May 08, 2010

ராஜாஜி -- கடுகு

ராஜாஜியும் நானும் என்று தலைப்புப் போட ஆசைதான். ஆனால் அது எனக்கே அடுக்காது. எப்போது கல்கியின் பக்தனாக ஆனேனோ, அப்போதே நான் ராஜாஜி பக்தன்; எம்.எஸ். பக்தன்;. பாரதியார் பக்தன்; தமிழ் இசையின் பக்தன்... இத்யாதி.
ஐம்பதுகளில் ராஜாஜி அடிக்கடி சென்னை லட்சுமிபுரம் யங்மென்ஸ் அசோசியேஷனில் பேசுவார். அவருக்கு மட்டும் ஒரு நாற்காலி இருக்கும். மற்ற எல்லோரும் தரை மகாராஜாக்கள் தான். பி.ஸி.ஜி. தடுப்பூசிக்கு எதிராக அவர் நிகழ்த்திய உரைகள் அபாரம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்!                   
          செங்கற்பட்டுக்காரனாக இருந்தாலும் ராஜாஜி எங்கு பேசினாலும் அங்குதான் இருப்பேன். பாட்டுக் கச்சேரி கேட்பது போல் ரசிப்பேன்.
         இந்த சமயம் செங்கற்பட்டில் நாங்கள் சேவா சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினோம். கல்கியின் அரவணைப்பு எங்களுக்குக் கிடைத்தது.
         செங்கற்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ராஜாஜி அப்போது முதல்வர். `கல்கி' மூலமாக அவருடைய சம்மதத்தைப் பெற்றோம்.
     அந்தக் காலத்தில் எந்த பொதுக் கூட்டத்திலும் ஒரு வரவேற்புப் பத்திரம் படிக்கப்படும். உள்ளூர் பள்ளியின் தமிழ் வித்துவான் எழுதிக் கொடுப்பதை அச்சடித்துக் கண்ணாடி போட்டு, மேடையில் படித்து விட்டுக் கொடுப்போம். அது என்னவோ சேவா சங்கத்தின் தலைவருக்கு என் மீது தனிப் பாசம் இருந்தது. ஆகவே வாழ்த்துப் பத்திரத்தை படிக்கும் பணியை எனக்குக் கொடுத்தார்.
      ராஜாஜியின் அருகில் நின்று கொண்டு, அப்படியே வளைந்து நெளிந்து பவ்யமாகப் படித்தேன். கரடுமுரடான தமிழ்.  இருந்தாலும் நிறுத்தி நிதானமாகப் படித்தேன். இன்னும் சில நிமிடங்கள் ராஜாஜியின் அருகிலேயே நிற்க முடியுமே!
        படித்துக் கொடுத்தேன். ராஜாஜி வாங்கிக் கொண்டார்.
      அதன்பின் பலர் பேசிய பிறகு, ராஜாஜி தன் உரையைத் துவக்கினார். ஐம்பது வருஷங்கள் ஆகிவிட்டாலும் அவரது உரையின்  முதல் சில வரிகள் அப்படியே நினைவில் உள்ளன.
         ``இந்தக் காலத்தில் வரவேற்புப் பத்திரங்கள் எழுதுவதை ஒரு கலையாக செய்து விட்டார்கள் என்றால் இப்போது அதை வாசித்துக் கொடுப்பதையும் ஒரு கலையாக ஆக்கி விட்டார்கள்'' என்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்தபடியே பேசத் துவங்கினார். (அவர் என்னைப் பார்த்தார் என்பது என் கற்பனையாகக் கூட இருக்கும்!)
       அதன் பிறகு இன்னொரு வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. வாய்ப்பா அது! யாருக்குமே கிடைக்காத அரிய பரிசு என்றுதான் சொல்வேன்.
         1953-ல் ராஜாஜி புதிய கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகள் `குலக் கல்வித் திட்டம்' என்று சொல்லி எதிர்த்தன. ராஜாஜியின் திட்டத்திற்கு ஆதரவாக ஒரு மகாநாட்டை நடத்த கல்கி விரும்பினார். எங்கள் சேவா சங்கத்திடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். செங்கற்பட்டில் மகாநாடு நடந்தது.  கணபதி டாக்கீஸில் பகல் 2 மணி வரை. மகாநாடு. பிறகு மாலை 5 மணிக்கு செங்கற்பட்டு சீர்திருத்தப் பள்ளி மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்.
      சி.சுப்பிரமணியம், சின்ன அண்ணாமலை, ம.பொ.சி., கல்கி ,தினமணி உதவி ஆசிரியர் ஏ.ஜி.வெங்கடாச்சாரி, விநாயகம் என்ற பிரபல எம்.எல்.ஏ. என்று பலர்
உரை நிகழ்த்தினார்கள்.

காலை மகாநாட்டில் முதல்வர் ராஜாஜி உரை நிகழ்த்திய போது எடுத்த புகைப்படத்தை இங்கு காணலாம்
. முதல்வரின் மேடை ஜொலிப்பையும், தங்கப் பூண் போட்ட நாற்காலியையும், மேலே தொங்கும் சாண்டலியர் விளக்குகளையும், பூ அலங்காரங்களையும், தரை விரிப்புகளையும் பாருங்கள்! (என்னது... எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லையா? உங்கள் கண் பார்வை கோளறை சங்கரா நேத்ராலயா  கூட சரி செய்ய முடியாது, விடுங்கள்!)

அன்று மாலை பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். மகாத்மா காந்தி செங்கற்பட்டுக்கு வந்தபோது   கூடிய கூட்டத்தின் அளவு இருந்தது.
பலர் அற்புதமான உரைகள் நிகழ்த்தினார்கள். ராஜாஜி கடைசியில் பேசினார். அவர் பேசி முடிக்கும் போது இரவு மணி 9.45. கடைசியாக சம்பிரதாயமான வந்தனோபசாரம்.  அந்தப் பணி எனக்குத் தரப்பட்டிருந்தது. மேடைக்குப் போனேன். ராஜாஜி ஒரு பிரம்பு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் போனதும், அவரது அறிவு தீட்சண்யத்தின் ஒரு சிறு பொறி என் மீது பட்டிருக்கவேண்டும். எனக்குத் திடீரென்று ஒரு ஞானோதயம் ஏற்பட்டது.
நன்றி நவிலல் உரையை நீட்டிக் கொண்டே போகாமல் ஒரே ஒரு வாக்கியத்தில் முடிக்க வேண்டும் என்று ஏதோ ஒரு குரல் என்னுள் கேட்டது. அதன்படி ஒரே ஒரு வரியில் பத்துப் பதினைந்து வார்த்தைகளில் ஒரு நிமிஷத்தில் உரையை முடித்தேன்.
இவ்வளவு சீக்கிரமாக உரையை முடிப்பேன் என்று ராஜாஜி சற்றும் எதிர்பார்க்கவில்லை.  அவர் சட்டென்று வாய்விட்டு `பேஷ்' என்று என்னைப் பார்த்துச் சொன்னார். அடுத்த செகண்ட் என் ஜேபியிலிருந்து ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்து ராஜாஜியிடம் நீட்டி, ``உங்கள் ஆட்டோகிராஃப் வேண்டும்'' என்றேன்.
 ``கையெழுத்துப் போட மாட்டேன். உனக்குப் போட்டால் இன்னும் நிறையப் பேர் வருவார்கள். ஏற்கனவே நேரமாகி விட்டது. எல்லாரும் மெட்ராஸ் போக வேண்டும். நாளைக்கு நியூஸ் பேப்பரில் கூட்ட செய்திகள் வர வேண்டும். அதனால் உனக்குப் போட முடியாது'' என்றார் ராஜாஜி. கண்டிப்பான, ஆனால் அன்பான குரலில்!
``நீங்கள் `பேஷ்' என்று சொல்லி என்னைப் பாராட்டினீர்கள்; அதற்காகவாவது எனக்கு ஆட்டோகிராஃப் போட்டுத்தர வேண்டும்'' என்று சொன்னேன்.
         இருபது வயது பொடியன், ராஜாஜியுடன் விவாதம் செய்கிறேன். என்ன மதியீனம்!
       ராஜாஜி என்ன செய்தார் தெரியுமா?
        என் கையிலிருந்து நோட்டையும் பேனாவையும் வாங்கி கையெழுத்துப்       போட்டு என்னிடம் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.
நோட்டை வாங்கிப் பார்க்கிறேன். மின்சாரம் உள்ளே பாய்ந்தது. ராஜாஜி என்ன செய்திருந்தார் தெரியுமா?
`பேஷ்' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார்.
      இது யாருக்கும் கிடைக்காத பரிசல்லவா?
      இங்கு அதை ஸ்கேன் பண்ணி போட்டிருக்கிறேன். (பார்த்து `சபாஷ்' என்று சொல்பவர்கள் சொல்லலாம். பொறாமைப்படுபவர்கள் படலாம். தடையில்லை!)
* * *
ராஜாஜி முதல்வர் பதவியை விட்டு விலகிய பிறகு சுதந்திரக் கட்சியைத் துவக்கிய போது  விழா நடந்த எஸ். ஏ.ஏ. மைதானத்திற்குப் போயிருந்தேன். அரசியலை விட ராஜாஜியின் உரைகளைக் கேட்கும் ஆர்வம் காரணமாகவே  போனேன்.
     ராஜாஜிக்கு நாலைந்து கடிதங்கள் போட்டிருக்கிறேன். கடிதம் போட்ட மூன்றாவது தினம் பதில் நிச்சயமாக வரும்.
     என் திருமண அழைப்பிதழை அனுப்பி விட்டு அத்துடன் ஒரு கடிதம் எழுதினேன்.  “திருமணம் முடிந்ததும், என் மனைவியும் நானும் உங்களைச் சந்தித்து உங்கள் பாதாரவிந்தங்களைத் தொட்டு வணங்க விரும்புகிறோம். அதற்கு அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று எழுதினேன்.
ராஜாஜி எங்களுக்கு ஆசிகளைத் தெரிவித்து கடிதம் எழுதினார். (பார்க்க: படம்!)
          அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் ராஜாஜி பேசிய பல மீட்டிங்குகளுக்குப் போனேன். லிஃப்கோவின் 64 புத்தகங்கள் வெளியிடும் விழா ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தபோது நானே விழாவை நடத்துகிறவன் மாதிரி மேடைக்கே போய் விட்டேன்.
       தபால் தந்தி இலாகாவின் ராமாயண நாடகம் - அண்ணாமலை மன்றத்தில் நடந்தது- போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராஜாஜியையும் அழைத்திருந்தார்.  நாங்கள் போட்ட ராமாயணம் நாடகம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ராஜாஜி பேசியபோது ``இந்த ராமாயண நாடகத்தை நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டுப் போட்டீர்கள். நாங்களும் மிகவும் கஷ்டப்பட்டு ரசித்தோம். உங்கள் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்'' என்று பேசினார்.
     
ராஜாஜியின் `சக்ரவர்த்தித் திருமகன்' புத்தகத்தை ஒரு ரூபாய் விலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.. விழா கூட நடந்ததாக நினைவு. முதல் பதிப்பு,  அன்றே விற்றுத் தீர்ந்து விட்டது.
 அதன் பிறகு நான் டில்லிக்குப் போய் விட்டேன்.

ராஜாஜியைப் பற்றி ஒரு சின்ன தகவல் சென்ற வாரம் கிடைத்தது.
கல்கி அவர்கள் 5.12.54 காலமானபோது இடுகாட்டில் பலர் பேசினார்கள். ராஜாஜி பேசவில்லை. அவருக்கு அத்தனை துக்கம்.
அன்றைய தினம் மாலை. சைதாப்பேட்டையில் ஒரு பத்தடி அறையில் இயங்கி வந்த மகாத்மா காந்தி நூலகத்திற்கு வர ஒத்துக் கொண்டிருந்தார். கல்கி அன்றுதான் காலமாகி விடவே,  ராஜாஜி வருவாரோ மாட்டாரோ என்று நூலகத்தினருக்குத் தெரியவில்லை. ``நிச்சயமாக வருகிறேன். நிகழ்ச்சியை சுருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி, அதன்படியே கல்கி மறைந்த துக்கத்தையும் மீறி,  தான்  ஒப்புக்கொண்டபடி வந்தார். அந்த நூலகத்தின் விசிட்டர் புத்தகத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.( தேதியைக் கவனிக்கவும்.)
ராஜாஜி என்ற மகத்தான மனிதரைச் சற்று நெருங்கியும், சற்று தூரத்திலிருந்தும் பார்த்தும், வியந்தும், கேட்டும், பயன் பெற்றவன் நான். அது என் பாக்கியம்!

18 comments:

  1. //இங்கு அதை ஸ்கேன் பண்ணி போட்டிருக்கிறேன். (பார்த்து `சபாஷ்' என்று சொல்பவர்கள் சொல்லலாம். பொறாமைப்படுபவர்கள் படலாம். தடையில்லை!)//
    சபாஷ்! (பொறாமையுடன்)
    எஸ்.வி.ராகவன்

    ReplyDelete
  2. அனுபவங்களை சுவைபட எழுதுவது உங்களுக்கு கை வ(ரை)ந்த கலையாக இருக்கிறது எழுதுங்கள், எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்கள்.

    ReplyDelete
  3. எல்லோரும் மோதிரக்கையால் குட்டு வாங்குவதையே பெருமையாகச் சொல்வார்கள். நீங்கள் ‘ பேஷ் , பேஷ் ‘ ( 2 தரம் - வாயாலும், எழுத்திலும்) ராஜாஜியிடம் பாராட்டு வாங்கியிருப்பது ரொம்ப பெரிய விஷயம் தான். எஙகள் சபாஷ் எந்த மூலை? - ஜகன்னாதன்.

    ReplyDelete
  4. <<<< han said...

    எல்லோரும் மோதிரக்கையால் குட்டு வாங்குவதையே பெருமையாகச் சொல்வார்கள். நீங்கள் ‘ பேஷ் , பேஷ் ‘ ( 2 தரம் - வாயாலும், எழுத்திலும்) ராஜாஜியிடம் பாராட்டு வாங்கியிருப்பது ரொம்ப பெரிய விஷயம் தான். 8 May 2010 2:56 PM >>>

    மணி 2.56க்கு பிளாக்கில் நுழைகிறேன். உங்கள் COMMENT எதிரே குதிததது. எனக்கே தோன்றாத பாயிண்டை எடுத்துக் கொடுத்து இருக்கிறீர்கள். ஆமாம், வாயாலும் எழுத்தாலும் இரண்டு தரம் “பேஷ்”!!!
    ஐயோ, இத்தனை வருஷங்களில் ஆயிரம் தடவையாவது இப்படி ஜமபம் அடித்துக் கொண்டிருக்கலாமே.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ராஜாஜியைப் பற்றிய பதிவை ஆர்வத்தோடு படித்தேன். ராஜாஜி கையில் நீங்கள் பேஷ் பேஷ் வாங்கியதைப் போல (கவனியுங்கள் இரண்டு பேஷ் போட்டுவிட்டேன்) நீங்கள் எனக்கு பேஷ், மோசம் ஏதாவது சொல்ல மாட்டீர்களா என்ற நப்பாசையில் என் பதிவுகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.
    ராஜாஜி - ஒரு மதிப்பீடு விடுதலைக்கு முன், விடுதலைக்குப் பின், ராஜாஜி, கல்கி, மதுவிலக்கு

    ReplyDelete
  6. நன்றி. பார்க்கிறேன்.
    அடுத்த 4,5 நாட்களூக்கு கணினி தொடர்பு எனக்கு இருக்காது.

    ReplyDelete
  7. Dear Kadugu Sir.. You were in touch with very big list of people (Everybody is professional in their field). Really I am getting jealousy about you.

    ReplyDelete
  8. As usual a very simple yet original article. Why has God stopped making great people like those?
    Keep up the good job.
    Shankar

    ReplyDelete
  9. டியர் கடுகு சார்,
    ராஜாஜியிடம் டபுள் பேஷ் வாங்கிய உங்களைப் பார்த்துப் பொறாமைதான்! அது மட்டுமா? அவர் கைப்பட உங்கள் கடிதங்களுக்குப் பதிலையும் வாங்கி உள்ளீர்கள். என்னே உங்கள் பாக்கியம்! ராஜாஜி தமிழ் நாட்டுக்குக் கிடைத்த ஒரு மகத்தான பொக்கிஷம். அவர் போன்ற ஒரு மகானைப் போற்றத் தவறிய பாவத்திற்குத்தான் இன்று தமிழ் நாடு இவ்வளவு கஷ்ட்டப் படுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவருடன் பழகிய பாக்கியம் கிடைக்கப் பெற்ற உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  10. your youthful association with the world of press is good

    ReplyDelete
  11. ராஜாஜி என்னும் மாமனிதர் பற்றி நான் இட்ட இடுகைகளை இங்கே பார்க்கலாம், http://dondu.blogspot.com/search/label/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF

    அவர் முதலமைச்சராக இருந்த போது 6000 பள்ளிகளை மூடியதாக ஒரு பேச்சு 90-களில் எழுந்தது. அது பற்றி நான் பலரைக் கேட்டு பார்த்து விட்டேன். உங்களால் அது சம்பந்தமாக ஏதேனும் கூறவியலுமா.

    அது பற்றிய எனது ஊகம் என்னவென்றால், அக்காலக் கட்டத்தில் பல பள்ளிகள் பெயரளவிலேயே இருந்திருக்க வேண்டும், அவற்றைக் காட்டி அரசு உதவி பெற்றுக் கொண்டதுடன் வேறு வேலைகள் ஏதும் நடைபெறாது இருந்திருக்கலாம். அம்மாதிரி பள்ளிகளை எவ்வளவு சீக்கிரம் மூடமுடியுமோ மூடுவதே நல்லது.

    அதை வேண்டுமானால் ராஜாஜி செய்திருக்கலாம். மற்றப்படி 6000 பள்ளீகளை மூடினால் எதிரொலிகள் இல்லாதிருக்குமா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. அன்புள்ள டோ.ரா அவர்களுக்கு, உஙள் பதிவைப் பார்க்கிறேன்.
    என் பிளாக்கிற்கு உங்களைப் போன்றவர்கள் வருவது அதற்கு ஒரு ஸ்டேட்டஸ் தருகிறது.
    பள்ளிகள் மூடப்பட்டதாக தெரியவில்லை. அவர் கொண்டு வந்த புதிய கல்வி திட்டத்தை எதிர்த்து செய்யப்பட்ட பிரசாரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அந்த திட்டத்தைப் பின்பற்றிய எங்கள் பள்ளீயில் நான் புத்தகங்களை செக் ஷன் பைண்டிங் செய்வது, மோல்டிங், மார்பிள் பேப்பர் செய்தல். காகிதக் கூழ் பொம்மை செய்தல், மண் பொம்மைகள் செய்தல், கொஞ்சம் தறியில் நெசவு எல்லாம் கற்றுக் கொண்டேன்.
    புத்தகம் பைண்ட் செய்ய ஊசி, நூல், கத்திரி, கேலிகோ, ஃபெவிகால் எப்போதும் என்னோடு இருக்கும்!

    ReplyDelete
  13. நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க. உங்க கிட்டே வந்து ஒரு பேஷ் ( எதுக்கு பேஷ் அப்படீன்னு காரணம் எல்லாம் கேட்கக் கூடாது. ) கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டு நானும் ஒரு பதிவு, ராஜாஜிகிட்டே பேஷ் வாங்கின, இன்னும்ம் இன்னார் இன்னாரின் (பட்டியல் நீளமா இருக்கே ) அறிமுகம் உள்ள கடுகு கிட்டே நான் பேஷ் வாங்கினேன் அப்படீன்னு நான் சொல்லிப்பேனே

    http://www.virutcham.com

    ReplyDelete
  14. ராஜாஜி மாதிரி சட்டென்று ‘பேஷ்’ சொல்லக்கூடியவன் அல்ல நான்...!

    ReplyDelete
  15. Sabaash. migavum arumayaga irukirathu-khaleel

    ReplyDelete
  16. தங்கள் ராஜாஜி என்ற பதிவு படிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றேன். அதில் தங்களிடம் சுலபமாய் சபாஷ் வாங்க முடியாது என்று உள்ளது. நீங்கள் எங்களை போன்ற சிறியவர்கள் பதிவை போடுவதும், அதற்கு பதில் அளிப்பதுமே பாராட்டு தான் சார்.

    ReplyDelete
  17. தங்களது இந்தப்பக்கத்தைப் படிக்கும் பாக்கியத்தை இன்று கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி. மிகவும் அருமையாக இருக்கிறது. நான் திரு ஏ ஜி வெங்கடாசாரி அவர்களது தம்பியின் மகன். அவரைப்பற்றிய குறிப்புக்களோ அவரது எழுத்துக்களோ கிடைக்கப்பெறின் மிகவும் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.

    ReplyDelete
  18. அன்புள்ள கிருஷ்ணன் அவர்களுக்கு,
    ஏன் வலைப்பூவில் உங்களுக்கு பிடிக்ககூடிய பல கட்டுரைகள் கிடைக்கும்.. திரு ஏ ஜி வி அவர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் அப்போது அரை டிக்கட்! -- கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!