August 16, 2012

நர்மதாவின் பூனை -கடுகு``கேட்டிங்களா சேதியை? உங்களைத்தான். எங்கு இருக்கிறீர்கள்? பொழுது விடிய வேண்டியதுதான். வாசல் வராந்தாவில் சுவாமி எழுந்தருளி விடுவார். சமையற்கட்டிலிருந்து கழுதை மாதிரி நான்  கத்தினாலும் காதில் விழாது'' என்று பொரிந்து கொண்டே திருமதி பஞ்சு வந்தாள். குறுக்கெழுத்துப் போட்டிக் கூப்பன் ஒன்றைப் பூர்த்தி செய்யும் மும்முரத்தில் மிஸ்டர் பஞ்சு இருந்தார்.``விடிந்தும் விடியாததுமாய் ஏன் இடி இடிக்கிறாய்? நான் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன். என்ன சேதி?''
``இந்தப் பாழாய்ப் போன போட்டிக்கு மாசாமாசம் அழுத தண்டத்தை உண்டியில் போட்டிருந்தால் இத்தனை வருஷத்துக்கு நாமும் கிருஷ்ணா, ராமா என்று வட இந்திய யாத்திரை போக முடிந்திருக்கும்.''
``பஞ்சு மாமி, நீ `நாமும்' என்று அழுத்திச் சொல்வதிலிருந்து வேறு யாரோ போகிறார்கள் என்பதும், அதனால்தான் மாமி, சாமி வந்தது மாதிரி பேசுகிறாள் என்பதும்...''
``போதும் எத்தனை `தும்' போடப் போகிறீர்கள் இன்னும்?''
``போடவில்லை. தும் க்யா சமாசார் சொல்ல வந்தாய் தாயே?'' என்றார் பஞ்சு.
``பக்கத்து வீட்டிலே இருக்கிறாரே காயாம்பூ, அந்த ஆளுக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்குது.''
``அவனை யாராவது அடிச்சால் சரி, எனக்குத் திருப்திதான்.''
``போறுமே, இந்த மாதிரி ஜோக்கெல்லாம். அந்த அழகு ராணி பிரியம்வதாவிடம் சொல்லுங்கள். அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். கேளுங்களேன்... அந்த ரோடு கான்டிராக்டர் ஆசாமிக்கு `லக்'கடிச்சிருக்குது.''
``கடிச்சிருக்குதா? காயாம்பூவை எது கடிச்சாலும் சந்தோஷம்தான். அடியே.... அடியே ...கோபித்துக் கொள்ளாதே! விஷயத்தைச் சொல்லு'' என்று பஞ்சு சரணாகதிப் பல்லவி பாடினார்.
``ஏதோ டூரிஸ்ட் பஸ் கம்பெனிக்காரர்கள் பாத்திரச் சீட்டு மாதிரி சுற்றுலாச் சீட்டு ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் காயாம்பூ ஒரு சீட்டு எடுத்தாராம். முதல் மாசமே இவருக்குச் சீட்டு விழுந்திடுத்து. அதனால் இவரை வட இந்தியா போகிற டூரிஸ்ட் பஸ்ஸில் இலவசமாக அனுப்புகிறார்கள்.''-- பஞ்சு மாமியின் குரலில் லேசான எரிச்சல் இருந்தது.
``அதுக்கு என்னை என்ன செய்யணும் என்று சொல்றே? நானும் ஒரு சீட்டுக் கட்டறேன். சரிதானே! குறுக்கெழுத்துப் போட்டியில் பிரைஸ் விழுந்தால் நாமே ஜம்முனு  ஜம்மு வரைக்கும் போய் வரலாம்.''
``என் தலையெழுத்து இந்த வீட்டுச் சமையலறை வாசற்படியைத் தாண்டக் கூடாது என்றிருக்கும் போது...'' பஞ்சு மாமி சட்டென்று நிறுத்திக் கொண்டதற்குக் காரணம், அப்போது யாரோ வரும் சத்தம் கேட்டதுதான். பஞ்சுவும் மாமியும் திரும்பிப் பார்த்தார்கள்.

சந்தனப் பொட்டும், சிவப்புக் கடுக்கனும், நான்கு டூத் பிரஷ்களை ஒட்ட வைத்த மாதிரி காட்சி அளித்த மீசையும், விசிறி மடிப்பு அங்கவஸ்திரமுமாக ரோடு கான்டிராக்டர் காயாம்பூ வாய் நிறைய வெற்றிலையுடன், ``ழமழ்காரம் ழார்'' என்றார்.
``ழமழ்காரம்! முதலில் வெற்றிலையைத் துப்பிவிட்டு வாரும், காயாம்பூ'' என்றார் பஞ்சு.
அவரும் துப்பிவிட்டு, ``நமஸ்காரம், ஐயா கிட்டேதான் வந்தேன்'' என்று ஆரம்பித்தார்.
``வாருங்களேன், நம் வீட்டு வாசலில் தெருக் கதவை அடைத்துக் கொண்டிருக்கும் தார் டிரம்களை நீங்கள் எப்போது எடுக்கப் போகிறீர்கள்?''
``கோவிச்சுக்கக் கூடாது.  நம்ப அம்மாகூட சொன்னாங்க. நான் எடுத்திடறேன்னு சொன்னேனா இல்லையா, அம்மா?''
``சொன்னது வாஸ்தவந்தான். ஆனால் ஆறு மாசம் ஆகி விட்டதே! எப்போது எடுக்கிறதாக உத்தேசம்? வருகிற வெள்ளிக்கிழமை நாள் நன்றாக இருக்கிறது. ஏழரை ஒன்பது முகூர்த்தம். அமிர்தயோகம். அன்றைக்கே எடுத்துடுங்களேன்'' என்றார் பஞ்சு.
``ஐயா எப்பவும் தமாஷ்தான். என்னைக் கண்டால் கேலி பண்ணாமல் இருக்க மாட்டார்.'' என்று பஞ்சு மாமியிடம் சொல்லிவிட்டுச் சிரித்தார் காயாம்பூ. பஞ்சு மாமி `கம்'மென்று கையைக் கட்டி நின்றிருந்தாள்.


``என்னய்யா சிரிப்பு? உட்காரும். என்ன சமாசாரம்?''
``நல்ல சமாசாரங்கதான் . ஒரு பதினைஞ்சு நாள் நாங்கள் ஒரு டூர் போய் வரப் போகிறோம். நடராஜா டூரிஸ்ட் கம்பெனியில் சீட்டு எடுத்தேன்.''
``சீட்டு விழுந்திட்டுது, குடும்பத்தோட போறீங்களா?''
``ஆமாங்க. வீட்லே, பாவம்! அது எங்கே போயிருக்குது? உங்களை மாதிரியா நாங்கள்? நீங்க நினைச்சால் காரை எடுத்துப் பிக்னிக் போவீங்க. கம்பெனி செலவில் பம்பாய்அது இது என்று போவீங்க. ஒரு பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியின் மானேசரு நீங்க.''
பஞ்சு மாமியின் உள்ளத்தில் வெடித்துக் கொண்டிருந்த எரிமலையின் ஜ்வாலையைப் பஞ்சு மானசீகமாக உணர்ந்தார். `பாவம்! அவளை எங்கேதான் அழைத்துப் போயிருக்கிறேன்?'
``காயாம்பூ, நீங்கள் என்றைக்குக் கிளம்பறீங்க?''
``வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்குதாம். நீங்க சின்ன உபகாரம் செய்யணும்'' என்று கேட்டார் காயாம்பூ.
``சொல்லுங்க, செய்கிறேன்.''
``ஒண்ணுமில்லை. நம்ம பிள்ளாண்டான் இருக்கானே சாண்டோ கணக்காக. அதுக்கு கொஞ்ச நாளாக ஒரு பைத்தியக்காரப் பித்துப் பிடிச்சிருக்குது.''
``காயாம்பூ, வயசுப் புள்ளை அப்படித்தான் இருக்கும். நல்ல பொண்ணாப் பார்த்துக் கட்டிப் போடுங்க.''
``ஐயோ, நீங்க தப்பா நினைச்சுப்புட்டீங்க. ஆனானப்பட்ட அந்த அழகி பிரியம்வதாவைக் கூட நம்ப புள்ளை திரும்பிப் பார்க்க மாட்டான். என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்? ஆமாம், பையன் கொஞ்ச நாளா முசலுங்க வளர்க்கிறான். ஆமாங்க, மொசல். மொசல் தெரியாதுங்க... வெள்ளையா, புசுபுசுன்னு...''
``முயல் என்று சொல்லுங்க. உம்...''
``அதுங்களைப் பதினைஞ்சு நாளைக்கு நீங்க கவனிச்சுக்கணும். நம்ப வீட்டுக் கூடத்தில் கூண்டிலே போட்டு வெச்சுடறோம். வீட்டுச் சாவியை உங்களிடம் கொடுக்கறேன். தினமும் ஒரு தடவை ஆகாரம் போட்டுத் தண்ணீர் ஊற்றினால் போதும். கொஞ்சம் பெரிய மனசு பண்ணி...''
``என்னய்யா காயாம்பூ? இதுக்குப் போய் இப்படித் தயங்கித் தயங்கிச் சொல்கிறீர்? சரி, முயல்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உம்ம பயல் வளர்க்கும் முயல். அயல் வீட்டுக்கார நான் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓ.கே. என்ன பஞ்சு மாமி! காயாம்பூ ஆக்ரா, டில்லி எல்லாம் போகிறார். உனக்கு ஏதாவது வேண்டுமென்றால் சொல்.''
``ஆமாம் அம்மா, சொல்லுங்க. நான் வாங்கிட்டு வரேன்.''
``ஒரு ரொட்டிக் கல்லுதான்...'' என்று பஞ்சு மாமி இழுத்தாள்.
``சரிதான். மாமாங்கத்துக்கு ஒரு தடவை ரொட்டி செய்கிறாய்! அதற்குக் கல் இல்லை என்று அழுகிறதாக்கும்? காயாம்பூ, டில்லியில் மோடா கிடைக்கும். இரண்டு மட்டும் வாங்கி வாங்க.''
``வரேன் ஸார். நிச்சயம் முசலுங்களை மட்டும்...''
``சரிய்யா, சரி!''

