November 20, 2010

ராஜாமணி -- கேரக்டர்

ராஜாமணிக்குத் தெரியாத விஷயங்கள் எதுவும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவிலோ, கலைக்களஞ்சியங்களிலோ, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையிலோ  இதுவரை அச்சாகவில்லை. உண்மையில் உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் அவருக்கு அவ்வளவு தேர்ச்சியா என்று வியப்படையாதீர்கள்.  ராஜாமணி பேச ஆரம்பித்தால் அப்படித் தான் ஒரு பிரமை உங்களுக்கு உண்டாகும்! இலக்கியம், அரசியல், சினிமா, பக்தி,  ஜோசியம், பொருளாதாரம், கிசுகிசு,  விஞ்ஞானம், மருத்துவம் என்று எந்தத் துறையிலும் அவர் புகுந்து விளையாடுவார்.  
முப்பது வயது. நிறைய படித்துக் கொண்டிருப்பவர்.ஆதலால் சோடாபுட்டி கண்ணாடி! மழமழ வென்று வாரிவிடப்பட்ட கிராப்பு. மழமழ வென்று ஷேவ் செய்யப் பட்ட முகம். நல்ல சிகப்பு. பளிச் சென்ற வெள்ளை பாலிஸ்டர் ஸ்லாக், சரிகை வேஷ்டி, கையில் ஒரு புத்தகம், படித்த இடத்திற்கு அடையாளமாக அதன் நடுவே ஒரு விரலை விட்டுப் பிடித்துக்கொண்டிருக்கும் பாங்கு - இவை  ராஜாமணியை ஓரளவு விவரிக்கும்.
ஜப்பான் கம்பெனி ஒன்றில் பிரதிநிதி. குறைந்த வேலை. நிறைந்த சம்பளம். கல்யாண மார்க்கெட்டில் இருப்பவர்.
அதோ ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையிலிருந்து வெளியே வருகிறார். வாருங்கள் அவரைச் சந்திக்கலாம்.
"ஹலோ  ராஜாமணியா ... .என்ன நிறைய புத்தகம் வாங்கியிருக்கிறீங்க...?''
"நிறைய இல்லை. நாலு புஸ்தகம் தான். ஜென் புத்தீஸம், ஹோரரி அஸ்ட்ராலஜி, தொல்காப்பிய விளக்கம். அப்புறம் திருவரங்கன் உலா நாவல் ..''
"ஜோஸ்யத்தில் எப்போதிலிருந்து இன்ட்ரஸ்ட்? ...''
"சும்மா படிக்க ஆரம்பிச்சேன். பிடித்துக் கொண்டுவிட்டது. வராஹ மிஹிராவின் லைஃப் ஹிஸ்டரி படிச்சு பார்க்கணும் ... ஹும் ... ஜோதிடம் பெரிய ஸயன்ஸ். துரதிர்ஷ்டவசமாக மரத்தடியில் அவனவன் உட்கார்ந்து அஞ்சு ரூபா, பத்து ரூபா வாங்கிண்டு, லாட்டரி பரிசு அடிக்கும், வீடு வாங்குவே, நீ நினைக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குவே, கோர்ட் கேஸ் ஜெயமாகும்னு சொல்லிடறான். அதனால் இந்த சயன்ஸை பேத்தல் என்று ரொம்ப பேர் சொல்லறாங்க ... மேல் நாட்டிலே நம்ம பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டு போய் சிரத்தையுடன் படித்து  ஆராய்ச்சி செய்கிறாங்க. அந்த கலையின் ரியல் வேல்யூ அவங்களுக்குத் தெரியும் ...
"காசியிலிருக்கும் ஒரு இன்ஸ்டிட்யூட் "வேதிக மேதமேடிக்ஸ்' என்ற பழைய கால புஸ்தகத்தை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் போட்டிருக்கிறது. ரொம்ப அபூர்வமான புஸ்தகம்.  எத்தனையோ கணக்குகளை கம்ப்யூட்டர் மாதிரி சுலபமாகப் போடுவதற்கு சூத்திரங்கள் இருக்குது...
"கமலஹாஸன், - ரஜினிகாந்த் இனி ஒண்ணா நடிப்பாங்களா, மாட்டாங்களா என்பது போன்ற விஷயங்களில் ரொம்பப் பேர் அதிக அக்கறை செலுத்தறாங்க. இது தப்பு என்று சொல்லவில்லை. நான் கூட "ஆட்டோகிராஃப்' படத்தை ஆறு தடவை பார்த்தேன். ஆனால் சினிமாவையும் தாண்டியும் உலகம் இருக்கிறது என்று ரொம்ப பேருக்குத் தெரியலை...''
"சினிமா ரொம்பப் பேரை கிரேஸியாக்கிட்டது. சினிமாக்காரர்களைத் தான் குற்றம் சொல்லணும்.''
"அதெப்படி. அவங்க தொழிலை அவங்க செய்றாங்க. உன்னைக் கெட்டுப் போகச் சொல்றாங்களா, என்ன?... அதிருக்கட்டும், பெரிய கம்பெனியிலே திடீர் என்று லேபர் டிரபிள் என்கிறார்களே, என்ன காரணம் தெரியுமா? அதுதான் அவங்க தொழில் ரகசியம். செயற்கையா பற்றாக்குறை ஏற்படுத்துவதற்காக இவங்களே யூனியன் லீடருக்குப் பணம் கொடுத்து வேலை நிறுத்தத்தை ஆர்கனைஸ் பண்றாங்க. இதுக்கு என்ன சொல்றீங்க?.. பெரிய முதலாளிகளை நாம் கிரிடசைஸ் பண்ண மாட்டோம். நமக்குள்ளேயே ஒரு பயம்...
"பாருங்க, ஆட்டோவில் போகிறான். அநியாயமா கேக்கறையேன்னு கத்தறன்... .. அதுவே அவன் டாக்சியில் போகட்டும். மீட்டரில் 37 ரூபாய் ஆகிறது. நாற்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு "வெச்சுக்கோ' என்கிறான்.  இதைத்தான் ஆண்ட்ரூ லெஸ்லி தாம்ஸன் தன் புஸ்தகத்தில் பிரமாதமா அனலைஸ் பண்ணி எழுதியிருக்கிறார்...''
"சரி வரேன்பா. தலைவலியாக இருக்கு.ஆஸ்பரீன் மாத்திரை வாங்கணும்..."
"அதுதான் தப்பு.  ஆஸ்பரினைத் தூக்கிக்குப்பையில் போடு...சுக்கு இருக்கிறதே சுக்கு , அதைப் பாலில் வைத்துத் தேய்த்து.....''
ராஜாமணியுடன் பேசிக்கொண்டிருப்பதே ஒரு அனுபவம்!

3 comments:

  1. பொன்மொழியை லேசாகத் திரித்தால் - கட்டுரைக்குப் பின்னூட்டம் இட நினைத்தேன். அங்கே இந்த கமெண்ட் பாக்ஸ் திறக்கவில்லை. எனவே, இங்கே போடுகிறேன்.

    ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!

    ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!

    :)

    ReplyDelete
  2. ராஜாமணி பற்றி 'கேரக்டர்' சொற்சித்திரம்
    படிப்பது சுவையான, இனிய அனுபவம்தான்!

    ReplyDelete
  3. கடுகு ஸார்... ராஜாமணி மாதிரி ஆசாமிகள் மிகவும் interesting ... ஒரு இரண்ன்டு நிமிடதில் நம் எல்லோரயும் அசரவைத்துவிடுவார் ஸ்ரிமான் ராஜாமணி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!