August 04, 2012

ஜி பி ஓ வாழ்க்கை, -5


”தொலைந்து போன ரிஜிஸ்டர் தபால் கிடைத்த மாதிரி, மாயமாய் மறைந்து போன பர்ஸ் கிடைக்க வேண்டுமே என்று செங்கற்பட்டு திம்மராஜா குளக்கரையில்  இருந்த சக்தி வாய்ந்த ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டேன்.

சஞ்சீவி மலையைத்  தூக்கிக் கொண்டு வந்த அவருக்கு  ஒரு பர்ஸை எடுத்து வருவது பெரிய காரியமா?
என்ன, நீ என்ன ராமனா?   என்று நீங்கள் கேட்கலாம்... நானும் ஒரு ராமன் தான். என் அம்மா  என்னை “ஏண்டா தடி ராமா என்று கூப்பிடுவது உண்டு! 

’பாலும் கசந்ததடி, படுக்கையும் நொந்ததடி’ என்பது போல் ரயிலில் வழக்கமாக ஓசியில் படிக்கும் தினத்தந்தியும் பிடிக்கவில்லை, ’ஒரு கை குறைகிறதே’ என்று கூப்பிட்ட  ரம்மி நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளவும் மனம் வரவில்லை. 
ரயில் வழக்கத்திற்கு மாறாக காட்டுப்பாக்கத்தில் நின்றபோது .திரைப்படங்களில் வருவது போல் திடீரென்று டி. டி.  ஆர் . பெட்டியில் நுழைந்தார். பர்ஸோடு சீஸன் டிக்கட் போய்விட்டதால், நான் அகப்பட்டுக்கொள்ளப்போகிறேன் என்று உதறல் எடுத்தது. இத்தனைக்கும் டிக்கட் வாங்கிக்கொண்டு தான் ரயிலேறியிருந்தேன். பயம், திகில், . குழப்பம் . கவலை எல்லாம் சேர்ந்து இருந்ததால் டிக்கட் வாங்கியிருந்ததும் மறந்து விட்டது,
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையாகுட்டி, டி.. டி. ஆரைப் பார்த்து ”ஹலோ கண்ணன் சார்! குட்மார்னிங் ”என்று சொன்னார் . பையாகுட்டிக்கு எல்லா டி. டி. ஆர். களும் கார்டுகளும் நண்பர்கள்தான் ஏன், என்ஜின் டிரைவர்களும் கூட

கண்ணன் வந்தார் அவரிடம் பையாகுட்டி” என்ன கண்ணன் சார்  பொண்ணுக்கு ஏதாவது அமைந்ததா” என்று கேட்டார். 
உடனே கண்ணனின் பெண் எப்படி இருப்பாள் என்று ஒரு மாதிரியாக அதாவது எனக்குப் பிடித்த மாதிரியாக கற்பனைப் பண்ணி்ப் பார்த்தேன்.

‘ எங்கே பையாகுட்டி அவ்வளவு சுலபமாக அமைகிறது எல்லாம் தாசீல்தார் ஆபீஸ் கிளார்க் மாதிரி தான் வருது . ரயில்வே, போஸ்டல் என்று சென்ட்ரல் கவர்ன்மென்ட் பசங்கள் எதுவும் வரவில்லை”.
”எங்கே பையாகுட்டி. இதோ நம்ம பையன் இருக்கிறானே என்று என்னைக் காட்டி விடப்போகிறாரே என்று மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது.
டிக்கெட்லெஸ் ஆக நான் இருந்திருந்தால் ஓ.கே என்று தலை ஆட்டியிருந்தாலும் ஆட்டியிருப்பேன்! நல்ல காலம் டிக்கட் வாங்கி இருந்தேன்,.சின்னப் பையன் நான்.   கல்யாண மார்க்கெட்டுக்கே இன்னும் வராத காலகட்டம். 
அப்போது ஏழெட்டு பால்காரர்கள் பால் குடங்களுடன் வந்திருப்பதைப் பார்த்துஅவர்களிடம் செக் பண்ணப் போய் விட்டார். எனக்கும் கொஞசம் மூச்சு வந்தது.

