கோ'' என்றாள்.     ’அதுக்குப் பதிலாக' என்று சொல்லியிருக்க வேண்டாம். ஒரு பீரோவை வாங்கிக் கொடுத்தேன்.
ஒரு நாள் கமலா ஒரு நவரத்ன மாலையைக் கொண்டு வந்து காண்பித்தாள்.
    "பக்கத்து வீட்டு மிஸஸ் கோபாலன் வாங்கியிருக்கறாங்க. விலை எண்ணூறு ரூபாய்தானாம்.''
    "நன்னா இருக்கிறதே, கமலா, நீயும் ஒண்ணு வாங்கிக்கோ, பிராவிடண்ட் ஃப்ண்ட்லே லோன் போட்டுப் பணம் வாங்கித் தர்றேன்'' என்றேன்.
    "கடன் வாங்கியாவது நகை வாங்கணுமா என்ன? அப்படி சுலபமாகப் பணம் கெடைக்கும்னா ஒண்ணு செய்யுங்க. ஒரு தையல் மெஷின் வாங்கிக் கொடுங்க'' என்றாள்.
    நான் ஒரு நுணல், வாயால் கெட்டேன். ஆகவே ஆயிரம் ரூபாய் போட்டுத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தேன்.   
    ஊரிலிருந்து என் அக்கா வந்திருந்தாள். "கமலா, டி.நகர் வரைக்கும் போய் வரலாம் வாயேன். ஒரு கஜலட்சுமி பெண்டன்ட் வாங்கணும் எனக்கு'' என்று சொல்லி, கமலாவைக் கடைக்கு அழைத்துச் சென்றாள்.
    மாலை நான் ஆபீஸிலிருந்து திரும்பியதும் பெண்டன்டைக் காண்பித்தாள் கமலா. "என்னமா ஜொலிக்கிறது பார்த்தீங்களா?'' என்றாள் வாக்கியத்தை முடிக்க மனமில்லாமல்.
    "சரி... நீயும் ஒண்ணும் வாங்கிக்கணும். அப்படித்தானே?'' என்றேன்.
    "எனக்கு கஜலட்சுமி வேண்டாம், முழலட்சுமியும் வேண்டாம். பணத்தை இப்படியெல்லாம் தாம்தூம் பண்ண எனக்குப் பிடிக்காது. போனஸ் வருமே வர்ற மாசம்.அந்த இரண்டாயிரத்தை என்கிட்டே கொடுங்கோ. ஒரு பட்டுப் புடவை வாங்கிக்கறேன்'' என்றாள். சொல்வதைச் செய்து முடிப்பவள் அவள்! போனஸ் ஆறு கஜமாக மாறியது 2000 ரூபாய் செலவில்.இத்தனைக்கும் போனஸ் 1500 ரூபாய் தான் கிடைத்தது!
   
    சமீபத்தில் டில்லியிலிருந்து என் நண்பர் வல்லபன் வந்திருந்தார். ஒரு நாள் அவரைச் சாப்பிட வரும்படி வீட்டிற்கு அழைத்தேன். சாப்பிட வந்தவர் சும்மா சாப்பிட்டு விட்டு “ மாமி, சமையல் சூப்பர்.” என்று (பொய்யாகவாவது) சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! இவர், தன் மனைவிக்கு வாங்கிய "கடா"வைப் பற்றி அரை மணி நேரமா பேச வேண்டும்? ’கடா' என்றால் அகலமான ஒற்றை வளையல் என்பது எனக்குத் தெரியாது. ’கடா' வாங்கினேன் என்றும் அவர் சொன்ன போது, "எருமையா, ஆடா” என்று தான் கேட்கத் தோன்றியது.
    அக்கடா என்று இருந்தவனை(ளை) இந்தக் ’கடா' சும்மா விடவில்லை.
    மறுநாள் காலை, கமலா காபி கொடுக்கும் போது, "ஒரு கடா என்ன இரண்டாயிரம் இருக்குமா?'' என்று கேட்டாள். இரவெல்லாம் கடா மயமான கனவில் இருந்திருப்பாள்!
    நான் மனதில் எங்கு கடன் வாங்குவது என்று கம்ப்யூட்டர் வேகத்தில் யோசித்துக் கொண்டு, "கமலா, வேணும்னா நீயும் ஒரு கடா வாங்கிக் கோயேன்'' என்றேன்.
    "வேற வேலை இல்லை. உங்க அக்கா தான் குருவிக்காரி, கழுத்தெல்லாம், கையெல்லாம் வளை என்று போட்டுக்கறா. இரண்டாயிரம் கொடுங்க. அதைப் போட்டு ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கிடறேன்''
    அதை மட்டும் போட்டு ஃப்ரிட்ஜ் வாங்க முடியாது. இருந்தாலும் ’அதை' மூன்று தரம் போட்டு ஃப்ரிட்ஜ் வாங்கினேன்!
    இன்று என் பிராவிடண்ட் ஃபண்டில் கடன் வாங்க முடியாது. இன்ஷூரன்ஸ் பாலிஸியை வைத்து கடன் வாங்க முடியாது. ஆபீஸில் எல்லாவித லோனும் போட்டாயிற்று. என் நண்பர்கள் யாவரும் இப்போது முன்னாள் நண்பர்களாகி விட்டார்கள்.
கமலாவிற்கு நகை ஆசை இல்லாத போதே இப்படி இருக்கிறதே, அவளுக்கு மட்டும் நகை மோகம் இருந்திருந்தால்?
ஒரு வேளை நகை மோகம் இருந்து,   அவளும் நகைகளை வாங்கியிருந்தால் இவ்வளவு கடனாளியாக ஆகி இருக்க மாட்டேனோ!

11 comments:

 1. ஹா ஹா - நல்லா இருக்கு. நிஜமாவே ஏதோ புகழ்ந்து எழுதி இருக்கீங்கன்னு நெனச்சேன் மறுபடியும் வாரல்.

  ReplyDelete
 2. GRT-yile puthusa ennamo vaira necklace vanthirukkam, enga veetu amma sonnanga, please kamala mam kitte sollidungaleen ....vilai 5000.00 thanaam.

  I laughed aloud at many places, superb writing Sir.

  ReplyDelete
 3. Aamaam, Aaththukku bereau-um, frige-m illama yeppadi kudiththanam nadaththarathu? Yellaam maamanaar kitta ethirpaarththeLaa? - R. Jagannathan

  ReplyDelete
 4. அமர்க்களமாய் இருந்தது. முதல் பாராவைப் படித்ததும் எங்கே டிராக் மாறி விட்டேர்களோ என்று நினைத்து விட்டேன். வழக்கம் போல இதையும் வஞ்சப் புகழ்ச்சியாகவே முடித்து விட்டீர்கள். இவ்வளவு வருடங்கள் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கும் கமலா மாமிக்கு பேஷாக 'பொறுமை பூஷணி' அல்லது 'பொறுமைத் திலகம்' அல்லது 'பொறுமைப் புயல்' என்று எதாவது ஒரு பட்டம் கொடுத்து விடலாம். தயவு செய்து தொச்சுவை வைத்து கூடிய சீக்கிரம் ஒரு கதை எழுதவும். தொச்சு கதைகளுக்கு நான் சிரித்த மாதிரி வேறு எந்த கதைகளுக்கும் சிரித்ததில்லை. அந்தக் கதையில் உங்கள் மாமியாரும் இருந்தால் டபுள் சந்தோஷம். எந்தக் கதையிலாவது உங்கள் மாமியார் காரக்டருக்கு 'நாமகரணம்' செய்திருக்கிறீர்களோ?

  ReplyDelete
 5. அன்புள்ள சூர்யாவிற்கு: பொறுமை பூஷணி என்று நீங்கள் எழுதியிருப்பதை பார்த்து மகிழ்ச்சி.
  கதை என்றால் ரொம்ப நீளமாக இருக்கும். இந்த LAYOUT-டில் பாதி ஸ்க்ரீன் காலியாக உள்ளது. அகலமான் லே-அவுட்டாக மாற்றப் பார்க்கிறேன்..எப்படி செய்வது என்று கற்றுக்கொண்டு செய்யப் பார்க்கிறேன்.
  மாமியாருக்கு பெயர் கொடுக்கவில்லை.

  ReplyDelete
 6. ஆமா சார்....”கலியாணாமா” இல்லை “கல்யாணமா”?

  ReplyDelete
 7. <<”கலியாணாமா” இல்லை “கல்யாணமா”?->> இரண்டும் வழக்கில் உள்ளன.

  ReplyDelete
 8. prividednt fundu la kadan vaangi vaangiralaam - wat an unique thought!
  i become a fan to this blog.
  -prakashm

  ReplyDelete
 9. மாமி பாவம் எப்பிடி தான் குப்பை கொட்டினாங்களோ?

  ReplyDelete
 10. இதுதான் வஞ்சபுகச்சி அணி என்பதா......

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :