February 03, 2010

கமலாவும் 'கண்மணி'யும்

என் அருமை மனைவி கமலாவிற்கு அப்படி ஒரு ஆசை தோன்றியிருக்க வேண்டாம். ஒரு நாய்க் குட்டியை வளர்க்க வேண்டும் என்று ஒரு நாள் சொன்னாள்.

ஆசைதான் எல்லா துன்பங்களுக்கும் காரணம் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் கமலாவின் ஆசை, என் துன்பங்களுக்குக் காரணமாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. (எதிர்பார்த்திருந்தாலும் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பது வேறு விஷயம்!)
கமலா தினமும் ஏதாவது ஒரு கிளப், அமைப்பு, குழு, சங்கம்,  நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாள். மாதர் இசைக்குழு, சமையல் ராணி குரூப், சமூக சேவை மன்றம், தையல் பிரியர்கள் குழு, யோகா கிளாஸ் என்று போவாள். ஒவ்வொரு நாளும் போய்வந்த பிறகு எனக்குச் சின்னதும் பெரியதுமாய்ச் செலவு வைப்பாள். புது புடவை, வித்தியாசமான டீப்பாய், மாடர்ன் ஓவியம், நவ திருப்பதி சுற்றுலா என்று  பல பல! எப்படி அவளுக்கு  நாய் வளர்க்கும் ஆசை ஏற்பட்டது என்று தெரியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதால் அதைப் பற்றி யோசிக்காமல், நாய்க்குட்டி எங்கு கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
"என்ன நாய் உனக்கு வேண்டும்? நல்ல ஜாதி நாய் என்றால் பணம் செலவாகுமே!''
"தெருக்கோடி குப்பைத் தொட்டிகிட்ட ஒரு கறுப்பு சொறி நாய்க்குட்டி இருக்குது. அதை எடுத்துட்டு வந்துடுங்கோ... செலவே இருக்காது.... இல்லாவிட்டால் ஒண்ணு செய்யுங்க. இப்பதான் எங்கே பார்த்தாலும் ”ஓ.... போடு' ’ஓ.... போடு' என்று கத்தறாங்களே... அதனால் நாய்க்கும் ஒரு "ஓ' போட்டு ஒரு ஓநாய்க்குட்டி வாங்கி ண்டு வந்துடுங்க... அது என்னை நன்னா பிராண்டிடும். உங்களுக்குப் பால் பாயசம் சாப்பிட்ட மாதிரி இருக்கும்!'' என்றாள் கமலா!
பால் பாயசம் தானே? எப்போ எனக்கு டயாபடீஸ் தொல்லை போய்,  பால் பாயசம் சாப்பிடலாம்னு டாக்டர் சொல்றாரோ, அப்ப ஓநாய் வாங்கித் தரேன்... சரி... சரி, சொல்லு என்ன நாய் வேண்டும்?'' என்று சற்று முறைப்புடன் கேட்டேன்.
"ஒரு பாம் குட்டி இருந்தால் அழகாக இருக்கும்.''
"பாம் குட்டியா... அப்படி என்றால்...?''
"பாமரேனியன் குட்டி... புசுபுசுன்னு வெள்ளையாக அழகாக இருக்குமே... நாய்களைப் பத்தி ஒண்ணும் தெரியாத ஞான சூன்யமாக இருக்கீங்களே?''
"சரி... சரி... ஒரு நாய்க்குட்டிக்கு ஏற்பாடு பண்ணுகிறேன்'' என்றேன்
அடுத்த ஒரு வாரம் நாயாய்த் திரிந்து, பேயாய் அலைந்து ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்தேன். (ரேஷன் கார்டு, அரிசி கூப்பன் வாங்குவது எல்லாம் இந்த அலைச்சலுக்கு முன் வெறும் தூசு!)
கமலாவிற்கு வாயெல்லாம் பல். "அய்யோ... என்ன அழகு!... வாடா செல்லம்.!.. இதுக்கு  ’கண்மணி’ன்னு பேர் வெக்கப் போறேன்... பார்க்கிற பார்வையைப் பாரேன்!''என்று கூறிக் கொண்டே அந்த நாய்க்குட்டியை அள்ளி அணைத்துக் கொண்டாள்.
"என்ன புசு... புசு...! என்ன அழகு!  எத்தனை மெத்து... மெத்து...! பிரவுனாக இருந்தாலும் கொள்ளை அழகுதான் ஹும்... அழுது வடிகிற வெள்ளைக் கலர் நாய்க்குட்டியை வெச்சுண்டு, அந்த மைதிலி கண்ணன் அவ்வளவு அலட்டறாளே, என் கண்மணியைப் பாத்த பிறகாவது ஜம்பத்தைக் குறைச்சிக்கிறாளான்னு பார்க்கிறேன்'' என்றாள்.
ஓஹோ, அப்படியா சேதி! மைதிலி கண்ணன் தானா வில்லன்? அதுவரைக்கும் ஒரு சின்ன சந்தோஷம் மைதிலி கண்ணன் நாய்க்குட்டி வளர்க்கிறாள். அதுவே, ஒரு புலி, காண்டாமிருகம், திமிங்கிலம் என்று வளர்க்காமல் இருந்தாளே! வாழ்க மைதிலி கண்ணன்!
அடுத்த ஒரு வாரம் கமலா அந்த நாய்க்குட்டிக்கு பிளேட், கப், படுக்கை, போர்வை என்று பலவறறை வாங்கி வந்தாள். நாய் பிஸ்கெட்டுகள் இத்தனை வகையில் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும்படி வகைக்கு ஒன்றாக வாங்கி வந்தாள். வெல்வெட் கழுத்துப் பட்டை வாங்கி அதில், "கண்மணி' என்று எம்பிராய்டரி பண்ணினாள். ’ந்ல்ல சமயமாடா, இதை நழுவ விடுவாயா’ என்று மனதிற்குள் பாடிக்கொண்டே, ஆறு மாதமாக பட்டன் இல்லாமல் குண்டூசியை குத்திகொண்டு சமாளித்த என் சட்டையை அவளிட்ம் கொடுத்தேன். என் மீது பாயாமல், அதை வாங்கி. பட்டன் தைத்துக் கொடுத்தாள். நான் கேட்டது அவளுக்கு ‘நாயமான’ கோரிக்கையாகப் பட்டிருக்கவேண்டும்!
நாய் சோப், ஷாம்பூ, பிரஷ் என்று செலவு பண்ணினாள்.
சில சமயம் கண்மனியை மடியில் வைத்துத் தட்டி தூங்கப் பண்ணினாள். கூடவே தாலாட்டு பாட்டு வேறு. கண்மணி ரொம்பக் கெட்டிக்கார நாய். கமலா பாட ஆரம்பித்ததும், கண்ணை மூடிக்கொண்டு விடும். தூங்குவது போல் பாசாங்கு செய்யும். கமலாவின் இசை என்னும் இம்சையிலிருந்து தப்பிக்க வேறு வழி!
வீட்டு வாசலில் "நாய் ஜாக்கிரதை' என்று போர்டு போட வேண்டும்'' என்றாள் கமலா.
"உன் கண்மணிக்குக் குரைக்கக் கூட தெரியவில்லை. போர்டு எதுக்கு அனாவசியமாய்?'' என்று கேட்டேன்.
"ஐயோ... சமர்த்தே... உங்க பிரண்ட்ஸ் பூட்ஸ் காலோடு வந்து குழந்தையை மிதிச்சுடப்  போறாங்களோன்னு எனக்குப் பயம்... உங்க ஃபிரண்ட்ஸ் ஷர்ட் கூட இல்லாமல் வருவார்கள். ஆனால் லாடம் அடிச்ச பூட்ஸ் இல்லாமல் வர மாட்டார்கள்'' என்றாள்.
"குழந்தை"யைப் பாதுகாக்க அப்படி ஒரு போர்டை வாங்கி மாட்டினேன்.
ஒரு நாள் வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, உள்ளே கமலா யாரோ ஒரு மாமியிடம் பேசுவது கேட்டது.
"மாமி... நம்ப மாட்டீங்க... மத்தியானம் டி.வி.யைப் போட்டுட்டு "கண்மணி"யை மடியில் வெச்சுண்டு, பாத்துண்டுருந்தேன். அப்போ சுதா மூர்த்தி டெலிபோனில் கூப்பிட்டாள். கண்மணி"யை அப்படியே விட்டு விட்டு போய் பேசிவிட்டு வந்தேன்... இங்கு வந்து பார்த்தால் அப்படியே வெச்ச கண்ணை எடுக்காமல் பார்த்துண்டு இருந்தது. சீரியல் முடிஞ்சுடுவே டிவியை அணைச்சுட்டு இதைத் தூக்கறேன்... கல்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாக் கூட உங்களுக்கு நம்பிக்கை வராது... நாய்க்குட்டி கண்ணில் நீர் தளும்பியிருக்குது, மாமி.... சீரியலில் யாரோ அழுது இருக்கிறதைப் பார்த்து, இதன் கண்ணிலும் கண்ணீர் வந்திருக்க வேண்டும்...''
"நம்பறேன் கமலா மாமி... வாயில்லா ஜீவன் என்கிறதாலே அதுங்களை ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்ல முடியாது... உங்க நாய்க் குட்டிக்கு உடம்பெல்லாம் மூளை...  அர்ஜென்டாக 500 ரூபாய் கைமாத்தா வேணும்.'' என்றாள்.
"உனக்கில்லாததா?'' என்றாள் கமலா.
ஐந்நூறு என்ன ஆயிரம் கேட்டிருந்தால் கூட கமலா கொடுத்திருப்பாள். அந்த மாமி ஐஸா வைத்தாள்? ஐஸ் மலையையே அல்லவா வைத்திருந்தாள்!

ஒரு நாள் காலை."ஏன்னா... நாய்க்குட்டி சாதமே சாப்பிட மாட்டேன் என்கிறது'' என்றாள்
"கொஞ்சம் ஊட்டி விடேன்'' என்றேன், கிண்டல் கலக்காத குரலில்.
"ஊட்டிப் பார்த்தேன். சாப்பிடவில்லை.''
"காக்கா.. காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா' ’நிலா நிலா ஓடி வா' இப்படி பாட்டு பாடி ஊட்டிப் பாரேன்...''
"என்ன... என்ன... என்ன சொன்னீங்க? இது இங்கிலீஷ் நாய்க்குட்டி... "டுவிங்கிள், டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்' போன்ற பாட்டை தான் பாடணும். நீங்க ஏதாவது தத்து பித்துன்னு, உங்க அம்மா, பாட்டி பாடின பாட்டையெல்லாம் பாடி அதன் மூளையை கெடுத்துடப் போறீங்க?'' என்றாள்.
அதன் பிறகு வீட்டில் ஏதோ கிண்டர் கார்டன் பள்ளி மாதிரி ஒரே "ரைம்ஸ்"தான். கமலா, வெங்கடேச சுப்ரபாதம் மெட்டில், "பாபா பாபா... பிளாக் ஷிப்' பாடியது சூட் போட்டுக் கொண்டு ஹரிகதா காலஷேபம் செய்த மாதிரி இருந்தது. (கிழக்கும் மேற்கும் ஒன்று சேராது என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் பொய்யாக்கி விட்டாள் கமலா!)

ஒரு நாள் இரவு திடீரென்று கண்மணி வாள், வாள் என்று குரைத்தது. கட்டியிருந்த செயினிலிருந்து இழுத்துக் கொண்டு ஓட முயற்சித்தது. கமலா எவ்வளவோ நல்லபடியாக சமாதானப்படுத்தப் பார்த்தாள். அதட்டிப் பார்த்தாள். நாய் குரைப்பதை நிறுத்தவே இல்லை. அப்போது பீரோவின் அடியிலிருந்து ஒரு மூஞ்சுறு வெளியே ஓடியது. அதைப் பிடிக்க நாய் தாவ, நாயைக் கட்டியிருந்த டீப்பாய் சாய, அதன் மேல் இருந்த கண்ணாடி ஜாடி கீழே விழுந்து, ஒரு சவுண்ட் எஃபெக்டுடன் ஆயிரம் சுக்கலாக உடைய...
வீட்டு காலிங்பெல் அடித்தது.
கதவைத் திறந்தேன் கீழ்வீட்டு பரமசிவம்!  மூன்று கண்ணுடன் வந்தவர், மூன்றாவது கண்ணைத் திறந்து விடத் தயாராக இருந்தார். அவ்வளவு கோபம்!
"என்னய்யா... ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இப்படி கத்தலும் சத்தமும்? மனுஷனை நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா?''
"இல்லை... பரமசிவம்... நம்ப நாய் வந்து...''
"நாய்... பேய்...இப்படி அபார்ட்மெண்டில் நாயெல்லாம் வளர்க்கிறதை முதல்ல  தடை செய்யணும்...''
"இல்லை. ஊர்லே ஒரே கொலை, கொள்ளையாக இருக்கு. நாய் இருந்தால் எல்லாருக்கும் பாதுகாப்பு...'' என்று இழுத்தேன்.
"எதுக்கய்யா பாதுகாப்பு? நம்பகிட்ட என்ன கிலோ கிலோவா நகை இருக்கா? இல்லை, சூட்கேஸ், சூட்கேஸா கறுப்புப் பணம் இருக்கா?...'' என்று கறுவிக் கொண்டே போனார். அவர் கத்தலைக் கேட்டு பயந்து கண்மணி சுருண்டு படுத்துத் தூங்கிவிட்டது.

மறுநாள் காலை. கீழ்வீட்டில் பரபரப்பு. இன்கம்டாக்ஸ் ரெய்ட். பரமசிவம் வீட்டிலிருந்து ஏகப்பட்ட கறுப்புப் பணம், நகைகள் என்று அள்ளிக் கொண்டு போனார்கள்.
"வேணும்.... வேணும். நன்றாக வேணும்... என் குழந்தையை பழிச்சால் இப்படித்தான் தொல்லைகள் வரும்...'' என்றாள்.கமலா
அதன் பிறகு நான் ஏன் "கண்மணி"யைப் பற்றி வாயைத் திறக்கப் போகிறேன். என்னிடம் கறுப்புப் பணம் இல்லை. என்றாலும், தொல்லை வராது என்பது என்ன நிச்சயம்!

9 comments:

  1. யதிராஜ சம்பத் குமார்February 3, 2010 at 7:57 AM

    எங்க அம்மா கூட ஒரு நாய் வாங்கணும்னு சொன்னாங்க!! நான் ஒருத்தன் இருக்கேனே இன்னொண்ணு எதுக்குன்னு எங்கப்பா சொல்லிட்டார். :(

    ReplyDelete
  2. "Naan Oruththan Irukkene, innonnu Ethukku-nnu appa sollittar" -- Yathiraj Sir, antha "Naan Oruththan" yaaru, neengala illai unga appavaa?

    Kadugu Sir, Naay varnanai pramatham; nalla irukku.

    Raja Subrmanian 10:25am 3/2/10

    ReplyDelete
  3. யதிராஜ சம்பத் குமார்February 3, 2010 at 11:26 AM

    சந்தேகமே இல்லாம எங்க அப்பாதான் சுப்ரமணியம் சார்.....

    ReplyDelete
  4. கடுகு சார்

    உங்க நாய் கதை நல்ல இருக்கு என் பொழப்பும் நாய் பொழப்பு மாதிரி இருக்கு

    ReplyDelete
  5. // வெங்கடேச சுப்ரபாதம் மெட்டில், "பாபா பாபா... பிளாக் ஷிப்' பாடியது சூட் போட்டுக் கொண்டு ஹரிகதா காலஷேபம் செய்த மாதிரி இருந்தது. // Ha... ha..., Audio post panna mudiyumaa?

    ReplyDelete
  6. // கண்மணி ரொம்பக் கெட்டிக்கார நாய். கமலா பாட ஆரம்பித்ததும், கண்ணை மூடிக்கொண்டு விடும். தூங்குவது போல் பாசாங்கு செய்யும். கமலாவின் இசை என்னும் இம்சையிலிருந்து தப்பிக்க வேறு வழி!//
    இதுதான் நான் வாய்விட்டுச் சிரித்த வரிகள்.

    ReplyDelete
  7. super..nachnu irukku

    ReplyDelete
  8. பூனை வளர்த்து இருக்கலாம் அந்த மூஞ்சுரை பிடிச்சுருக்கும் .அடுத்து வேற யாராவது பூனை வளர்ப்பு பத்தி கிளப்ல பேசாம இருக்க போறாங்களா என்ன? எதுக்கும் ரெடியா இருங்க சார்

    ReplyDelete
  9. :)) அருமை அருமை

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!