November 06, 2010

பட்டப்பா - கேரக்டர்


பழைய கோணிப்பை பிஸினஸில் லட்ச லட்சமாகப் பணம் பண்ண முடியும் என்றால் யாரும் சாதாரணமாக நம்பமாட்டார்கள். ஆனால் பட்டப்பா லட்சாதிபதியானதே பழைய கோணி பிஸினஸில்தான். அவர் கோணிகளை ஆயிரம், பத்தாயிரக் கணக்ககில்தான் வாங்குவார்; விற்பார். சில சமயம் லட்சக்கணக்க்கில் வாங்கிப்போட்டு டிமாண்ட் வரும்போது விற்பார். பெரிய பணக்காரராகாவிட்டாலும் பழைய கோணி பட்டப்பா என்று பலர் (அவருக்குப் பின்னால்) குறிப்பிடுவார்கள். ஊரில் பெரிய மனுஷனாக இருக்கவேண்டும் என்ற காம்ப்ளெக்ஸ் உண்டு. அதன் காரணமாக உலகில் உள்ள எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார்-கோணிகள் நீங்கலாக!

வாட்ட சாட்டமான உயரம்; உடல் அமைப்பு. தலையில் முடியிருந்தாலும் உச்சியில் மட்டும் ஒரு வழுக்கை வட்டம். சில்க் ஸ்லாக். மூன்று பட்டனாவது திறந்திருக்கும். கழுத்தில் இரட்டை புலிப்பல் சங்கிலி. அகல சரிகைப் பட்டை வேஷ்டி, கவர்ச்சிகரமான குள்ள குண்டுத் தனம்- பட்டப்பா உடை விஷயத்தில் மட்டும் மாறுதல் செய்து கொண்டே இருப்பார்.
காரணம், அவருக்கு வாழ்க்கையில் அடங்காத ஆசை; சதா நாலுபேர் கவனத்தைக் கவரும்படி இருக்கவேண்டும். இந்த ஆசை காரணமாக தன் உடை விஷயத்தைப் போல் குணம், பேச்சு, கொள்கை எல்லாவற்றையும் கூட மாற்றிக்கொள்வார். இதனால், கல்யாணம்,. கார்த்திகை போன்ற குடும்ப நிகழ்ச்சிகளானாலும் சரி, வேறு பொது நிகழ்ச்சிகளானாலும் சரி, நாலுபேர் கூடும் இடத்தில் பட்டப்பா இருந்தால் அதில் பாதிப் பேருடைய கவனத்தையாவது கவர்ந்துவிடுவார். அதாவது கவனிக்கும்படி செய்துவிடுவார். இதற்காக அவர் அனாவசிய சண்டைகள் போட்டிருக்கிறார். ("எவன்யா சமையல் பண்ணினது. அவியலில் இவ்வளவு தேங்காய் போட்டால் சீக்கீரமாக ஊசிப் போய்விடும் என்று கூடவா தெரியாது? கட்டி உதைக்கணும், இவங்களை'') காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வார். (`டொனேஷன் ஆயிரம் போட்டுக்கோங்கோ. `காந்தியாலேதானே நாம் சோறு தின்றுகொடிருக்கிறோம்.'') பிரம்மாண்டமான கார் வாங்கி இருக்கிறார். ("லட்சம் கொடுத்து கார் வாங்கச்சே சிரமமாக இல்லை. இதன் பெட்ரோல் தாகம் தான் ஆளை அமுக்கறது.'') சில சமயம் காவி வேட்டி, சட்டை போட்டு உலவி இருக்கிறார். ("மண்டே அன்னிக்கு பச்சைத் தண்ணிகூட சாப்பிட மாட்டேன். குருநாதர் சொல்லியிருக்கிறார்.'') விலை உயர்ந்த மூவி காமிரா லைட்களுடன் வந்து, கலியாணங்களில் இவரே சர்வாதிகாரம் பண்ணியிருக்கிறார். ("டேய் சாம்பு, இந்த காமிரா விலை ஒன்றரை லட்சம். உன் கலியாணத்திற்கு உன் மாமனார் கூட மொத்தமாக இவ்வளவு செலவழித்திருக்க மாட்டார்!'') சில சமயம் வேண்டுமென்றே மயக்கமாக விழுந்திருக்கிறார். ("மூணு நாளா டில்லி மினிஸ்டருடன் சுத்தி வந்ததில் நமக்கு தாவு தீந்துடுத்து. கண்ணை மூட முடியலை. பட்டப்பாவைத் தூங்க விட்டால்தானே?'') சபா கச்சேரிகளில் லேட்டாக வந்து பலர் காலை மிதித்து, முன் வரிசையில் போய் உட்கார்ந்து இருக்கிறார்! (("நாலு தடவை சோமு போன் பண்ணிட்டார். டயம் இல்லை என்றால் கேட்டால்தானே!'') அல்லது பாதி கச்சேரியில் எழுந்து போயிருக்கிறார். ("பிளேனுக்கு டைம் ஆயிட்டுது, வரேன்.'')
எப்படியாவது வித்தியாசமாக இருக்கவேண்டும்; அப்போதுதான் பலரின் பார்வையில் விழமுடியும் என்பது அவர் எண்ணம். அவரே ஒரு சமயம் சொல்லியிருக்கிறார்: "ஒரு கலியாணம் என்றால் அங்கே நான் மாப்பிள்ளையாக இருக்கவேண்டும். ஒரு காதுகுத்தல் என்றால் அங்கே நான் குழந்தையாக இருக்க வேண்டும்.!'' புகழ்ச்சி. இகழ்ச்சி இரண்டும் ஒன்றுதான்  அவரைப்பற்றி நாலுபேர் பேசும்படி அவைஇருந்துவிட்டால் போதும்!

3 comments:

  1. பதிவு சின்னதா இருந்தாலும் சூப்பரா இருந்தது... கடுகு மாதிரி...

    நான் தொடர்ந்து உங்களது கேரக்டர் பதிவுகளை படித்து வருகிறேன்... Admiring U...

    ReplyDelete
  2. Excellent... enjoyed this... there are still people like this around us

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!