ஆபீசிலிருந்து வீடு திரும்பிய பஞ்சு வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிஷங்கூட ஆகியிருக்காது. வாசல் மணி அடித்தது. பஞ்சு மாமி கதவைத் திறந்தாள்.
சினிமா நடிகை மாதிரி ஏகப்பட்ட மேக்கப்புடன் நின்றிருந்தாள் பிரியம்வதா.
``வாம்மா. உட்கார். அவரைக் கூப்பிடறேன்'' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பஞ்சுவிடம், ``நீங்கள் பல்லிளிப்பீர்களே, அந்த ஒல்லிப் பெண் வந்திருக்கிறாள். என்னவோ சென்ட் போட்டு வந்திருக்கிறாள். வயிற்றைக் குமட்டுகிறது. போங்கோ, ஐ.சி.எஸ். ஆபீசரின் பெண்ணா இருந்தால் என்ன? எம்.ஏ. படித்தவளா இருந்தால் என்ன? அடக்கம் வேண்டாமா? கொஞ்சம் அகலமான கைக்குட்டையை வாங்கி ரவிக்கை தைத்துக் கொள்கிறாள் போலிருக்கிறது.''
``அடியே மிஸஸ் பஞ்சு, இரையாதே, இரை அகப்படாத சிங்கம் மாதிரி'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்தால் வம்பு என்று சட்டென்று வாயிலறைக்குச் சென்றார்.
``அடேடே, பிரியம்வதாவா?''
``நமஸ்காரம் அங்கிள். இப்போதுதான் ஆபீசிலிருந்து வருகிறீர்களா?''
``ஆமாம். என்ன அபூர்வமாக வந்திருக்கீங்க? சரி, என்ன சாப்பிடுகிறீர்கள், ஹாட்டா, கோல்டா?''
``நோ, நோ, அங்கிள்! எனக்கு ஒன்றும் வேண்டாம்.'' பிரியம்வதா கொஞ்சலாகச் சிணுங்கினாள். ஆகா! இந்த வடித்தெடுத்த வடிவழகுச் சிலை கொஞ்சம் சிணுங்கினாலும் அதில் இத்தனை நவீனமும், மோகனக் கவர்ச்சியும் உண்டாகின்றனவே!
``அங்கிள், ஒரு சின்ன உதவி...''
``சொல்லுங்கள், செய்யப்படும்'' என்று நாடக பாணியில் கூறினார்.
``நானும் அப்பாவும் வருகிற வெள்ளிக்கிழமை டில்லி, ஆக்ராவெல்லாம் போய்வரப் புறப்படுகிறோம்.''
``யாரோ சுற்றுலா பஸ்காரர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்களே, அதில் போகிறீர்களா?''
``ஆமாம் அங்கிள். உங்களுக்குத் தெரியாத விஷயமே இருக்காதோ?'' சாதாரணமாக அவள் எதிரில் இருக்கும் போது ஐஸ் கட்டிகளின் நடுவில் இருப்பதுபோல் தோன்றும். இப்படிப் பிரியம்வதா, வியப்புடன் கூறியபோது அவர் வடதுருவத்துக்கே சென்று விட்டார். அவ்வளவு ஜில்!
``நம்ம பக்கத்து வீட்டுக்காரர் காயாம்பூகூட டூர் போகிறார். அந்தப் பஸ்ஸில்தான் நீங்களும் போகிறீர்களா?''
``அடேடே! காயாம்பூ உங்கள் `நெய்பரா?' அதிர்ஷ்டக்கார மனுஷன்'' என்றாள் பிரியம்வதா.
அதிர்ஷ்டக்காரனா? பேரதிர்ஷ்டக்காரன்! பாவிப் பயல் கொடுத்து வைத்தவன். அவன் போகிற அதே பஸ்ஸில் பிரியம்வதாவும் பதினைந்து நீண்ட நாள் பயணம் செய்யப் போகிறாள்!
``காயாம்பூவை விட்டுத் தள்ளுங்க. சரியான அழுக்குப் பயல்... ஏதோ உதவி வேண்டும் என்று சொன்னீர்களே? டில்லியில் குளிரும். வேண்டுமானால் என்னிடம் இருக்கும் காஷ்மீர்ச் சால்வையை கொடுக்கட்டுமா?'' என்றார் பஞ்சு.
``இல்லை அங்கிள். அதெல்லாம் தேவை இல்லை. என் வீட்டு வாசலில் ஒரு புதிய ரோஜாச் செடி வைத்திருக்கிறேன். அதற்கு தினம் ஜலம்விட வேண்டும். நோ, நோ, நீங்கள் போய்த் தண்ணீர் ஊற்றுங்கள் என்று சொல்லவில்லை. யாராவது ஆள் ஊற்றினால் நான் ஏதாவது பணங்கூடக் கொடுத்து விடுகிறேன். அது ரொம்ப அபூர்வமான ரோஜா. `கிஸ் ஆப் லவ்' என்று பெயர். நிச்சயம் அடுத்த `ரோஸ் ஷோ'வில் பரிசு வாங்கும்.''
``மிஸ் பிரியம்வதா, ரோஜாச் செடிக்குத் தண்ணீர் விட வேண்டும் தினமும். அவ்வளவுதானே? கவலையை விடுங்கள். நீங்கள் நிம்மதியாகச் சுற்றுலா போய் வாருங்கள்.''
``ஓ அங்கிள்! நீங்க ரொம்ப ரொம்ப... ஐயோ! எப்படி உங்களுகுகு நன்றி சொல்லுவேன்? அந்த ரோஜாச் செடியின் முதல் பூவை உங்களுக்குத்தான் கொடுக்கப் போறேன். `கிஸ் ஆஃப் லவ்' செடியை நான் லண்டனிலிருந்து வரவழைத்திருக்கிறேன்.''
``இதோ பாரும்மா, நீ எனக்குக் கிஸ் ஆஃப் லவ்வும் கொடுக்க வேண்டாம், வேறு எதுவும் கொடுக்க வேண்டாம்'' யதேச்சையாகச் சொல்வது போல் வேண்டுமென்றே அவர் குறும்புடன் சொன்னார். பிரியம்வதா நாணத்தால் `ரூஜ்' சிவப்பை விட அதிகமாக முகம் சிவந்தாள்.
``அங்கிள்! நீங்கள் ரொம்ப `நாட்டி' விஷமக்காரர்'' என்று கூறிவிட்டு கலகலவென்று சில்லறை நாணயங்களைக் கொட்டியது போல் சிரித்தாள்.
டம்பப் பையை எடுத்துக் கொண்டு அவள் விடைபெற்றாள். அவள் போவதையே பார்த்திருந்த பஞ்சுவின் தோளின் மேல் `ணங்'கென்று ஒரு கை விழுந்தது. பஞ்சு மாமி!

``போதும். வாயிலே ஈ என்ன, யானை போனால்கூடத் தெரியாது. இந்தாங்க. பக்கெட்டில் ஜலம் கொண்டு வந்திருக்கிறேன். இரண்டெட்டில் அவள் வீட்டுக்குப் போய்த் தண்ணீர் ஊற்றி விட்டு வாருங்கள். செடி வாடினால் அவள் முகம் வாடிவிடுமே!''
``அடியே, ஒரு பெண் வந்து பரிதாபமாகக் கேட்கிறாள். போகட்டும் என்று ஒப்புக் கொண்டேன். செடியும் ஒரு ஜீவன். அதற்கு ஆகாரம் போட்டால் நமக்கும் புண்ணியம்.''
``ஆமாம். நானும்தான் புண்ணியம் தேட வேண்டும். பாவம் பண்ணி இருக்கக் கொண்டுதானே உங்களுக்கு வாழ்க்கைப்பட்டேன்? இந்த வயசிலே இப்படி உங்கள் புத்தி தள்ளாட்டம் போடுமா?''
அந்தச் சமயத்தில் அரட்டைக் கோஷ்டியின் பிரதான வாயாடிகளான வெங்கு, கோபு, சிட்டி வந்தார்கள். சாதாரணமாக அவர்களைச் சபிக்கும் பஞ்சு இப்போது மனமார வாழ்த்தினார். காரணம், பஞ்சு மாமி அவர்களைப் பார்த்ததும் பரம சாதுவாய் உள்ளே போய் விட்டாள்.
  *                  *                            *
``ஏம்பா தோட்டக்காரரே!'' என்ற பெண்குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் பஞ்சு.
பிரியம்வதாவின் ரோஜாச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பஞ்சு திரும்பிப் பார்த்தார். ``யாரைப் பார்த்து தோட்டக்காரன் என்று கூப்பிடுகிறாய்?'' இப்படிச் சீறியிருப்பார், அந்தக் குரல் ஒரு அப்சரஸின் குரலாக இல்லாதிருந்தால்!
அலையலையான கேசம். அதை ஏதோ மாதிரி சேர்த்து ஒரு பூப்போட்ட கைக்குட்டையால் கட்டியிருந்தாள். தோளிலிருந்து நீண்ட பை, மற்றொரு பக்கம் ஒரு `ஏர்-பாக்', கூலிங் கிளாஸ், சைக்டெலிக் பூப்போட்ட ஜப்பான் நைலக்ஸ் மழமழப்பாக அவளது மழமழப்பான உடலை அலங்கரித்தது. கலர் சம்பா கோதுமை நிறம். பளிச்சென்ற பல் வரிசை. இறங்கிய கழுத்தில் ஒரு சின்னச் சங்கிலி.
ஒரு செகண்டின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் இவ்வளவையும் பார்த்து விட்டார் பஞ்சு. அந்த சந்திரபிம்ப முகமலராளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தவரைப் பிறகுதான் பார்த்தார். `பரம்பரைப் பணக்காரர்' என்பது அவரது மஸ்லின் ஜிப்பாவிலும் கம்பீரமான பார்வையிலும் சுருக்கமே விழாத ஆனால் வழுக்கை விழுந்த தலையிலும், வெள்ளிப் பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக்கிலும் எழுதி ஒட்டியிருந்தது.
``யாரைக் கூப்பிட்டிங்க?'' என்று கேட்டார் பஞ்சு.
``உன்னைத் தான், அந்த வீட்டிலே எங்கே போயிருக்காங்க?'' என்று கேட்டார் மஸ்லின் ஜிப்பா.
``ஓ! மிஸ்டர் சாரியும் அவர் `டாட்டர்' பிரியம்வதாவும் ஒரு டூர் போயிருக்காங்க... இட் வில் பி பிஃடீன் டேஸ் பிஃபோர் தே ரிடர்ன்'' வேண்டுமென்றே அவர் ஆங்கிலத்தில் சொன்னார். அதைக் கேட்ட அந்த ரம்பைக்கு ஷாக் ஏற்பட்டது. பஞ்சு தோட்டக்காரர் அல்ல என்று உணர்ந்து அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
``ஓ! ப்ளீஸ், எக்ஸ்க்யூஸ் மீ, உங்களைத் தோட்டக்காரன் என்று நினைத்து விட்டேன்.''
``அதனால் என்ன? உலகம் என்னும் தோட்டத்திலேயே கடவுள் தோட்டக்காரனாக இருக்கிறான்.'' என்றார். சினிமா பார்த்துப் பார்த்து இப்படி அர்த்தமில்லாத வசனங்களைப் பேசும் பழக்கம் அவருக்கு ஏற்பட்டு விட்டது.
``நீங்க வெளியூரா? இங்கே மிஸ்டர் சாரி வீட்டில் தங்க வந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார் பஞ்சு.
``பிரியம்வதாவின் மாமா நான். இவள் என் பெண் நர்மதா.''நமஸ்காரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
``நான் பஞ்சு. வருணா ஃபைர் இன்ஷுரன்ஸ் கம்பெனியில் ரீஜனல் மானேஜர். மிஸ்டர் சாரி எனக்கு வேண்டியவர். பிரியம்வதாவும்தான். இந்த ரோஜாச் செடிகள் மேல் பிரியம்வதாவுக்கு உயிர். அவர்கள் டூர் போயிருப்பதால் நான் ஜலம் விடுகிறேன். இதற்கு ஓர் ஆளை வைத்திருந்தேன். அவன் இன்றைக்கு வரவில்லை.'' கூசாமல் புளுகினார்.
``அங்கிள், பிரியம்வதா திரும்ப எவ்வளவு நாளாகும்?''
``பதினைந்து நாட்களுக்கு மேலாகும். ஏன் கவலைப்படுகிறீர்கள்?''
``இல்லை, வந்து... நான் இங்கே பத்து நாள் தங்குவதற்கு வந்தேன். எனக்கு இங்கே வேலை இருக்கிறது. சரி, போகட்டும். இந்த ஊரில் நல்ல லாட்ஜ் இருக்கிறதா?'' என்று கேட்டாள் நர்மதா. ஒவ்வொரு வார்த்தை சொல்லும் போதும் அவள் இமைகள் படபடப்பதையும், முகத்தில் ஆயிர வித பாவங்கள் தோன்றுவதையும் கண்டு பஞ்சு கிறங்கிப் போனார்.
``லாட்ஜ் எதற்கு? என் வீட்டுக்கு அடுத்த வீடு காலியாக இருக்கிறது. காயாம்பூ என்ற நண்பர், அவரும் டூர் போயிருக்கிறார். நீங்கள் அங்கே வசதியாகத் தங்கலாம். என் வீட்டிலேயே இருப்பதற்கு எனக்கு ஆட்சேபம் இல்லை.''
``நோ, நோ. உங்களை எதற்குத் தொந்தரவு செய்ய வேண்டும்? இங்கே `காட்டாங்குளத்தூரில் உழவு மாடுகளின் நிலை' என்பதைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப் போகிறாள் நர்மதா. அதனால் கொஞ்சம் `ஃபீல்ட்வொர்க்' செய்யப் போகிறாள். அந்தக் காயாம்பூவின் வீட்டிலேயே இருக்கிறோம். இதனால் உங்களுக்கு ஒரு கஷ்டமும்...''
``பேசக்கூடாது! என் ஒய்ஃபுக்குத் தெரிஞ்சால் சண்டை போடுவாள். நோ, நோ... ஏன் னம்ம வீட்டிலேயே தங்க வைக்கக் கூடாது என்றுதான் சண்டை பிடிப்பாள்'' என்றார் பஞ்சு.
அந்தச் சமயத்தில் தீரமான குரலில் `மியாவ்' என்று ஒரு பூனை குரல் கொடுத்தது. சட்டென்று கையிலிருந்த பையைப் பிரித்து நர்மதா, ``என்ன சமாசாரம்? இதோ வீட்டுக்குப் போனதும் பால் கொடுக்கிறேன். அப்பா, நம் சிண்ட்ரெல்லாவுக்குப் பசி வந்து விட்டது'' என்றாள்.
பஞ்சு ஒன்றும் புரியாமல் விழித்தார். ``அங்கிள்! இது என் வளர்ப்புப் பூனை. சையாமிஸ் ரகம். பேர் சிண்ட்ரெல்லா'' என்றாள் நர்மதா. பையிலிருந்து பூனையை எடுத்தாள். அடாடா! என்ன வளர்த்தி! என்ன அழகு! என்ன புசுபுசு!
`கம்பன் வீட்டுக் கட்டுத்தறிபோல் நர்மதா வீட்டுப் பூனையும் அவளைப் போல அழகாக இருக்கிறதே!' நர்மதாவின் எதிரில் அவருக்கு உவமைக் குழப்பம் ஏற்பட்டது.
``வாங்க, காயாம்பூவின் வீட்டுக்குப் போகலாம்.''
*                                            *                            *
``ஏன்னா? நீங்களானால் அவன் வீட்டைத் திறந்து விட்டீர்கள். இது என்ன சத்திரமா என்று அவன் கேட்டால்? சொல்கிறேன். உங்களுக்கு ஒரு பெண்ணைப் பார்த்தால் இத்தனை புத்தி பேதலிச்சுப் போக வேண்டாம்.'' என்று காய்ந்தாள் பஞ்சு மாமி.
மேற்கொண்டு தனி ஆவர்த்தனம் அவள் செய்ய முடியாதபடி செய்து விட்டது பூனை. ஜன்னலில் தாவி உட்கார்ந்து `மியா'விற்று.
``இதென்ன பீடை? எங்கிருந்து வந்தது? நம் வீட்டுப் பாலுக்குத் தலைவலிதான்.''
``இதுவா? இது அந்தப் பெண் நர்மதா வளர்க்கிற பூனை. பெயர் சிண்ட்ரெல்லாவாம்!''
``அவள் கிளியோபாட்ரா. இது சிண்ட்ரெல்லா. நீங்கள் தெனாலிராமன். இந்த மாதிரி பூனை வளர்க்கிறதுக்குப் பதில் இரண்டு டில்லி எருமையை வளர்த்தாலும் பாலுக்குப் பாலும் ஆகும். மாசம், முந்நூறு ஐந்நூறு என்று காசும் வரும். ஆமாம், அந்த மனுஷன் காயாம்பூவின் `மொசலு'ங்களுக்கு ஆகாரம் போட்டீங்களா?  ரோஜாச் செடியை விழுந்து விழுந்து கவனிக்க மறக்க மாட்டீங்களே.''
``ஆமாண்டி பஞ்சு மாமி. பூனைக்கு ஆகாரம் போட்டுவிட்டு வருகிறேன்'' இதுதான் நல்ல சமயமென்று நழுவினார்.

சைக்கிளில் தலை தெறிக்க வந்து இறங்கினான் வெங்கு. வாயிலில் நின்றபடியே ``ஸார்! ஸார்!'' என்று கத்தினான்.
``ஏண்டாப்பா, நடு ரோட்டிலிருந்து கத்தறே? எந்த ஊரில் என்ன பூகம்பம் வந்து விட்டது? எம்.ஏ. படிச்ச பையனாவா இருக்கே?'' என்று கடிந்து கொண்டே மேல் துண்டை முண்டாசாகக் கட்டியபடி வெளியே வந்தார் பஞ்சு.
``ஸார், இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பீர்களே. பிரியம்வதாவும் சாரியும் வந்து விட்டார்கள்.''
``என்னது! டூர் போய் மூன்று நாள் ஆகவில்லையே! ஏன் திரும்பி விட்டாங்களாம்?''
``என்னைக் கேட்டால்? பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன். அப்புறம் ஒரு சேதி. நம்ம காயாம்பூவும் தன் பரிவாரங்களுடன் பஸ்ஸிலிருந்து இறங்குவதைப் பார்த்தேன்.''
``என்னது! காயாம்பூவா? மை காட்! முதலில் அவங்களை- நர்மதாவைக் காலி பண்ணச் சொல்லணுமே. காயாம்பூ கத்துவானே! வா வெங்கு, பக்கத்து வீட்டுக்குப் போய் அவங்களை பெட்டி படுக்கையுடன் இங்கே வந்துவிடச் சொல்லலாம்'' என்று பரபரப்புடன் கூறினார். இருவரும் காயாம்பூவின் வீட்டுக்குச் சென்று கதவைத் தடதடத்தார்கள்.
நைட் கவுனுடன் வந்த நர்மதாவின் அழகைக்கூட ரசிக்க முடியவில்லை. விஷயத்தை வழக்கத்தை விட அதிகமாக அசடு வழியும் முகத்துடன் சொன்னார் பஞ்சு. நர்மதா நிலைமையைப் புரிந்து கொண்டாள். ``ஓ.கே. அங்கிள்'' என்று சொல்லிவிட்டு அப்பாவிடமும் விஷயத்தைச் சொன்னாள்.
வெங்குவும் பஞ்சுவும் மூட்டைகளை எடுத்துக் கொண்டு போனார்கள். நர்மதா கைப்பை, பெட்டி முதலியவற்றை எடுத்துக் கொண்டாள்.
பஞ்சுவும் வெங்குவும் திரும்ப வந்தார்கள்.
``மிஸ் நர்மதா,  கதவைப் பூட்டி விடலாமா? என்று கேட்டார்.
"அங்கிள்..சிண்டெரெல்லா பீரோ மேல் ஏறி உட்கார்ந்து இருக்கிறது. ப்ளீஸ்.. அதைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்..." என்றாள்.

"வெங்கு.. நீ போய் பூனையைப் பிடித்துக் கொண்டு, வீட்டைப் பூட்டி விட்டு வா.. காயாம்பூ வந்து விட்டால், அப்படியே நம் வீட்டில் உட்கார வைத்து 'டிலே' கெய்கிறேன்." என்று கூறி விட்டு, உரிமையுடன் நர்மதாவின் கையைப் பிடித்து, " வாம்மா போகாலாம்: என்றார்!
பீரோவின் அருகில் ஸ்டூல் ஒன்றைப் போட்டு வெங்கு அதன் மேல் ஏறினான். நைசாகப் பூனையைப் பிடிக்கப் பார்த்தான். புது ஆளைக் கண்டு அது மிரண்டு வேகமாகத் தாவியது.அங்கு இருந்த கடிகாரத்திற்கு டயம் சரியில்லை. அது கீழே விழுந்து நூறு சுக்கல் ஆகியது. வெங்கு - பூனை சடுகுடு போட்டியில் பூனை சளைக்கவில்லை. ஒரு ட்யூப் லைட் உடைந்தது. அத்துடன், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி உடன் கட்டை ஏறியது.
. "என்ன ஜன்மங்களோ, இத்தனைக் கண்ணாடி சாமான்களையா வைத்துக் கொண்டு இருப்பார்கள்?”