பீச்  ஸ்டேஷனை அடைந்ததும் ஓட்டமும் நடையுமாக ஆபீஸுக்குள் நுழைந்தேன். வழியில் பார்த்தவர்களெல்லாம் ”என்னப்பா பர்ஸ் கதை என்ன?” என்று கேட்டார்கள். ”அது மர்மக்கதை”  என்று சோகமாக ஜோக் அடித்தேன்.

என் சீட்டில் போய் உட்கார்ந்தேன் அப்போதுதான் மேஜைமேல் இருந்த ஒரு துண்டுக் காகிதம் என் கண்ணில் பட்டது  அதில் , ”சென்னை ஏர்போர்ட் சார்ட்டிங்கிலிருந்து ராத்திரி ஃபோன் வந்தது. உங்கள் பர்ஸ்  தபால் பையிலிருந்ததாம் அதை எடுத்து வைத்திருக்கிரார்களாம்”. என்று எழுதியிருந்தது. எழுதியவர், முன் தினம்  2 - 9  ட்யூட்டியிலிருந்தவர்
.
ஆ! பர்ஸ் இருக்குமிடம் தெரிந்து விட்டது . ஹெட்கிளார்க்கிடம் சொல்லிவிட்டு மீனம்பாக்கம் போய் பர்ஸை வாங்கிக்கொண்டு வந்தேனே்.
என் பர்ஸ் எப்படி ஏர்போர்ட் சார்ட்டிங் ஆபீஸுக்குப் போனது?
முன் தினம் சாயங்காலம் ரிஜிஸ்டர்ட் தபால்களை எண்ணி சரிபார்த்துப் பையில் போட்டபோது ஒரு பண்டிலை பையிலிருந்து மீண்டும் எடுத்து எண்ணினேன். அப்படி குனிந்து எடுக்கும்போது உண்டியில் விழுவது போல் பர்ஸ் ஜேபியிலிருந்து  விழுந்து விட்டது.
நல்லகாலம், இதை எரர் புக்கில் ERROR BOOK எழுதவேண்டிய அவசியமோ மெமோவோ விளக்கமோ தரவேண்டியதோ எதுவுமில்லை.

மெமோ என்று சொன்னதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. மறந்து போவதற்கு முன், ஒரு குறும்புக்காரஆசாமி செய்த குறும்பைப் பற்றி எழுதிவிடுகிறேன்.
பாலு என்ற குமாஸ்தா இருந்தார் அவரைக் கவலையில்லா மனிதர் என்று சொல்லலாம். காவி வேஷ்டி காவி ஜிப்பாதான் போட்டிருப்பார். அதனால் அவருக்குச் சாமியார் என்ற பட்டப் பெயரும் வந்துவிட்டது அவர் சாதாரணமாக  2 - 9  ட்யூட்டியில் தான் இருப்பார் ஒரு நாள் அவர் சீட்டிற்கு வந்த தபால்களும் டெஸ்பாட்ச் ஆன தபால்களும் சரிசமமாக ஆகவில்லை. ஒரு தபால் குறைந்தது. இரவு வெகு நேரம் வரை எல்லா சீட் கணக்குகளையும் தனித்தனியாகப் பார்த்தும் கிடைக்கவில்லை. ஒரு தபால் குறைவாகத்தான் இருந்தது. வழக்கம்போல் எரர் புக்கில் குறிப்பு எழுதிவிட்டுப் போய் விட்டார் இரவு ட்யூட்டி ஹெட்கிளார்க்.

மறுநாள் பி. பி. எம். மிற்கு அதை அனுப்பினேன். அவரும் வழக்கம் போல் விளக்கம் வாங்கி அனுப்பும்படி எழுதி அனுப்பி விட்டார்
பாலுவிடம் விளக்கம் எழுதித் தரச்சொன்னேன்

  ( அவர் போட்ட லிஸ்டில் 321 தபால்களின் விவரங்களை எழுதியிருந்தார்; ஆனால் வரிசை எண் போடும்போது ஒரு தபாலுக்குப் போடாமல் விட்டு விட்டார். அதனால் மொத்தம் 320 என்று போட்டு விட்டார்


. ஆகவே கணக்கில் ஒன்று ‘உதைத்தது’! ( இது ஜி.பி.ஒ- மொழி!)
கணக்கு சரியாகி விட்டது என்றாலும் தவறு தவறுதான். .இரண்டு மூன்று நாள் கழித்து பாலு விளக்கம் எழுதிக் கொடுத்தார். அந்த விளக்கத்தை நான் மறக்கவே முடியாது.    இதுதான் அந்த விளக்கம்.( 55 வருஷங்கள் ஆகிவிட்டதால், மறந்து போன சில இடங்களை நான் பூர்த்தி செய்துள்ளேன்!)
:                                  :                                                                  ;
பி.பி.எம். சென்னை ஜி.பி.ஓ அவர்களுக்கு,
 உங்கள் மெமோ கிடைக்கப் பெற்றேன்.
சென்ற புதன்கிழமை நான் 2 மணி- 9 மணி டியூட்டியில் இருந்தேன். என் கணக்கில் ஒரு தபால் குறைந்து விட்டது. இரவு வேலை முடியும் நேரத்தில் --------------- கம்பெனி சுமார் 100 ரிஜிஸ்டர் தபால்களைக் கொண்டு வந்தது, ஆகவே சற்று அவசரம் அவசரமாக அவற்றை புக் செய்து, ’சார்ட்’ செய்து ஆர்.எம். வாரியாக லிஸ்ட் போட்டேன். அதற்குள் மெயில் வேனுக்கு நேரம் ஆகிவிட்டதால் வேகமாகப் பைகளை கட்டி அனுப்ப வேண்டியதாகி விட்டது.
நான் கடந்த இரண்டு வருஷங்களாக் இந்த 2-9 ட்யூட்டியில் வந்து கொண்டிருக்கிறேன். வேறு ஷிஃப்டிற்கு மாற்றும்படி கேட்ட என் கோரிக்கை இது வரை ஏற்கப்படவில்லை. தினமும் இரவு  ஒன்பது, ஒன்பதரைக்கு மேல் ரயிலைப் பிடித்துத்  தி.நகர் போகிறேன். நான் பேச்சலர் என்பதால் ஹோட்டலில்தான் சாப்பிடுகிறேன்.

 நான்  கீதா கேஃபில் சாப்பிடுவது வழக்கம். ஆனால் நான் போகும் வேளையில்  ஹோட்டல் மூடி விடுகிறது  அப்போது வேறு வழியில்லாமல் தெருவோர டீக்கடையில் சாப்பிடுகிறேன் டீக்கடையில் தயிர், சாம்பார் சாதம் எதுவும் கிடைக்காது.  எது  கிடைக்கிறதோ அதைச் சாப்பிடுகிறேன்.பரொட்டோ போன்றவைதான் கிடைக்கும். மேலும் டீ கடைகளில் எல்லாவற்றிலும் அதிக காரம் இருக்கும்.. கோதுமையும் காரமும் சேர்ந்து  வயிற்றில் அல்சரை ஏற்படுத்தி விட்டன! சரியாக உணவு ஜீரணமாவதில்லை. வயிற்றில் வலியுடன்தான்  பல சமயம் ஆபீசுக்கு வருகிறேன். வேலையில் இருக்கும்போது வலி ஏற்பட்டால் கவனம் மாறிப்போகிறது,  தவறு என்னை அறியாமல் ஏற்பட்டு விடுகிறது.. இனிமேல் கோதுமை உணவைத்   தவிர்க்கிறேன். அத்துடன் தவறுகள் வராதபடி கவனமாக  இருப்பேன்.. - இப்படிக்கு, பணிவுடன் பாலு.
இதைப் பார்த்ததும் அவரிடம் சொன்னேன் “ என்னப்பா, விளையாடறே. இப்படியெல்லாம் எழுதக்கூடாது:”
“ இத பாரு.. என் கிட்ட விளக்கம் கேட்டிருக்காரு பி.பி.எம்.. நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.. இதை அனுப்ப வேண்டியது உன் வேலை, என்னைக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது” என்றார்.
நான் அப்படியே அனுப்பினேன். ஒரு மணி கழித்து நோட்புத்தகம் வந்தது. “இனிமேல் இப்படி தவறு வராதபடி  பார்த்துக் கொள்ளவேண்டும்.: என்று எழுதியிருந்தார்.   பி.பி.எம்!  அவர்  மேலெழுந்தவாரியாகத்தான்  படித்திருப்பார் என்று நினைக்கிறேன்
அந்த கால கட்டத்தில் சென்னை ஜி.பி.ஓவின் கீழ்தான் சென்னையில் உள்ள எல்லா தபால் அலுவலகங்களும் இருந்தன.  ஆகவே அவருக்கு வேலை சற்று அதிகமாகத்தான்  இருந்தது.

பின்னால் இந்த பாலுதான்,  கிளப். யூனியன், கேன்டீன் ஆகியவற்றின் தேர்தல்களில் என்னை   வற்புறுத்தி  நிற்கவைத்து , ஓட்டு சேகரித்து ஜெயிக்க வைத்தார். அந்த விவரங்கள் பின்னால்.

( அடுத்த பகுதி  சற்று தாமாதமாக வரும்.)

7 comments:

 1. சுவையான நினைவுகள்...

  தவறுக்குக் கொடுத்த விளக்கம் சூப்பர்....

  ReplyDelete
 2. Explanatory note by Balu Samiyar is really great and from his heart / stomach! The boss should have read it and given him a change of shift! - R. J.

  ReplyDelete
 3. சுவாரஸ்யமாக இருக்கின்றது. தொடர்ந்து படித்து வருகின்றேன்.

  ReplyDelete
 4. Explanation to the memo is rightly written. He has explained in detail why the mistake has happened. I remember one snippet read in some business magazine. when the production went down drastically, the company gave a serious thought over it and found out it was due to water shortage in the residential quarters. Immediately, within 48 hours, the company solved the water problem in residential quarters. Name of the Company is : Tata Industries Location : Jamshedpur. This incident happend during 1950s.

  ReplyDelete
 5. சுவாரஸ்யமாக உள்ளது...
  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 6. //என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையாகுட்டி, டி.. டி. ஆரைப் பார்த்து ”ஹலோ கண்ணன் சார்! குட்மார்னிங் ”என்று சொன்னார் . பையாகுட்டிக்கு எல்லா டி. டி. ஆர். களும் கார்டுகளும் நண்பர்கள்தான் ஏன், என்ஜின் டிரைவர்களும் கூட//

  Is this the same பையாகுட்டி who appeared in Character.

  //அந்த ரயிலில் பல வருடங்களாகப் போய்க் கொண்டிருப்பவர். ஆகவே இஞ்ஜின் ட்ரைவர்கள், டி. டி. ஆர்கள், ’கார்டுகள்' எல்லாரும் அவருக்குப் பழக்கமானவர்கள். சமயத்தில் யாராவது சீசன் டிக்கட்டு கொண்டு வர மறந்து போய் டிக்கட் எக்ஸாமினரிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். அப்போது பையாகுட்டியின் உதவியை அவர்கள் நாடுவார்கள்.
  "ராஜகோபால்... இவன் நம்ப பையன்தான். புது கல்யாணம், செகண்ட் ஷோ போனார்...அதனாலே ரொம்ப நேரம் தூங்கிப் போய்ட்டாரு மாப்பிள்ளை! அவசர அவசரமாய் வரும்போது சீசன் டிக்கட் மறந்துட்டாரு... போகட்டும் உடுப்பா.'' என்பார்.//

  ReplyDelete
 7. ஆமாம்.. என் கட்டுரைகளையெல்லாம் மன்ப்பாடம் பண்ணி வைத்திருக்கிறீர்களா?
  என் அனுதாபங்கள்! -கடுகு
  Why 'anonymous'

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :