"அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென் ட்?"
‘ என் மைத்துனன் தொச்சு ஏதோ எவரெஸ்ட் சிகரத்தில் கொடியேற்றியது மாதிரி, பயங்கர உற்சாகத்துடன் தன் அருமை அக்காவைப் பார்த்துக் கேட்டான்.
கமலா, அதற்கு பதில் சொல்வதற்குள், பாலும் தெளிதேனும், பாகும் கலந்த குரலில் தொச்சுவின் அம்மாவும் என் மாமியாருமான பாசத்திலகம், “எப்படி இருக்குன்னு கேட்கணுமாடா?… இந்த அபார்ட்மெண்ட்டை உங்க அத்திம்பேருக்காக, ஓடி ஓடி நீ தேடிக் கண்டுபிடிச்சிக் கொடுத்திருக்கியே. எப்படிடா அதில் குறை இருக்கும்? ரொம்ப நன்னா இருக்குடா… பாத்து பாத்து கட்டியிருக்காண்டா இந்த பில்டர். காற்றும் வெளிச்சமும் அபாரம். இரண்டெட்டில் கடை, கண்ணி, கொஞ்சம் தள்ளிப் போனால், பால் டிப்போ, பஸ் ஸ்டாப். போஸ்ட் ஆபீஸ் இருக்கு. சாதாரணமாக நீ யாருக்கு எது செய்தாலும் உயிரைவிட்டுச் செய்வே... அத்திம்பேருக்குன்னா கேட்கணுமா?” என்று பாராட்டுப் பத்திரம் படித்தார்.
கமலா, அதற்கு பதில் சொல்வதற்குள், பாலும் தெளிதேனும், பாகும் கலந்த குரலில் தொச்சுவின் அம்மாவும் என் மாமியாருமான பாசத்திலகம், “எப்படி இருக்குன்னு கேட்கணுமாடா?… இந்த அபார்ட்மெண்ட்டை உங்க அத்திம்பேருக்காக, ஓடி ஓடி நீ தேடிக் கண்டுபிடிச்சிக் கொடுத்திருக்கியே. எப்படிடா அதில் குறை இருக்கும்? ரொம்ப நன்னா இருக்குடா… பாத்து பாத்து கட்டியிருக்காண்டா இந்த பில்டர். காற்றும் வெளிச்சமும் அபாரம். இரண்டெட்டில் கடை, கண்ணி, கொஞ்சம் தள்ளிப் போனால், பால் டிப்போ, பஸ் ஸ்டாப். போஸ்ட் ஆபீஸ் இருக்கு. சாதாரணமாக நீ யாருக்கு எது செய்தாலும் உயிரைவிட்டுச் செய்வே... அத்திம்பேருக்குன்னா கேட்கணுமா?” என்று பாராட்டுப் பத்திரம் படித்தார்.
இந்த கடைசி வாக்கியத்தைச் சற்று உரக்கச் சொன்னாள் என் மாமியார்- எனக்கு தெளிவாகக், ’கேட்கணும்’ என்று.
மிருதங்கம் விட்டதும், கஞ்சிரக்காரர் துவக்குவது மாதிரி, மாமியார் நிறுத்தியதும், தொச்சுவின் அருமை அக்கா ’தனி’யைத் தொடர்ந்தார். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிதர்சனமாக்கியது அவளது ஆவர்த்தனம்..
நான் உள் அறையில் அட்டைப் பெட்டிகளைத் திறந்து, என்னுடைய துணிகளையெல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தேன்.
காலிங் பெல் அடித்தது. அப்படியே தூக்கிவாரிப் போட்டது. தீயணைப்பு வண்டிதான் வீட்டுக்குள் வந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன். காரணம், அந்த காலிங்பெல்லின் ஓசை சாதரண ஓசையில்லை. தீயணைப்பு வண்டி மணியின் ஓசை கெட்டது என்று சொல்லலாம்!
”என்னப்பா தொச்சு?” என்று அலறி அடித்துக் கொண்டு வந்தேன்
“அத்திம்பேர், பயந்துட்டீங்களா? பெல்லை முதல்லே மாத்திடலாம்… இல்லை அத்திம்பேர். வீட்டை நமக்கு வித்தவரின் மனைவிக்குப் பாவம் காது கேட்காது. அதுக்காக, ஓசை அதிகமாக இருக்கிற மணியை வெச்சிருக்கிறார்.. போகட்டும்.” என்றான், என்னை சமாதானப் படுத்தும் எண்ணத்துடன்
“ தொச்சு, என்னவோ ‘போகட்டும்’னு அசால்ட்டா சொல்றே?.. என் காது டிரம் கிழிஞ்சு போயிடும் போல் இருக்கு.. அப்படியே வயத்தைக் கலக்கிடுச்சு.. இவ்வளவு உரக்க அடிக்கிற மணியையா வெச்சுப்பாங்க.. மனு நீதிச் சோழன் மணியா இது? ஆளையே அடிச்சுடும் போல இருக்கு…..இப்படி பயங்கரமா, நாலு ஜெட் பிளேன் வீட்டுக்குள்ளேயே பறக்கிற மாதிரி சப்தம் போட்டால், அவனவன் நம் மேல பாய்வாங்க., அபார்ட்மெண்ட்ல இருக்கிற குழந்தைகள் பயந்து அழுதாங்கன்னா என்ன ஆகிறது” என்றேன்,
“அதுவும் ராத்திரியிலே, அகால வேளையிலே அடிச்சா என்ன ஆகிறது?” என்று கேட்டார் என் மாமியார். இது ‘ நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு” பாணி தந்திர மந்திரம்!
சாதாரணமாக நான் சொல்லும் ஜோக்குகளைப் புரிந்து கொண்டு சிரிக்க தொச்சுவிற்கு குறைந்தபட்சம் அரைமணி நேரம் தேவைப்படும். அப்படி புரிந்து கொண்டால் , விளக்கெண்ணெய், வேப்பம்பூவும், பாகற்காயும் சேர்த்து அரைத்த துவையல் சாப்பிட்ட மாதிரி முகபாவத்துடன் சிரிப்பான். ஆனால், இந்த ‘அலறும் மணி’ ஜோக்கிற்கு தொச்சு சிரித்த சிரிப்பு, அலாரத்தின் ஓசையைவிட சற்று அதிகமாகத்தான் இருந்தது!
தொச்சு சொல்லித்தான் இந்த அடுக்குமாடி குடி இருப்பை வாங்கினேன். ஆகவே அதில் குற்றம் கண்டுபிடிக்கமாட்டான். அதுமட்டுமல்ல, ‘எல்லாம் பிரமாதம்’ ‘அபாரம்’ ‘சூப்பர்’ என்று நாங்கள் சொல்லவேண்டும். என்றும் எதிர்பார்ப்பான்..
“அத்திம்பேர்.. இந்த வீட்டுக்காரர் ரொம்ப முன் யோசனக்காரர் மட்டுமல்ல; ஒவ்வொன்றையும் யோசிச்சு யோசிச்சு செய்றவர்… இதோ பாருங்க, இங்க ஒரு கொக்கியை கதவருகில் போட்டு வைத்திருக்கிறார். எதுக்குத் தெரியுமா? பால் பாக்கெட் போட சின்ன பிளாஸ்டிக் கூடையை மாட்டறதுக்கு. கதவு கிரில்லில் பையைக் கட்டித் தொங்கவிடலாம்..பார்க்க சகிக்காது. அதுவும் போஸ்டாபீஸில், கோந்து போட்டு ஒட்டினப்புறம் கையைத் துடைச்சிக்க ஒரு துண்டு துணியை வைச்சிருப்பாங்க… அதுமாதிரி இருக்கும்.”
“தொச்சு, வாப்பா, சமையல் அறையை கொஞ்சம் நிதானமாகப் பார்க்கலாம். வீடு வாங்கறதுக்கு முன்னே நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நம்ம வீடு, நாம்ப சமையலறைன்னு பார்க்கறது வேறு அனுபவம் இல்லையா?” என்றேன்.
“அத்திம்பேர்.. மாடுலர் கிச்சனில் ஆயிரம் டிசைன் இருக்கிறது. அதை டிசைன் பண்றதுக்கு தனித் திறமை வேணும் நாட்டு மருந்து கடையிலே டிராயர்கள் வெச்ச கப்போர்டுகள் இருக்குமே.. அதுமாதிரி தான் ரொம்ப பேர் பண்ணிடறாங்க..இது, மாணிக்கம் அண்ட் கோ டிசைன் பண்ணது்?... கடகால் தோண்ட ஆரம்பிக்கிறபோதே மாணிக்கம் அண்ட் கோவில் மாடுலர் கிச்சனுக்கு ‘புக்’ ‘பண்ணிட்டு வரணும்” என்றான்.
“கமலா, வா. சமையலறையைப் பார்க்கலாம்” என்று கூப்பிட்டேன்.
”நான் பாத்துட்டேன்… அலமாரி கைப்பிடியெல்லாம் என்னமா பளபளக்கிறது! மேடையில் போட்டிருக்கிற கிரானைட் ஒண்ணே போதும். என்னமா இருக்கிறது! மூணு வருஷம் குடித்தனம் பண்ண சமையலறை மாதிரியாகவா இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே என்னைப் பின் தொடர்ந்தாள்.
சமையலறைக்குள் போனோம். நாலைந்து அலமாரிகளைத் திறந்து பார்த்தேன்.
மேடையில் ஒரு ஓரத்தில் இருந்த ஒரு சின்ன அலமாரியைத் திறந்தேன். ’திறந்தது என் தப்பு ’என்று நான் உணர்வதற்குள், ஒரு கரப்பான் பூச்சிப் பேரணி தலை தெறிக்க ஓடி வந்தது.
ஒரே வரிசையாக, ராணுவ அணிவகுப்பு மாதிரி போய்த் தொலைக்கக் கூடாதா? எட்டுத் திசையிலும், எனக்காக மேலும் நாலைந்து திசைகளை உருவாக்கிக் கொண்டு ஓடின! காலின் மேல் ஊர்ந்து ஓடின.
“கமலா…பெரிய பட்டாளமே படை எடுத்து வந்துடுத்து…தொச்சு…. வீட்டுக்காரர் ஆசையோட வளர்த்திருக்க வேண்டும்.”
“என்னமோ புலி, கரடி வந்தமாதிரி அங்கலாய்க்கிறீங்களே… பூட்டி இருக்கிற வீட்டிலே கரப்பான்பூச்சி இருக்கத்தான் இருக்கும்..”
தொடர்ந்து, “ நாலு நாள் பூச்சி மருந்து அடிச்சால் எல்லாம் போய்விடும்…” என்றாள். தம்பிப் பாசம் அவளைப் பேச வைத்தது மட்டுமல்ல; என்னைப் பேசவிடாமலும் பார்த்துக் கொண்டது!
நான் சும்மா இருந்துவிட்டேன். முதன் முதலாக புது வீட்டிற்கு வந்து சுவாமி படத்திற்கு பூஜை, அர்ச்சனை செய்து இருக்கிறோம். அது போதும். எனக்கு அர்ச்சனை பண்ணுவதில் கமலா குறை வைக்கமாட்டாள். முதல் நாள் மட்டும் இல்லாவிட்டால் என்ன குறைந்துவிடப் போகிறது.!
மறுபடியும் காலிங்பெல், தீ அணைப்பு வண்டி மாதிரி அலறியது. அறையே லேசாக ஆடியது போல் தோன்றியது. (பின்னால்தான் தெரிந்தது., அது இந்த காலிங்பெல் ஜப்பான் தயாரிப்பு என்று.. ஒருவிதமாக மாறி மாறி ஒலிக்குமாம். எத்தனை விதமாக ஒலித்தாலும் அது பரங்கிமலை ’குவாரி ஓசையை’ ‘தம்பூர் ஸ்வரமாகத்’தான் வைத்துக் கொண்டிருந்தது. இந்த காலிங்பெல் ஒசை தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பும்; விழித்துக் கொண்டிருப்பவர்களை ‘இடி’ போல் தாக்கும்.
ஒரு காலிங்பெல்லே இவ்வளவு ‘தனி’த்தன்மை’யுடன் இருக்கும்போது, அவர்கள் பாதி விலைக்குத் தந்த வாஷிங்மெஷின் என்ன ‘வெளுத்து ’வாங்கப் போகிறதோ’ என்று மனது பயத்தால் அடித்துக் கொண்டது.)
காலிங்பெல்லை அடித்தது யார் என்று பார்க்க, வாயிற்கதவை திறந்தேன். ஒரு இளைஞன் ”கமலா அம்மா இருக்காங்களா?” என்று கேட்டான். அவன் கையில் ஒரு துண்டு காகிதத்தை வைத்துக் கொண்டு இருந்தான்.
“இருக்காங்க... நீ யாருப்பா? என்ன சமாசாரம்” என்று கேட்டேன்.
”நியூஸ் பேப்பர் கடையிலிருந்து வர்றேன்…. ஆறு மாசமாச்சு. பணம் கொடுக்கலை. என்னமோ பிஸினசில் நஷ்டம்னு சொன்னீங்க…. பொறுத்துக்கிட்டு பேப்பர் போட்டுக் கொண்டிருந்தோம். நாங்க பணம் கட்டாட்ட எங்க கடையை இழுத்து மூடிடுவான் ஏஜண்ட்.. அவர் மேலே மூணு கொலை கேஸ் இருக்கு.. சரி..சரி. பனத்தை கொடுங்க” என்றான் பையன். (’என் மேலே ஒரு கொலை கேஸ் இருக்கு’ என்று அவன் சொல்லியிருந்தால் அதை நான் நம்பி இருப்பேன்..
”இருப்பா…இருப்பா.. பேசிக்கிட்டே இருக்கியே. நாங்க பேப்பர் எதுவும் உன் கிட்டே வாங்கலியே..”
“இத பாருங்க.. இந்த பில்லில் உங்க டோர் நம்பர் இருக்கு.. கமலா அம்மான்னு பேர் இருக்கு… நீங்க சும்மா இருங்க. கமலா அம்மாவைக் கூப்பிடுங்க” என்றான்.
அப்போது கமலா அங்கு வந்தாள். அவன் பில்லை கமலாவிடம் கொடுத்தான்.
“அதைப் பார்த்துவிட்டு ”ஏம்பா… நாங்க இந்த ஃபிளாட்டிற்கு இன்னிக்குத்தான் குடி வந்திருக்கிறோம். பேப்பர் யாருக்குப் போட்டியோ அவங்களைக் கேளு..”
”கமலா அம்மா நீங்க தானே. அதுதான் எனக்கு வேணும்..”
“தம்பி…ஊருல நூறு கமலா இருக்காங்க..எந்தக் கமலா உங்கிட்ட பேப்பர் வாங்கினாங்களோ அவங்களை நீ கேளு…”
கமலாவின் குரலில் இருந்த கண்டிப்பு அவனைப் பெட்டிப் பாம்பாக அடக்கிவிட்டது.
“சரிம்மா… அந்த கமலா அம்மா எங்கே போய்ட்டாங்க? எந்த டில்லிக்குப் போய் இருந்தாலும், போய் வசூல் பண்ணிட்டு வரேன்” என்றான்.
“அடப்பாவமே.. அது எப்படி நீ சரியாகச் சொன்னே? டில்லிக்குத்தான் போயிருக்காங்க. அட்ரஸ் தெரியாது‘ என்றேன்.
காற்று போன பலூன் மாதிரி, தளர்ந்து போன முகத்துடன் “சரிம்மா’ இப்படி ஏமாத்திட்டுப் போனா நல்லா இருப்பாங்களா?” என்று கேட்டபடியே அவன் கிளம்பி போனான்.
“கமலா… எப்படி வரவேற்புப் பத்திரம் படிக்காத குறையாகப் பேசி விட்டுப் போகிறான், பாத்தியா?..” என்றேன்.
தொடர்ந்து நான், ”கமலா… , இதுக்கு ஒரு வழி இருக்கு. உன் பெயரை மாத்திக்கோ.. உங்க வீட்டிலே உன்னை ‘பட்டக்கா’ என்று தான் கூப்பிடுவார்கள். இனிமேல் அப்படியே கூப்பிடுறேன்.,, கமலா என்று யாராவது வந்து கேட்டால், கமலா என்று யாரும் இங்க இல்லைப்பா’ என்று சொல்லி விடலாம்” என்றேன்.
“யாரோ யாருக்கோ கடன் வெச்சுட்டுப் போனதற்காக என் பெயரை மாத்திக்கணுமா?” யார் வந்தாலும் நான் சமாளிக்கிறேன். நீங்க கவலையை விடுங்க.’ என்று கமலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒருவர் படியேறி வந்து ‘ஹலோ’ என்றார் என்னைப் பார்த்து.
பதிலுக்கு நான் ஹலோ’ என்று சொல்வதற்குள் அவர் கையை நீட்டி “ஐ யாம் நம்பியார். கீழ் ஃப்ளாட்டில் வசிக்கிறேன். வீடு செட்டில் ஆகிவிட்டதா? .. ஒண்ணுமில்லை. இரண்டு மூணு விஷயம் சொல்லணும். கீழே உங்க ஸ்கூட்டரை விட்டிருக்கீங்க.. அது என் மோட்டார் சைக்கிள் விடற இடம்.. அதனால…”
“ நோ பிராப்ளம்.. இனிமேல் நான் வேற இடத்துல விட்டுடறேன்.
’ நோ பிராப்ளம்’ என்று சொன்னேனே தவிர, ஸ்கூட்டரை வைக்க இடம் கிடைக்காமல் காலனியைச் சுற்றிச் சுற்றி வந்ததும், பட்டப் பாடும் தனிக் கதை. பின்னால் விவரிக்கிறேன்!
’ நோ பிராப்ளம்’ என்று சொன்னேனே தவிர, ஸ்கூட்டரை வைக்க இடம் கிடைக்காமல் காலனியைச் சுற்றிச் சுற்றி வந்ததும், பட்டப் பாடும் தனிக் கதை. பின்னால் விவரிக்கிறேன்!
(தொடரும்)
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
செம ரகளை. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறார்கள். கதை முடியும்போது, எல்லாப் பிரச்சனைகளும் தூசு என்று சொல்கிற கமலா அவர்கள், கடைசியில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் கணவரை குறை சொல்லுவதுபோல்தான் முடியும். "என்னவோ போகட்டும்...." என்று தொடர்கிற வசனங்கள் கிரேசி மோகன் எழுதுவதுபோல் இருக்கிறது (அவருக்கு நீங்கள் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கக்கூடும்)
ReplyDeleteஆஹா மீண்டும் கமலா, தொச்சு! அமர்க்களமான ஆரம்பம். தொடர்கிறேன்.
ReplyDeleteஅமர்க்களமான ஆரம்பம்! இத்தனை நாட்கள் எங்கே ஒளிஞ்சுண்டு இருந்தாங்க? இது கிட்டத்தட்ட மூணு வருஷம் முன்னாடி நாங்க இந்தக் குடியிருப்பிலே இந்த ஃப்ளாட்டை வாங்கிட்டுக் குடி வந்த அனுபவத்தை ஒட்டி இருக்கே! கிட்டே இருந்து பார்த்தாப்போல் தெரியுது! :) அப்புறமா இன்னொரு விஷயம் இன்னிக்கும் எங்களுக்கு வர வேண்டிய தபால் எல்லாம் பழைய விலாசத்துக்கே போயிட்டு இருக்கு! நாங்க மூணு வருஷத்திலே முப்பது முறை விலாசம் மாறியாச்சுனு தெரியப் படுத்தியும்! அதே போல் இங்கே இருந்த வீட்டுக்காரரோட கூரியர் தபால்களை எல்லாம் நாங்க தான் வாங்கி வைச்சுக்கறோம். வேணும்னோ, தற்செயலாவோ முந்தி இருந்த வீட்டுக்காரர் மனைவி பெயரும் கீதா! நானும் கீதா! ஹிஹிஹி! அந்த கீதாவுக்கு வரதை எல்லாம் தைரியமா நான் தான் வாங்கிட்டு இருக்கேன். :)))))) உங்க கதையிலே அந்தக் கமலா தில்லி போயிட்டாங்கன்னா இங்கே அந்த கீதா மும்பை!
ReplyDeleteஎளிமையான நடையில் படிக்க மிக அருமையாக இருக்கிறது
ReplyDeleteஇன்னொண்ணு... ஓவியர் நடனம் எப்படி அருமையா வரைந்திருக்கிறார். வீட்டின் சூழல், தொச்சு, கமலா - நாம எப்படி கற்பனை செய்வோமோ அதுபோல், கமலாவின் அப்பாவிக் கணவர் - நல்ல திறமையான ஓவியர். அவரைப் பாராட்டுகிறேன்.
ReplyDeleteஅடப்பாவமே! ‘போஸ்’ கொடுத்த என்னை விட்டு விட்டு, என்னைப் பார்த்து வரைந்த அவருக்குப் பாராட்டு கொடுத்து இருக்கிறீர்கள்!:)
ReplyDeleteபோஸ் நீங்க கொடுத்தாலும் (:-) ), அந்த நடுக்கத்தையும், அடுத்து என்ன குண்டு போடப்போறான் இந்த தொச்சு என்ற எண்ணத்தையும், 'நினைத்ததை தொச்சுவிடம் தைரியமாகச் சொல்லவிடாமல் பக்கத்திலேயே காவலுக்கும் சப்போர்ட்டுக்கும் இருக்கும் மனைவி கமலா, அடுத்த அறையில் கையில் வேலையோடு இருந்தாலும் காதை ஹாலுக்கு அனுப்பியிருக்கும் மாமியார்... எல்லாவற்றையும் நடனம் அவர்கள் கொண்டுவந்திருக்கிறாரே.... செல்ஃபி எடுத்தாலும் வராத உணர்வுகள் அல்லவா?
Delete