November 28, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் - பாகம்-2


    நம்பியார் “அடுத்து ஒரு சின்ன விஷயம்.. உங்கள் வீட்டு பால்கனியில் துணியை உலரப் போடும்போது நீளமான  துணியைப் போடாதீங்க..”
     “என்ன அப்படி ஏதாவது வாஸ்து சாஸ்திரம் இருக்கிறதா?.. .புரியலையே…”
     “ஒண்ணுமில்லை, சார். நீளமானத் துணியைப் போட்டால், அதன் நிழல் எங்கள் பால்கனியில் விழுகிறது. எங்கள் துணி உலராது… இதுக்கு முன்னே இருந்த முத்துராமனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட கைகலப்பே  ஏற்படற மாதிரி ஆகிவிட்டது… ஆனால் அந்த ஆளு மகா மோசம்… வேண்டுமென்றே ஜமக்காளம்,, பெட்ஷீட்  என்று, ஈரம் சொட்ட சொட்ட உலர்த்துவான்…. நான் என்ன லேசுப்பட்டவனா என்ன? அப்படியே இழுத்து, கீழே ஓடற சாக்கடையில் போட்டுவிடுவேன்… நான் நல்லவனுக்கு நல்லவன் 
வில்லனுக்கு  வில்லன்” என்றார்.
 ”நல்லவனாக இருக்கும்போது ‘நம்பியார்’ என்ற உங்கள் பெயரை ‘எம்ஜியார்’ என்று மாற்றிக் கொண்டு விடுவீர்களா?” என்று கேட்டு நானே ‘ஓ’ என்று சிரித்தேன்.

     நம்பியார், ஒரு மில்லி செகண்ட் சிரித்துவிட்டு, “நம்ப மாட்டீர்கள்.. உங்கள் வீட்டின் முன்னாள் சொந்தக்காரரின் மைத்துனன் பெயர் ராமச்சந்திரன். சரியான உதவாக்கரை. தினமும் அவனோட சண்டைதான்; நான் வில்லனாக இருக்கலாம்; அவன் வில்லனுக்கு வில்லன்.… வர்றேன் சார்… ஸ்கூட்டரை இப்பவே எடுத்துடுங்கோ, என்று சொல்லிவிட்டுப் போனார்.
     “என்ன தொச்சு…கேட்டியா, நம்பியார் சொன்னதை?” என்று லேசான கேலிக் குரலில் கேட்டேன்…
      நான் எதற்கு ’ரூட்’ போடுகிறேன் என்று கமலா (கற்பூர நாயகி!) ஊகித்துக் கொண்டே, “ஏதாவது ஆரம்பிக்காதீங்க. வாய் செத்தவன், தொச்சு… நீங்க எவ்வளவு முட்டினாலும் சரி, தேள் மாதிரி கொட்டினாலும் சரி, அத்திம்பேர் என்று வந்து வேலை செய்வான்…..சரி.. சரி. போய் ஸ்கூட்டரை எடுத்து வெச்சுட்டு வாங்க”என்றாள்.
     கீழே போனேன். வாட்ச்மேனைத் தேடினேன். காணவில்லை. அப்போது ஒரு வேலைக்காரி வாசலைப் பெருக்க வந்தாள்.
     “ஏம்மா இங்கே ஸ்கூட்டரை நிறுத்தறதுக்கு இடம் எங்கே இருக்குன்னு தெரியுமா?
     “இடம் இருந்தாதானே சொல்றதுக்கு. இங்கே நிறுத்தாதே, அங்கே நிறுத்தாதே என்று தெனமும் ஒரு சண்டை நடக்குது… புதுசா வந்திருக்கியா?.. இந்த ஏரியாவில் ஒரு அங்குல இடம் கூட இல்லை. எல்லாரும் ’பட்டா’ போட்டுக்கிட்டாங்க அவங்க ‘பட்டா’ போட்டுக்கிட்ட இடத்திலே செருப்பை விட்டாக்கூட ’பட்டா’ கத்தி எடுக்காத குறையாகச் சண்டைக்கு வந்துடுவாங்க… ஒண்ணு செய்யுங்க.. இப்படியே போய், காம்பவுண்ட் மூலையிலே நாலு குப்பைத் தொட்டி வெச்சிருக்கிற இடத்துல ஒரு பக்கமாக விட்டுடுங்க.. அங்கே யாரும் சொந்தம் கொண்டாட மாட்டாங்க.” என்றாள்.

     “நல்லா இரும்மா” என்று சொல்லியபடியே, ஸ்கூட்டரை ஸ்டாண்டிலிருந்து எடுத்து தள்ளிக் கொண்டுப் போனேன்.  குப்பைத் தொட்டி இருந்த இடத்தைக் என் கண்ணால் கண்டுபிடிப்பதற்குள், என் மூக்கு கண்டுபிடித்துவிட்டது. கூவம் தான் அபார்ட்மெண்டிற்கு வந்துவிட்டதோ, என்று  எண்ணும்படி தூக்கி அடித்தது துர்நாற்றம்.
     மூச்சு அடக்கிக் கொண்டு, ஸ்கூட்டரை அந்த இடத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து, மூச்சு பிளஸ் பெருமூச்சு விட்டேன்.
  ‘கமலா, மாலை நாலுமணி வரை லேசாகத் தூங்குகிறேன்” என்று சொல்லிவிட்டு, பாயை விரித்துப் படுத்தேன். திடீரென்று சம்மட்டியால் அடிப்பது போல் ஓசைக் கேட்டது.
     கமலா… என்ன அவல் இடிக்கிறாயா?” என்று கேட்டேன்.
     “அவலுமில்லை,.. ஒரு மண்ணுமில்லை. மேல் வீட்டில்தான் என்னமோ கல்குவாரி வெச்சிருக்காங்க போலிருக்கிறது… இல்லை… இல்லை.. டான்ஸ் கிளாஸ் போல இருக்குது. தட்டுக்கோல் ஓசைதான்…போ… விடிஞ்சது. மேல் வீட்டுப் பெண் கத்துகிறாளா? இல்லை, மேல் வீட்டில் நாட்டிய ஸ்கூல் நடக்குதா, தெரியலை. என்னவோ… வீடு வாங்கும் போது வீட்டை மட்டும் பார்த்தால் போதாது. அக்கம்பக்கம் யார், எப்படிப்பட்டவர்கள் என்று விசாரிக்க வேண்டும்.’ என்றாள்.
     “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். ‘தொச்சு சிபாரிசு பண்ணான்.. கண்ணை மூடி வாங்கிடுங்கோ’ என்று சொன்னியே தவிர, காதைப் பொத்திக்கொண்டு வாங்கணும்னு சொல்லலையே, ………”. என்று நான் சொல்லி முடிக்கவில்லை,’மார்ஃபிங்’ பண்ணாமலேயே கமலா,  டிவி சீரியல் மாமியாரா மாறி  “ஆரம்பிச்சுட்டீங்களா? தொச்சுவை தப்பு சொல்லாமல் நீங்க இருக்கமாட்டீங்க! என்னைப் பற்றி தப்பு சொல்லாமல் உங்க அம்மா இருக்கமாட்டா. இந்த காலனியில் 72  வீடு இருக்கு… எல்லா வீட்டிலேயும் யாரு இருக்காங்க, எத்தனை பேர் டான்ஸ் கத்துக்கிறாங்க என்ற விவரமெல்லாம் விசாரிக்காமல் வீடு வாங்கச் சொல்லிட்டான். நாளைக்கு அடுத்த ஃபிளாட்காரர் ராத்திரியில் அடுக்குத் தும்மல் போட்டாளோ; பாலசந்தர் படத்தில் வந்த இருமல் தாத்தா மாதிரி இங்கேயும் ஒருத்தர் இருந்துவிட்டாலோ போச்சு, என்னைக் குத்திக் காட்டுவீங்க. அவன்கிட்ட அடிச்சு அடிச்சு சொன்னேன். ’நீ ஏண்டா, அத்திம்பேர், அத்திம்பேர்னு அலைஞ்சு, ஃபிளாட் தேடிக் கொடுக்கறே… தாங்க்ஸ் கூட வேண்டாம்.. உன்னைத் தேள், வண்டு  கொட்டற மாதிரி கொட்டாமல் அவர் இருக்கலாம்னு”
     “அக்கா.. நீ சும்மா இரு. அத்திம்பேர் என்னைத் தானே சொன்னார்.. நானே சும்மா இருக்கிறேன். நீ எதுக்கு சண்டைப் போடறே.. அத்திம்பேர் நீங்க என்னை என்ன சொன்னாலும் நான் தப்பாக நினைக்க மாட்டேன். உங்க மனது எனக்கு நல்லா தெரியும்.” என்றான் தொச்சு. 
தொச்சு தீர்மானமாக சொன்னதால், கமலாவும் கப்சிப் ஆகிவிட்டாள்.!
     “அக்கா மணி மூணு ஆச்சு.. அத்திம்பேருக்கு ‘ஜம்முனு ஒரு கப் காபி போட்டுக்கொடு.. எனக்கு சர்க்கரைப் போடாதே,’ என்று சொல்லி தனக்கும் ஒரு கப் காபிக்கு அச்சாரம் போட்டு வைத்தான்.
     கமலா சமையலறைக்குள் சென்றாள். அங்கிருந்து ‘குரல்’ (வல்லின ‘ற’தான் !) கொடுத்தாள்; “உங்களைத்தானே.. காபிஃபில்டர் எந்த பெட்டியில் வச்சேன்னு மறந்துடுத்து.. உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள். “எல்லா பெட்டியையும் நானும் தொச்சுவும் பிரிக்கப் போகிறோம். தானாக காபிஃபில்டர் வெளியே வரும்.. தொச்சு, என்ன செய்யலாமா?” என்று கேட்டேன்.
     “ஆமாம் அத்திம்பேர்… எல்லா சாமானையும் எடுத்து, அடுக்கி வைக்கா விட்டால் கூடப் பரவாயில்லை. கூடத்தில், பரப்பி வைத்தால், சட்டென்று அகப்படும். அக்கா தன் இஷ்டப்படி எடுத்து அலமாரி, கப்போர்டு, கிச்சன் டிராயர், என்று அதை எல்லாம் வெச்சுக்கலாம்” என்றான். பெட்டிகளைப் பிரித்தோம். பல பாத்திரங்கள், பொட்டலங்கள், தட்டுமுட்டு பொருட்கள் எல்லாம் வெளி வந்தன. பல சாமான்கள் கிட்டதட்ட 20 வருஷங்களாக கண்ணில் படாதவை, அந்தக் குவியலில் இருந்தன;  கரி அடுப்பு, உறி, உலக்கை என, போன நூற்றாண்டு பொருட்கள் - மியூசியத்தில் வைக்க வேண்டியவை - இருந்தன.
     “கமலா… இதெல்லாம் எப்போதோ கழித்துவிட்டாய் என்று நினைத்தேன். தூக்கி எறிய வேண்டியதுதானே.” என்று  நான் கேட்டேன்.
    ” நானா எறிய மாட்டேன் என்கிறேன். உங்க அம்மா கொடுத்தது. ”ஆகி வந்த உலக்கை, பத்திரமாக வெச்சுக்கோ’” என்று சொல்லிக் கொடுத்தாள்.  
     “அப்படியா அம்மா சொன்னாள். இதுவரைக்கும் நீ என் கிட்ட சொல்லவே இல்லையே”
     “சொல்லி இருப்பேன். ‘எங்க அம்மா மேலே ஏதாவது குற்றம் சொல்றது உனக்கு ரசகுல்லா சாப்பிடறமாதிரி' என்று நீங்க சொல்வீங்க……”
     “சரி கமலா ஆரம்பிச்சுடாதே அடுத்த ஆவர்த்தனத்தை…. உலக்கையை பாங்க் லாக்கரில் வேண்டுமென்றால் வைத்துக்கொள்.” என்றேன்.
     “அத்திம்பேரே… நீங்க ஏதாவது சொல்லி, வீணாக ஒரு விவாதத்தை ஆரம்பிக்காதீங்க” என்றான் தொச்சு.
     “இல்லை…. தொச்சு” என்று சொல்லி மேலும் சில பெட்டிகளைப் பிரித்தோம். காபி ஃபில்டர் கிடைத்தது.
      கமலா சூடான காபி போட்டுக்கொண்டு வந்தாள். எல்லா திசையிலும் சமாதானக் கொடி ஏற்றப்பட்டது!                                                                                                                                                                                                        (தொடரும்.)
           

6 comments:

  1. இங்கேயும் ஒரு தொச்சு உண்டு! ஹிஹிஹி, வேறே யாரும் இல்லை! என் தம்பி தான். ஆனால் என் கிட்டேத் தான் வாங்கிக் கட்டிப்பான்! :) அத்திம்பேருக்கும் அவனுக்கும் பயங்கரமான மனப் பொருத்தம்! அதோடு இங்கே சமையலறை சாமானெல்லாம் நானே எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் நானே பிரிச்சு வைச்சுப்பேன்! ஆகவே புதை பொருள் ஆராய்ச்சி எல்லாம் நம்ம ரங்க்ஸ் கிட்டேத் தான் செய்ய முடியும்! :)))))

    ReplyDelete
  2. கதை சம்பவங்கள் இப்போதும் ரசிக்கும்படி இருக்குன்னா அதற்குக் காரணம் இழையோடும் நகைச்சுவை இப்போவும் ரெலெவன்டாக இருப்பதுதான்.

    இந்த மாதிரி தொச்சு கதைகளை உங்கள் மனைவியாரும் உங்கள் அம்மாவும் படித்திருக்கிறார்களா? அவர்கள் இதை எப்படி ரசித்தார்கள்?

    ReplyDelete
  3. Geetha Sambasivam அவர்களுக்கு, பின்னூட்டத்திற்கு நன்றி, அத்திம்பேரை treat பண்ணுவது மாதிரி தம்பியையும் treat பண்ணுகிறீர்களாக்கும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு கூடாது என்கிற உங்கள் கொள்கைப் பாராட்டத் தக்கது!!:) அத்திம்பேரும் ஒரு மச்சினர் என்பதால் உங்கள் தம்பியின் WAVE LENGTH- உடன் ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  4. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு, பின்னூட்டத்திற்கு நன்றி. கதையை “கமலா CENSOR BOARD”-ல் ஆயிரம் CUT-டிற்குப் பிறகு OK வாங்கின பிறகுதான் வெளியாகிறது என்கிர ரகசியம் நமக்குள் இருக்கட்டும்

    ReplyDelete
  5. நன்றி கடுகு சார். பொதுவா நம்ம ஊர்ல, ஒருத்தர் கதை எழுதினா, அவரோட சொந்த அனுபங்கள்தான் கதையா வருதுன்னு நினைப்பாங்க (சினிமா ஹீரோக்கள் படத்துல பண்ணறதை, நிஜமாவே அவங்களுக்கு அத்தனை ability இருக்குன்னு நம்பறமாதிரி). அப்போ உங்க வீட்டுக்கு வரவங்க, அந்தமாதிரி ஏதேனும் சொல்லி (சார்... நீங்க கதைல எழுதற கமலா இவங்கதானே, உங்க மச்சினன் எங்க சார் என்றெல்லாம்) வம்பு வளர்த்திருக்கிறார்களா?

    ReplyDelete
  6. <<< அந்தமாதிரி ஏதேனும் சொல்லி (சார்... நீங்க கதைல எழுதற கமலா இவங்கதானே, உங்க மச்சினன் எங்க சார் என்றெல்லாம்) வம்பு வளர்த்திருக்கிறார்களா?>>>
    ஒரு தனிப் பதிவாகப் போடும் அளவு விஷயம் இருக்கிறது. பின்னால் பார்க்கலாம்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!