July 21, 2012

ஜி பி ஓ வாழ்க்கை-3ஜி பி ஓ வாழ்க்கை-1:http://kadugu-agasthian.blogspot.com/2012/02/blog-post_06.html
ஜி பி ஓ வாழ்க்கை-2: http://kadugu-agasthian.blogspot.com/2012/04/2.html

ஜி பி ஓ வாழ்க்கை முதல் இரண்டு பகுதிகளைப் படிக்காதவர்கள் மேலே தரப்பட்டுள்ள சுட்டியைக் கிள்ளிவிடவும். இப்போது ஜி பி ஓ வாழ்க்கை-3 தொடருகிறது:

ரிஜிஸ்ட்ரேஷன் செக் ஷனில் பத்திலிருந்து ஆறு ட்யூடியில் வருவதற்கு எவரும் தயங்கும் ஒரு சீட்: இன்ஷூரன்ஸ் தபால் சீட்.
இன்ஷூரன்ஸ்  தபால்களைப் பட்டியல் போட்டு பையில் போட்டு சீல் வைத்து அனுப்புவது முக்கியமான வேலை.
அதே மாதிரி  இன்ஷூரன்ஸ் தபால்கள் வரும் பைகளை திறந்து சரியாக எல்லாம் வந்திருக்கின்றனவா என்று சரிபார்த்து பீட் வாரியாகப் பிரித்து தபால்காரர்களிடம் கொடுத்து கையெழுத்து வாங்க வேண்டும்.
இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட கவர்களில் உள்ளே பணம் வைக்கப்பட்டிருக்கும். (இன்று இப்படி பணம் அனுப்புவது குறைந்துதான் போயிருக்கும்.) இத்தகைய ஒரு கவர் கணக்கில் தவறிவிட்டால் ஆபத்துதான். தவற வாய்ப்பில்லை என்றாலும் தவறக்கூடும் என்பதே அச்சுறுத்தும்

இதெல்லாம் எனக்குத் தெரியாது என்பதால் முதல் நாளே இன்ஷூரன்ஸ் செக் ஷனில் போட்ட போது எந்த விதத் தயக்கமும் இல்லாமல் அந்த சீட்டுக்குப் போனேன். தனியாக, கூண்டு மாதிரி கம்பி வலை போட்ட அறையில் வேலை செய்ய வேண்டும் சட்டென்று அறைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி யில்லை .(ஆகவே அங்கிருந்து இன்ஷூரன்ஸ் தபால் மட்டுமல்ல, நாற்காலி கூட திருடு போகாது.)
ஜாக்கிரதையா நிதானமா வேலை செய்யப்பா. கவரில் பெரிய பெரிய தொகை 100, 200 (!) என்று இருக்கும். கவர் கணக்கில் வராவிட்டால் நம்ம தலையில் தான் பழி விழும், அபராதம் விழும்.. கவரில் ஒரு டாக்குமெண்ட் இருந்தாலும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதாக இருக்கும்.”-  ஹெட்கிளார்க் சொன்னார்.
’10-6’ ட்யூட்டி என்பதால் தெம்பாக கூண்டுக்குள் புகுந்தேன். ”வேலையில் புலி. அதனால் தான் கூண்டுக்குள் என்னை அனுப்பிவிட்டார்கள்என்று இன்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அன்று இருந்த மன நிலையே வேறு.

பொறுப்புள்ள வேலையே தவிர சுமை அதிகம் இல்லாத வேலை.  
சில சமயம் மொத்தம் 10,20 தபால்களே வரும். பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும். ஆனால் ஹாயாக இருக்கமுடியாது. வேறு எந்த மேஜையிலாவது வேலை அதிகம் வந்தால் --வந்தால் என்ன? தினமும் வந்து கொண்டே இருக்கும்-- அங்கு இரண்டு நிமிடம் கை கொடுக்க போக வேண்டும். கிட்டதட்ட ஒரு ஸ்டெப்னி மாதிரிதான்

இன்ஷூரன்ஸ் செக் ஷன் வேலையும் அதிக நாள் நிலைக்கவில்லை. புதிதாக ஒரு பெண் குமாஸ்தா செக் ஷனுக்கு வந்து விட்டதால் என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள்பெண்களுக்கு 10-6 ட்யூட்டிதான் தரப்படும். இப்போது முழு நேர ஸ்டெப்னி ஆகிவிட்டேன். எங்கு அவசர உதவி தேவைப் படுகிறதோ அங்கு போக வேண்டும் முணுமுணுக்க முடியாது. கொடி பிடிக்க முடியாது. “10--6” ட்யூட்டி என்றகேரட்டைக் காட்டி இப்படி வேலை வாங்குவதைப் பற்றி வாயைத் திறக்க முடியாது.

ஸ்டெப்னியாக இருப்பதில் லாபம் என்னவென்றால் எல்லா சீட் வேலையிலும் பரிச்சயமும் தேர்ச்சியும் ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக எல்லா வேலையும் எனக்கு அத்துப்படியாகிவிட்டது

சுறுசுறுப்புப் பையனாக நான் இருந்ததால் சில வாரங்களுக்குப் பிறகு என்னை கரஸ்பாண்டென்ஸ் கிளார்க் என்ற சீட்டில் போட்டுவிட்டார் ஹெட்க்ளார்க். கிட்டத்தட்ட 60—70 பேர் வேலை செய்யும் ஒரு செக் ஷனில் யார் எந்த ட்யூடியில் வரவேண்டும் என்று ஏற்பாடு செய்வது, லீவு கேட்பவர்களுக்கு ஹெட் கிளார்க்கிடம் சொல்லி லீவு வாங்கித் தருவது , அவர்களுடைய சீட்டிற்கு மாற்று ஏற்பாடு செய்வது, ரிஜிஸ்டர் தபால்களைப் பற்றி வரும் விசாரணைக் கடிதங்களுக்கு பதில் எழுதுவது போன்ற பல வேலைகள். ஆகவே இந்த சீட்டிலிருப்பது ஒரு அந்தஸ்தைத் தந்தது. அதே சமயம் எல்லாரையும் திருப்திப் படுத்த முடியாது என்பதால் சிலரின் நிந்தனைக்கும் கோபத்திற்கும் எரிச்சலுக்கும் ஆளாக வேண்டியிருக்கும்

தொல்லை பிடித்த வேலையாக இருந்தாலும், இந்த சீட்டிற்கு ஒரு அந்தஸ்து இருபப்தை உணர்ந்தேன். பல சீனியர்கள் அது வரை இல்லாத நட்புடன் வந்து பேசினார்கள்.
:”இத பாருப்பா.. மத்தியானம் நாலு மணிக்கு நான் வீட்டுக்குப் போகணும். வேறு யாரையாவது கவுன் டருக்குப் போட்டுவிடு: என்று சற்று மிடுக்காகவும  அதே சமயம் சற்று நைசாகவும் கேட்பார்கள்.
நாலு மணிக்குத் தானே போகணும். .கே.நீங்க, போங்க.நான் பாத்துக்கறேன்என்று சொல்லி விடுவேன். அந்த சீட்டிற்கு நானே போய் வேலை செய்து விடுவேன்! இப்படி பலருக்கு உதவி செய்ததாலும், கணக்கில் வைததுக் கொள்ளாமல் அரை நாள், 2 மணி நேரம் லீவு என்று லீவு கொடுத்து விடுவதாலும் நான் விரைவில் எல்லாருக்கும் வேண்டியனாகி விட்டேன். பல சமயம் ஹெட்கிளார்க்கிடம் சொல்லக்கூட மாட்டேன் பிரச்னை இல்லாமல் வேலை நடந்தால் அவருக்குப் போதும். ( இதன் காரணமாக 10-6 ட்யூட்டியில் கிட்டதட்ட நிரந்தரமாக ஒட்டிகொண்டேன்அடுத்த நாலு வருஷம்!
 அந்த காலத்தில் தபால்கள் நான்கு தடவை டெலிவரி செய்யப்படும்: காலை 8.30மணி , 10 மணி ( மணியார்டருடன்),, 11.30 மணி  ( ரிஜிஸ்டர் தபால்களுடன்) மற்றும் மாலை 4.30 மணிக்கு  (சாதாரண  தபால்கள்) 

அந்த காலத்தில் ஜி.பி. ரிஜிஸ்ட்ரேஷன் செக் ஷனில், தபால் பதிவுக்கென்றே நாலைந்து கவுன் டர்கள் இருக்கும். அது தவிர ஸ்டேட் பாங்க், ரிசர்வ் பாங்க் (அந்த காலகட்டத்தில்  ஜி. பி. விற்கு மூன்று கட்டடம் தள்ளி இருந்தது .) பாரி அண்ட் கோ, பெஸ்ட் அண்ட் கோ போன்ற பெரிய நிறுவனங்கள் 50, 100 என்று தபால்களைக் கொண்டு வருவார்கள். அதற்கென்று தனியே ஒரு கவுன் டர் இருக்கும். (அவர்களே ரசீது புத்தகத்தில் எழுதிக் கொண்டு வந்து விடுவார்கள்.) ஜி.பி. வில் சாதாரணமாகவே எப்போதும் ஒரே இரைச்சலாக இருக்கும். பகல் 2 மணியிலிருந்து கேட்கவே வேண்டாம், இரைச்சல் கூடுதலாக இருக்கும்.
ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 2000 ரிஜிஸ்டர் தபால்கள் புக் ஆகும்! இந்த தபால்களுக்கு நம்பர் ஸ்லிப் ஒட்டுவதற்குக் கவுன் டரில் இருப்பவருக்கு நேரமே கிடைக்காது, ஆகவே ஒவ்வொரு கவுன்ட ருக்கும் ஒரு உதவியாளர் இருப்பார், அவர் வேலை, தபால்கவர்  மீது நம்பர் ஸ்லிப்புகளை மைதாக் கூழால் ஒட்டுவதுதான். அவர் நின்று கொண்டுதான் வேலை செய்யவேண்டும்காரணம் நாற்காலி போட இடம் கிடையாது, மேலும் நாற்காலிக்கும் பஞ்சம்! 4,5 மணி நின்று கொண்டே வேலை செய்யும் இந்த வேலையைச் செய்ய பலர் ரெடியாக இருப்பார்கள். ஏனென்றால்  ஒரு பொறுப்பு இல்லாத பணி இது.  எத்தனை தபால்கள் பதிவு செய்யப்பட்டன, எத்தனை எங்கெங்கு அனுப்பப்பட்டன என்று கணக்கு வைத்துக்கொள்ளும் பொறுப்பு கிடையாது. கவுன் டர் மூடியதும் அவர் வீட்டுக்கு நடையைக் கட்டலாம்!
(அடாடா, ஒரு ரிஜிஸ்டிரேஷன்  செக் ஷன் செய்கிற வேலையை இவ்வளவு விலா வாரியாக, ஏதோ தபால் துறை கையேடு அளவுக்கு எழுதிக்கொண்டே போகிறீர்களே என்று யாரோ முனகுவது கேட்கிறது விரிவாகச் சொன்னால் தான் பின்னால் வரப்போகும் விஷயங்கள் தெளிவாக இருக்கும்!)

(இந்த நம்பர் ஸ்லிப்கள் ஒட்டும் வேலையை நானும் செய்து இருக்கிறேன். இப்படி வேலை செய்த ஒருவர் சில வருஷங்களுக்குப் பிறகு வேலையை விட்டுப் போய்விட்டார். வேறு ஒரு தொழிலில் இறங்கி ஓஹோ என்று மிகப் பெரிய உயரத்திற்குப் போய்விட்டார். பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டார்.ஆனால் அவரது எளிமை இன்னும் அப்படியே இருக்கிறது.)

ரிஜிஸ்டர் தபால் பைகள் ஒவ்வொரு நாளும் பகல் 3.30 மணி, 4,30 மணி  மற்றும் 5,30 மணிக்கு   அனுப்ப வேண்டும். மெயில் வேன்கள் நேரப்படி புறப்பட வேண்டும் என்பதால் இந்த சமயங்களில் ஒரு பரபரப்பு இருக்கும். குறித்த நேரத்தில் மெயில் வேன்களும் புறப்பட்டு விடும் (ஹூம்.. இது நான் விடும் பெருமூச்சு!)
இந்த மாதிரி சமயங்களில் என் வேலை, உன் வேலை என்று பார்க்காமல் எல்லாரும் கை கொடுப்பார்கள்.

இப்படி ஒரு சமயம் நான் ஒரு சீட்டிற்கு உதவப் போனேன். அப்போது ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது.
என்னிடம் கொடுக்கப்பட்ட தபால்கள் 224. நான் அனுப்பிய தபால்கள் 223. ஒரு தபால் கணக்கில் வரவில்லை.
எல்லாருடைய  தபால்வர-செலவு கணக்கையும் சரி பார்த்தோம். யார் கணக்கிலாவது ஒரு தபால் கூடுதலாக இருக்காதா என்ற நப்பாசை. உஹும்.. எல்லாம் சரியாக இருந்தது. இதையெல்லாம் செக் பண்ணி முடிக்கும்போது மணி எட்டு ஆகி விட்டது. வயிற்றில் பசி. அத்துடன் கலக்கமும் சேர்ந்து கொண்டது!! நாக்கு வறண்டது.
 “ஒண்ணும் கவலைப் பாடாதே,.. பாரேன்..பைகள் போனதும் பிரித்துப் பார்ப்பார்கள் ஒரு தபால் அதிகம்  இருந்தால் ஆர்.எம்.எஸ் அல்லது ஏர் போர்ட் என்று எங்கிருந்தாவது உடனே போன் செய்வார்கள்என்று சீனியர்கள் சமாதானப்படுத்தி வீட்டிற்கு  அனுப்பி வைத்தார்கள். ஒரே கவலையுடன் செங்கற்பட்டு ரயிலைப் பிடித்தேன்.
இரவு சாப்பாடு இறங்கவில்லை. தூக்கம் வரவில்லை. அப்போது எனக்குத் தெரியாது மறுநாள் வேறொரு கவலை காத்திருக்கிறது என்று!
அடுத்த பதிவில் தொடர்கிறேன்!

8 comments:

 1. அடடா! என்ன ஸார் இது இப்படி ஒரு சஸ்பென்சில் நிறுத்தி விட்டீர்களே :-( தொடர்ச்சியைப் படிக்கும் வரையில் எங்களுக்கும் தூக்கம் வராது போல் உள்ளதே :-)

  ReplyDelete
 2. //”வேலையில் புலி. அதனால் தான் கூண்டுக்குள் என்னை அனுப்பிவிட்டார்கள்” என்று இன்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.//இன்று ’கூண்டு’க்குள் போகிறவர்களை மதிக்க முடியுமா!

  அப்போதெல்லாம் ஹெட்க்ளார்க் என்பது பெரிய பதவி, இல்லையா?

  வேலையை விட்டுப்போய் தொழிலதிபர் ஆன எளிமையாளரைப் பற்றியும் எழுதுங்களேன்!

  //அடுத்த பதிவில் தொடர்கிறேன்!// ஐயா,இன்னும் 3 மாதம் காக்கவேண்டுமா? (2-ஆம் பாகம் ஏப்ரலில் வந்தது!)

  -ஜெ.

  ReplyDelete
 3. ஜெ அவர்கள் எழுதி இருப்பது, தூங்கும் சிங்கத்தை உசுப்பிவிட்டு விட்டது. அடுத்த பதிவு ஜி பி ஓ -4 தான் என்று உறுமுகிறது!

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  சொல்லடி சிவசக்தி நாவல் ஜி.பி.ஓ.பிண்ணனியில் எழுதியிருந்தீர்கள். இருப்பினும் உங்களுடைய அனுபவங்களைப் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.

  முக்கியமான இடத்தில் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள். இனி, தினமும் காலையிலும் மாலையிலும் ப்ளாக் வந்து பார்க்க வேண்டிய வேலை எங்களுடையது ஆகியிருக்கு.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 5. ஹையோ..ஹையோ.. தன்யனானேன்! - ஜெ.

  ReplyDelete
 6. சார், சுயசரிதை எழுதும் அளவிற்கு உங்களிடம் அனுபவம் உள்ளதால் நீங்கள் ஏன் ஒரு ஆட்டோ(பயங்)கராபி எழுத கூடாது. அடுத்தவர் கதைய தெரிஞ்சுகிறது எப்பவும் ஒரு தனி ருசி!

  பரத் குமார்

  ReplyDelete
 7. கதை, கட்டுரைகள் என்றால் மற்றவர்கள் எழுதியதைச் ‘சுட்டு’ விடலாம். ஆனால் சுய சரித்திர விஷயத்தில் நாம் ஒரிஜினலாக எழுத வேண்டுமே.. அங்குதான் பிரச்னையே வருகிறது!-- கடுகு

  ReplyDelete
 8. 80 வயதிலும் இவ்வளவு அப்பாவியா நீங்கள்! எந்த சுயசரிதை முழு உண்மையை மட்டும் அல்லது எல்லா உண்மையையும் மட்டும் சொல்கிறது? தன்னை உயர்த்திச் சொல்ல மட்டும் (தன்னடக்கத்தை வெளிச்சம் போட்டு அதனால் பாராட்டுப் பெற, ஏதாவது சின்ன கற்பனை விஷயங்கள் அங்கங்கு) சுய சரிதைகள் எழுதப்படுகின்றன. சரித்திரங்களும் அவ்வப்போது எழுத்தாளர்கள் கற்பனைப் படிதான் மாற்றப் படுகின்றன என்பது என் அபிப்ராயம். நீங்கள் சுயசரிதை எழுதுவது கொஞ்ஜம் கஷ்டம் தான் - ஒழுங்காகக் காப்பிஅடிக்கத்தெரியாது, சுடத்தெரியாது, உண்மையை சொல்வதிலேயே அதீத அடக்கம், மற்றவர் சொன்னாலும் தடுக்கும் கூச்சம்(கணேஷ் அவர்களுக்கு நீங்கள் எழுதியது) .. ரொம்பவே கஷ்டம் தான்! என்ன, நஷ்டம் எங்களுக்குத் தானே! - ஜெ.

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!