அடுத்த இரண்டு நாள் பிரச்சனை இல்லாமல் கழிந்தது.
வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு ஸ்டார்ட் செய்தேன். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்பது போல், ஓசைபடுத்தாமல் வேலை செய்தது.
“கமலா…. வாஷிங் மெஷின் பரவாயில்லை. தெரியாமல் பாதி விலைக்கு கொடுத்துவிட்டார் போலிருக்கிறது, “என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னதை வாஷிங் மெஷின் கேட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ, தன்னைப் பற்றி குறைவாக நான் சொல்லிவிட்டேன் என்று நினைத்ததோ என்னவோ, சட்டென்று நாலைந்து தும்மல், ஐந்தாறு இருமல், மூன்று நான்கு ஹைஜம்ப் என்று செய்தது…” கமலா…கமலா.. முதல்லே வாஷிங் மெஷினை நிறுத்து… அது என்னவோ ஸ்கிப்பிங் கயிறு இல்லாமலேயே குதிக்கிறது. கொஞ்சம் விட்டால் தவளை மாதிரி தத்தித் தத்தி ஹாலுக்கு வந்துவிடும்…” எந்த ஸ்பிரிங்கெல்லாம் உடைஞ்சிருக்கோ,, வெளியில் ’பாடி’ யெல்லாம் காட்பாடியாக இருந்ததே என்று பார்த்தேன். கொஞ்சம் துரு தானே என்று நினைச்சேன்….” இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே , காலிங்பெல் அடித்தது…” கமலா.. யாரோ யாரோ மணி அடிக்கிறாங்க.. இந்த வாஷிங்மெஷின் ஊரையே கூட்டிடும் போல இருக்கு.. நம்பியார் மாதிரி இன்னொரு வில்லனாக இருக்கும்..” என்றேன்.
“ஏன் பயந்து சாகறீங்க? நான் போய் பார்க்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே, கமலா போய், மெல்ல கதவைத் திறந்தாள்.
ஒரு மாமி கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தாள். (எனக்கு நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது’)
“நமஸ்காரம் மாமி.. நான் மேல் வீட்டிலே இருக்கிறேன்.. நீங்க புதுசா வந்திருக்கீங்களா?... என் பேர் பாமா சித்தி.. ஆமாம்மா.. இந்த சித்தி என் பேரோட எப்படியோ ஒட்டிண்டுத்து… எங்க குடும்பத்துலேயே நான் தான் கடைசிப் பொண்ணு. என் அக்கா பசங்க, சித்தி சித்தின்னு கூப்பிட்டு சித்தி என் பேரோட ஒட்டிக் கொண்டது. எல்லாருக்கும் நான் சித்தி.. எங்க ஆத்துக்காரர் கூட பாமா சித்தின்னு தான் கூப்பிடுவார்.. போகட்டும் .. உங்க பேர் என்ன?”
“ “என் பேரு கமலா…” என்றாள் கமலா..
கீழே போனேன். தபால்காரர் நாலைந்து கவரைக் கொடுத்துட்டு, இந்த அட்ரஸ்க்கு வந்த கவர்… இந்தாம்மா ,” என்று சொல்லி தபால்களைக் கமலாவிடம் கொடுத்தார்.
”ரொம்ப தாங்ஸ் பாமா சித்தி” என்றாள் கமலா. பாமா சித்திக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.
“ஆமாம் ..கமலா,, இந்தக் கவரில் ஒன்று ‘அமுதம்’ பத்திரிகையிலிருந்து வந்திருக்கிறது. .. உன் ஆத்துக்காரர் அங்க வேலை செய்யறாரா?”
“இல்லை சித்தி. அவர் கதை எழுதறவர்..”
”அப்படியா..ரொம்ப சந்தோஷம். கவர்ல ‘செக் வந்திருக்குமாக்கும்’ என்று கேள்வியாக கேட்காமல், ஒரு யூகமாகச் சொன்னார்.
”ஆமாம்.. சித்தி..”
“கமலா… நான் கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே.. உன்னைப் பார்த்தால் என் அக்கா பேத்தி மாதிரி இருக்கிறது. அதனால் உரிமையுடன் கேட்கிறேன்..”
கமலா குறுக்கிட்டு, “பேத்தி மாதிரியா.. உங்க அக்காவிற்கு 80,90, வயசு ஆகியிருக்குமா?” என்று கேட்டாள்.
”அக்கா என்றால் அக்கா இல்லை.. எங்க பெரியம்மாவை ‘அக்கா’ என்று கூப்பிடுவேன். அக்காவின் ஆத்துக்காரர் உட்பட..”
“உங்களை சித்தி என்று கூப்பிடற மாதிரியா?.. என்றாள்.
“அதை விடு.. இப்போ அமுதம் பத்திரிகையிலிருந்து செக் வந்திருக்குதே. சாதாரணமா ஒரு கதைக்கு எவ்வளவு பணம் கொடுப்பா?”
“500 அல்லது 250 கொடுப்பா.. கதை என்றால் 250, கட்டுரை என்றால் 500..”
“பரவாயில்லையே…பேப்பரும் பேனாவும் இருந்தால் போதும், மாசம், இரண்டாயிரம், மூவாயிரம் சம்பாதிக்கலாம் என்றாள் சித்தி..
“உம்., உம்” என்று கமலா மெதுவாக தலையாட்டியபடி சொன்னாள்..
“ஆமாம், சித்தி “உங்களை ஒன்று கேட்கணும்.. மாடி வீட்டில் டான்ஸ் கிளாஸா நடக்கிறது? ஒரே சப்தம்.. தலையைப் பிளக்கிறது. இந்த மாதிரி அபார்ட்மென் ட்டிலே ’டான்ஸ் கிளாஸ், உடான்ஸ் கிளாஸ் என்று வெச்சுக்கக்’ கூடாது’ன்னு, ஒரு ‘ரூல்’ கொண்டு வரணும்..
“அவ டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்க போறா.. இடம் பாத்துண்டு இருக்கா.. கொஞ்ச நாளைக்குத்தான். அவ என் மச்சினர் பெண்தான் என்றாள்.
“அப்படியா..? சித்தி, ஒரு விஷயம் சொல்லணும்.. அவ பாடறதை இன்னைக்கு எல்லாம் கேட்டுண்டே இருக்கலாம். என்ன குரல், என்ன குரல்! ’சங்கீதம், டான்ஸ் என்று இரண்டிலேயும் இவ்வளவு திறமை இருக்கிறது” என்று கமலா சொன்னாள். இதைக் கேட்டு நான் அசந்து போய்விட்டேன். ஒரே செகண்டில் எவ்வளவு லாவகமாகப் பிளேட்டைத் திருப்பிப் போட்டு, சித்தியை ’நைஸ்’ பண்ணி விட்டாள். கண்டதுண்டோ கமலாவைப் போல் என்று பாட வேண்டும் போல் இருந்தது.
“வரேம்மா வீடு செட்டில் ஆன பிறகு என் வீட்டுக்கு வாம்மா,” என்று சொல்லிக் கொண்டே இடத்தைக் காலி பண்ணினாள் சித்தி.
*** *** ***
பத்து நிமிஷம் கழிந்திருக்கும். கதவை யாரோ தட்டினார்கள். (காலிங்பெல்லை தொச்சு எடுத்து விட்டான் காலையிலேயே)
கதவைத் திறந்தேன். ஒரு காலேஜ் குமரி என்று சொல்லலாம். சற்று ஒயிலாக, இடதுபக்கம் வகிடு எடுத்து கொண்டு, ஜீன்ஸில் இருந்த பெண், “மாமா.. வணக்கம். நான் 18-ம் நம்பர் ஃப்ளாட்டில் இருக்கிறேன். இப்பதான் பாமா சித்தி சொன்னாள். நீங்க எழுத்தாளர் என்று… எனக்கும் எழுதற ஆசை இருக்கு.. நானும் நிறைய எழுதி வெச்சு இருக்கேன்.. நீங்க என் கதையைப் படிச்சுப் பார்த்து, அங்கே இங்கே கையை வெச்சு ‘இம்ப்ரூவ்’ பண்ணி கொடுத்தீங்கன்னா நானும் ’அமுதம்’
பத்திரிகைக்கு அனுப்புவேன்..’ என்றாள்.
”வீடு செட்டில் ஆகட்டும் அப்புறம் படிக்கிறேம்மா..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, கமலா வந்தாள். “உன் பேர் என்னம்மா? காலேஜ் படிக்கிறாயா? என்று கேட்டாள்.
“ஆமாம், பி.காம். படிக்கிறேன். என் பேர் மஞ்சரி.. கதை எழுதறப்போ ’விலாசினி’ என்ற புனைப் பெயரில் எழுதுவேன்” என்றாள்.
தொடர்ந்து “நான் ஒரு வாரம் கழித்து வரேன் சார். என் கதைகளை எடுத்துக் கொண்டு. இவ்வளவு பெரிய எழுத்தாளர்’ நம்ப அபார்ட்மென் டில் இருப்பது ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது” என்று சொல்லியபடி விடைபெற்றாள்.
அவள் போனதும் கமலா “,இப்பதான் பாமா சித்திகிட்ட சொன்னேன். நீங்க எழுத்தாளர் என்று. அதுக்குள்ளே நியூஸைப் பரப்பிட்டாள் அந்த பாமா சித்தி”
என்றாள்”
** ** **
:”கமலா … பாமா சித்தி ஊர் பங்களூர் என்றுதானே சொன்னே.. என் மனசில் ஒரு மின்னல் தோன்றியது, அந்த மாமி பங்களூர் பாமா சித்தி. அதாவது ‘B.B.C’ என்று சொல்லலாம். பேருக்கு ஏற்ற மாதிரி, நியூஸைப் பரப்பிடறா” என்றேன்.
“போதும் அசட்டுத்தனம், சும்மா இருங்க. அதோ படிக்கட்டில் இறங்கி வர்றாங்க B.B.C மாமி என்று’ சொல்லிவிட்டு… “உங்கக்கிட்ட இருந்து இந்த நையாண்டித்தனம் எனக்குத் தொற்றிக் கொண்டது” என்றாள்.
வாஷிங்மெஷினைப் போடுவதா, வேண்டாமா, அது அங்கும் இங்கும் ஓடி, சின்னதாக டான்ஸ் ஸ்கூல் நடத்தப் போகிறதா? என்று குழம்பிக் கொண்டிருந்தோம். “வாஷிங் மெஷின் நன்றாக ஓடுகிறதா” என்று கேட்பவர்களுக்கு, ’அது வேலை செய்கிறதோ இல்லையோ, நல்லா ஓடுகிறது’ என்று சொல்லாம்!
’கலாக்ஷேத்ரா அப்ளையன்ஸ்’ கடையிலே வாங்கினதாச்சே! …
“கமலா.. இந்த வாஷிங் மெஷினை முதலில் தூக்கிப்போட வேண்டும். ‘ஓடி விளையாடு பாப்பா” என்று யாரும் பாடாதிருக்கும்போதே, ஓடி விளையாடுகிறது நல்ல காலம், அதை நிறுத்திவிட்டோம்” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது, காக்கி உடையில் ஒரு ஆள் வந்து “அம்மா,..அம்மா’ என்று குரல் கொடுத்தான்.
“கமலா.. இந்த வாஷிங் மெஷினை முதலில் தூக்கிப்போட வேண்டும். ‘ஓடி விளையாடு பாப்பா” என்று யாரும் பாடாதிருக்கும்போதே, ஓடி விளையாடுகிறது நல்ல காலம், அதை நிறுத்திவிட்டோம்” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது, காக்கி உடையில் ஒரு ஆள் வந்து “அம்மா,..அம்மா’ என்று குரல் கொடுத்தான்.
“யாருப்பா?”. என்று கேட்டேன்.
‘கமலா அம்மா இருக்காங்களா? என்று கேட்டான்.
“கமலா அம்மா டில்லி போய்ட்டாங்க… நீங்க யாரு? . என்ன வேணும்? என்று கேட்டேன்.
“வாஷிங் மெஷின் ரிப்பேர் பண்ணணும்னு போன் பண்ணாங்க.. அதுக்குத்தான் வந்தேன்.”
”போன் பண்ணாங்களா? யாரு? எப்போ’ நாங்க யாரும் பண்ணலையே”
என்றேன்.
”போன மாசம் பண்ணாங்க.. இப்போதான் வர முடிந்தது. என்ன கம்ப்ளைண்ட்? என்று கேட்டான்.
“மெஷின் வேலை செய்யறது ஆனால் வீடு மொத்தமும் சுத்தி வர்றது….”
“அப்படியா? ..அது ரொம்ப பெரிய பிரச்சனை… அதுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காதுங்க… எங்க ஷாப்ல வந்து பாருங்க.. தினமும் 2,3 மெஷின் காயலான் கடைக்கு அனுப்பறோம். அது ரிப்பேர் ஆவாது. .. வேணும்னா சொல்லுங்க, எங்க செலவிலேயே எடுத்துட்டுப் போகிறோம்.
”அது சரிப்பா… அந்த மெஷினுக்கு என்ன விலை கொடுப்பே? ”
”எடை போட்டு பணம் தர்றோம்.. இதுக்கு 200 ரூபாய் தருவோம்..”
“அப்படியா.? என்ன கமலா?’ என்று கேட்டேன்.
“என்னை எதுக்கு கேட்கறீங்க.. முதலில் காசை வாங்கிண்டு, மெஷினுக்கு தலை முழுகுங்கோ.. பாவி… பாதி விலைக்கு தறேன்னு சொல்லி, நம்ம தலையிலே கட்டிட்டான்…. இந்தாப்பா.. மெஷினை இப்பவே எடுத்துக்கிட்டு போ” என்றாள்.
“சரிம்மா” என்று சொல்லியபடியே அவன் யாருக்கோ போன் செய்தான். பிறகு என்னிடம் ”டெம்போகாரர் வர்றார். எடுத்துக்கிட்டுப் போறோம்.. இந்தாங்க 200 ரூபாய்” என்று கொடுத்தான்.
ரிப்பேர் என்றுசொல்லி ஒரு மாசம் கழித்து வந்தாலும் மெஷினை அடுத்த 15 நிமிஷத்திற்குள் எடுத்துக் கொண்டு போய் விட்டான். அடடா, என்ன சுறுசுறுப்பு!
*** ****
**** ****
அப்போது தொச்சு வழக்கமான உற்சாகத்துடன் வந்தான்.
”அத்திம்பேர்..குட் நியூஸ்” என்றான்.
“தொச்சு.. இந்தவீடு பெரிய கழுத்தறுப்பு கேஸாக இருக்கு. பாவம், நீ அலைஞ்சு திரிஞ்சு கண்டுப்பிடிச்சுக் கொடுத்தே. நிமிஷத்துக்கு ஒரு பிரச்னை.. மேல் வீட்டிலே குளித்தால், நம் வீட்டு பாத்ரூமில் ஷவர் கொட்டுகிறது. இலவசமாக ’ஷவர் பாத்’ எடுத்துக் கொள்ளலாம். குளியலறைக்கு குடை எடுத்துக் கொண்டுதான் போக வேண்டும்.” என்றேன், எரிச்சலை மறைத்துக் கொண்டு.
”அத்திம்பேர், தெரியாமல் இந்த வீட்டை வாங்கிவிட்டோம்… இதில் இத்தனை பிரச்னை இருக்கும்னு தெரியாது. இன்னும் எத்தனை வருமோ அதுவும் தெரியாது… உங்க பிரச்னை என்பது என்னுடைய பிரச்னை.. இதுபற்றி யோசனை பண்ணினேன்… ஹவுஸிங் போர்ட் வீட்டுக்கு நாம் ரிஜிஸ்டர் பண்ணி இருந்தோமில்லையா.. அங்கே போய் விசாரிக்கப் போனேன்.. நம்பமாட்டீங்க. அங்க போனால் என் கிளாஸ்மேட் சம்பத்து முக்கியமான ’அலாட்மெண்ட் செக்ஷனி’ல் இருக்கான். பாத்து இருபது வருஷம் ஆகுது. அவன் மறக்காமல் அப்படியே கட்டிப்பிடிச்சுண்டான். பரீட்சையிலே என் பக்கத்து மேஜை.. என் பேப்பரை அவனுக்கு நைசா தள்ளி விட்டுடுவேன். அப்படியே ஈயடிச்சான் காப்பி பண்ணி பாஸ் பண்ணான். அந்த நன்றி அவனுக்கு இருந்தது. “ஏய்” தொச்சு.. வாடா… என்ன காரியமாக வந்தே”
என்றான்.
சொன்னேன்.”எப்படா வீடு கிடைக்கும்?” என்று கேட்டேன்.
“இன்னும் அரைமணியிலே கிடைச்சால் சந்தோஷமா?” என்று கேட்டான்.
“சந்தோஷம், ஜலதோஷம், பிரதோஷம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். “என் அத்திம்பேர் வீட்டிற்கு ரிஜிஸ்டர் பண்ணி இருக்கிறார்.. வீடு எப்போ கிடைக்கும்னு ஒரு ஐடியா கொடேன்” என்றேன்.
:ஓ!.
உங்க ரைட்டர் அத்திம்பேர் தானே, உன்னை வெச்சு கதை எழுதறவர் தானே? அட்டகாசமாக எழுதுவார்.. அவர் ‘ரைட்டர்’ அதுக்கு ஒரு கோட்டா இருக்கு பெசன் ட் நகர்லே ஒரு வீடு ஸ்பெஷல் ‘கோட்டா’விற்கு ஒதுக்கி இருக்கு.. அதை அவருக்கு ஒதுக்கிடறேன். சேர்மன் எனக்கு ரொம்ப வேண்டியவர். அவருக்கு நான் ’ரைட் ஹாண்ட்’.”
என்றான்.
”பீரோவை திறந்து,
ஆயிரக்கணக்கான பைல்களில் ஏதோ ஒன்றை எடுத்தான். ஏதோ ரிஜிஸ்டரை எடுத்தான். என்னமோ எழுதினான். ’இருடா’
என்று சொல்லிவிட்டு, எங்கேயோ போனான். பத்து நிமிஷம் கழித்து வந்தான்..”
“போதும் தொச்சு.. கதையை இழுக்கறேயே,, கதைச் சுருக்கத்தைச் சொல்லு.”
“கதை முடியப் போகிறது அத்திம்பேர் வீடு உங்களுக்கு ஒதுக்கிட்டாங்க. இதோ ஒதுக்கிட்டாங்க”
என்று சொல்லியபடியே ஒரு கவர்மெண்ட் கவரை எடுத்து நீட்டினான்.
இதுவரை மூச்சு விடாமல் கேட்டுக் கொண்டிருந்த கமலாவும்,
என் மாமியாரும் திடீரென்று வந்து ”நெஜமாவாடா தொச்சு.? உன் சாமர்த்தியம் யாருக்கடா வரும்” என்று டயலாக்கை, ஒரு வார்த்தை கூட மாறாமல் தாயும் மகளும் இரட்டைக் குரலில் புகழ் மாலைச் சாத்தினார்கள்.!
”தொச்சு! நீ காரியத்தில் புலி” என்றேன்.
“அவனைப் ‘புளி’ என்றுதான் சொல்வீர்கள், வழக்கமாக.. அப்பாடி, உங்க வாயாலேயும் ’புலி’ என்று சொல்லிட்டீங்களே’! வாடா.. தொச்சு சரியான சமயத்திற்குத் தான் வந்தே… போளி பண்ணி இருக்கேன்; என்றாள் கமலா.
கமலா, மாமியார் ஆகியவர்களின் முகமலர்ச்சியினால் ஆயிரம் சூரிய பிரகாசத்துடன் வீடே ஜகத்ஜோதியாக மாறியது.
*** *** ***
*** *** ***
“அத்திம்பேர் இதைப் பாருங்கோ’” என்று தொச்சு தமிழ் தினசரி ஒன்றை என்னிடம் கொடுத்தான். “பாருங்க இந்த விளம்பரத்தை” என்று ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான்.
“வீடு விற்பனைக்கு! சென்னையின் முக்கிய பகுதியில் காற்றோட்டமான, நல்ல சூழ்நிலையும், பள்ளிகூடம், மார்க்கெட், பஸ் ஸ்டாப் முதலியவற்றிற்கு மிக அருகில் உள்ள பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், (அமைதியான சூழலில் உள்ள) ஒரு ஃப்ளாட்.. ஒற்றுமையான அக்கம்பக்கத்தினர், 24 மணி நேர தண்ணீர், சுத்தமான சுற்றுப்புறம் உள்ள இடத்தில் ------- --- ”
”தொச்சு இதை எதற்கு இப்போ எனக்குக் காட்டறே?” என்றேன்.
“அத்திம்பேர் இது விளம்பரம். நம்முடைய இந்த ஃப்ளாட்டை விற்பதற்காக நான் கொடுத்த விளம்பரம்..” என்றான்.
எனக்குத் தலைச் சுற்றியது. மகிழ்ச்சியாலா? தொச்சுவின் சாமர்த்தியத்தைப் பார்த்தா?
அல்லது இதை வைத்துக் கொண்டு அவன் எவ்வளவு என்னை உறிஞ்சப் போகிறானோ என்ற கவலையினாலா? என்று எனக்கு எதுவும் புரியவில்லை.
ஆனால் அந்த தலைச்சுற்றலிலும் ஒரு அலாதியான அமைதி ஏற்பட்டது! JTJ
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
ஆனால் அந்த தலைச்சுற்றலிலும் ஒரு அலாதியான அமைதி ஏற்பட்டது! JTJ
முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி ராஜா. அவருக்கு என் நன்றி
கமலா கதை எப்போதும்போல் ரொம்ப நல்லா இருந்தது. ஆனால் இந்தக் கதையில் இரண்டு போர்ஷன் இரண்டு தனிப்பட்ட சிறுகதைக்கு நல்ல கருவாக இருந்திருக்கும்.
ReplyDeleteஎங்க பெரியம்மாவை ‘அக்கா’ என்று கூப்பிடுவேன் - இந்தப் பகுதியும், "என் கதைகளை எடுத்துக் கொண்டு" இந்தப் பகுதியும். 'கதை கட்டுரை' எழுதுவது மிகச் சுலப சம்பாத்தியத்துக்கான ஒரு வழி என்று பலர் கருதுகின்றனர்.
எனக்கு ஒரு சந்தேகம். இந்தக் கதை முன்னால் வந்திருந்து, இப்போது சில போர்ஷன் அதிகப்படுத்தியிருக்கீங்களா? இந்தப் பகுதி, விரைவாக கதை முடிப்பதற்காக எழுதியதோ என்று தோன்றியது.
உங்கள் நகைச்சுவைக் கதைகள் மனதில் மலர்ச்சி ஏற்படுத்துகின்றன. நன்றி.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. 32 பக்கம் எழுதிய பிறகும் கதையை நீட்டிக் கொண்டே போனால் சுவைபடாது. அதனால் முடித்து விட்டேன். ஒரு புத்தகம் அளவுக்குக் கூட எழுதலாம். இந்தக் கதை முன்னால் வரவில்லை. எல்லாம் familiar incidents என்பதால் அப்படி தோன்றக் கூடும். - கடுகு
ReplyDeleteஉண்மையா சொல்றேன் கடுகு சார்... அலுப்பில்லாமல், எழுதறீங்க. பல தளத்திலும் தொடர்ந்து வேலை பண்ணறீங்க. (லைப்ரரியைத் தேடிச் செல்வது, பல புத்தகங்கள் படிப்பது, எழுதுவது, இன்னும் பல வேலைகள்). Keeping oneself busy தான் வாழ்க்கையின் நல்ல மந்திரம் போலிருக்கு. நல்ல ஆரோக்கியத்தை பகவான் தொடர்ந்து உங்களுக்கு கொடுக்கட்டும்.
ReplyDelete"போளி பண்ணி இருக்கேன்; " - உங்க கதைகளையெல்லாம் படித்து வருவதால், மனதுக்குள்ளேயே அடுத்து இப்படி இருக்குமோன்னு தோன்றியது (அக்கா... அடடா... ராத்திரி சாப்பாடே சாப்பிட்டுட்டுப் போலாம்னு நினைச்சேன். நீ என்னன்னா இப்படி சாயந்தரம் 5 மணி அகாலத்துல போளி தரேங்கற. வேணாம்னா உன் மனசு நோகும். ரொம்ப தராதே. நாலோ அஞ்சோ போதும். மேலாப்புல கொஞ்சம் நெய் விட்டு தா. ராத்திரி போகும்போது அங்கச்சிக்கு ஒரு டப்பால போட்டுக்கொடு. அவளுக்கு நீ பண்ணற போளின்னா, ரொம்பப் பிடிக்கும். அத்திம்பேர்.. நீங்களும் ஒரு போளி சாப்பிடுங்கோளேன். தொச்சுக்குத்தான் தெரியும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு எப்படி உடைப்பது என்று)
மிக்க நன்றி. நீங்களே தொச்சுவாக மாறி விட்டீர்களோ என்று தோன்றுகிறது!!!:) ஒவ்வொருத்தருக்கும் உள்ளும் ஒரு தொச்சு இருக்கிறான்!
ReplyDeleteதினம் தினம் வந்து தேடிப் பார்ப்பேன் கடந்த நாலைந்து நாட்களாக வர முடியலை. இப்போப் பார்த்தால் வந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கு. கதையை முடிக்கணும் என்பதால் வேகமாக விரைந்து எழுதி முடிச்சாப்போல் ஓர் எண்ணம். என்றாலும் வழக்கமான ரசனை குறையவில்லை. வாஷிங் மெஷின் அத்தியாயம் தனியாயும் வீடு வாங்கினது தனியாயும் இன்னும் விரிவாக வந்திருக்கலாமோ!
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி. 32 பக்கம் எழுதிவிட்டேன். இன்னும் நீட்டிக் கொண்டே போனால் நகைச்சுவை ( இதைவிட?) நீர்த்துப் போகும்.- கடுகு
ReplyDelete