May 23, 2010

கமலாவும் பேரமும் - கடுகு


இன்று சுயமுன்னேற்றக் கட்டுரைகளும் புத்தகங்களும் கணக்கு வழக்கு இல்லாமல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. `யு கேன் வின்' பாணி புத்தகங்களைப் பலர் எழுதுகிறார்கள். (இப்படி எழுதுபவர்களில் பலர் ஜெயிக்க முடியாமல் தோல்வியுற்றவர்கள் என்பது வேறு விஷயம்!)

   `யு கேன் வின்' மாதிரி `யு கேன் கெய்ன்' (YOU CAN GAIN) என்று யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. அந்த மாதிரி புத்தகத்தை எழுதக் கூடிய தகுதி படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது என் அருமை மனைவி கமலாதான்.
        ஆய கலைகளில் 65-வது கலையாகவே பேரக் கலையை உருவாக்கி, பயின்று, செயல்படுத்தி லாபமடைந்திருந்தார் கமலா! அந்தக் கலையை விளக்கமாக நான் எழுதினால் 'இன்டெலக்சுவல் பிராபர்ட்டி ரைட்'டின் கீழ் என் மீது கமலா நடவடிக்கை எடுக்கக்கூடும்  என்பதால் ஒரு சின்ன  கிளிப்பிங்கைத் தருகிறேன்.
* * *

காட்சி: டில்லி சரோஜினி மார்க்கெட். நடைபாதை புடவைக் கடை
கதா பாத்திரங்கள்: அருமை மனைவி கமலா, அவரது ஐயோ பாவம் கணவர்,  புடவைக் கடைக்காரர்
***
``என்னப்பா பாபுலால், எப்படி இருக்கே? உன் கடையைத் தேடவே அரை மணி ஆச்சு...''
``என் பேர் பாபுலால் இல்லை. பாண்டே...''
``ஆமாம்... பாண்டே! `பா'வில் ஆரம்பிக்கும் என்று ஞாபகம்.  முன்னே உன் கிட்ட நைலக்ஸ் புடவை வாங்கினேன். அந்த மாதிரி புடவை வேணும்னு கேட்கறாங்க...''
``நைலக்ஸ் புடவை நான் வியாபாரம் பண்றதில்லை மாய்ஜி! பெங்கால் காட்டன்...''
``மறந்து போய்ட்டேன். உன்கிட்டே காட்டன். மூலைக் கடையில் நைலக்ஸ் வாங்கி இருக்கேன். மாற்றிச் சொல்லி விட்டேன். சரி,  எப்படி புடவை? வழக்கமாக வாங்கறவ  நான். விலை பார்த்துச் சொல்லு...''
``ஒரே விலை சொல்லட்டுமா?''``சொல்லு. பேரம் பேசி உன் டயமும், என் டயமும் எதுக்கு வேஸ்ட் பண்ண வேண்டிய அவசியமில்லை. நான் எப்பவும் இந்த கம்பத்துக் கிட்ட இருக்கற கடையிலதான் வாங்கி இருக்கிறேன்...'' ``மாய்ஜி!   இந்தக் கம்பம் போன வாரம்தான் வெச்சாங்க. நீங்க வேற எங்கேயாவது...''


``சரி,  நீ எத்தனை நாளா இங்கே கடை போட்டிருக்கே?''

``இரண்டு மாசமா...''

``தெரியும். மூணு மாசத்திற்கு முன்னே `ஆந்தி' காற்று வந்ததே... அப்போ இங்க இருந்த கம்பம் சரிஞ்சுட்டுது. அதை எடுத்துட்டாங்களே தவிர உடனே போடலை. சரி,   சொல்லு புடவை என்ன விலை?...ஒரே விலை சொல்லு.   பேரம் கீரம் வேண்டாம்.''

```மாய்ஜி... 200 ரூபாய்க்குத்தான் விற்கிறேன். உங்களுக்காக 190 ரூபாய்க்குத் தரேன்''
``ஏன் ஒரேயடியா இவ்வளவு குறைச்சுட்டே? 195 ரூபான்னு சொல்லக் கூடாது? என்ன சிரிக்கிறே பாண்டே!'' என்றாள்.

``எவ்வளவுக்குத் தான் வேண்டும்? சொல்லுங்க...''

``ஒரே விலை சொல்லட்டுமா? பாவம், நீயும் பிழைக்கணும். அநியாய விலைக்குக் கேட்க மாட்டேன். ஒரே விலை சொல்லட்டுமா?''

``சொல்லுங்க...''

``சொன்னால் கோபிச்சுக்க மாட்டியே. சில பேர் கத்தல் போடுவாங்க...''

``ஏம்மா... கட்டுப்படியானால் கொடுக்கப் போறேன். இல்லேன்னா இல்லை என்று சொல்லிவிடப் போறேன். நான் ஏன் கத்தல் போடபோகிறேன்? சொல்லுங்கம்மா...''

``போ... ஒரே விலை நூறு ரூபாய் தரேன்.  உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரியறது. இல்லாவிட்டால் 80 ரூபாய்க்குத்தான்...''

             கமலா முடிக்குமுன் பாண்டே, ``என்னது... நூறு ரூபாயா? ஏம்மா, எங்கேயாவது திருடிக் கொண்டு வருகிறேன்னு நினைச்சுக் கேட்கறியா? லூட் கா மால் ஹை க்யா? போம்மா... நூறு ரூபாய்க்கு பனாரஸ் பட்டுப் புடவை கிடைக்கும்... . வந்துட்டாங்க... என்னை பிக்பாக்கெட்காரன்னு நினைச்சியா நீ...'' (ஒருமையில் வந்து விட்டதைக் கவனிக்கவும்!)
``ஏம்பா கத்தறே... கோவிச்சுக்க மாட்டேன்னு சொன்னியே... இப்ப இப்படிக் கூச்சல் போடறே...''
``பின்ன, வவுத்தில அடிச்சா...''
``விடுப்பா... நான் வரேன்...''
``ஏம்மா நீ போற... போணி ஆவலை... பாத்துக் கேளு...''
``நான் கேட்டுட்டேன்.  நீ சொல்லு...''
``நூற்று எழுபத்தைந்து கொடு. வெளியில் யாருக்கும் சொல்லாதீங்க...''
``இப்ப நீ சொன்னது ஞாயமான விலையா? பார்த்தால் நான் இப்ப கத்தணும். நூத்திப் பத்து கொடு. இல்லாவிட்டால் விடு. என்ன, மரமாட்டம் நிக்கறீங்க... வாங்க, போகலாம். சரியான அசமஞ்சம்'' என்று பொதுவாகத் திட்டுவாள். சில வார்த்தைகள் தமிழில் இருக்கும். திட்டுகிறாள் என்பதை பாண்டே புரிந்து கொண்டாலும் யாரைத் திட்டுகிறாள் என்பது தெரியாது.  
 மோடி மஸ்தான்  `வா இங்கே' என்று கூப்பிட்டதும் அவனது உதவியாள் சாவி கொடுத்த பொம்மை போவது மாதிரி, நான் (சாவி கொடுக்காமலே கமலா கூப்பிட்டதும் அப்படிப் போய்ப் பழகி விட்டவன்!) போவேன்.
     நாலு அடி எடுத்து வைத்ததும், ``வாம்மா... வாங்காமல் போவாதே. போணி பண்ணு...''
``நூத்திப் பத்துதான்...''
``சரி. கொடு, கொடு. உம்... இன்னிக்கு யார் முகத்திலே முழிச்சேனோ...''
ரூபாய் எண்ணிக் கொடுத்து விட்டு, புடவையை அவனிடமிருந்து வாங்கிக் கொண்ட பிறகு கமலா கேட்பாள். ``பாண்டே,  ஏண்டாப்பா... 110 ரூபாய் புடவையை எதுக்கு 200 ரூபாய் சொல்றே? திருடிட்டு வந்துட்டேனான்னு வேறு கேட்டே. அப்புறம் கத்தல் வேற போட்டே?''
`என்னம்மா செய்யறது? முதல்லயே 110’ன்னு சொன்னால் 30, 40 என்று கேட்கறாங்க...''
``ஒண்ணு கேட்கட்டுமா? உண்மையைச் சொல்லு. 110க்குக் கொடுத்தியே... எவ்வளவு நிக்கும்?''
``இருபத்தஞ்சு ரூபாய் நிக்கும்...''
``அடப்பாவி! பிழைச்சுப் போ'' என்று சொல்லி விட்டுக் கிளம்புவோம்.
* * *
``என்ன கமலா, ஜாஸ்தி கொடுத்து விட்டோமோ?''
``ஜாஸ்தியா... சாந்தினி சௌக்கிலே அடாவடி அம்புஜம் இதே புடவையை 150 ரூபாய்க்கு வாங்கிண்டு வந்திருக்கா.. அங்கே தான் சண்டே பஜாரில் எல்லாம் விலை குறைவு. அதனால இங்கு 110 ரூபாய்க்கு வாங்கினதில் நமக்கு 40 ரூபாய் லாபம். என்ன சொல்றீங்க?''
``சபாஷ்ன்னு சொல்றேன்...''

* * *
கற்பூர புத்தி உள்ள நீங்கள் இதிலிருந்து நிறையப் புரிந்து கொண்டிருப்பீர்கள். யு வில் கெய்ன் என்பதில் சந்தேகமில்லை!

7 comments:

  1. ஹப்பா! என்னமா பேரம் பேசறாங்க மாமி. என் சித்தி கூட கடைக்குப் போனா இப்படித் தான் நானும் அசமஞ்சமா கூட நிப்பேன். சித்தி பேசற பேரத்தைப் பார்த்து கடைக்காரன் மேல் பாவமா இருக்கும். ஆனா அப்புறமா சித்தி சொல்லுவாங்க அசடு, அவனுக்கு இப்போ கூட நிறைய லாபம் இருக்கும்.
    ஆனாலும் இப்போ கூட என்னால பேரம் பேச முடியாது.

    ReplyDelete
  2. இது உண்மைலேயே ஒரு கலை சார்.இங்க மெட்ராஸ்ல கூட அன்னை சத்யா பஜார், பர்மா பஜார் இங்க எல்லாம் முதல்ல சொன்ன விலைல இருவதஞ்சு சதவிகிதம்தான் இருக்கும் கடைசியா நாம கொடுத்து வாங்கிட்டு வருகிற விலை.எனக்கு இந்தக் கலை ரொம்பவே வராது என்பதால் இந்த மாதிரி கட்டுரையை படித்து சிறிது கற்றுக் கொண்டு மனசாந்தி அடைவது வாடிக்கை. :-)சும்மா சொல்லக் கூடாது....மாமி அபாரம்...

    ReplyDelete
  3. Who will win? Not you! Always it's the seller! But it is the ladies' birth right to bargain and who can question it? - R. Jagannathan

    ReplyDelete
  4. It is not winning nor gaining. It is losing less!

    ReplyDelete
  5. அட்டகாசம் .செம பேரம் தான் .கடைக்காரன் திட்டுவதை பொறுத்துக் கொள்ளும் மனது வேண்டும் .இப்போலாம் பாதி பேர் branded ன்னு சொல்ற விலைல வாங்கிட்டு வந்துடறாங்க . shopping சுவாரசியமே இல்ல .நல்ல பதிவு

    ReplyDelete
  6. பேரம் பேசி வாங்கறது ஒரு கலை... அது மனசுக்கு திருப்தி குடுக்கற விஷயம்.. எதையும் பேரம் பேசாம வாங்கினா திருப்தியாவே இருக்காது...

    ReplyDelete
  7. <>>
    ஆனால் சில சமயம் இன்னும் கொஞ்சம் குறைத்துக் கேட்டிருக்கலாமோ என்று சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!