July 11, 2018

கடவுளின் கரங்கள்

இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே . பார்த்தசாரதி அவர்கள் கூறிய உண்மைச் சம்பவம். அவர் சொன்னதை அப்படியே இங்கு தருகிறேன்.
    *                        *                           *
    " என் கண்ணின் முன்னே நடந்த அதிசயம் அது. சத்தியமான நிகழ்ச்சி, ஆண்டவனின் அபார கருணையை, லீலையை அப்போது  கண்டேன்.
     விவரமாகக் கூறுகிறேன்;
     என்னுடன் பணியாற்றும் நண்பரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மனக் கோளாறு வேறு ஏற்பட்டு விட்டது. பிழைப்பதே அரிது என்று ஆகிவிட்டது. மருத்துவமனையில் சில நாட்கள் இருந்தார் பிறகு,”வாரத்துக்கு இரண்டு ஷாக் வீதம், பத்து மின்சார ஷாக் கொடுத்தால்,‘மன நோய் சரியாகிவிடும்என்று சொல்லி  மருத்துவமனையிருந்து  டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார்கள்.
     வீட்டிற்கு வந்தும், அந்த அம்மாள் படுத்தபடியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே என் நண்பர் தன் மைத்துனரைத் தஞ்சாவூரிலிருந்து டில்லிக்கு வரவழைத்தார். அவர் வந்த பிறகு ஒருதரம் ஷாக் கொடுத்தார்கள். ஆனாலும் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
     இந்த சமயம், அந்த அம்மாளிடம் நான் திருப்புகழ். புத்தகங்களைக் கொடுத்து, அவற்றைப் படித்து மனச்சாந்தி பெறும்படி சொன்னேன். அவரும் படிப்பதாகச் சொல்லி வாங்கிக் கொண்டார்.
     அந்த திருப்புகழ் பிரதி என் நண்பருடையது.   அந்தப் பிரதியை எனக்குக் கொடுத்த அவர் “முருகன் அருள் தருவான்என்று எழுதிக் கொடுத்திருந்தார்.
 மருத்துவர் அடுத்த ’ஷாக்’ கொடுத்த பிறகும்   அந்த அம்மாவிற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தச் சமயத்தில், அவருடைய கிராமத்திலிருந்து ஒரு தந்தி வந்தது., அந்த அம்மாளின் தாயார் கிராமத்தில் காலமாகிவிட்டதாகத் தந்தியில் தெரிவித்து இருந்தார்கள்.  தன் நோயை மறந்து, “ ஐயோ அம்மா”  என்று அழுது அரற்றினார் என் நண்பரின்மனைவி.

 உடல் நலமில்லாத தன் சகோதரியைப் பார்க்க வந்த அவருடைய சகோதரர்,   தன்  தாயின் ஈமக் கிரியைகளை நடத்த உடனே சென்னைக்குப் புறப்பட முனைந்தார்.
     தந்தி, இரவு வந்ததால், விமான டிக்கட் எதற்கும் ஏற்பாடு செய்ய இயலவில்லை.
     மறுதினம் விடியற்காலை ஆறு மணிக்கு பாலம் விமான நிலையம் சென்றோம். இடம் கிடைத்தது. சகோதரி இந்த நிலையில் இருக்கும்போது,  தன் தாயார் காலமாகிவிட்டாரே என்ற பெரும் வருத்தத்துடன் அவர் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
     அவரை வழியனுப்பிவிட்டு, ’இடம் கிடைத்து சென்னைக்குப் போய்விட்டார்.’என்ற தகவலை சொல்ல, நேராக நண்பர் வீட்டிற்கு வந்தேன். 
      காலிங் பெல்லை அழுத்தியதும், ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
     படுத்த படுக்கையாக இருந்த அந்த அம்மாள் வந்து கதவைத் திறந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 
     அந்த அம்மாள் மிகவும் உற்சாகமாகவும், கலகலப்பாகவும் என்னிடம் சொன்னார்; “மாமா… எங்க அம்மா சாகவில்லை. உயிரோடுதான் இருக்காங்க. இதோ பாருங்க. இரண்டாவது தந்தி வந்திருக்குது பாருங்க. இந்த தந்தி கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தால், பாலம் விமான நிலையத்திற்கே போன் பண்ணி அண்ணனுக்கு சமாசாரத்தைச் சொல்லியிருப்போம்என்றார்.
     “ஆமாம், உங்கள் மனைவியாருக்கு எப்படி உடம்பு குணமாகியது?என்று வியப்புடன் என் நண்பரைக் கேட்டேன்.
     “ஷாக் ட்ரீட்மெண்ட் என்பார்களே அதுதான் குணப்படுத்தி விட்டது; முருகன் கொடுத்த ஷாக் சார்! அம்மா இறந்த செய்தியால் ஏற்பட்ட ஷாக்கும், ” “அம்மா இறக்கவில்லை. தவறான தகவலால்  அப்படி ஒரு தந்தியை அனுப்பி விட்டோம்” என்று  காலையில் வந்த இரண்டாவது தந்தியால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் ஏர்பட்ட  ’ஷாக்’கா லோ என்னவோ அவளைப் புது மனுஷியாக்கிவிட்டது”  என்றார்,  கண்ணீர் பெருக்கியபடியே!
          என்னால் நம்பவே முடியவில்லை.
     அந்த அம்மாளுக்கு. அதற்குப் பிறகு எந்தவித வைத்தியமும் தேவைப்படவில்லை. ஆண்டவனைவிடச் சிறந்த மருத்துவன் யார் இருக்கிறார்கள்?
     சரி, எப்படி தவறான தந்தி தரப்பட்டது என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். சொல்கிறேன்.
     கிராமத்தில் தாயார் இருந்தார். அந்த கிராமத்துக் குடியானவர் தஞ்சாவூருக்கு வந்து உறவினர்களிடம் “ ஐயோ, அம்மா பூட்டாங்க…என்று அழுது கொண்டே சொல்லி இருக்கிறார். ய 
“சரி, நீ போ நாங்கள் பின்னாடி வருகிறோம்என்று கூறிyஅ உறவினர்கள் டில்லிக்குத் தந்தி அடித்துவிட்டு, கிராமத்துக்குப் போயிருக்கிறார்கள் . 
       அங்கு தாயார் நலமாக இருப்பதைக் கண்டார்கள்..
குடியானவருடைய தாயார்தான் காலமாகி இருந்தார். அவர், தன்னுடைஅம்மாவைத் தாயார் என்று குறிப்பிட்டதை, இவர்கள் தங்களுடைய வயதான தாய்தான் கலமாகிவிட்டதாக தறக எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
     ஆண்டவன்தான் இப்படித் தவறுகளை ஏற்படச் செய்து, அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறான்! இது நூற்றுக்கு நூறு சத்தியமான சம்பவம்.”

8 comments:

  1. அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் இறைவனின் இருப்பு தெரியும். இந்த மாதிரிச் சம்பவங்களைப் படித்தால், 'இறைவன் இல்லை' என்று நினைப்பவர்கள் மனது மாறாது.

    நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது. அதனை இந்த மாதிரி சம்பவங்கள் (அல்லது அவனது இருப்பைக் காண்பிக்கும்படியான சம்பவங்கள்) நடக்கும்போதுதான் புரிந்துகொள்ள முடியும்.

    ReplyDelete
  2. சென்ற இடுகைக்குக் கொடுத்திருந்த பின்னூட்டங்களைக் காணவில்லை. இப்போது தளம் சரியாகிவிட்டதா?

    பொருத்தமான ஓவியர் ஜெ. வரைந்த படத்தை இணைத்துள்ளீர்களே....

    ReplyDelete
  3. சென்ற இடுகை, 'ஒரு கல்லறை வாசகத்தின் கதை' சென்'டிமென்'டலா அவ்வளவு பிடித்தமாயில்லை. அடிக்கடி எழுதறதில்லை இப்போல்லாம். அதுக்கு ஏத்தமாதிரி பின்னூட்டங்களும் வெளியிட முடியலை.

    இன்றைக்கு இந்த இடுகை பார்த்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. ஆம் ஐயா, என் வாழ்க்கையிலும் இப்படியானநிகழ்வுகள் நடந்திருக்கின்றன. உண்மையில் இறைவன் கருணை மிகுந்தவன். அந்த அம்மா நல்லபடி குணம் ஆனது மகிழ்ச்சியைத் தருகிறது. நீண்ட நாட்கள் கழித்து வந்த உங்கள் பதிவைப் படித்ததில் சந்தோஷம்.

    ReplyDelete
  5. பின்னூட்டங்கள் உங்களுக்கு வருகிறதா?

    ReplyDelete
  6. எல்லாம் அவன் அருள்.

    ReplyDelete
  7. அருமையான விவரிப்பு. இறைவனின் கருணைக்கு எல்லை ஏது?

    ReplyDelete
  8. எனக்கும் ஒரு தந்தி வந்தது. ஆனால் இந்த மாதிரி தந்தி வந்தால் என்ன மாதிரி மன நிலை இருக்கும் என்று எனக்கு தெரியும்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!