April 15, 2015

நாலு விஷயம்:.எட்டணா-1, எட்டணா- 2, பெயர் விநோதம்- 1, பெயர் விநோதம்--2

சென்னை:  எட்டணா  விஷயம் -1
இது சுமார் 60 வருஷத்திற்கு முந்தைய கதை. ஐம்பதுகளில்நான் சென்னை  ஜி.பி.ஓ-வில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அங்குள்ள பல டிபார்ட்மெண்டுகளில், வி.பி. கிளெய்ம்ஸ் என்பதும்  ஒன்று. [அது என்னமோ அந்த டிபார்ட்மெண்டே சுமார் பத்து பதினைந்து பெண் ஊழியர்கள் கொண்ட அல்லி ராஜ்யம் தான்  என்பது தொடர்பில்லாத [(சுவாரசியமான!) குட்டித் தகவல்!]
அந்த காலத்தில் ஏராளமான வி.பி.பி லெட்டர்கள், பார்சல்கள். புத்தகப் பாக்கெட்டுகள், நாட்டு மருந்துகள் இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்கா. சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் போகும்.  அங்கு பார்சல்கள் டெலிவரி ஆகும்போது , பார்சலின் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை வசூல் செய்து நமக்கு அனுப்புவார்கள். சில சமயம்  எட்டணா, ஒரு ரூபாய் குறைவாக அனுப்பி இருப்பார்கள். . உடனே  வி.பி. கிளெய்ம்ஸ், ஜி.பி.ஓவிலிருந்து கடிதம் போகும்.  "இன்ன பார்சலுக்கு எட்டணா குறைவாக அனுப்பியிருக்கிறீர்கள். அந்தத் தொகையை அனுப்பவும்” என்று  கார்பன் பேப்பரை வைத்து, மூன்று காபி  எழுதி, அந்த நாட்டிற்கும், நம் ஆடிட் ஆபீசிற்கும் அனுப்பி வைக்கப்படும். பதில் உடனே வராது. நினைவூட்டல் கடிதம் எழுதி அனுப்பப்படும்.

”சிங்கப்பூர் டாலர், ரூபாய் ஆகியவைகளின் மதிப்புகள் ஏற்ற இறக்கத்தின் காரணமாக தொகையில்  வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்கு நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று பதில்  நிதானமாக வரும்! ஆனால் அதற்குள் சில சமயம் ஆடிட் அலுவலகத்திலிருந்து    ஆட்சேபனைக் கடிதம் வரும்,  எட்டணா விஷயம்; வசூலிக்க எட்டு ரூபாய் செலவானது பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள்.
அதுவும் வராத பணத்திற்கு இத்தனை செலவு. (சில வருஷங்களுக்குப் பிறகு. ஐந்து  ரூபாய் வரை வித்தியாசம் இருந்தால் பரவாயில்லை என்று உத்தரவு போட்டுவிட்டார்களாம்!

 அட்லான்டா USA: இருமல் மிட்டாய்:  எட்டணா  விஷயம் -2
பல வருடங்களுக்கு முன்பு அட்லாண்டா நகரில் ஐந்து மாதம் தங்கி இருந்தோம். கோகா கோலா,  CNN  ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவலகம் அங்குதான் உள்ளது. ஒரு நாள், என் மகளுக்கு அறிமுகமான பேராசிரியர் “ என்னிடம் சிம்பொனி நிகழ்ச்சிக்கு இரண்டு டிக்கட்டுகள் இருக்கின்றன. நீங்கள் உபயோகித்துக்கொள்ளுங்கள்: என்று சொல்லி, கொடுத்தார். (டிக்கட் விலை 35 டாலர்!)

என் மகள் “ அம்மாவும் நீங்களும் போய் வாருங்கள். இந்த  நாட்டில்   இசை நிகழ்ச்சிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி அனூப்பினாள்.
அந்த டிக்கட்டுகளில் ஒரு முக்கிய குறிப்பு இருந்தது: ட்ரஸ்  கோட் (  DRESS CODE) கோட், சூட், டை, ஷூவுடன்தான் வரவேண்டும். மேற்படி  ஆடை அலங்காரங்களைப்   (டிக்கட் மாதிரி, அவைகளும் ஓசிதான்!) போட்டுகொண்டு நிகழ்ச்சிக்குப் போனோம்.
அரங்கிற்குள் நுழையும்  வாயிலில் ஒரு உயரமான ஸ்டூலின் மீது அலங்காரமான பெரிய  கிண்ணத்தில்  நிறைய மிட்டாயை வைத்திருந்தார்கள். எனக்கு முன்னே போனவர் இரண்டு, மூன்று மிட்டாய்களை எடுத்துக் கொண்டதைப் பார்த்தேன். நானும் அது மாதிரி இரண்டு மிட்டாய்களை எடுத்துக் கொண்டேன். உள்ளே போய் உட்கார்ந்தோம்.
வந்திருந்தவர்களில் எண்பது பங்கு பேர் 60, 70 வயதானவர்களாக இருந்தார்கள்.
சீட்டில் உட்கார்ந்தவுடன், எல்லாரும் கோவில் பிரசாதம் மாதிரி அதை வாயில்  போட்டுக் கொள்வதைப் பார்த்தேன். நானும் மிட்டாயின் மேல் சுற்றப்பட்டிருந்த காகிதத்தை நீக்கி விட்டு, மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டேன்.
மெந்தால் போன்ற ஜலதோஷ, இருமல் மாத்திரை.  அதுவும் ஸ்ட்ராங் ரகம்! ஏன் இதை கொடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

திரை விலகியது. நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அரங்கில் நிசப்தம். இசை அருவியாகப் பொழிந்தது.  இடையில் 3,4 தடவை  எல்லாரும் ஒரு நிமிஷம் கைதட்டினார்கள்.
மற்றபடி அரங்கில் நிசப்தம். ஒருத்தர் கூட  இருமவில்லை!
அப்போதுதான் புரிந்தது, இலவச மிட்டாய் வினியோகத்தின் மர்மம்!
(டிசம்பர் சீசனில்  நம் ஊர் சபாக்காரர்கள்   இதைக் கடைப்பிடிக்கலாமே என்று அதிகப்பிரசங்கித் தனமாக எதுவும் நான் சொல்லப் போவதில்லை!)

டில்லி:   பெயர் விநோதம் -1
ஒரு சமயம் -- ஒரு சமயம் என்ன, 50 வருஷத்திற்கு முன்பு !-  டில்லி டெலிபோன் டைரக்டரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக ஒரு  வித்தியாசமான பெயர் கண்ணில் பட்டது. இப்படி ஒரு வித்தியாசமான,  யாருமே வைத்துக் கொள்ளாத பெயரை  வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி, அவரையே பேட்டி கண்டு, குமுதத்தில் எழுதலாம் என்று எண்ணினேன், அவர், கல்காஜி என்ற பகுதியில் இருந்த டில்லி  SMALL SCALE INDUSTRIES-ல் ஒரு முக்கிய அதிகாரி. அவருக்குப் போன் செய்யலாமா கூடாதா என்று தயக்கம்  ஏற்பட்டது.  கேலி செய்கிறேன் என்று நினைத்து, அவர் கோபித்துக் கொள்வாரோ என்று லேசான பயமும் ஏற்பட்டது.
ரொம்ப யோசித்து யோசித்து, துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவருக்குப் போன் செய்தேன். அவரே எடுத்தார். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பேட்டி காண விரும்புவதாகச் சொன்னேன்.
 “ எதற்கு? என்ன விஷயமாக?” என்று கேட்டார்.
“ இல்லை ... உங்கள் பெயர் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. அது பற்றி... ” என்று இழுத்தேன்.
“ அது என் பெயர். அவ்வளவுதான். பேட்டி எல்லாம் வேண்டாம்.” என்றார்.
“ சரி, சார்.. உங்களை Embarrass   பண்ணி இருந்தால் என்னை மன்னிக்கவும்” என்றேன்.
“  Not at all" என்று நிதானமாகச்  சொல்லிவிட்டு. டெலிபோனை வைத்துவிட்டார்.
சரி.. அவர் பெயரைச் சொல்லி விடுகிறேன். அவர் பெயர்: பிரம்ம ராக்ஷஸ்!
புதுச்சேரி :  பெயர் விநோதம்-2
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் எண்பதுகளில் என் மகள் மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டிருந்தாள்.  ஒரு நாள் அவள் அவுட் பேஷண்ட் மருத்துவர் டுயூட்டி செய்துகொண்டிருந்தாள்.. வழக்கம் போல  கூட்டம்.
நோயாளிகளின்    பெயர், வயது போன்ற விவரங்களைப் பதிவு செய்து ஒரு ஃபைலைத் தயார் பண்ணி மருத்துவர் மேஜைக்கு அனுப்புவார்கள். வரிசைப்படி இந்த ஃபைல்கள் அடுக்கி வைக்கப்படும். ஒவ்வொரு ஃபைலாக  எடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள  நோயாளியை  அழைத்து, அவரைச்   சோதித்து, தேவையான மருந்துகளை   எழுதிக் கொடுத்து கொண்டு வந்தாள். அப்போது  ஒரு ஃபைலின் மேல் எழுதப்பட்டிருந்த பெயர் சற்று மாறுதலாக   Mr. De sign என்று இருந்தது.  டி-கால் மாதிரி யாரோ பிரஞ்சுக்காரர் வருகிறாரோ என்று நினைத்துக் கொண்டே “நெக்ஸ்ட்.. மிஸ்டர் டி-சைன்” என்று குரல் கொடுத்து விட்டு, ஏதோ ரிஜிஸ்டரில் தலை குனிந்து  பார்த்துக் கொண்டிருந்த போது யாரோ பேஷண்ட்  மேஜைக்கருகில் வந்து நிற்பதை உணர்ந்தாள். தலயைத் தூக்கிப் பார்த்தாள். . பிரஞ்சு தாடியுடன் பிரஞ்சுக்காரர் வந்திருப்பார் என்று எதிர்பார்த்தவளுக்கு லேசான ஷாக்.

நெற்றியில்  பளிச்சென்ற திருமண் போட்டுக் கொண்டு, பஞ்சகச்சம் உடுத்தி  கொண்டிருந்த ஒரு முதியவர் பணிவுடன்  “என்னை கூப்பிட்டீங்களா?” என்று கேட்டார்
என் மகளுக்குப் புரியவில்லை. ”நான் De sign-ஐக் கூப்பிட்டேன்” என்று குழம்பியபடி சொன்னாள்.
அந்தப் பெரியவர் லேசான புன்முறுவலுடன் “ இல்லை டாக்டர். இது என் ஃபைல் தான். என் பெயரைக் கிளார்க் அவசரத்தில் தப்பாக எழுதி விட்டார். என் பெயர் Desigan  என்றார் அவர்!
உடனே  என் மகளும், அருகிலிருந்த மற்ற  டாக்டர்களும் சிரித்த சிரிப்பில்   O.P.D கூடமே குலுங்கியது.

7 comments:

 1. தேசிகன்...செம சிரிப்பு. இருமல் மிட்டாய் - எத்தனையோ கான்ஃபரென்ஸுல வைத்திருந்தாலும் இன்னைக்குத்தான் காரணம் தெரிந்தது. இந்த மாதிரி இசை நிகழ்சிகளில் பார்வையாளர்கள் (ரசிகர்கள்) ஒரு ஒழுங்கைக் கடைபிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது நம்ம நாட்டில் சுத்தமா இல்லை. அதைப் பத்தி எழுதலாமே. (ஏன் நாம் இப்படி இருக்கிறோம் என்பதை)

  ReplyDelete
 2. மிக்க நன்றி.
  “ ஒரு ஒழுங்கைக் கடைபிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது நம்ம நாட்டில் சுத்தமா இல்லை. அதைப் பத்தி எழுதலாமே” என்று சொல்லி இருக்கிறீர்கள். எழுதினால் “உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கேட்பார்கள்.

  ReplyDelete
 3. பகிர்ந்து கொண்ட நான்கு விஷயங்களுமே அருமை. பிரம்ம ராக்ஷஸ்.... என்னவொரு வித்தியாசமான பெயர்.

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

  வணக்கம்.

  எல்லாமே அருமையாக இருக்கின்றன.

  காலக் கப்பல் இருந்தால், நீங்கள் குமுதத்தில் தொடர்ந்து எழுதிய கால கட்டத்துக்கு பயணம் செய்ய ஆசை.

  எழுதிய விஷயங்களுடன், எழுத நினைத்த விஷயங்களிலும் இவ்வளவு சுவாரசியம் இருந்திருப்பது ரசிக்க வைத்தது.

  நன்றி.

  அன்புடன்

  திருமதி சுப்ரமணியம்

  ReplyDelete
 5. திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு,
  “நீங்கள் குமுதத்தில் தொடர்ந்து எழுதிய கால கட்டத்துக்கு பயணம் செய்ய ஆசை.” என்று எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. அவ்வப்போது பழைய விஷயங்களைப் போடுகிறேன். பழசாக இருந்தாலும் ஊறுகாய் மாதிரி ருசியுடன்தான் இருக்கும்!

  ReplyDelete
 6. உங்கள் ஒவ்வொரு பதிவும் நகைச்சுவை உணர்வுடன் மிட்டாய் போல் இனிக்கிறது.உங்கள் மகள் டாக்டரின் அனுபவம் ,உங்கள் இசை நிகழ்ச்சி அனுபவம் மற்றும் பிரம்ம ராக்ஷஸ் அனுபவம் அருமை. எழுதுவது ஒரு தனி கலை ,அதில் நகைச்சுவை உணர்வை திணித்து வாசகர்களை குஷிபடுத்துவது ஒரு சில எழுத்தாளர்களால் மட்டும் தான் முடியும் .நீங்கள் அதில் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை மனதார இங்கு வாழ்துகிரியன் .
  கே.ராகவன்
  பெங்களுரு
  இந்தியா

  ReplyDelete
 7. வித்யாசமான பெயர் என்றவுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த தமிழ்வாணன் நாவலில், பெண் பாத்திரம் ஒன்றுக்கு அவர் வைத்த பெயர் நினைவுக்கு வருகிறது. 'ஒளிக்கொடி'

  ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!