குளுகுளுவென்று முழுதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அமெரிக்கன் லைப்ரரிக்குள் செல்லும் போது சிவாவுக்கு எப்போதும் கிளுகிளுவென்று இருக்கும். காரணம், அந்த லைப்ரரியில் பணியாற்றும் பல அழகிய பெண்களில் ஒருத்தி அவனது மனத்தைக் கவர்ந்தவள். அதாவது, அவனுக்கு அவள் மேல் ஒரு "இது!' இத்தனைக்கும் அவளுடன் பேசியது கூடக் கிடையாது. அந்தப் புத்தகசாலைக்கு வரும் பல புத்தகப் புழுக்களில் அவனும் ஒரு புழு - அவனைப் பொறுத்தவரை.
அவளது கவனத்தைக் கவருவதற்கு அவன் பல முயற்சிகள் செய்திருக்கிறான். அவள் ரெஃபரன்ஸ் டெஸ்க்கில் இருக்கும் போது வேண்டுமென்றே 'எஸ்கொயர் ஏப்ரல் 74 இஷ்யூ வேண்டுமே' என்பான். அல்லது ' வில்லியம் ஹாஸ்லிட் அப்ச்ன்' என்ற அமெரிக்க எழுத்தாளரின் விலாசத்தைக் கண்டுபிடித்துத் தரமுடியுமா?'' என்று கேட்பான்! இதுமாதிரி எத்தனையோ விசாரணைக்கள் வருவது சகஜமாதலால், அவள் பதில் சொல்லி விட்டுப் போவாளே தவிர, அவனை இரண்டாம் தடவையாகத் திரும்பிப் பார்த்ததில்லை.
"ஐ யம் சாரி... டூர் போய்விட்டேன். அதனால்தான் லேட்டாகிவிட்டது...'' என்று குழைந்து கொண்டே சொன்னான், புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது.
"தட் ஈஸ் ஆல்ரைட்... டூர் போகும் முன்பு புத்தகம் திருப்பிதர வேண்டிய தேதியைப் பார்த்துக் கொடுத்து விட்டுப் போவது நல்லது.''
அவனது லைப்ரரி டிக்கட்டைக் கொடுத்துவிட்டு, புத்தகங்களை அடுக்கும் வேலையில் அவள் ஈடுபட்டாள்.
"எந்த ஊருக்கு டூர்? என்ன வேலை உங்களுக்கு?' என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராக இருந்தான் சிவா. ஆனால் அவள் கேட்டால் தானே!
லைப்ரரியில் அரைமணி நேரம் இருந்துவிட்டு ஒரு பிரம்மாண்டமான புத்தகத்தை எடுத்தான். அதன் தலைப்பு கூட அவனுக்குப் புரியவில்லை. சும்மா அவளை "இம்ப்ரெஸ்' செய்வதற்காகத்தான்! கவுண்ட்டரில் அவன் போன போது, அவள் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
"சண்டே "சைலண்ட் மூவிக்கு' ராஜூவுடன் போகிறேன். நெக்ஸ்ட் வீக் ராஜூவுடன் வருகிறேன்'' என்றாள்.
"சித்ரா... இதுவரை எத்தனையோ தடவை இப்படிச் சொல்லிட்டே. அடுத்த வாரம் வரவில்லையென்றால் அப்புறம் பாரேன்...''
ஆ! அவள் பெயர் சித்ரா. சித்திரம் மாதிரி, வடித்தெடுத்த சிலை மாதிரி, அழகான காவியம் மாதிரி சேச்சே, இப்படியெல்லாம் அவளை மனதிற்குள் வர்ணித்துக் கொண்டு, அதிக நேரம் நின்றால் நன்றாக இருக்காது. சிவா புத்தகத்தை நீட்டியபடியே கனைத்துக் கொண்டான்.
சித்ரா, புத்தகத்தில் தேதியை முத்திரையிட்டுக் கொடுத்தாள்.
புத்தகத்தை எடுத்துக் கொண்டு, சித்ராவைக் கடைக்கண்ணால் விழுங்கிச் சுவைத்துக்வ்கொண்டே லைப்ரரியை விட்டு வெளியே வரும்போது சிவாவின் மனத்தை ஒரு பெரிய கேள்விக்குறி ’70 எம்.எம்’.மில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. யார் அந்த ராஜூ? வில்லனா? "சைலன்ட் மூவி"ஸுக்குத்தானே போகிறாள், நாமும் அர்ச்சனா தியேட்டருக்குப் போனல் என்ன? எந்த ஷோவுக்குப் போவது?
சைலன்ட் மூவி மாட்டினி ஷோவைப் பார்த்து ஏமாற்றத்துடன் வெளியே வந்தான். காரணம் சித்ராவையோ அந்தப் பயல் ராஜுவையோ காணோம்! ராஜ÷ சுத்த போக்கிரியாக இருப்பான். சினிமா அது இது என்று பொய் சொல்லி அவளை "புத்த ஜயந்தி பார்க்"கிற்கு அழைத்துக் கொண்டு போய் "கெக்கே பிக்கே' என்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பான். முகம் பார்த்தறியாத ராஜுவின் மேல் சிவாவுக்கு ஒரே கோபமாக வந்தது!
ஆறு மணிக் காட்சிக்கும் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தான். காதல் என்பது எத்தனையோ ஹார்ஸ் பவர் கொண்டது! சித்ராவைப் பார்க்க தொடர்ந்து எத்தனை ஷோ வேண்டுமானாலும் அலுக்காமல் பார்ப்பான்!
திடீரென்று அவன் கண்முன்னே குளிர்ந்த கிரணங்களுடன் ஒரு வனதேவதை தோன்றினாள். ("மன்மதா, நீ எங்கிருந்தாலும் வாழ்க!'') சித்ரா... சித்ராவேதான். சாதாரணக் காட்டன் புடவைதான். அதுவே அவளுக்கு என்ன கவர்ச்சியாக இருக்கிறது. கூட வருவதுதான் ராஜுவோ? அடப்பாவமே, இவனும் பார்ப்பதற்குச் சுமாராக இருக்கிறானே!... சட், இந்தச் சித்ராவை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்க முடியாது. ஊரில் இருக்கும் அம்மாவுக்குக் கடிதம் எழுதி ஏதாவது அலமேலுவையோ அம்புஜத்தையோ பார்க்கச் சொல்ல வேண்டியதுதான். குறைந்த பட்சம் அம்மாவாவது திருப்திப் படுவாள். அந்த அலமேலுவை இந்த டில்லிப் பட்டணத்திற்குக் கொண்டு வந்து நாலு இடம் அழைத்துக் கொண்டு போய், ’என் ஒய்ஃப்’ என்று அறிமுகம் பண்ணுவதைவிட... பாவம், கிராமத்துப் பெண். அவளை எதற்குக் கரிக்க வேண்டும்?
""சார்... ஃபை ருபீஸுக்குச் சேஞ்ச் இருக்கிறதா?'' யாரோ தன்னிடம் கேட்க, மளமளவென்று அலமேலுவிடமிருந்து "அர்ச்சனா' தியேட்டருக்கு வந்தான் சிவா.
திரும்பிப் பார்த்தான். அந்த மர்ம மனிதன் ராஜு தான். அவனருகில் சித்ரா!
"ஸ்கூட்டர் ஸ்டாண்ட்காரனுக்கு ஒரு தர வேண்டும். சில்லரை இருந்தால் கொடுங்கள்.''
""யெஸ். இதோ'' என்று பரபரப்புடன் சொல்லிக் கொண்டே பர்ஸைத் திறந்து காசுகளை எண்ணிக் கொடுத்தான்.
"தாங்க் யூ'' என்றான் ராஜ÷.
இங்குள்ள நூற்றுக்கணக்கான பேர்களை விட்டு விட்டு என்னிடம் சில்லறை கேட்டீர்களே உங்களுக்கு நான் தான் தாங்க்ஸ் சொல்ல வேண்டும்! - மனத்துக்குள் சொல்லிக் கொண்டே, ""ஓ.கே...'' என்றான். உடனே தொடர்ந்து சித்ராவைப் பார்த்து, "நீங்கள் அமெரிக்கன் லைப்ரரியில் இருக்கிறீர்கள் இல்லையா?'' என்று கேட்டான்.
"ஆமாம்... நாலைந்து நாட்களுக்கு முன்பு "ஹார்வார்ட் லாம்பூன்'' என்ற புஸ்தகத்தை நீங்கள் தானே ரிடர்ன் பண்ணினீர்கள்.''
"ஆமாம்... ஏன்?''
"ஒன்றுமில்லை. அதில் ஒரு லெட்டர் இருந்தது. லேடீஸ் ஹாண்ட் ரைட்டிங்... எடுத்து வைத்திருக்கிறேன். தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்.''
""ஓ! அதுவா! எங்கம்மா எழுதியது. நாளைக்கு வருகிறேன்'' என்றான். "என் பெயர் சிவா' என்று சொல்லியபடியே ராஜ÷விடம் கையை நீட்டினான். "ஐயம் ராஜு இவளுடைய பிரதர்'' என்றான்.
பிரதர்! பிரதர்! இந்த ஒரு சொல்லுக்கு இவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறத!! அவன் மனத்தில் ஒரு உற்சாக வெள்ளத்தையே மடை திறந்துவிட்டது அந்தச் சொல்!
ராஜு சார். நீங்கள் ரொம்ப நல்லவர். உங்களை வில்லன் என்று சொன்னேனே. நான் சரியான முட்டாள்... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், சித்ரா போன்ற அழகான பெண், கன்னாபின்னாவென்று ஒருவனைக் காதலித்து அவனுடன் சினிமா, டிராமா என்று சுற்றுவாள் என்று நினைத்தேனே அது எத்தனை பெரிய ஹிமாலயத் தப்பு? தப்பா...? இல்லை. மகாபாவம்! மனத்தில் எண்ணங்கள் டெலிபிரிண்ட்டராக ஓடிக் கொண்டிருந்தன.
ராஜுவிடம் கையைக் குலுக்கிய படியே, "ப்ரைமா ஃபார்மா கம்பெனியில் மெடிகல் ரெப்ரசென்டேடிவ் நான்'' என்றான்.
"இவள் என் சிஸ்டர்... இந்தப்பா தம்பி பைசா... ஆமாம், மிஸ்டர் சிவா... நீங்கள் மெடிகல் ரெப்ரசென்டேடிவ் என்பதால் ஒன்று கேட்க விரும்புகிறேன். வென்டாலின் என்ற மருந்து சுலபமாகக் கிடைக்கவில்லை...''
"யாருக்கு ஆஸ்துமா?'”(சித்ராவுக்கா? இருக்காது. ஆண்டவனே இருக்கக் கூடாது.)
"எங்க அங்கிளுக்கு. இந்த மருந்துதான் கொஞ்சம் கேட்கிறது?''
"என்ன கேட்கிறது? ஆஸ்துமா மருந்தைக் கேட்கிறது. மருந்து ஆஸ்துமாவைக் கேட்கிறது'' என்று சொல்லிவிட்ட. தானே சிரித்தான் சிவா.
களுக்கென்று சித்ராவும் சிரித்தாள். பளீர் என்று ஆயிரம் மத்தாப்புக்களை வெடித்து, வண்ணப்பூக்களை யார் சிதறினார்கள்? இத்தனை முல்லைப் பூக்களை யார் சொரிந்தார்கள்? சித்ராவின் ஒரு சின்னஞ் சிரிப்புக்கா இத்தனை கவர்ச்சி! அது சிரிப்பு அல்ல. அது சிரிப் பூ!
ராஜுவும் அரை மில்லிமீட்டர் புன்னகையுடன், "உண்மையில், தான் கேட்கிறேன். வென்டாலின் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது'' என்றான்.
"பம்பாயில் என் கல்லீக்ஸ் இருக்கிறார்கள். அவர்களிடம் வாங்கி அனுப்பும்படி சொல்கிறேன். அது ஃபாரினிலிருந்துதான் வருகிறது... கிடைத்தால் நான் உங்களுக்குத் தரேன்''
"கஷ்டமில்லையென்றால் சித்ராவிடம் கொடுத்து விடுங்கள். ஷி வில் பே யூ தி காஸ்ட்... நான் டில்லி "கான்ட்"டில் மிலிடரி பாரக்ஸில் இருக்கிறேன். அதனால்தான்... அப்படி நீங்க கொடுக்க டைம் இல்லை என்றால் சித்ராவுக்கோ எனக்கோ ஃபோன் பண்ணி...''
"சார்... தட் ஈஸ் மை லுக் அவுட்... மருந்து முதலில் கிடைக்கட்டும். ஹௌ அபவுட் ஏ ட்ரிங்? கோல்ட் ஸ்பாட், கேம்பா...?''
அவளது குவிந்த உதடுகளையும், ஸ்ட்ராவால் பானத்தை அவள் உறிஞ்சும் அழகையும் அவன் தன் கண்களால் பருகினான்.
அவள் தலைமுடியைச் சற்று லேசாக வெட்டிக் கொண்டிருப்பதால் முன்பக்கம் அவை அழகாக வளைந்து விழுந்து... எத்தனை மழமழப்பான உதடுகள்? இயற்கையிலேயே இவ்வளவு வளைந்த புருவங்களா?
படம் பார்க்க உள்ளே சென்றார்கள். அவர்களுக்கு வெவ்வேறு வரிசையில் சீட் இருந்ததால் பிரிந்து போய் உட்கார்ந்தனர். பாவம், சிவா படத்தைக் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. தூரத்தில் இருளில் ஒரு உருவம் - சித்ரா - விழுந்து விழுந்து சிரித்துப் படத்தை ரசித்துக் கொண்டிருந்ததைத்தான் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்!
(மீதி அடுத்த பாகத்தில்)
என்ன இப்படி சஸ்பென்ஸ் வைத்து முடித்துவிட்டீர்கள்! முடிவு என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று நகத்தைக் கடித்துக்கொண்டு சிவாவுக்குப் போட்டியாக உட்கார்ந்திருக்கிறேன். முடிந்தால் அடுத்த பாகத்தை ராத்திரியே போஸ்ட் செய்துவிடவும்! - ஜெ.
ReplyDeleteசுவாரஸ்யம்! சித்ரா அவனை ‘அண்ணா’ என்று கூப்பிட்டிரு்க்க மாட்டாள் என்று நம்புகிறேன்... அடுத்த பாகத்துக்கு ஆவலுடன் வெய்ட்டிங்!
ReplyDeleteசிவா சித்ராவை அண்ணா என்று கூப்பிட்டால் அண்ணாமலையாருக்கு
ReplyDeleteஆயிரம் தேங்காய் உடைப்பதாய் வேண்டிக் கொண்டிருக்கிறேன்...காரணம்
அந்த சினிமா தியட்டரில் நானும் சித்ராவைப் பார்த்தேன் !