பூனை உர், உர் என்றும் வேறு பல மொழிகளிலும் உறுமியது.வெங்குவின்  மேல் பாய்ந்தது. அவன் ஜகா வாங்க விழுந்தன்.  இந்த கலாட்டாவினால் “மொசல்கள்” பரபர வென்று கூண்டுக்குள்ளேயே பயந்து ஓடிக் கொண்டிருந்தன. 
ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் வெங்கு. ஷாக் அடித்தது. தூரத்தில் காயாம்பூ, அவர் மனைவி, மகன் வஸ்தாது வேணு வந்துகொண்டிருந்தார்கள்!.
” ஐயோ..வேணு நம் முதுகைப் பதம் பார்த்து விடுவான்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கதவைப் பூட்டி கொண்டு பஞ்சுவின் வீட்டிற்குப் போய்விட்டான்.

"சிண்ட்ரெல்லா எங்கே?" என்று வெங்குவிடம் நர்மதா கேட்டாள்.  சாதாரண சமயமாக் இருந்தால் நர்மதா போன்ற அழகி தன்னுடன் பேசி யதை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்திருப்பான். 
மேஜை அவன் கட்டைவிரலைப்   பதம் பார்த்திருந்ததாலும்,காயாம்பூவின்  வீட்டின் அலங்கோல  நிலமை கண்முன்னே இருந்ததாலும் ஒரு நிமிஷம் மௌனமாக  இருந்தான்.
“பூனை தானே.? வரும்..வரும். இந்த பக்கமாகத்தான் ஓடி வந்தது” என்றான். அந்த சமயத்தில் காயாம்பூ “சார் வணக்கம்” என்றார்.
“ அடடே, காயாம்பூ சாரா? ஏன் திரும்பிட்டீங்க? டூர் 15 நாள் இல்லீங்களா?”
 “சரியான போக்கடா பசங்க.. களவாணிப் பயலுங்க..பஸ் பர்மிட் இல்லைன்னு ஆந்திராவிலேதிருப்பி விட்டாங்க. சரி.. சாவி கொடுங்க.. பஞ்சு சார், நம்ம மொசலுங்களுக்கு தினைக்கும் ஆகாரம் போட்டு தண்ணி ஊத்தி கவனிச்சுக்கிட்டீங்களா? ரொம்ப நன்றீங்க”இதென்ன பெரிய வேலை?..இந்தாங்க சாவி” என்று சொல்லி சாவியைப் பஞ்சு கொடுத்தார்.
சாவியை வாங்கிக் கொண்டு அவர் சென்றதும் வெங்கு நடந்தவற்றை பஞ்சுவிடம் விவரிக்க ஆரம்பித்தான். அப்போது ‘மியாவ்’ என்று குரல் கொடுத்துக் கொண்டே  சிண்ட்ரெல்லா ஓடிவந்தது.  நர்மதா அதை எடுத்து அணைத்துக் கொண்டாள்.

