March 11, 2011

அர்ச்சனை-5 ஜாமீன் கொடுத்த ஜமீன்தார்? -கடுகு

அம்புஜம் படுக்கை அறைக்குள் நுழைந்த போது, பஞ்சு படுக்கையை தட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். இரண்டு நிமிஷம் தான் வந்ததை அவர் கவனிக்கிறாரா என்று இரண்டு நிமிஷம் பார்த்த அம்புஜம், பஞ்சுவைப் பார்த்துச் சொன்னாள். ``இப்ப சொல்லுங்க... பசங்க அவங்க அவங்க ரூமில் பரீட்சைக்குப் படிக்கப் போய்ட்டாங்க. என்னது? சொல்றதுக்கு ஒண்ணுமில்லையா? நிச்சயமா ஒன்றுமேயில்லையா? ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்ததிலிருந்து திருட்டு முழி முழிச்சுண்டு, மசமசன்னு சுத்தி வந்துண்டு இருந்தீங்க... பசங்க எதிரே பேசவேண்டாம்னு இருக்கீங்கன்னு நெனைச்சேன். ஒண்ணுமே இல்லைன்னா அந்த முழி முழிச்சதுக்கு என்ன காரணம்? வழக்கமான உங்க பரம்பரை முழி எனக்குத் தெரியும். இன்னிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா முழியாக இருந்ததே!

நான்தானே? வாயை மூடறேன். என் வாயை மூட முடியும். ஊர் வாயை எப்படி மூட முடியும்? எனக்கு எல்லாம் தெரியும்... ஆமாம். எல்லாம் தெரியும்.
என்னது? எல்லாம் தெரிஞ்சே ஏன் என்னைக் கேக்கறேன்னு கேக்கறீங்களா? எவ்வளவு தூரம் உண்மையைச் சொல்றீங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்காகத் தான்!
அது எப்பேர்ப்பட்ட சிதம்பர ரகசியமாக இருந்தாலும் சொல்லலாம். ஏன், பக்கத்து வீட்டு அழகி சித்ராங்கியின் வீட்டுக்காரர் சிதம்பரத்தைப் பற்றிய ரகசியமாக இருந்தாலும்... என்ன முறைக்கறீங்க? பாயின்டைப் பிடிச்சுட்டேனா? சரி... வேற வழியில்லை... சலிச்சுக்காம ஆரம்பியுங்க.

சரி, நேத்து ராத்திரி கிளப்பிலிருந்து வர்றபோது சிதம்பரம் கொஞ்சம் அதிகமா மில்லி போட்டுட்டு வந்தார். வந்தாரா...அப்புறம் சைகிளில் ஏறிப் போனார். போனாரா? போனவர் நிலை தடுமாறி ரோட்டில் நின்று கொண்டிருந்த காரின் மீது மோதி ஹெட்லைட்டை சுக்கல் நூறாக்கினார். கார் டிவைர் கத்தி, இவர் மேல் பாய்ந்து ஒரு குத்து விட, பதிலுக்கு இவர் அவனை அடிக்க... டிரைவர் காரின் மேல் விழுந்தார். கார் கண்ணாடி தூளாச்சு. டிரைவரின் தலையில் ரத்த காயம் ஆச்சு. அடுத்த நிமிஷம் சிதம்பரம் சைக்கிளில் பறக்க, நீங்கள் கிளப்புக்குள் போய், பின் கதவு வழியாக வெளியே வந்து வீட்டுக்கு வந்துட்டீங்க. இதுக்குத்தான் நான் தலை தலை என்று அடிச்சுண்டேன். கிளப்பும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்னு.

அடுத்த அத்தியாயத்துக்கு வாங்க... சித்ராங்கி உங்களுக்கு இன்னிக்கு பகல்ல போன் பண்ணினா... எனக்கு எப்படித் தெரிஞ்சது என்பது முக்கியமில்லை. அவசரமாக உங்க உதவி தேவைன்னு சொல்லி உங்க டெலிபோன் நம்பரைக் கேட்டாள். என்னோட பேசறதே கௌரவக் குறைச்சல்னு நினைக்கற ரம்பை, அரக்கப் பரக்க வந்து கேட்டதிலிருந்து ஏதோ விஷயம் இருக்குன்னு தெரிஞ்சது.
சொல்லுங்க... மெல்லாமல் முழுங்காமல்... அசடு வழியாம சொல்லுங்க...
சரி சரி அசடு வழிஞ்சிண்டே சொல்லுங்க. அது உங்க பரம்பரைக் குணமாச்சே!...அப்புறம் .நேத்து ராத்திரி அடிபட்ட கார் டிரைவர், போலீஸில் புகார் கொடுத்தாரா? அப்புறம், சிதம்பரத்தை கோழி அமுக்கற மாதிரி அமுக்கி கூட்டிட்டுப் போயிட்டாங்களா? சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க... இந்தக் கதையெல்லாம் ராங்கிக்காரி சொல்லிட்டாள்.
என்னது?... நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனீங்களா? சகவாச தோஷம், கிளப் பழக்கம் எங்கேயேல்லாம் உங்களைக் கொண்டு போறது, பாத்தீங்களா?
என்னது, சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுத்தீங்களா? பெரிய ஜமீன்தார்... கொடை வள்ளல்... ஐயோ, இன்னும் என்னென்ன இடி என் தலைமேல் விழப் போகிறதோ? ஜாமீன் கொடுத்துட்டீங்க... இதை சாக்காக வெச்சிண்டு சித்ராங்கி வந்து வழியப் போகிறாள். உங்களைப் பத்திச் சொல்லவே வேண்டாம். வழிசல் சக்கரவர்த்தியாச்சே!
அம்மாவிற்கு கண் ஆபரேஷன் செய்யணும். பணம் கடனாகத் தாங்கன்னு அப்பா எழுதினாரே, அப்போ இதைவிட அகலமாக விரிக்க முடியாதுன்னு கையை விரிச்சீங்க. வீட்டு வாசல்ல ஒரு போர்டு போட்டுடறேன். `இங்கு சகலமான கேஸ்களில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கும் ஜாமீன் தரப்படும்' என்று போட்டுடறேன்.
அவர் கேஸ், கோர்ட்டுன்னு மட்டிக்காமல் தப்பிக்கிறதுக்கு தலைமறைவாய்ப் போயிடுவார். அப்புறம் நீங்க ஜெயிலுக்குப் போகணும். ஆமாம், உங்களுக்கு ஏ கிளாஸா, பி கிளாஸா... அந்தக் காலத்தில சுதந்திரத்திற்காக ஜெயிலுக்குப் போனாங்க... இப்போ சிதம்பரத்திற்காகப் போகப் போறீங்க...
ஆண்டவா, இவர் புத்தி ஏன் இப்படிப் போகிறதோ? ஒரு குடிகாரனுக்கு உற்ற தோழன்னு உங்க பேர் பிரபலமாயிடும். நான் வெளியில தலைகாட்ட முடியாது. பசங்களை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்திடறேன். அவங்களை எல்லாப் பசங்களும் கேலி பண்ணவாங்க. பேப்பர்ல உங்க பேர் வரும். ஆமாம், பேப்பர்ல போட போட்டோ கேட்பாங்களே, அது தயாரா வெச்சிருக்கீங்களா?
என் வாயை மூடச் சொல்லாதீங்க... சரி... சரி... உங்களுக்குத் தூக்கம் வருதா? எனக்கு எப்படி வரும்?
வக்கீல் ஃபீஸ், கோர்ட் என்று செலவு எகிறப் போகிறது. யாராவது வீட்டு புரோக்கர் கிட்ட சொல்லி வீட்டை வித்துடலாம். ஏரியிலே ஒரு குடிசை போட்டுண்டுடலாம்...''
அம்புஜம் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். பஞ்சு கண்ணை மூடிக் கொண்டு படுத்தார்.

1 comment:

  1. அய்யா, எங்க வீட்டுப் பங்கஜம், அம்புஜமா மாறிக்கிட்டு வர்றாஙக , உங்க கைங்கரியத்தாலே!-- திரு திரு திருவேங்கடம்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :