April 27, 2015

ஸ்டார் டிவி. ஒழிக


என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. "மாப்பிள்ளை. இந்தாங்கோ கொஞ்சமா ஹார்லிக்ஸ் கலந்துண்டு வந்திருக்கேன் . மூளையைக் கசக்கிக்கொண்டு எழுதறதுக்குச் சக்தி வேண்டாமா?' என்று சொல்லி என் மாமியார் ஒரு டம்ளர் ஹார்லிக்ஸை என் முன் வைத்தாள்.
இதுவரை  என்னைப் பார்த்து நேரடியாகப் பேசி அறியாத (ஏன் ஏசியும் அறியாத, அதாவது நேரடியாக ஏசி அறியாத!) என் அருமை மாமியார்,. 1. மாப்பிள்ளை என்று கூப்பிட்டார், 2. ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார், 3. என்னை எழுத்தாளன் என்று அங்கீகரித்தார்.!! 

எத்தனை அதிசயங்களைப் படைத்தாய், இறைவா! இப்படி அதிசயங்களால் திக்குமுக்காடிப் போய் விட்டதால் தொச்சுவும் அவன் நால்வகைப் படைகளும் என் வீட்டுக்கு வந்து முகாமிட்டு இட்லி, தோசை சம்ஹாரம் செய்து கொண்டிருப்பதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை!
அந்த சமயம் என் மூளைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. என் மாமியார் மாறியதன் மர்மம் விளங்கியது. எல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொச்சு வந்து விட்டுப் போனதிலிருந்து ஏற்பட்ட மாற்றம்! இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி என்ன நடந்தது?

என் அருமை மனைவி கமலாவும் அவளுடைய அருமை அம்மாவும், அதாவது என் மாமியாரும் மாவடு வாங்கப் போயிருந்தார்கள். மாவடு வாங்கப் போய் இவர்கள் மாங்காய் பார்டர் போட்ட புடவையை வாங்கி வந்துவிடப் போகிறார்களே (சாதாரணமாக அவள் அப்படிச் செய்வது வழக்கம்!) என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். தனிமையும் கவலையும் சேர்ந்து ரொம்ப போரடிக்கவே டிவியைப் போட்டேன். இதைவிட டி.வி. அதிகமாக போர் அடிக்காது என்ற அல்ப ஆசையுடன்!
அது கேட்டை, மூட்டை, செவ்வாயாக இருக்க வேண்டுமா? அன்று  டி.வி. நாடகம்! எல்லாரும் குரூப் போட்டோவிற்கு நிற்பது போல் நின்றுகொண்டு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் காமிராவைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த சமயம் வாயில் மணி அடித்தது. கமலா என்ன வாங்கிக்கொண்டு வந்திருக்கப்போகிறாளோ என்று பயந்துகொண்டே கதவைத் திறந்தேன். என் மைத்துனன் தொச்சுவும் வேறு ஒரு ஆசாமியும் நின்று கொண்டிருந்தார்கள்.
"ஹலோ அத்திம்பேர்...எப்படி இருக்கீங்க? எழுதிண்டு இருக்கச்ச தொல்லை கொடுக்கிறேனா?'' என்று சொல்லிக் கொண்டே, "வாங்க, ஸார், அத்திம்பேர்... இவரு பூங்காவனம் ஸார், இவருதான் நான் சொன்னேனே, மிஸ்டர் அகஸ்தியன். பிரபல எழுத்தாளர்'' என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.
"உள்ளே வாயேன்பா தொச்சு...வாங்க ஸார்'' என்று இருவரையும் உள்ளேஅழைத்தேன்.
பூங்காவனத்திற்குத் தொச்சுவிடம் காரியம் ஆக வேண்டியிருந்ததோ என்னவோ! அவர் "தொச்சு ஸார்.. சொன்னாலும் ஆயிரத்தில்
ஒரு பேச்சு சொன்னீங்க... ஸாருக்கு எழுதற வேலை நிறைய இருக்கும் அதனால் நாம் சீக்கிரமா கிளம்பிடணும்...'' என்றார்.
நான் உடனே, "என்னப்பா தொச்சு, என்ன சமாச்சாரம்? பூங்காவனம் ஸாருக்கு ஏதாவது ஹெல்ப் வேண்டுமா?'' என்று கேட்டேன்.
"அத்திம்பேர்.. பூங்காவனம் ஸார், சின்னாளம்பட்டி. ஒரு சினிமா எடுக்கலாம்னு வந்திருக்கார். கோடம்பாக்கத்திலதான் இதுக்குன்னு
பல கழுகுங்க இருக்குதுங்களே. அதுங்க  இவரை அமுக்க வந்தததுங்க: எனக்கு ரெட்டியாரைத் தெரியும், செட்டியாரைத் தெரியும்னு சொல்லி....''
"ஆமாங்க, எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு படம் பண்ணணும்னு ரோசனை.. தெகிறியம் இல்லாமல் மசமசன்னு இருந்துட்டேன். இப்பத்தான் யார் யாரோ ஆலான், தோலான் எல்லாம் படம் எடுத்துப் பணத்தை வாரிக்கிடறாங்களே அதனாலே நம்பளும் ஒரு படம் பண்ணலாமேன்னுதான் ஐடியா  !''
அவரிடம் பணம் இருக்கிறது: அதைச் சுத்தமாகத் துடைத்து விட தொச்சு இருக்கிறான்! இதில் எனக்கு என்ன வேலை?
"சினிமா ஃபீல்டில் படம் எடுக்க முடியும்; பணம் எடுக்க முடியாது!'' என்றேன். "பூங்காவனம், இதுதான் எழுத்தாளர். எப்படி வார்த்தை லட்டு லட்டாக விழறது, பாருங்க. "படம் எடுக்கலாம், பணம் எடுக்க முடியாதுன்னு ஒரு திருக்குறள் மாதிரி, ஒரு சிலப்பதிகாரம் மாதிரி சொல்லிவிட்டார் பாருங்க!'' என்று சற்று மிகையான உற்சாகத்துடன் சொன்னான்.
"ஆமாங்க.. ஆமாங்க.. அதனாலதான் நம்ப தொச்சு ஸார் சொன்ன ஐடியா எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனாலதான் நேரே இங்கே வந்திருக்கேன் ,'' என்றார் பூங்காவனம்.
இந்தச் சமயம் கமலாவும் என் மாமியாரும் மாவடுவுடன் வந்தனர். தொச்சுவைப் பார்த்ததும் என் மாமியார், " வாப்பா தொச்சு. வா.. சொல்லிண்டே இருந்தேன். கண்ணிலேயே காணோம் என்று... அங்கச்சி. பசங்க சௌக்கியமா?'' என்று கேட்டாள்.
"அக்கா.. இவரு மிஸ்டர் பூங்காவனம்.. நான் சொல்லலை, என் சிஸ்டர் இவ.. எங்கக்கா, கதை எழுதலையே தவிர, எங்க அத்திம்பேருக்கு நிறைய ஐடியாஸ் கொடுப்பாங்க'' என்றான்..
"தொச்சுவுக்கும் நிறைய ஐடியாஸ் உண்டு. பாவம், உட்கார்ந்து எழுதறதுக்கு டைம் இல்லை... என்று அக்காகாரி பதிலுக்கு அவன் முதுகைச் சொறிய......
தொச்சு, "அக்கா! சூடாக காப்பி கொண்டு வா... இவரு, அத்திம்பேரைக் கதை எழுதவெச்சு ஒரு படம் எடுக்கணும்னு ஆசைப்படறார்... நான் சொன்னேன், அத்திம்பேர் கதை எழுதட்டும். ஆனால் நாம் சினிமா எடுக்க வேண்டாம்னு சொல்லி வேறு ஒரு ஐடியா கொடுத்தேன். சினிமா எடுக்கறது ஆழம் தெரியாமல் காலை விட்டு முழுகற மாதிரி ஆகிடலாம், இல்லையா?''
என்றான். பிறகு என்னைப் பார்த்து... "அத்திம்பேரே, சஸ்பென்ஸை உடைச்சுடறேன். இவர் டிவியில் ஒரு ஸ்பான்ஸர்ட் புரோக்ராம், பதிமூணு வாரங்களுக்கு எடுக்கலாம்னு ஐடியா கொடுத்தேன். அதுல இருக்கற நெளிவு சுளிவு எல்லாம் எனக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கறாதாலே, கொஞ்சம் பணமும் பேரும் பண்ணலாம்னு சொன்னேன்'' என்றான்.
"ஆமாம் ஸார். ஸ்க்ரிப்டை எழுத ஆரம்பியுங்கோ.. முதல்ல ஒரு தொகை அட்வான்ஸ் கொடுத்துட்டு, சின்ன அக்ரி மெண்ட் போட்டுக்கலாம். படம் டி.வி.யிலே போடறப்போ மொத்த பணத்தைக் கொடுத்துடறேன்.. நானும் நாலு பேர்கிட்டே கேட்டேன். `அட, அவரு பெரிய எழுத்தாளராச்சே! எழுத ஒத்துக்கிட்டா உன் அதிர்ஷ்டம்னு சொன்னாங்க' '' என்றார்.
அவர் கேட்ட அந்த நாலு பேர், தொச்சுவின் செட்-அப்பாக இருக்குமோ என்று தோன்றிய சந்தேகத்தைச் சட்டென்று அழித்து விட்டேன்.
"அத்திம்பேர்... நீங்க சொல்ல கூச்சப்படுவீங்கன்னு நானே ஸார் கிட்டே சொல்லிட்டேன். ஒரு எபிஸோடுக்கு அதாவது ஒரு வாரக் கதைக்கு பத்தாயிரம் ரூபாய், ஆக, 13 வாரத்திற்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய். முதல்ல நாலு வாரக் கதையை அப்ரூவலுக்கு அனுப்பணும். அப்புறம் பைலட் எடுக்கணும்....''
"சரிப்பா...இதை ஸ்பான்ஸர் பண்றதுக்கு யாரையாவது பிடிக்கணுமே!''
"அத்திம்பேர் உங்க பெருமை உங்களுக்கே தெரியாது. நானும் ஒரு மாசம் சும்மாவா இருந்தேன்?  ஸாருக்காக எத்தனை இடம் போனேன்; எத்தனை பேரைப் பார்த்தேன்! என் சுயப்பிரதாபம் இருக்கட்டும். டிவி ஸ்டேஷன் கான்டீன் கான்டிராக்டரின் ஃப்ரண்டின் மச்சினனிலிருந்து ஒரு ஆளை விடாமல் பாத்து நிறைய உள் விஷயங்களைத் தெரிஞ்சுண்டேன். என்னவோ, விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று வாய்ப்புளிச்சதோ, மாங்காய் புளிச்சதோ என்று சொல்லிடறமே, இதில எவ்வளவு இருக்குன்னு இறங்கினப்புறம்தான் தெரிஞ்சுது.''
உடனே பூங்காவனம், "ஆனால் நம்ப தொச்சு ஸார், அப்படியே அல்லா விஷயத்தையும் அள்ளிக் கொண்டு வந்துட்டார். இவர் எனக்கு அகப்பட்டது என் போன ஜன்மப் புண்ணியம் தானுங்க,'' என்றார்.
"தொச்சு ஒரு காரியத்தில் இறங்கிட்டான்னா பசி பார்க்க மாட்டான். தூக்கம் பார்க்க மாட்டான்!'' என்றேன். (என்ன இது? என் குரல் என் மாமியார் குரல் மாதிரி இருக்கிறதே!)
"அத்திம்பேர்..கதை, வசனத்தை ஒரு வாரத்தில எழுதிக் கொடுத்துடுங்கோ''
"என்னது ஒரு வாரமா? வசனம் எழுத வேண்டாமா? ஒரு வாரத்திலே ஒண்ணுமே முடியாது'' என்றேன்.
"அத்திம்பேர், நானும் சில கதை ஐடியா வெச்சிருக்கேன். நாளைக்கு வர்றேன், ஸ்டோரி டிஸ்கஷனுக்கு. முதல்ல இதை வாங்கிக்கங்க.. பூங்காவனம் ஸார், இவருக்கு ஒரு சின்ன தொகை அட்வான்ஸ் கொடுங்க,'' என்றான்.
பூங்காவனம் சட்டென்று ஜிப் பையைத் திறந்து ஒரு ஐம்பது ரூபாய் கட்டை எடுத்துக்கொடுத்தார். 5000 ரூபாய்!
"அடடே. இதெல்லாம் எதுக்கு? கதை எழுதப்பாக்கறேன். பணத்துக்கு என்ன அவசரம்'' என்று நான் சொல்லி முடிக்குமுன்பு, சமையலறையிலிருந்து ஒரு கனைப்பு கேட்டது. கமலாதான்! பரிமேலழகர் போன்ற புலவர்களால் நாலு பக்க விளக்கத்தைக் கொடுக்கக் கூடிய அளவிற்கு அர்த்தம் பொதிந்த கனைப்பு அது! எனக்கும் ஓரளவு அர்த்தம் புரிந்தது!
"சரி ஸார். ட்ரை பண்றேன்'' என்றேன். தொச்சுவும் பூங்காவனமும் விடைபெற்றுச் சென்ற பிறகு நான் கதையைப் பற்றி எண்ணத் தொடங்கினேன்: கமலா ரூபாய் கட்டை எண்ணத் துவங்கினாள்!
இந்தச் சம்பவம்தான் என் மாமியாரை, நூறு சதவிகிதம் மாற்றியமைக்கப்பட்ட மாமியாராக செய்ததற்குக் காரணம்!
*                                   *                                                  *
அட்வான்ஸ்  கொடுத்த மறுநாள் காலையில் தொச்சு வந்தான்.
ஐயாயிரம் ரூபாயில் எத்தனை விழுக்காடு கமிஷன் கேட்கப் போகிறானோ, என்று பயந்து கொண்டே, ”என்னப்பா தொச்சு இவ்வளவு காலையிலே?' என்று கேட்டேன்.
“ஒண்ணுமில்லே அத்திம்பேர். கதை ஐடியாவிற்கு என்ன செய்யறதுன்னு தவிப்பீங்கன்னு தெரியும். இந்தாங்க, இந்த புத்தகத்தைப் பாருங்க.... ஒரு வாரத்திற்கு வாடகை ஐந்நூறு ரூபாய். இது புத்தகம் இல்லை அத்திம்பேர், தங்கச் சுரங்கம்,'' என்று சொல்லி ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்துக் கொடுத்தான். உலக டி. வி. க்களில் வந்த டி. வி. ஷோக்களில் வந்த தொகுப்பு என்று இருந்தது அதன் தலைப்பு. கிட்டத்தட்ட ஐயாயிரம் நிகழ்ச்சிகளின் கதையமைப்பு, கதைச்சுருக்கம், சில காட்சிகளின் வசனங்கள் என்று யாரோ ஒரு புண்ணியவான் திரட்டிப் போட்டிருந்தான்.
“தொச்சு, இது தங்கச் சுரங்கம் இல்லை. வைரச் சுரங்கம். இதிலிருந்து எதாவது ஒரு ஐடியாவை தூண்டில் போட்டு எடுத்துக் கொள்ளலாம்.''
தொச்சு கொடுத்த புத்தகத்தில் ஒரு சில ஐடியா, அப்படியே தமிழ்ப்படுத்தக் கூடிய கதை கிடைத்தது. அது 1950 வாக்கில் அமெரிக்க டி.வி.யில் போடப்பட்ட நிகழ்ச்சி. இதைத் தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு காரணங்கள்: கதையையும் நகைச்சுவையையும் அப்படியே தமிழில் இறக்குமதி செய்ய முடியும். பல வருஷத்திற்கு முந்தைய கதை. ஆகவே தைரியமாக சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
 
    தொச்சு கொடுத்த புத்தகத்தை பகல் இரவு என்று பார்க்காமல் படித்து ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு வெறி வந்தவன் போல கதை, வசனத்தை எழுதி முடித்தேன்.
  ஒரு வாரம் கழித்து,   தொச்சுவும் பூங்காவனமும் வந்து கதையை வாங்கிக் கொண்டு போனார்கள்.
    “பூங்காவனம் ஸார்... படிச்சுப் பாருங்க, எப்படி வந்திருக்கிறது என்று'' என்றேன்.
    “அத்திம்பேர்... நீங்க எது எழுதினாலும் பிரமாதமா இருக்கும். பிளாட் எப்படி இருந்தாலும் அப்ரூவல் கிடைச்சிடும். தொச்சுவா கொக்கா?'' என்றான்.

    ஒரு மாதம் கழித்து தொச்சு வந்தான். கொச கொசவென்று பூப்போட்ட சட்டை, ஜீன்ஸ், ஒரு கிரிக்கெட் குல்லா என்று போட்டுக் கொண்டு!
    “என்னப்பா தொச்சு. ஆளே மாறிப் போய்ட்டியே... உனக்கு என்னாச்சு? நம்ப கதை என்னாச்சு?'' என்று கேட்டேன்.
    “வாடாப்பா தொச்சு... என்னடா இது வேஷம்? சினிமா டைரக்டர் மாதிரி டிரஸ்ஸும் குல்லாவும்'' என்று கேட்டுக் கொண்டே கமலா வந்தாள்.
    “என்ன அக்கா, மாதிரி, மாதிரின்னு சொல்றேþ சினிமா டைரக்டரேதான். அத்திம்பேர் கதைக்கு அப்ரூவல் கெடைச்சுட்டுது. ஷøட்டிங் ஆரம்பிக்கப் போவுது. வர்ற வெள்ளிக்கிழமை பூஜை. டைரக் ஷன் பூங்காவனம்னு பேரு. அவருக்கு என்ன தெரியும்? எல்லாம் நான் தான் பண்ணப் போறேன்!'' என்று தகரக் கூரை மேல் மழை பெய்வது போல் சடசடவென்று கூறினான்.
    “அது சரிடா... உனக்கு டைரக் ஷன் தெரியுமா?'' என்று கமலா கேட்டாள், நான் கேட்குமுன்!
    “புரொடக் ஷன் மானேஜர் புண்ணியக்கோடின்னு இருக்கார். அவர்தான் ஆர்ட்டிஸ்ட் புக் பண்ணி, டெக்னீஷியன் ஏற்பாடு பண்ணி, யுமேடிக் அது இது என்று எல்லாவற்றையும் ஏற்பாடு பண்றார். நாலு நாள் அவரோடு போயிருந்தேன். நாலைஞ்சு ஷூட்டிங்குக்கு. உன்னிப்பா கவனிச்சேன். புரிஞ்சு போச்சு... டைரக் ஷன் பெரிய கம்பசூத்திரம் இல்லைன்னு புரிஞ்சுடுத்து...''
    நம் கதை வதைபடப் போகிறது என்று எனக்குத் தெரிந்தாலும், எப்படியோ படமாகப் போகிறது என்பதில் ஒரு கடுகளவு மகிழ்ச்சி எனக்கு.
    “சரி! வெள்ளிக்கிழமை வந்துடுங்கோ. வண்டி அனுப்பறேன். அக்கா உனக்கும் ஒரு சின்ன ரோல் வெச்சிருக்கேன்'' என்றான்.
    “என்னடா தொச்சு... காலில் வெந்நீர் கொட்டிண்ட மாதிரி பறக்கறே. இரு.. ஒரு வாய் ஹார்லிக்ஸ் தர்றேன். உடம்பு ஒண்ணுமில்லாம கவனிச்சுக்க!'' என்று கமலா சொல்லிக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள்.
    (ஒரு சின்ன குறிப்பு : எப்போது கதையை எழுதிப் பூங்காவனத்திடம் கொடுத்து விட்டேனோ அன்றிலிருந்து எனக்கு ஹார்லிக்ஸ் கொடுப்பதை நிறுத்தி விட்டாள், கமலா!)
   
    படத் துவக்க விழா. பூங்காவனம் இப்பவே தான் ஒரு "ஏ.வி.எம்.' ஆகிவிட்டது போல் குஷியாக இருந்தார். (“ஆமாம்... அவர் மைனர் செயின் போட்டிருந்தாரே, எங்கே போயிற்று இப்போது?'') ஏகப்பட்ட ஆள்கள், படப்பிடிப்பு உபகரணங்கள். வேலை எதுவும் செய்யாமல், சுறுசுறுப்பாக(?) இருந்த பல பேர். சாமி படங்கள். சாம்பிராணி, ஊதுபத்தி, ரோஜா மாலைகள்...!
    “அத்திம்பேர்... இவங்கதான் நம்ப ஸீரியல் ஹீரோயின். இவர்தான் ரைட்டர்'' என்று தொச்சு, பவுடரில் குளித்து, லிப்ஸ்டிக்கில் முழுகி எழுந்திருந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினான்.
    “வணக்கங்க.''
    “வணக்கம் அம்மா. உங்க பேரு என்ன?''
    “மள்ளிகாஸ்ரீ... சொந்த பேரு உஸô... ''                    “டி.வியில்  நடிச்சிருக்கீங்களா?''
    “ஆமாங்க... எப்படித் தெரியும்?''
    “பார்த்த முகமா இருந்தது. அதனால கேட்டேன்'' என்று சரடு விட்டேன். "மள்ளிகா"வின் சுத்தமான தமிழ் உச்சரிப்பினால் கண்டுபிடித்தேன் என்று உண்மையா சொல்ல முடியும்?

    பூஜை தினத்திற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து, தொச்சுவும் பூங்காவனமும் ஒரு கேஸட்டுடன் வந்தார்கள்.
    “சார். முதல் எபிúஸோட் தயார். இது ரஃப் கட்தான். பாருங்க. எங்களுக்கு நல்லா வந்திருக்கிற மாதிரி தோன்றுகிறது. பணத்தைப் பணமா பார்க்காமல் செலவு பண்ணி இருக்கேன்'' என்றார் பூங்காவனம்.
    “அத்திம்பேர் உங்க ஜோக் ஒவ்வொண்ணும் சும்மா தூள்தான்'' என்றான் தொச்சு.
    “கமலா, வா படம் போட்டுப் பார்க்கலாம்'' என்று கூப்பிட்டு விட்டு வி.ஸி.ஆரில் காஸட்டைப் போட்டேன்.
    "குப்புசாமியின் குடும்பம்' எழுதியது "அகஸ்தியன்' என்று திரையில் பார்த்ததும் புல்லரித்தது. சொல்லக் கூடாது. படம் நன்றாகவே வந்திருந்தது. ஜோக்குகள், சம்பவங்கள் எல்லாம் ரசிக்கக் கூடியவையாக இருந்தன. (’கூப்பர்ஸ் ஃபேமிலி’யை எழுதிய, பெயர் தெரியாத அமெரிக்க டி.வி. எழுத்தாளன் வாழ்க!)
    “பிரமாதம்பா... நல்லா படம் பண்ணியிருக்கியே... பூங்காவனம், படம் எனக்குத் திருப்தியா இருக்கு.''
    “தொச்சு... உனக்கு எப்படிடா ஒவ்வொரு வித்தையும் கை வர்றது... இருடா, திருஷ்டி சுத்திப் போடறேன்'' என்று என் மாமியார் உப்பு, மிளகுடன் வந்தாள்!

    தொச்சு வியர்க்க விறுவிறுக்க வந்தான். “அத்திம்பேரே... அத்திம்பேரே'' என்று அலறிக் கொண்டே!
    என்னிடம் பணம் கேட்க ஏதோ ஒரு நாடகம் என்று எண்ணி அவன் பதற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், “கமலா... வெய்யில்லே வந்திருக்கிறான். ஜில்லுனு ஐஸ் வாட்டர் கொடு'' என்றேன்.
    “அத்திம்பேர்... இது ஐஸ் வாட்டரால் தீருகிற எரிச்சல் இல்லை. மோசம் போய்ட்டோம். இப்படி நீங்க பண்ணிட்டீங்களே... எல்லாம் திவால்!'' என்றான்.
    “என்னப்பா, புதிர் போடறே... என்ன ஆச்சு?'' என்று கேட்டேன், என் மேல் எந்த மாதிரி பழியைப் போடப் போகிறானோ என்று பயந்து கொண்டே.
    “அத்திம்பேர் நேத்து ஸ்டார் டி.வி. பார்த்தீங்களா... ஓ, நீங்க இன்னும் கேபிள் டி.வி. போட்டுக்கலையா? மோசம். மோசம். எல்லாம் நாசம்'' என்றான்.
    “ஸ்டார் டி.வி., மோசம், நாசம் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்றே, என்ன ஆச்சு?''
    “இன்னும் என்ன ஆகணும். எல்லாம் நஷ்டம் ஆச்சு... அத்திம்பேர் இதே குப்புசாமியின் குடும்பம் கதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஸ்டார் டி.வி.யிலே போடறான். கூப்பர்ஸ் ஃபேமிலியை எங்கிருந்தோ புதைபொருள் ஆராய்ச்சியிலே கண்டுபிடிச்சுப் போடறான். நம்ப டி.வி. படம்... பப்படம்தான். இப்படி பண்ணிட்டீங்களே அத்திம்பேர்?''
    “நீ தானே புத்தகத்தைக் கொடுத்து எழுதச் சொன்னே?''
    “சும்மா புரட்டுங்க ஐடியா வரும்னேன். இப்படிப் பண்ணுவீங்கன்னு தெரியுமா? பூங்காவனம் கோபத்தில் கொதிச்சுக்கிட்டு இருக்கிறார். நாப்பதாயிரம் செலவு பண்ணினது, அவ்வளவும் நஷ்டம் என்றால் கோபம் யாருக்கு வராது... பாதி நஷ்டத்தையாவது ஈடு செய்யலைன்னா என் தலையை வெட்டிப் போட்டுடுவார்!'' என்றான் தொச்சு.
    தொச்சுவின் தலை வெட்டப்படவில்லை!
    ஸ்டார் டி.வி.யினால் எனக்கு  20,000 ரூபாய் நஷ்டம்!

8 comments:

 1. சார்!
  திரு. நடனம் வரைந்த
  ஓவியம் நல்லாயிருக்கிறது!
  (நடனம்தானே?)

  ReplyDelete
 2. ஓவியம் வரைந்தவர்: சேகர்

  ReplyDelete
 3. அருமை. ...மிகவும்அருமை

  ReplyDelete
 4. I will never get tired of thochu storeis

  ReplyDelete
 5. Thank you very much..
  I will also never get tired of such laudatory comments!!!
  -Kadugu

  ReplyDelete
 6. பல இடங்களில் வாய்விட்டுச் சிரித்தேன்.

  ReplyDelete
 7. தொச்சு ஒரு காரியத்தில் இறங்கிட்டான்னா பசி பார்க்க மாட்டான். தூக்கம் பார்க்க மாட்டான்!'' என்றேன். (என்ன இது? என் குரல் என் மாமியார் குரல் மாதிரி இருக்கிறதே!)

  Aahaa, naan ninaichaen, niingaLE ezuthittEL!

  -R. J.

  ReplyDelete
 8. மள்ளிகாஸ்ரீயின் சொந்த பெயரை ஸ்டார் டிவியில் சொல்ல வில்லையே நீங்களாவது சொல்லுங்களேன்

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!