அப்போது காயாம்பூ பரபரப்பாக ஓடிவந்தார்.
“ இன்னா சார், வூடு இப்படி கல்லீஜா  கெடக்குது? சாமானுங்க இறைஞ்சு கெடக்குது. உடைஞ்சி கெடக்குது. . ஆமாம். இது இந்த   அம்மாவோட பூனையா?
இது நம்ம வூட்டிலே இருந்திச்சே.. நான்தான் தொரத்திவுட்டேன்.. நம்ம மொசலுங்க கூண்டு மேலே குந்திக்கினு பொறண்டிகிட்டு இருந்தது. என்ன சார்.. பூனையை வுட்டுப்பூட்டீங்க. அல்லா மொசலுங்களும் செத்துப் போயிருக்குதுங்க....”
அவருக்குக் கோபத்திலே மூச்சு இரைத்தது.
“காயாம்பூ...” என்று பஞ்சு ஆரம்பித்தார்.
“ நம்ம வீட்டை  யாரோ உபயோகிச்சு இருக்காங்க,, யாரு. இந்த அம்மாவா? யாரு இவங்க? என்ன சார், வூடா, சத்திரமா? மொசலுங்களைப் பாத்துக்கோங்கன்னு சாவியை கொடுத்தா, இப்படியா பண்ணுவீங்க?”
“காயாம்பூ  சார்.. இவங்க யாரும் இல்லை. நம் வீட்டிலேதான் இருக்காங்க” என்று பஞ்சு மெள்ள ஆரம்பித்தார்.
உடனே  காயாம்பூ “ சார், பொய் சொல்லாதீ ங்க. இதோ பாருங்க, மேஜையில் இருந்துச்சு இது. ந்ம் வீட்டிலே இதெல்லாம் போடறவங்களா” என்று சொல்லி ஒரு சின்னப் பையை பஞசுவின் முன் வீசினார். அது லிப் ஸ்டிக், நெயில் பாலிஷ், சென்ட், மேக்கப்  சாமான்கள் பை!
“ இன்னா நயினா, தகராலு?” என்று கேட்டுக்கொண்டே வேணு வந்தான்.

அதற்குப் பிறகு  ‘எட்டு, வால்மீகி தெரு’வில் நடந்தவற்றை  விவரிக்காமல் விடுவதே நலம்.
மொத்தமாக ஐந்நூறு ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து விட்டு  காயாம்பூவிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார் பஞ்சு. ஆனால் திருமதி பஞ்சுவிடம் இன்னும் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை்!

( கலைமகள் தீபாவளி மலர் 1973-ல் பிரசுரமானது.)

11 comments:

 1. வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 2. இது தான் ‘பஞ்சு தந்திர’ கதையா? இதை நான் தங்களது மிஸ்டர் பஞ்சு கதைகள் தொகுப்பில் படித்திருந்தாலும், மீண்டும் ஒரு முறை ப்ளாகில் பதிவிட்டதற்கு நன்றி. எங்கள் ஞயாபகத் திறனிற்கு ஒரு சோதனையா? பஞ்சு கதை என்று ஒரு லேபல் இருக்கும் பொழுது, பஞ்சு என்று இன்னொரு லேபல் எதற்கு?
  பரத் குமார்

  ReplyDelete
 3. நன்றி..லேபலை மாற்றிவிட்டேன்!

  ReplyDelete
 4. ``அடியே மிஸஸ் பஞ்சு, இரையாதே, இரை அகப்படாத சிங்கம் மாதிரி'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்தால் வம்பு என்று சட்டென்று வாயிலறைக்குச் சென்றார்.

  If a husband were to tell this to his wife now, he would have been her irai. :)

  I should get hold of the other Panju mama stories periappa.

  Vidhya

  ReplyDelete
 5. அந்த காலத்தில் தினமணி கதிரில் படித்தது ..அருமை .......காலம் கடந்தும் களிப்பு சற்றும் குறையாத கதை இது ! அந்த படங்கள் வரைந்தவர் யாரோ

  என்ற ஆவலுடன் ,  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 6. ஆர்.ஆர்.ஆர். அவர்‘களுக்கு’, (படித்துக் களுக்கு என்று சிரித்ததால் கொக்கி போட்டுள்ளேன்!) படம் வரைந்தவர்: பிரபல தெலுங்கு திரை உலக டைரக்டர் பாபு!- கடுகு

  ReplyDelete
 7. ஆர்.ஆர்.ஆர். அவர்களுக்கு,

  ஆமாம்,உங்களீடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். இந்தப் பதிவைப் போட்டு ஒரு மாமாங்கம் ஆகிறது. இவ்வளவு நாள் தாமதமாகப் படித்திருக்கிறீர்கள். எங்கேயாவது காட்டுக்குப் போயிருந்தீர்களா?

  ReplyDelete
 8. ஆரண்யத்திலேயே வசிப்பவரை காட்டுக்குப் போயிருந்தீர்களா என்றால் என்ன அர்த்தம்! - ஜெ.

  ReplyDelete
 9. ஏற்காடு, ஆற்காடு, காட்டுப்பாக்கம். ஏன் முட்டுக்காடு என்று பல இடங்கள் இருக்கின்றனவே!!!:)-கடுகு

  ReplyDelete
 10. நான் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட் ...போன ஏப்ரல் 2012 பதிவை வருகிற மார்ச் மாசம் தான் பார்ப்போமாக்கும்!!

  அதனால இத நான் சீக்கிரமே பார்த்து விட்டேன் என்று நினைக்கிறென் !

  மேலும் புலி வாலை புடிச்ச மாதிரி FACEBOOK ல மாட்டிண்டு இருக்கேன்

  அதனாலும் இருக்கலாம் !!

  அன்புடன்

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete

 11. ஆரண்யத்தில் வசிப்பவர் என்று சொன்னவுடன் பயத்துடன் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்...நல்ல வேளை வால் இல்லை !! மேலும்

  ஆரண்யத்தில் வசிப்பவர் என்றதும் ஆதி வாசி என்று நினைக்காதீர்கள்

  ஆரண்யத்தில் பாதி வாசி தான்...மீதி வாசி ஆபீஸ்ல் !!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :