March 24, 2011

நான் ஒரு ஐயோ பாவம்!


      சமீபத்தில் சென்னையில் கண் நோய் பரவிப் பிரபலமடைந்தது.  அவரவர்
கண்களைக் கசக்கிக்கொண்டு,  ", , ' என்று உயிர் எழுத்துக்களிலேயே அங்கலாய்த்துக் கொண்டார்கள்.  ஆனால் அந்த "மெட்ராஸ் ' அடியேனை அணுகவில்லை.  இதை எண்ணி நான் இன்றும் வருத்தப்படுகிறேன்.
      இதில் வருத்தப்படுவதறக்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்காவிட்டாலும் நான் பதில் கூறத்தான் போகிறேன்.
*      பாருங்களேன்ஆபீசுக்குப் போகிறேன்.  மொத்தம் நாலு குமாஸ்தாக்களில் மூன்று பேர் லீவு போட்டிருந்தார்கள்.  மானேஜர் வந்தார்.  ""என்னய்யா உனக்குக் கண் நோய் எதுவும் வரவில்லையா? அவர்கள் மூணு பேருக்கும் "மெட்ராஸ் ' வந்து விட்டிருக்கிறது'' என்றார்.  மற்றவர்களோடு ஒத்துப் போகாது தனியாகப் புரட்சி செய்கிற சமூக விரோதி மாதிரி என்னை அவர் கருதியிருக்க வேண்டும்!
      "இல்லை சார். . . நான் தினமும் காலையில் வெந்நீரால் கண்ணை அலம்பிக் கொண்டிருக்கிறேன்.  அதனால். . .''
      ""அதனால் என்னய்யா? நாங்கள் மட்டும் சும்மாவா இருக்கிறோம்? என் மிஸஸ÷க்கு இரண்டு நாளாக வலி'' என்றார்.
      ""எப்படியாவது நாளைக்குள் கண் நோயை வரவழைத்துக் கொள்கிறேன்'' என்று நான் சொல்லி இருந்தால் அவருக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும்!
*      "அடபாவி! உனக்குக் கண் நோவே வரவில்லையா?. மூன்றாம் வருஷம் ஏஷியன் ஃப்ளு வந்தது.  அப்பவும் உனக்கு ஒண்ணும் வரவில்லை. ஏன், பத்து வருஷத்துக்கு முன்னே டெங்கு ஜுரம், சபதம் இட்ட திரௌபதி மாதிரி தலை விரித்து ஆடியது. அப்பவும் உனக்கு ஒரு மண்ணும் வரவில்லை. உன் உடம்பிலே ஏதோ கோளாறு இருக்கிறது''  என்று முடித்தான் சக ஊழியன் திருமலை, கண்களைக் கசக்கிக் கொண்டே!
      ""போகட்டுமடா. .மெட்ராஸ் ஐ உனக்கு வந்தால் என்கிட்டே வா.  நல்ல ஹோமியோபதி மருந்து தரேன்.”
*     இதே மாதிரி இன்னொரு நோவுக்கார நண்பன், "லேசாகக் கண் நோவு வந்த உடனே சொல்லு. ஒரு ஏ ஒன் பாட்டி வைத்தியம் வைத்திருக்கிறேன்'' என்றான்..
      கடைசியில் நோவு எனக்கு வரவேயில்லை.  அவர்களின் ஆலோசனையை நான் கேட்க வாய்ப்பே இல்லை. இருந்தும், "அவன் பெரிய  மனுஷன். நாம் சொல்வதை எல்லாம் ஏற்பானா?'' என்கிற மாதிரி கறுவினார்கள்.
  
*     இவர்களை விடுங்கள்.  என் மனைவி இருக்கிறாளே, அவள் பொழிந்த வசைமாரியைக் கேளுங்கள். . . .
      ""நீங்களும் இருக்கிறீர்களே, என்ன பிரயோசனம்? எதிர் வீட்டு ராமானுஜம் கண் நோவு என்று நாலு நாட்களாய் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.  ஒட்டடை அடிச்சார்.  பரணை ஒழித்துச் சுத்தம் பண்ணினாராம். பசங்களை அவர் பார்த்துக் கொண்டதால் மிஸஸ் ராமானுஜம்,  எக்ஸிபிஷன் என்ன, அகாடமி டான்ஸ் என்ன, கச்சேரி என்ன, ஞாயிற்றுக்கிழமை திருவேற்காடு என்ன என்று போய் வந்தாளாம், ஹாய்யாக.  ஹூம். . அதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கணும்!.  இந்த அழகில் அவள் கேட்கிறாள், "என்னடி, உன் வீட்டுக்காரருக்குக் கண் நோவு எதுவும் வரவில்லையாஎன் வீட்டுக்காரர் பெரிய ஆபீசில் இருக்கிறாரோ இல்லையோ அதனால் பொழுது போனால் பொழுது விடிந்தால் ஆயிரத்தெட்டுப் பேர், "ராமானுஜம், ராமானுஜம்' என்று வந்து விடுகிறார்கள்.  அப்படி வருகிறவர்களில் யாரோ ஒருத்தன் அன்பளிப்பாகக் கண் நோவு கொடுத்து விட்டான்...மிஸஸ் ராமானுஜம் இப்படிச் சொல்வதன் அர்த்தம் என்ன தெரியுமா? நீங்கள் பாத்திரச் சீட்டுக் கம்பெனியில் குமாஸ்தாவாக இருப்பதை இடித்துக் காட்டுகிறாள்!''
       
  ஆண்டவனே, என்னை மிஸஸ் ராமானுஜம் போன்ற பெண்களின் வாயிலிருந்து காப்பாற்று!
பஸ், ஒட்டல், கிளப் எங்கு போனாலும் அவரவர் தங்கள் கண் நோவைப் பற்றிப் பெரிய திருவிழாவைப் பார்த்துவிட்டு வந்த மாதிரி விவரிப்பார்கள்.  நான் மட்டும் "ஙே' என்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.   எனக்குக் கண் நோவு அனுபவம் இல்லையே!
      அடுத்த  தடவை இந்த மாதரி ஏதாவது ஒரு வியாதி ஊரில் பரவினால், நான் முதலில் ஒரு டாக்டரிடம் போய் ஆலோசனை கேட்கப் போகிறேன்: அன்புள்ள டாக்டரே, இந்த நோயை வரவழைத்துக் கொள்ள வழி சொல்லுங்கள்!''

5 comments:

 1. //ஒட்டடை அடிச்சார். பரணை ஒழித்துச் சுத்தம் பண்ணினாராம். பசங்களை அவர் பார்த்துக் கொண்டதால்..// இதற்குப் பின்னும் கண் நோய் வரவழைத்துக் கொள்ள வேண்டுமா! பேசாமல் டாக்டரிடம் 100 ரூபாய் தள்ளி ‘மலை வாசஸ்தலத்துக்கு தனியாகப் போய் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள’ எழுதி வாங்கி, எஞ்ஜாய் பண்ணவும்! - ஜெ.

  ReplyDelete
 2. ஒரு‍ மனிதனுக்கு‍ சிக்கல் எப்படியெல்லாம் வருகிறது. ஹையோ, ஹையோ.

  ReplyDelete
 3. அனானிமஸ் என்று போட்டு எழுதினால் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். நானே போட்ட பின்னூட்டம் என்று கருதுகிறார்கள்.ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, மார்க் ட்வைய்ன், டாலஸ்டாய். என்று போட்டால் கூட நம்புவார்கள்.அனானிமஸ் என்றால், புருடா என்கிறார்கள்.

  ReplyDelete
 4. சரி நாந்தான் மிஸஸ் ஐன்ச்டீன் எழுதறேன். சொர்க்கலோகத்துக்கும் உங்கள் எழுத்துகள் பிரபலமாகி வருகிறது:)

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :